கட்டுரைகள்

ஈழத்தின் துயரைச் சொல்லும் நாவல் – “நடுகல்”

அகிலா ஸ்ரீதர்

ஈழ மக்களின் தீரா துயரங்களை இலங்கை ராணுவத்தின் அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் தீபச்செல்வனின் நாவல் இந்த “நடுகல்”. பிரேம் தன்னுடைய முன்னுரையில் குறிப்பிட்டுள்ளது போல் ஆயுதங்கள் அற்ற, போர்கள் அற்ற மாற்றுப் போராட்டம் பற்றிய தேடுதல் தான் நடுகல்..!

2009 மே 18ல் பிரபாகரன் கொல்லப்பட்ட செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் பகுதியில், மிகப் பெரிய இனப்படுகொலையின் துயர வரலாற்றைச் சுமந்து காற்று ஓலமிட்டு அலைகிறது.

அந்த சம்பவத்திற்குப் பிறகான காட்சிகளையும், வாழ்க்கையையும் ஈழ எழுத்தாளர்கள் எழுதிக் கொண்டு தான் இருக்கின்றனர். அப்படி கிளிநொச்சி பகுதியில் வாழ்ந்த ஒரு குடும்பத்தின் கதை தான் தீபச்செல்வனின் ’நடுகல்’ நாவல்.

ஒரு புத்தகம், வாசிப்பவரை மகிழ்ச்சியுற செய்யும், நெகிழ்த்தும்.. கூடவே கைப் பிடித்து பயணிக்க வைக்கும். கண்ணீர் சிந்த வைக்கும். ஆனால், விமானத்திலிருந்து குண்டுகள் முன்னும் பின்னும் மாறி மாறி விழ., உயிரைக் கையில் பிடித்தபடி பதைபதைப்போடு நம்மையும் அவர்களோடு அகதியாய் ஓட வைக்கிறது.

மாவீரர் தினத்தன்று இயக்கப் போராளியாய் வீரமரணமடைந்த அண்ணனுக்கு அஞ்சலி செலுத்த மாவீரர் துயில் இல்லம் செல்லும் தம்பியின் குரல் வழியே இக்கதை துவங்குகிறது. அந்த இல்லத்தில் நிறைந்திருக்கும் மரங்கள் அனைத்துமே மரணமடைந்த ஒவ்வொரு வீரரின் பெயரைச் சொல்லி அவர்கள் தாய்க்கு தாங்களே பிள்ளைகளாக நிற்கின்றன.

கிளிநொச்சி தமிழீழக் கட்டுப்பாட்டில் இருந்த போது மிகச் சுதந்திரமாக இருந்த மக்கள் மனநிலையையும், அதை ஆக்கிரமிக்க முயன்ற சிங்கள இராணுவத்தின் தாக்குதல்களால் உருக்குலைந்து போய், வாழ்விடத்தை நீங்கி அகதியாய் அலைந்த மக்களின் துயரங்களையும் நமக்குள் கடத்தி எதுவும் செய்ய இயலாமல் பார்க்க மட்டுமே செய்யும் நம்மைக் குற்ற உணர்வுக்கு ஆளாக்குகின்றன.

ஓர் இயக்கத்தின் ஒழுங்கை, கட்டுப்பாடுகளை, மக்கள் மீதான அக்கறையை, மக்கள் இவர்கள் பால் வைத்திருந்த நம்பிக்கையைச் சித்தரிக்கின்ற இக்கதை , பிரபாகரனை சிறு வயதிலிருந்தே மனதிற்குள் மிகப் பெரிய ஹீரோவாகக் கொண்டாடும் எனக்கு மிகவும் நெருக்கமாகிப் போனதில் ஆச்சர்யமில்லை.

ஆயுதங்களை மட்டுமே நம்பிய புலிகளின் அரசியல் பார்வை சிறப்பாக இல்லாமல் போனதே கூட புலிகளின் வீழ்ச்சிக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. குருதி தோய்ந்த ஈழத்துப் படைப்புகள் இன்றளவும் இனப் படுகொலையின் சாட்சியங்களாய் வரலாறாக நம் முன் நிற்கின்றன.

அந்த தேசத்தில் சிறுவர்களின் விளையாட்டும் ஆர்மி, இயக்கம் என்று இரு குழுக்களாகப் பிரிந்து இராணுவத்தை விரட்டுவதாக அமைந்திருப்பது பங்கர் குழிக்குள் பிறந்து வளர்ந்த சிறுவர்களுக்குள் இயல்பாகக் கலந்திருக்கும் போராட்டக்குணத்தை எடுத்துக் காட்டுகிறது. சிறுவயதிலிருந்தே இயக்கத்தைக் கண்டு பிரமித்து இணைந்து வீர மரணமடைந்த அப்போதைய பல தமிழ் இளைஞர்களின் ஒட்டுமொத்தப் பிரதிநிதி வெள்ளையன் என்று இயக்கப் பெயர் கொண்ட பிரசன்னா.. ஆனால் தகப்பனாகப் பாவித்த, நேசித்த அண்ணனைப் போராட்டம் காவு கொண்டு விட, குடும்பத்தோடு இணைந்து அமைதியாக வாழத் துடிக்கிற, அதற்கு அரசியல் தீர்வு தேடுகின்ற இன்றைய ஈழ இளைஞர்களின் பிரதிநிதி விநோதன்.

