சிறுகதைகள்

பகல் கனவு

லிவி

“டே ரைட்டர்! எப்படி இருக்க?” தெரியாத ஒரு எண்ணில் இருந்து அழைப்பு. பரிச்சயமான குரல், அதிலும் இத்தனை சினேகத்துடன் தன்னை அழைக்கும் ஒருவனை அவனுக்குத் தெரியும். ராம் தடுமாறினான். அந்தக் குரல் எரிச்சலூட்டியது. உலகின் யாரு ம்காணா பகுதியில் ஒளிந்து கொண்டாலும் தன் பலத்தால் நம்மை சிறுமைபடுத்தும் ஒருவன் நம்மை விடுவதில்லை.

பதில் சொல்லாமல் துண்டிப்பதற்குள் அவன் தொடர்ந்தான்.

“என்ன யோசிக்கிற. நான்தான்டா மகேஷ்! சின்ன உதவி வேணும் மச்சி. நீதான் சரியான ஆளு. இந்த வீக்கெண்ட் பாக்கலாம் வாடா”.

கல்லூரி நாட்களில் அவனுடைய பட்டப்பெயர் ரைட்டர். ரைட்டர் என்று அழைத்தது மிகவும் உறுத்தியது. அந்த நாட்களில் எழுதிய கவிதைகளோடு சரி. இப்பொழுது கால்செண்ட்டரில் வேலை. அதுவும் தமிழ் கால்செண்ட்டர். தினமும் ஒருவராவது ராமைக் காரணம் இல்லாமல் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். இடைவேளை நேரத்திலும் தூக்கத்திலும் அவன் தலையில் ஒய்வில்லாமல் குரல்கள் ஒலித்துக் கொண்டே இருந்தன.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் ஆக்டிவேட் பண்ணல. என் காசு எனக்கு வேணும். இப்ப திருப்பித்தர போறியா இல்லையா?”

“டே ஓ… உனக்கு நேரம் காலமே கிடையாதா?”

“உன் கம்பெனி என்னத்த புடிங்கிட்டு இருக்கு?”

“என் கனெக்சன இப்பவே டிஸ்கண்டினியூ பண்ணு.”

“இல்லைங்க அப்புறம் பேசுறேன்.”

“இதோட பத்தாவது தடவ கால் பண்றேன்.”

குரல்கள். இரைச்சல். முகம் தெரியாதவர்களின் இரைச்சல். ஆனாலும் ராமின் கனவுகளில் எதிர் திசையில் பேசுபவர்களின் முகங்களை அவனால் தெளிவாக பார்க்க முடிகிறது. முகங்கள். கற்பனை முகங்கள். அவன் தொலைபேசி எண்ணைக் கொண்டு தேடினால், முகவரியை அவன் வேலை செய்யும் மென்பொருள் கொடுத்துவிடும். அதைவைத்துக் கொண்டு நான் ஏன் அவர்கள் முகங்களை உறுதிப்படுத்திக் கொள்ளக்கூடாது என்று நினைத்த நாட்கள் அனேகம். ஆனால் அவர்களிடம் தன்னை எவ்வாறு அடையாளப்படுத்திக் கொள்ள முடியும். மீண்டும் வசைமாரிப் பொழிந்தால்.

ஒருநாள் தொலைப்பேசி எண்ணை எடுத்து வாட்ஸ்சாப்பில் சேமித்து, அவர்களின் ப்ரொபைல் டிபியை தேடும் யோசைனையை ஒரு பெண்ணின் குரல் கொடுத்தது. அவள் பூனைக்குட்டியை படமாக வைத்திருந்தாள்.ஏமாற்றம். குரல்களுக்கும் மனிதர்களின் முகத்திற்கும் என்ன தொடர்பிருக்கும்.

அதிலிருந்து பெண்ணின் குரலோ, கோபக்காரனின் குரலோ அவர்களின் முகங்களைத் தேடினான். பல படங்கள் செல்பிகளாக, வண்டியில் அமர்ந்து கொண்டு, குழந்தைகளோடு, காதலர்களாக, பிடித்த நடிகர்களாக, தேவதைகளாக, தன்னம்பிக்கை வாசகங்களாக. டிபிக்களாக மனிதர்கள்.

