கட்டுரைகள்

துள்ளாட்டமும் சுவராசியமுமான கருப்பி – நூல் விமர்சனம்

சுப்ரபாரதி மணியன்

அருணாராஜ் துள்ளலுடன் சிறுகதைகளை உரைநடையை பயன்படுத்தி வரும் இந்தத் தலைமுறை எழுத்தாளர். அவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு கருப்பி. ஒன்பது சிறுகதைகள் இந்த தொகுப்பில் உள்ளன.

சில கேள்விகளை இந்த தொகுப்பு கொண்டிருக்கிறது.
அருணா ராஜின் பார்வையில் ஆண்கள் பெண்களை பலவிதங்களில் சிரமப்படுத்துகிறவர்களாக இருக்கிறார்கள். “கருப்பி” என்ற கதையில் வரும் கதிர் ஒரு இளைஞன் அவன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று மீண்டு வருகிறான். மலர்விழி காதல் குறித்த ஆதங்கங்கள் இந்த தற்கொலைக்கு காரணமாக இருக்குமா என்ற சந்தேகம் ஆரம்பத்தில் வருகிறது. ஆனால் மலர்விழி வேறு வாழ்க்கை அமைந்து காலம் கடந்து போகிற போது, கதிர் இன்னும் தற்கொலை முயற்சி ஓடிக்கொண்டே இருக்கிறான். அப்போது முதன்முதலில் அவனின் தற்கொலை முயற்சி எதற்கானது என்ற கேள்வியை எழுப்புகிறார் அருணா.

அதேபோல “கிறக்கம்” கதையில் ஒரு ஆண்- அப்பா மறைந்து போகிறார். இருக்கும் மருத்துவக் குறிப்புகள் அவர் மனநலம் சார்ந்த மாத்திரைகளை சாப்பிட ஆரம்பித்திருப்பதை சொல்கின்றன. மற்றபடி குடும்பத்திலும், குடும்ப உறவுகளிலும் அவர் நேர்த்தியான மனிதராகவே இருக்கிறார். ஆனால் அந்த மனிதன் ஏன் தொலைந்து போனார் என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது.

“செகண்ட் ஷோ” கதையில் வரும் அப்பா வேறு ஒரு பெண்ணுடன் உறவு வைத்திருக்கிறார். அது பல ஆண்டுகளாக தொடர்கிறது. மகள் அதனை கண்டுபிடித்து சொல்கிறபோது அம்மா அதிர்ந்து போகவில்லை. இரு பெண்களை வளர்த்து திருமணம் ஆகும்வரை அவள் இதிலெல்லாம் அக்கறை கொள்ள முடியாது என்றுதான் சொல்கிறார். இப்படி பெண்களை அழிவுக்குள்ளாகும் பல ஆண்கள் இந்த கதைகளில் இருக்கிறார்கள்.

“காபி” என்ற இத்தொகுப்பின் முதல் கதையில் ஒரு பெண் ஒரு நாள் முழுக்க ஏகதேசம் ஒரு ஆணின் சந்திப்பில் கழிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அவன் பெயர் தெரிவதில்லை கதையில் தன்னை கணவனாக ஒரு பெண் உணர்ந்து கொள்கிறாள். அந்தத் தருணத்தை உச்சமாக காட்டியிருக்கிறார். அது புது அனுபவமாக இருக்கிறது.

தன்னை கணவனாக விழித்துக் கொள்கிற போது.. மனைவி தன்னை கணவனாக கணவனின் இயல்பில் உணரும் தர்மத்தை தருணத்தை அந்த “டியர்” கதையில் சொல்கிறார். காதல் அனுபவங்களை குடும்பச் சூழலில் பகிர்ந்து கொள்ளும் அனுபவங்களை பல எழுத்தாளர்கள் சொல்லியிருக்கிறார்கள். இந்த கதையில் ஒரு பெண் அப்படித்தான் தனக்கு ஒரு காதலன் இருந்ததாக சொல்கிறார் ஒரு ஆணும் அப்படியே சொல்கிறார். குடும்ப நிலையும் குழப்பங்களும் ஒரு முடிவுக்கு வர இதெல்லாம் வேண்டியிருக்கிறது.

“இருள்” என்ற கதை ஒரு முக்கியமான கதையாக எனக்கு பட்டது. பல் வலிக்கு ஒரு மருத்துவமனைக்கு ஏழைத்தாய் ஒரு பையனைக் கூட்டிக் கொண்டு போகிறார். மகன் ஊசி போடுவது சார்ந்து இருக்கிற பயத்தால் ஓடி ஒளிந்து கொள்கிறான். தேடிச்சலித்து அவன் ஒரு சீட்டாட்ட கும்பலில் உட்கார்ந்து இருப்பதை பார்த்த போது அம்மா நிலை குலைந்து போகிறார். கணவனின் துஷ்ட பழக்கங்களில் ஒன்றாக சீட்டாட்டம் இருக்கிறது. அது அம்மாவை சீர்குலைய வைத்திருக்கிறது. தன் மகனையும் அப்படி ஒரு இடத்தில் பார்த்த கணத்தில் அவள் நிலை குலைந்து போகிறார். வேடிக்கை பார்க்கத்தான் உட்கார்ந்து இருந்தேன் என்று மன்றாடினாலும் அவர் மனம் அதை ஏற்க வில்லை.

சென்ற தலைமுறை பெண் எழுத்தாளர்கள் தங்களின் அனுபவங்களை எழுதும் போது இறுக்கமான முறையிலும் இறுக்கமான தளங்களிலும் வெளிப்படுத்தியிருந்தார்கள். ஆனால் இன்றைய தலைமுறை வெகு தளர்ச்சியான முறையில் உரைநடையிலும் சுவாரசியத்தில் அக்கறை கொண்டும் நகர்கிறபோது அவர்களுக்கு பல்வேறு தளங்கள் கதைகளுக்கு கொண்டுவர இயல்பாகிறது. அந்த வகையில்தான் அருணா ராஜ் அவர்களின் சிறுகதைகளில் இருக்கும் துள்ளாட்டமும் சுவாரசியமும் குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது.

நூல் : கருப்பி

ஆசிரியர் : அருணா ராஜ்

பதிப்பகம்:  வாசகசாலை

விலை:  110 ரூ .

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button