சிறுகதைகள்

தண்ணீ(ர்)

ஜான்ஸி ராணி

“பவி!, இந்த மீன கொஞ்சம் சுத்தம் பண்ணி குடுத்துட்டு போயேன். நீ மத்த வீட்ல வேல முடிச்சுட்டு வர்றப்ப ஒரு எட்டு இங்க வந்தா, கொழம்பு எடுத்துட்டு போலாம்.”

“அக்கா கோச்சிக்காத, நீயே கொஞ்சம் பாத்துக்க. கிளம்பும் போதே புள்ளைக்கு காய்ச்சலான காய்ச்சலு, டாக்டருகிட்ட போவனும். நேத்து ஒங்கிட்ட சம்பளம் வாங்குன கையோட ஸ்கூலுக்கு ஃபீஸு கட்ட போகனும்னு நெனச்சேன். லேட்டாகிப் போச்சு. வீட்ல அந்த மனுசன நம்பி ஒரு பத்து ரூபாயக்கூட வைச்சுக்க முடியல. இன்னைக்காவது போகனும். மத்த வீட்டுக்கும் வேலைக்கு போகல. ஒங்கிட்ட கேட்டாக்க இங்கயும் வர்லன்னு சொல்லிடுக்கா”

“அயம் இன் செகண்ட் ஸ்டான்டர்டு” என்று துறுதுறு கண்களோடு அடக்கமாக பதில் சொன்ன அவள் மகளின் முகம் நினைவில் வந்து போனது. அப்படியே இவள் ஜாடை தான். ..கஷ்டப்பட்டாலும் பெண்ணை நன்றாய் படிக்க வேண்டுமென நினைக்கிறாள்.

“அச்சோ!,சரி ..மொதல்ல குழந்தய பாத்துக்க.நாளக்கி வர்லன்னா ஒரு ஃபோன போட்டு சொல்லு. இல்லனா பொழுதுக்கும் உனக்காக காத்திட்டு இருக்கனும்”

சரி சரி என தலையாட்டி விட்டு போனவள் போனவள்தான். ஒரு வாரமாய் ஆளைக் காணோம். தாமதமாகும் இல்லை ஒரு நாள் வரமுடியாது என்றால் பக்கத்தில் யாருடைய ஃபோனிலிருந்தும் பேசி இன்ன தகவல் என்று சொல்லிவிடுவாள்.

அக்கம் பக்கம் அவள் வாடிக்கையாய் வேலை செய்யும் வீடுகளில் விசாரித்தாலும், ‘உங்க வீட்லதான ரொம்ப நாளா வேல செய்யிறா உங்களுக்கே தெரியலயா?!’ என கேள்வி கேட்டார்கள். அவர்களுக்கு ஒரு விஷயத்தில் என் மேல் கொஞ்சம் கடுப்பிருந்தது, அதுவே இப்படியான எள்ளல் தொனிக்கும் பதிலாய் வந்தது.

நான்கைந்து நாள் தொடர்ந்து ஊருக்கு எங்கேயும் போகும் சமயம், இல்லை வேறு காரணங்களால் வர முடியவில்லையெனில் பவி தன் வயதான அம்மாவை எங்கள் வீட்டிற்கு மட்டும் அனுப்பி வைப்பாள்.அவள் செய்யும் எல்லா வேலைகளையும் செய்யச் சொல்ல மனசு வராது. “ஆயா நீங்க பாத்திரம் வரைக்கும் தேய்ச்சு வச்சுடுங்க. மத்த வேலய நான் அட்ஜஸ்ட் பண்ணி பாத்துக்கறேன்” என்பதாய் சொல்லி விடுவேன். எனக்கு மட்டும் ஆள் அனுப்புகிறாள் என்பதே அவர்களின் எரிச்சலுக்குக் காரணமாயிருந்தது.

அந்த அம்மாவிற்கு ஏதும் ஆகிவிட்டதா?!