அப்படி படங்களை பார்க்கத் தொடங்கிய நாட்களிலிருந்து தனக்குள் ஒரு மாற்றத்தை உணரத் தொடங்கினான். இப்பொழுது கனவுகளில் முகங்கள் வருவதில்லை. ஆனால் வாட்ஸ்ப் டிபிக்களைப் போன்ற முகங்கள். இல்லை படங்கள்.

வசவு வாங்குவதற்காகத்தான் அவனுக்குச் சம்பளம். குரல்கள். முகங்கள். வாட்ஸப் டிபிக்கள். அடிமை என்று எண்ணி ஏவல் செய்யச் சொல்லும் குரல்கள். இவற்றுக்கிடையே எழுத்தாவது புண்ணாக்காவது.

***

“எனக்கு உன்ன விட்டா வேற ரைட்டர் யாரையும் தெரியாதுடா. ஒரு கதை ஒண்ணு எழுதியிருக்கேன். ஐ மீன் எழுதியிருக்கு. நீதான் எடிட் பண்ணித் தரணும்”

மகேஷ் அவனை கேலி செய்வதற்காக ரைட்டர் எனக் கூப்பிடவில்லை. மகேஷின் குரலில் இருந்த நம்பிக்கை அவனை மேலும் சங்கடத்தில் ஆழ்த்தியது. மீண்டும் அவனை ஏதோவொரு வகையில் சிறுமைப்படுத்துகிறான்.

கல்லூரி விடுதியில் மகேஷைப் பார்ப்பது அரிது. சில நாட்கள் ராமின் அறைக்கு வருவான். அறைக்கு வந்தால் அறையை சோதனையிட வந்த கல்லூரி முதல்வரைப் போல் கைகளை பின்னால்கட்டி முன்னும் பின்னும் புத்தகக் கட்டுகள் இருக்கும் இடத்தில் நடப்பான்.  ஒரு புத்தகத்தை படித்து விட்டு தருகிறேன் என்று சொல்லி மறுமொழி வரும் வரைக்கும் காத்திராமல் எடுத்துப் போவான். புத்தகத்தின் பக்கங்கள் மடிப்பு கலையாமல் வந்து சேரும் என்பதால் ராமும் ஒன்றும் சொல்வதில்லை.

மகேஷுக்கு வியர்வை உதிர்க்காமல், சதைகள் பொருந்திய தொள தொளப்பான உடல். அவனுடைய பருத்த உடலை பார்க்கும் போது ராமுக்கு அவன் வஞ்சகம் இல்லாத உள்ளம் படைத்தவன் என்ற எண்ணம் தோன்றும். யாரிடமும் அவன் நெருக்கம் காட்டியதில்லை. பணத்திமிர் என்று மனதுக்குள் திட்டிக்கொள்வான் ராம். ஆனாலும் அவன் ராமிடம் பேசிய வார்த்தைகள் தான் அதிகம்.

அன்று அறைக்கு வந்தவன் நேரே ராமுக்கு எதிரே இருந்த மேசையில் உட்கார்ந்தான். விடுதி அறைக்குள் ஒரு மேசை இருக்கும். நாற்காலிகள் இல்லை. மேசையை இழுத்து கட்டில் அருகில் போட்டுக்கொண்டால், கட்டில் நாற்காலியாக செயல்படும்.  கட்டிலில் இருந்த மகேஷ் அவனை சட்டை செய்யாமல் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தான். அவன் ராம் தோளில் கையை வைத்தான்.

“மச்சி, நீ ஏன் இந்த புக்ஸ் எல்லாம் படிக்கிற?”

தொந்தரவு செய்கிறோம் என்கிற உணர்வே அற்றவன். அதிலும் இந்த மாதிரி கேள்விகளைக் கேட்டு அடுத்தவர் நேரத்தை வீணாக்குகிறோம் என்கிற தன்மை கூட இல்லாமல். ராம் மெளனமாக இருந்தான். அவன் கேள்வி புரியவில்லை என்பது போல் புருவத்தை உயர்த்தி ஒருமுறை பார்த்தான். அவனை விரட்டிவிட வேண்டும் என்பதைத் தவிர ராமுக்கு வேறு எண்ணம் இருக்கவில்லை.