இடம் பெயர்ந்து கொண்டேயிருக்கும் மக்கள், ஒவ்வொரு இடத்திலும் வீடு ஒன்றை உருவாக்கி தோட்டம் அமைத்து வாழத் தயாராகும் போது.. இவர்களுடைய உழைப்பைச் சுரண்ட, நிலத்தைப் பிடுங்கிக் கொள்ள தாக்குதல்கள் ஆரம்பிக்க அதையும் விட்டு நகர்கிறார்கள். முள்ளி வாய்க்காலில் நடந்த இறுதிப் போர் காட்சிகளை தாயும், சகோதரியும் விவரிக்க கேட்டுக் கொண்டிருககும் விநோதனுடன் நாமும் கண்ணீரோடு இயக்கத்தின் வீழ்ச்சியைக் காண்கிறோம்.

இறுதி யுத்தத்துக்குப் பிறகும், புலிகள் மீண்டும் வந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் தமிழ் மக்களைக் குரல் எழுப்ப விடாமல் வாழ்வாதாரங்களை அழித்து அடிமையாக்கி வைத்திருக்கிறது சிங்கள அரசு. முள்வேலி முகாம்களின் சித்ரவதைகள், இலங்கை அரசின் கோர முகத்தைக் காட்டும் கண்ணாடிகள்.. இறந்த மாவீர்களில் பலர் இந்திய ராணுவத்தோடு நடந்த போரில் மடிந்ததைக் கூறும் போது.. அமைதியை நிலைநாட்டவென்ற பூச்சோடு அனுப்பப்பட்ட இந்திய ராணுவத்தின் வேறு முகமும், அரசியல் தீர்வு தேடாத நம் மத்திய, மாநில அரசுகளின் கையாலாகத்தனமும் வெளிப்படுகிறது. எவர் இலங்கையின் ஆட்சிப்பொறுப்பிற்கு வந்தாலும் தமிழர்களை ஒடுக்குகிற ஒரே அரசியல் பார்வையைத் தான் கொண்டிருந்தனர் என்பதும் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

தோட்டத்தில் விளைந்த அத்தனையும் விட்டு அகதியாய் நகர்ந்த பின்னும் பசிக் கொடுமையால் போரின் நடுவே தானிருந்த வீட்டிற்கு வந்து விளைந்தவற்றை எடுத்துச் செல்லும் போது, இராணுவத்திடம் மாட்டிக் கொண்டு உயிரை விட்ட அன்ரனியைக் காணும் போது அடுத்த கவளம் சோறு உள்ளிறங்க மறுக்கிறது. இறந்த அண்ணனின் ஒரே ஒரு புகைப்படத்தைத் தேடி அலையும் தம்பியின் வழியே, வாழ்வின் இன்றியமையாத கணங்களை என்றும் நினைவிருத்தும் புகைப்படங்களின் அவசியம் விளங்குகிறது.

தாய் ஒரு வீட்டில் வேலைக்காரியாகப் பணி புரிய., குருகுலத்தில் தங்கை படிக்க, திசைக்கொருவராக சிதறிக் கிடக்கும் குடும்பத்தை இணைக்க விநோதன் நன்கு படித்துத் தேறி போட்டோ ஜர்னலிஸ்ட் ஆகிறான். இயக்கம் முற்றிலும் அழிக்கப்பட்ட சூழலில், இனி அரசியல் ரீதியான தீர்வுகளை நோக்கித் தான் நகர வேண்டும் என்பதை இந்நாவல் மூலம் புரிய முடிகிறது.

போர்க்களக் காட்சிகளோடு குருதியோடும் இக்கதையில் ஆங்காங்கே நம்மை நிறுத்துகின்றன, மருதமும், நெய்தலும் அழகுற அமைந்த கிளிநொச்சி நிலப்பரப்பின் வர்ணனைகள்.. அழகென்பதே ஆபத்தானது என்பதையும் நிலை நிறுத்துகிறது.

இக்கதை முழுவதும் தீபச் செல்வனின் இயல்பான எளிதான மொழி விரவிக் கிடந்தாலும், இனப் போராட்டத்தின் வீரியத்தை, வலிகளை வலிமையாக நமக்குள் அம்மொழி கடத்துகிறது.

இயக்கத்தை, புலிகளை ஹீரோக்களாகக் காண்பிக்கிற ஒரு சார்புடைய நாவல் என்ற விமர்சனங்கள் ஆங்காங்கு வெளிப்பட்டாலும், ஈழத் துயரை, கிளிநொச்சிப் பகுதியிலிருந்து பதிவிட்ட இக்கதை ஈழ இலக்கியத்தில் தவிர்க்க இயலா இடத்தைப் பிடிக்கிறது.. அனைவரும் வாசித்தறிய வேண்டிய நாவல் தீபச்செல்வனின் ”நடுகல்”

நூல்: நடுகல் (நாவல்)
ஆசிரியர் : தீபச்செல்வன்
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ்
விலை : 180 ரூ

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button