ஒரு வேளை குழந்தைக்கு.?!  சே சே.. பாவம் அவளுக்கு இருக்கும் ஒரே பிடிப்பு அவளுடைய மகள்தான். எதுவும் நெகடிவ்வாக நம்ம நினைக்க வேண்டாம் என மனசின் தேவையற்ற கற்பனைகளை திசை திருப்பினேன்.

அதென்னவோ எனக்கும் வேலைக்கு வருபவர்களுக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருக்கும். அனேகமாய் இந்த சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்கள் எல்லாருமே என்னிடம் வீட்டு வேலைக்கு வந்து, எனக்கு சரிபடாமல் ஒரே மாதத்தோடு நிறுத்தியிருப்பேன். கடைசியில் இந்த பவித்ரா தான் எனக்கு ஒத்து வந்தாள் அல்லது அவளுக்கு நான் ஒத்து போகிறேன் என்று கூட சொல்லலாம்.

‘வளவள’ என அநாவசியமாய் பேச மாட்டாள்.முக்கியமாய் தன் சொந்தக் கதை சோகக்கதை சொல்லி ஸிம்பதி க்ரியேட் பண்ண மாட்டாள். ஒரு முறை அழுதழுது வீங்கிய முகத்தோடு வந்தவளை நானே வலிந்து விசாரித்த போதுதான் விவரம் சொன்னாள். வேலைகளை நிதானமாய் நறுவீசாய் செய்வாள். கையும் சுத்தம். அவள் எப்போதாவது ‘கொஞ்சம் அர்ஜண்ட்டா வேணும்கா’  என மகளுக்கு ஃபீஸ் கட்டவென்றோ, ‘வட்டி கொடுக்காட்டி நக மூழ்கிடும்’ என்றோ ஏதாவது காரணம் சொல்லி கேட்டபோதெல்லாம் பணம் கொடுத்திருந்தேன். பேசிய வேலைகளைத் தவிர, ‘இத செய் அத செய் ‘என அதட்டி வேலைகளை வாங்காமல் இருந்தேன்.

சொல்லாமல் கொள்ளாமல் இப்படி ஏன் படுத்துகிறாள் என்று கோபம் வந்தாலும், என்ன நெருக்கடியில் இருக்கிறாளோ..என ஒரு பச்சாதாபமும் அவள் மேல் பிறந்தது. நாளைக்கும் வரவில்லை என்றால் ஒரு நடை வீட்டுக்கே போய் பார்த்து வந்துவிடலாம். நான்கைந்து தெரு தள்ளி இன்ன ஏரியாவில் இருப்பதாய்தான் தெரியும். வீடு தெரியாது. என்றாலும் விசாரித்துக் கொள்ளலாம்..என நினைத்தபடி கழுத்தும் தோள்பட்டைகளும் வலிக்க சலித்தபடி வேலைகளை செய்து முடித்தேன்.

கணவரிடம் சொன்னால், “ப்ச், நீ எதுக்கும்மா அங்க எல்லாம் போற, வேற ஆளப்பாரு” என்றபடி அசால்டாக கடந்துவிடுவார். வீட்டு வேலைக்கு ஆள் அமைவதின் கஷ்டம் இந்த ஆண்களுக்குத்தான் தெரியுமா?!

ஆனால் நினைத்துக் கொண்டபடி கிளம்ப முடியாமல் அடுத்த நாள் நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்து போக வெளியூர் செல்ல வேண்டியதாயிற்று. வந்து பார்த்துக் கொள்வோம் என நான்கைந்து நாள் இவளை மறந்தே போய்விட்டேன்.
__________________________________________

வீட்டு வேலைகளை முடித்து விட்ட அசதியோடு பயணக் களைப்பும் சேர்ந்து கொள்ள, டிவி ஓடியபடி கிடக்க கண் அசந்திருக்கிறேன் போல, காலிங் பெல்லின் சத்தத்தில் முழித்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை. பின் சுதாரித்துக் கொண்டு ‘இதோ வர்றேன்’ என குரல் கொடுத்தபடி கதவை திறந்தால், பவி நின்றிருந்தாள்.