“அதாவது இந்த கவிதை கதை புத்தகம் எல்லாம். நீ உனக்கு அறிவு வேணும்னா சயின்ஸ்  பத்தின புத்தகங்களை படிக்கலாமே. நீ டைம்பாஸுக்குத்தானே படிக்கிற.”

“நான் என்ன பண்ணா உனக்கென்ன அக்கறை?”

“அது இல்லடா, நான் உண்மையிலே அதைப் பத்தி தெரிஞ்சிக்கத்தான் கேக்கிறேன்.” அவன் முகத்தில் அப்பாவித் தனம் அப்பியிருந்தது.

“ஒரு நாள் முழுக்க என்னால் வகுப்பெடுக்க முடியாது. சுருக்கமா சொன்னா என் கற்பனைகளை, சிந்தனைகளை, உணர்வுகளை, பகல் கனவு போல் கண்ட காட்சியை நான் மற்றவர்களுக்கும் ஒரு வகையில் கடத்த வேண்டும், அதையும் நாம் பெறவும் வேண்டும்”

“அதுக்காக நீ இவ்வளவு நேரத்தை செலவழிப்பியா?”

“எனக்கு பிடிச்சிருக்கு நான் செய்யிறேன். நீ ஏன் கம்ப்யூட்டர் கான்பரன்ஸ் எல்லாம் போற. அத டைம் பாஸுன்னு சொன்னா உனக்கெப்பிடி இருக்கும்”

“அது பொழுதுபோக்குன்னு கூட சொல்லலாம். ஆன அது மூலமா இந்த உலகத்தை மாத்தமுடியும்.”

“உன்னை மாதிரி முட்டாள் விஞ்ஞானிகள் எல்லாம் உலகத்தை எப்பிடி அழிக்கிறதுன்னு யோசிக்கிறீங்க இல்லையா. அதையெல்லாம் தடுக்கத்தான் ஆர்ட் வேணும். உனக்கு என்னால விளக்கமுடியாது. இப்ப கிளம்பு.”

“நீ சரியா சொன்ன. என்னோட கேள்வி இந்த ஆர்ட், இலக்கியம், ம்யூசிக் எல்லாத்தையும் ஒரு இயந்திரமே பண்ணிட்டா, நாம அந்த நேரத்தை மிச்சப்படுத்தாலாம்தானே. மனித சிந்தனையை வேறுவிதத்தில்  நாம பயன்படுத்தலாம்.“

“சரிப்பா அறிவாளி அப்படி நடக்கும் போது பாக்கலாம். வேற என்ன வேணும் உனக்கு?” கைகள் வாசற்கதவைக் காட்டின.

தோள்களைக் குலுக்கி தலையை ஆட்டியவாறு வெளியே செல்லும்போது அவன் முணுமுணுத்தது இன்னும் நினைவிருக்கிறது, “நானும் ஒரு புக் எழுதுவேன். ஐ வில் டெடிக்கேட் இட் டு யூ”.

***

கல்லூரி திருவிழாக் கோலம் காணும் நாட்கள் அவை. வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் டெக்னோஃபெஸ்ட். செமினார்கள், போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், எல்லாவற்றிற்கும் மேலாக சீனியர் ஜூனியர் பெண்கள் அன்று சேலை கட்டுவார்கள். கணிப்பொறித் துறையும் ஐடித் துறையும் பூங்காக்களை நினைவுறுத்தும். அந்த இரண்டிலும்தான் பெண்கள் அதிகமாக இருப்பார்கள். முதல் மாடியில் இருந்த மெக்கானிக்கல் துறையில் இருந்து அவர்கள் செல்வதைப் பார்க்கலாம். இப்பொழுது போல் இரைச்சல்களும் படங்களும் மூளைக்குள் புகாமல் இருந்த காலம். கம்பிகளுக்குள் முகத்தை கொழுவி, கன்னங்கள் உரசி, தாடை நெரித்து, கழுத்து வலிக்க கண்களால் மீன் பிடிக்கும்பொழுது, பின்னால் இருந்து கையொன்று ராமின் தோளில் அழுத்தியது.

“அவசரமா ஒரு உதவி வேணும். நீதான் கூட வரணும்” மகேஷ் கெஞ்சுவதைப் போல் பார்த்தான்.

“அப்படி என்ன அவசரம்” சினந்தான் ராம்.

“நீ வா. நான் சொல்றேன்” கையைப் பிடித்து இழுத்துக் கொண்டே சென்றான்.

“மச்சி. நான் இந்த மணிமேக்கர் கேமுக்கு தனியாளா ரெஜிஸ்டர் பண்ண முடியாது. எனக்கு ஒரு பார்ட்னர் வேணும்.”

“அதுக்கு ஏன் என்னை கூப்பிட்ற?”

“உன்னை விட்டா யாரை எனக்கு தெரியும் சொல்லு. நீ என் கூட மட்டும் வா. நான் பாத்துக்கிறேன்”

ராமிடம் உரிமை எடுத்துக் கொள்ள அவனுக்கு காரணம் தேவையில்லை.

மணிமேக்கர் போட்டியின் விதியை அறிவித்தார்கள். பங்கெடுப்பவர்களுக்கு நூறு ரூபாய் நடுவர்கள் கொடுப்பார்கள். ஒவ்வொரு குழுவிலும் இருவர் மட்டுமே இருக்க வேண்டும். போட்டியாளர்கள் அதை வைத்துக் கொண்டு, தங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்து, பணத்தை பெருக்க வேண்டும். யார் அன்றைய நாளின் முடிவில் அதிக பணம் சம்பாதித்திருக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்கள்.

சில பெண்கள் சீப்பு பவுடர்,முகப் பொலிவு கிரீம்கள் வாங்கி,சிறு கடைபோன்றதொன்றை அடுக்கை வைத்து, அந்த வழியருகே வரும் பெண்களை அணுகி அவர்களுக்கு சின்னதாக முகப்பூச்சு அலங்காரம் செய்து பணத்தை பெற்றுக் கொண்டார்கள். அதில் சிலர் விதவிதமான கொண்டைகளை பின்னினார்கள்.

சிலர் வெள்ளரிகாய், காரெட், தக்காளியை வாங்கி சாலட் செய்து விற்றார்கள்.

சிலர் கல்லூரி காண்டீனுக்கு சென்று சமோசா, வடை வகைகளை வாங்கி அதிக விலைக்கு விற்றர்கள்.

இன்னும் சிலர் தலைக்கு மசாஜ் செய்ய கிளம்பினார்கள்.

ராமைப் பார்த்து சிரித்தான் மகேஷ்.

“என்கிட்ட இருக்கிற புத்தகங்கள கொஞ்ச விலைக்கு வாங்கி விக்க ப்ளான் பண்ணாதடா. நான் தர மாட்டேன்” சொல்லிவிட்டு தன் கையில் எதுவும் இல்லை என்பது போல் விரித்துக் காட்டினான் ராம்.

“சரி வா நாம காண்டீன் பக்கத்துல இருக்க அக்செசரீஸ் கடைக்கு போவோம்”

“பேப்பர் பென்சில் எல்லாம் வாங்கி வித்து உன்னால அவ்வளவு பணம் சம்பாதிக்க முடியுமா?”

பதில் சொல்லாமல் சிரித்தான் மகேஷ். அவனுடைய கன்னச் சதைகளுடன் சேர்த்து கண்களும் சிரிக்கும்போது பேரழகனாக தெரிவான்.

“வேணும்னா திருடலாம். ஆனா அதுக்கும் இப்ப வாய்ப்பில்லையே!” ராமுக்கு அவனைச் சீண்டியாக வேண்டும்.

“மச்சி ரொம்ப ஈசிடா, நீ போய் இருபத்தைஞ்சு அன்ரூல்ட் பேப்பர், ரெண்டு பேனா, ரெண்டு ஸ்கேல் வாங்கு” என்று கையில் நூறு ரூபாயைத் திணித்தான். “மறக்காம பில்லையும் வாங்கிடு” இங்க காசு போட பை கிடைக்காது. நான் ஹாஸ்டல் போய் என் பையை எடுத்து வந்திடுறேன்.  சொல்லிவிட்டு அவசர அவசரமாக ஹாஸ்டலை நோக்கி நடப்பதற்கும் ஓடுவதற்கும் நடுவான வேகத்தில் போனான்.