நான் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் மட்டுமல்ல, அவளை முதல் நொடி சட்டென அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை.இரண்டு வாரத்தில் இப்படியா மாறிப் போவாள்?!
அவளை வீட்டு வேலை செய்பவள் என்று சொல்ல முடியாதபடிக்கு தினமும் குளித்த பின்பே வேலைக்கு வருவாள். மஞ்சள் பூசிய முகத்தோடு திருத்தமாய் உடுத்தி இருப்பாள். இப்படி நிலைகுலைந்த தோற்றத்தில் பார்த்ததில்லை .

சட்டென பேச முடியாமல் வாய் கொழ கொழவென இருந்தது. “வா, உட்காரு” என்று ஜாடை காட்டிவிட்டு முகம் கழுவி வர பாத்ரூமிற்குள் புகுந்து கொண்டேன். முகத்தை டவலால் லேசாக ஒத்தியபடி ஸோஃபாவில் அமர்ந்து, நான் கேட்பதற்கு முன்பே ..

“அக்கா! யாருஞ் சொன்னாங்களா..கவி அப்பா செத்துப் போயிட்டாரு, நேத்துதான் எல்லா காரியமும் முடிஞ்சது.” என தீனமான குரலில் சொன்னாள்.

அவள் மகளின் பெயர் கவிதா.

“என்ன உன் வீட்டுகாரரா?!”

அபத்தம் என்றாலும் நான் எதிர்பார்க்கவே இல்லை என்பதால் சற்று அதிர்ச்சியுடன் இப்படித்தான் கேட்டேன்.

“ஐயோ,என்னாச்சு,உடம்பு கிடம்பு சரியில்லாம இருந்துச்சா?”

“அதெல்லாம் நல்லாதான் இருந்தாரு”

அவள் குரலில் இப்போது கொஞ்சம் தெளிவு வந்திருந்தது.

அவன் நல்ல வேலையில் இருந்து , ஆபீஸ் பணத்தைக் கையாடல் செய்ததால் வேலை போய்விட்டது. அப்போது குடிக்க ஆரம்பித்தவன் வேறு வேலைக்கும் போகாமல் இருந்துவிட்டான். பிறகு, இவள் வழியில்லாமல் இப்படி வீட்டு வேலைக்கு வர நேர்ந்த கதை எல்லாம் முன்பே பல்வேறு சந்தர்ப்பங்களில் சொல்லி இருக்கிறாள்.

“அன்னைக்கு வேல முடிஞ்சு வீட்டுக்குப் போனேன். வீடே அலங்கோலமா இருந்துச்சு. வழக்கம் போல நல்லா குடிச்சுபுட்டு படுத்திருந்தாரு. புள்ளய குளிக்க வைக்க வெந்நீ வச்சு இருந்தேன். தவலய தூக்கிட்டுப் போகச் சொல்ல, வழியில படுத்திருந்வரு கால் நகட்ட, நான் தடுமாறி, கண்ணு மூடி தொறக்கிறத்துக்குள்ள, அவரு இடுப்புக்குக் கீழ கொதிக்கிற தண்ணீம்பூரா கொட்டிப் போச்சு.

அப்புறம் குய்யோ முறையோனு கத்தி அக்கம் பக்கம் எல்லாருஞ் சேர்ந்து ஆஸ்பத்திரிக்கு போனோம். ரெண்டு நாளு தாங்கலை..கண்ணு கொண்டு அந்த அகோரத்த பாக்க முடியல போயேன்..செத்தாலே அதுக்கு நிம்மிதினு தோனிடுச்சு.