மொத்தம் முப்பத்தி ஏழு ரூபாய் ஐம்பது காசு செலவு பில்லை கொடுக்க வந்த ராம் மகேஷைப் பார்த்து சிரித்தான். அவன் எடுத்து வந்திருந்தது, அவனுடைய லாப்டாப் பையை.

“நீ சம்பாதிக்கிற காச போட இந்த பை போதுமாடா?”

“நீன்னு சொல்லாதடா, நாம, இது போதும்ன்னு நினைக்கிறேன்” இப்பொழுது மெல்லிய சிரிப்புடன், பணம் போட அந்த பை போதுமா என்று யோசிப்பது போல் நெற்றியை சுருக்கினான் மகேஷ். “போதுமா இருக்கலாம்”.

“நீயே அந்த காச வச்சுக்க எனக்கு வேணாம்!” கையை எடுத்து கும்பிடுவது போல் நையாண்டி செய்தான் ராம்.

“அப்படி சொல்லாத மச்சி, வேலைய ஆரம்பிக்கலாம்.”

ஒவ்வொரு பேப்பரையும் எடுத்து அடிமட்டத்தின் அளவுக்கு வாகாக குறுக்கும் நெடுக்கும் பேனாவால் கிழிக்க சொன்னான். பின் ஒவ்வொரு சதுர வடிவ சீட்டில் 1ல் இருந்து தொடங்கி நம்பரை எழுதச் சொன்னான். எழுதிய கட்டங்களை கிழித்து சீட்டைப் போல் மடிக்கச் சொன்னான். வா போகலாம் என்றான்.

முதலில் ஒரு வகுப்பறைக்குள் நுழைந்தான். நான் மணிமேக்கிங் போட்டிக்காக ஒரு குலுக்கல் போட்டியை நடத்துகிறேன். முதல் பரிசு 500 ரூபாய் இரண்டாம் பரிசு 250 ரூபாய் மூன்றாம் பரிசு 100 ரூபாய். ஒரு சீட்டின் விலை 5 ரூபாய் மட்டும்தான். பரிசு வென்றவர்கள் பெயர் இன்றே பொறியியல் கல்லூரியின் வாசலில் இருக்கும் தகவல் பலகையில் எழுதி வைக்கப்படும் என்றான்.

முதலில் யோசித்தவர்களுக்கு நம்பிக்கை கூறினான். வெற்றி பெற்றவுடன் உங்களுக்கு பணத்தை கொடுத்து விடுவேன். எல்லாரும் ஒரு சீட்டைப் பெற்றுக் கொண்டார்கள். 60 பேர் இருந்த அந்த வகுப்பறையில் அன்று வந்திருந்த 57 பேரும் வாங்கிக் கொண்டனர். அந்த வகுப்பறையின் வருமானம் 285 ரூபாய். அடுத்த நான்கு வகுப்புகளில் ஆயிரத்து சொச்சத்தைத் தாண்டியது.

மச்சி இன்னைக்கு ஜாக்பாட். நீ கொஞ்சம் வேகமா இரு. அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரிந்த ராமுக்கு தலை சுற்றியது. கல்வித் தந்தை ஒருவர் கட்டியிருந்த அந்த தனியார் கல்லூரி வளாகத்துக்குள் மூன்று பொறியியல் கல்லூரிகள், இரண்டு கலைக்கல்லூரி, ஒரு பல் மருத்துவக் கல்லூரி, இரண்டு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, இரண்டு பாலிடெக்னிக் கல்லூரி, ஒரு  பள்ளிக்கூடமும் இருந்தது.

முதாலாம் ஆண்டில் இருந்து இறுதி ஆண்டுவரை எந்த வகுப்பறையும் மிச்சமில்லை. எல்லா இடங்களிலும் அசுர வேகத்தில் விற்றார்கள். சில்லறையின் கணம் கொஞ்சம் அதிகமாக இருந்தது. ராமின் தோளில் பை ஏற்றப்பட்டது. அது கணத்ததால், அதை பத்திரமாக நண்பன் ஒருவனிடம் கொடுத்துவிட்டு இன்னும் இரண்டு பையை வாங்கினார்கள். அன்று இரவு எண்ணி முடிக்கும் பொழுது, பணம் ஐம்பத்தி ஏழாயிரத்தி இருனூற்றி ஐந்து ரூபாயாக இருந்தது.

பணத்தை பங்கிடுவது பற்றி மகேஷ் எதுவும் சொல்லவில்லை. ராமும் கேட்கவில்லை. அவனைப் பார்த்து சிரித்து பரிகசித்தது நினைவில் வந்தது. இருந்தும் அவன் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம். இவன் பெருந்தன்மையாக அதை மறுத்திருப்பான். அதைக் கூட அவன் ராமுக்கு தரத் தயாராக இல்லை என்று நினைத்தான். மீண்டும் ஒருமுறை மச்சி என்று வந்தால் அவனை ஏறெடுத்துப் பார்க்கவும் கூடாது. அன்று எத்தனைப் படிகள் ஏறி இறங்கியிருந்தாலும், காசுப் பொதியை சுமந்தாலும் அவனால் சோர்வை உணர முடியாதது ஆச்சரியமாக இருந்தது. உற்சாகத்தில் உடல் களைப்பதில்லை போலும்.

அடுத்த நாள் வங்கிக் காசோலையை நீட்டினான் மகேஷ்.

“மச்சான். இந்தா உன் பங்கு, இதில் பாதி இருக்கு.”

“எனக்கு வேணாம்.”

“ஏன் அப்பிடி சொல்ற?”

“இல்ல பரவாயில்லை, ஐடியா உன்னுடையது.”

“நீ இல்லாம இது நடந்துருக்காது, இது உன் காசும்தான்”

“வேணாம்னா விட்றா”

“நீ சொன்னத நினைச்சுதான் வேணாம்னு சொல்ற. அத நான் கணக்குல எடுத்துக்கல”

“நீ பெரிய புடுங்கி, நீ கூப்பிட்டா கூட வரணும், காசு குடுத்தா வாங்கணும். வெளில போடா”

“ஏன் நீ எல்லாத்தையும் சீரியஸா எடுத்துக்கிற”

“போயிருடா…”

“நீதானே எல்லா வேலையும் பார்த்த முறைப்படி உனக்கு வர்றதுதானே”

“மச்சி…” மகேஷ் சொல்லி முடிப்பதற்குள் “நான் என்ன உன் வேலைகாரனா..”அடிக்கப்பாய்ந்தான் ராம். மகேசின் முகத்தில் குத்தினான். அவனை அடித்தாலும், ராமின் உடல் நடுங்கத் தொடங்கியது. தலையில் உச்சியில் சூடான ரத்தம் பாய்வதை உணர முடிந்தது. இது கோபமா, பயமா. ஏன் இந்த நடுக்கம் என்று புரியவில்லை.

***

இத்தனை வருடம் கழித்து எதுவும் நடவாதது போல் “மச்சி…” என்கிறான். அவனிடம் உரிமை எடுத்துக் கொள்ளும் குணம் இன்னும் மாறவில்லை.

யோசித்துக் கொண்டிருக்கும்போதே “உனக்கு செக் தர்றதுக்கு கூப்பிடலடா.  ஒரு கதை எழுதியிருக்கிறேன். அத கரெக்சன் மட்டும் பண்ணுடா ரைட்டர்”.

“நீ ஞாயித்துக்கிழம வேளச்சேரி பஸ் ஸ்டாண்டு வந்து போன் பண்ணு. நான் உனக்கு அட்ரஸ் சொல்றேன்.” அவன் வரமுடியுமா என்று கேட்கவில்லை வந்துவிடு என்கிறான்.

“எனக்கு வேற வேல இருக்கு.”

“எனக்கு உன்ன விட்டா வேற யாரையும் தெரியாது. நீதான் நிறைய புக் படிக்கிறவனாச்சே அதை மட்டும் திருத்திக் குடு போதும். ப்ளீஸ்டா” மகேஷ் விடுவதாக இல்லை. மகேஷ் இன்னும் மாறவில்லை.