இது போலீஸ் கேஸாமே?!.ஆஸ்பத்திரி ஸ்டேஷன்னு அல்லாடிப் போய்டேன்க்கா..
அயோ..அவுங்க கேட்ட கேள்வி எல்லாங் காதால கேக்க முடியல போ..
கொழந்தய எத்தன கேள்வி கேட்டாங்கங்குற
அப்பன் இல்லாத நேரம் வேற யாரும் வருவாங்களா
உங்க அப்பனுக்கும் ஆத்தாவுக்கும் சண்ட வருமா
உங்கம்மாவ அப்பா அடிப்பாரான்னு
இன்னும் என்ன என்னவோ..ஹும்..
என் கெட்ட நேரத்துலயும் நல்ல நேரம்னுதான் சொல்லனும். எம் மாமியார்காரியே “பவித்ராபுள்ள வாயில்லாத அப்புராணி, அவன எதுவும் கேள்வி கேக்காது ,எதுத்து சண்டகிண்ட போடாதுன்னு” எம்பக்கம் சாட்சி நின்னது.
அக்கம் பக்கத்துலயும் என்னையப்பத்தி விஜாரிச்சிருக்காங்க..நல்லவிதமாவே சொல்லவும் அத்தோட விட்டாங்க.”

யாருக்கோ நடந்ததை போல ஒரு சுவாரஸ்யத்துடன் இயல்பாக சொல்லிக் கொண்டே போனாள். ஒரு வேளை இரண்டு வாரமாய் சொல்லி சொல்லி அந்தத் தொனி வந்திருக்கும்.

“நா வேணும்ணே பண்ணேன்னு பாவிக நெனைக்குறாங்க.எந்தப் பொம்பிளயாவது இப்பிடி பண்ணுவாளா..?!”

இப்போது குரல் உடையத்துவங்கிற்று..
விசும்பியபடியே ..
” குழந்த பொறக்கிற வரை எல்லாஞ் சரியாப் போய்ட்டிருந்திச்சுக்கா. இவரு பணத்துல ஏதோ கோல்மால் பண்ணதுல வேலய விட்டுத் தூக்கிட்டாங்க..என்னடான்னா பொட்டப்புள்ள பொறந்த நேரம் இப்பிடியாகிப் போச்சுன்னு சொல்லிட்டுத் திரிஞ்சாரு.

அப்புறம் குடிச்சு குடிச்சு இருந்ததெல்லாம் அழிச்சாரு.ஒறவுக்காரங்க கூடப்பொறந்தவுங்க எத்தன நாளு பார்ப்பாங்க சொல்லு?!

நான் சம்பாதிக்கிறதையும் அடிச்சு ஒதச்சு பிடுங்கிட்டுக் குடிக்கிறது.
‘தெனமும் சிங்காரிச்சுக்கினு போற..நீ எப்பிடி சம்பாதிக்கிறன்னு தெரியும்டீ’ ன்னு அசிங்கமா பேசுறது. அந்தப் பச்சக் குருத்தையும் அடிக்கிறது.

எத்தன நாள்தான் இந்தக் கொடுமய தாங்கறதுக்கா..
அதான்..ஆண்டவனா.. பா..த்து தண்ட..னய குடு..த்துட்டான்” சற்றே பெரிய குரலில் அழ ஆரம்பித்தாள்.

“சரி பவி ..அழாத.. அழாத..விடு..இனிமே கொழந்தய பாரு”

எனக்கு எப்படி ஆறுதல் சொல்ல என தெரியவில்லை.

“இரு கொஞ்சம் டீ எடுத்திட்டு வர்றேன்” என்றபடி கிச்சனுக்குள் நுழைந்தேன்.
பாத்திரம் வைத்து, நீர் கொதிக்க, கை அனிச்சையாய் டீத்தூளைத் தூவ..
சரக்கென்று ஒரு காட்சி நினைவுகளில் மின்னலடித்தது..அன்றைக்கும் நான் டீ போட்டபடிதான் அவளிடம் சொன்னேன்.

“பவி, இந்த மீன கொஞ்சம் சுத்தம் பண்ணி குடுத்துட்டு போயேன்.நீ மத்த வீட்ல வேல முடிச்சுட்டு வர்றப்ப ஒரு எட்டு வந்தினா,கொழம்பு எடுத்துட்டு போலாம்.”

“அக்கா கோச்சிக்காத, நீயே கொஞ்சம் பாத்துக்க, கிளம்பும் போதே புள்ளைக்கு
காய்ச்சலான காய்ச்சலு,…

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button