அவன் அப்பார்ட்மெண்ட் முன்னால் செக் போஸ்டில் மறித்து வாட்ச்மேன் எந்த ப்ளாக்கிற்கு போகப் போகிறான் என்று கேட்டதும், எத்தனை ப்ளாக் இருக்கிறது என்று திரும்ப கேட்டான் ராம். வாட்ச்மேன் ஏற இறங்க பார்க்கவும் மகேஷை போனில் அழைத்தான். பதில் இல்லை. அருகில் செடிகள் இருந்த  இடத்தைக்காட்டி அங்க வெய்ட் பண்ணுங்க சார் என்றான். தென்னை மரத்தைப் போல் உயர்ந்திருந்த அழகிய மரத்தின் அருகில் போய் நின்று கொண்டான். திரும்பிப் போய் விடலாம் என்கிற நேரத்தில் அவனிடம் இருந்து அழைப்பு வந்தது. “சாரிடா போன வாட்ச்மேன் கிட்ட குடு” என்றான்.

“நீங்க அங்க உட்காருங்க” என்றார். அது அவர் இருப்பதற்காக வைத்திருந்த ஸ்டூல். இல்லங்க பராவால நான் நின்னுக்கிறேன். பத்து நிமிடம் தாண்டியிருக்கும். கால் வலி தொடங்கியது. வாட்ச்மேனிடம் எதுக்கு நம்ம சுயகவுரவம் பாக்கணும். முட்டாப் பயலே என்று நினைத்துக் கொண்டான்.கல்லூரியில் அடித்ததற்கு திருப்பி அடிக்க கூப்பிடுவானா. மனம் எதையெல்லாமோ கற்பனை செய்தது.

கார் ஒன்று அருகில் வந்தது. பெண் ஒருத்தி ஓட்டிக்கொண்டு வந்தாள். அருகில் அவள் குழந்தை. ராமின் அருகில் நிறுத்தி புன்னகைத்து கையசைத்து ஏறிக் கோங்க “ நான் நந்தினி. மகேஷ் வைப்”. உள்ளே ஏறியதும். சீட்டின் இடைவெளியில் கையை நீட்டி “நீங்க பெரிய ரைட்டர்ன்னு சொல்லியிருக்கார்” “இல்லங்க ரீடர்னு வேணா சொல்லலாம்,” ராம் நெளிந்தான். குழந்தை அம்மாவைப் போல் இருந்தாள். புதுமனிதரைப் பார்த்த மிரட்ச்சி அவள் கண்களில். “அப்பாவின் ப்ரெண்டா?” என்றாள். ஆம் என்றவுடன் என்னோட பேர் வைஷ்ணவி என்றாள்.

***

மடிக்கணினியில் புதைந்திருந்தவன், எழுந்து வந்து வரவேற்றான்.

“சாரிடா, உனக்கு காட்ட வேண்டிய டாக்குமெண்ட்ஸ் தேடிட்டு இருந்தேன்” என்றான் மகேஷ். முதலில் அவனை அடையாளம் காண்பதில் தடுமாறினான். அவன் தொலைப்பேசியில் கணீரெண்டு ஒலித்த முதிர்ந்த நடுத்தர வயதுக்காரனின் குரலில் ஒரு முகத்தை கற்பனை செய்து வைத்திருந்தான். கல்லூரியைப் பார்த்ததை விட இன்னும் குண்டாகி, கன்னங்கள் சதை பரப்பி, நாற்காலி கொள்ளாமல், தொப்பை அரை வட்டத்தில் விரிந்து, கைகள் உருட்டுக்கட்டைகளைப் போல, எழுந்து ஒரு நிமிடம் நடந்தால் முட்டி வலிக்கும் என்று சொல்லி இருக்கும் ஒருவன். முன் நெற்றி ஏறி அல்லது தலை நடுவில் வழுக்கைத் தலையுடன் தன் வெளிர் நிற மண்டையை காண்பிக்கும் ஒருவன்.

அவன் எல்லாவற்றையும் பொய்யாக்கி சிரித்தான். விளையாட்டு வீரனைப் போன்ற உடல் வாகு, நெஞ்சு முடிந்து வயிறு எங்கே தொடங்கி இருக்கிறது என்று தெரியாமல் சமமான முன்பகுதி, கல்லூரி காலங்களில் இருந்த கொழுத்த கன்னங்கள் மறைந்து கொஞ்சமாக உட்குழியிட்டு அவனை வலிமையாகக் காட்டியது. அவன் அழகில்லாமல் இருக்க வேண்டும் என்பது தன்னுடைய ஆழ்மனத்தில் இருக்கும் ஆசை என்பது புரிந்தது. அந்த குரலுக்கு சொந்தகாரன் அழகனாகவும் இருக்கலாம் என்பதை வேண்டுமென்றே கற்பனை செய்வதைத் தவிர்த்தது இப்பொழுது உறைத்தது.

“மச்சி பெரிய மேட்டர் ஒண்ணும் இல்ல. கதையை நான் எழுதல. ஆர்டிப்சியல் இண்டெலிஜன்ஸ்தாண்டா. எல்லாம் ஆட்டோ சஜசன் மோட்தான். அதை என்னோட வசதிக்காக அலெக்ஸா வாய்ஸ் இண்டர்பேஸொட கனெக்ட் பண்ணியிருக்கேண்டா”. தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தான். அது ராமுக்கு புரிகிறதா இல்லையா என்கிற கவலை அவனுக்கு இல்லை.

அவன் சொல்வதை விட. மொத் என்ற சோஃபாவில் சாய்ந்திருந்தான். ‘இது என்ன விலை இருக்கும்’ என்று கேட்க தோன்றி, ஆர்வத்தை மறைத்துக் கொண்டான்.

“உனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை எல்லாம். நீதான் இந்த மாதிரி வீண் வேலை எல்லாம் செய்ய மாட்டியே”

“உனக்கு ஞாபக சக்தி குறைவு.அத விடு. இதுவும் என்னுடைய வேலைதான். இதுல ஒரு கஷ்டமும் இல்ல. எல்லாம் மெசின் லேர்னிங். டால்ஸ்டாயில் இருந்து ஒரான் பாமுக் வரை எல்லார் நாவல்களையும் இத படிச்சு ஒரு பேட்டர்ன் கண்டுபிடிச்சிடும். இலக்கணப் பிழை இல்லாமல் சொற்றொடர்களையும் போட்டுடும்.”

“ராம் உனக்குப் புரியலதான”

“புரிஞ்சிருந்தா உன்கிட்ட கேள்வி கேட்டிருப்பனே”

உனக்கு ஒரு உதாரணம் சொல்றேன். இந்த உலகத்தில் ஒரு முகம் மாதிரி இன்னொரு முகம் இருக்காது. உனக்கு தெரிந்த ஒருவரின் சாயைகளை வேணா மற்றவர்கள் முகத்தில் நீ தேடிப்பார்க்கலாம். இரட்டையர்களுக்க்கும் இது பொருந்தும். ஒவ்வொரு முக அமைப்பில் இருந்து ஒரு உறுப்பை எடுத்துப் போட்டு, ஒரு புது முகத்தை உருவாக்கலாம் இல்லையா. இப்ப இது நடைமுறையில இருக்கு. உதாரணத்திற்கு பல பேரோட முகங்களை கம்ப்யூட்டரில் பீட் பண்ணினாங்க. எல்லா மாதிரியான மனித முகங்களையும்.அழகான முகங்கள், அழகில்லாத முகங்கள், பணம் உள்ளது, இல்லாதது, இளமையாக, முதுமையாக, நீண்ட மூக்கு, பெரிய நெற்றி, வெண்ணிற கண்கள், பழுப்பு நிற கண்கள், நீல, சாம்பல் நிற, கோதுமை நிற கண்கள், கூர் நாசி, வளைந்த நாசி, கிளி மூக்கு, சப்பை மூக்கு, எல்லா விதமான வாய் தோரணைகள், மயிர்கள். மொத்தத்தில் ஒன்று போல் மற்றொன்றில்லாமல் இப்பிரபஞ்சம் படைத்த முகங்கள். அதில் இருந்து புதுப்புது முகங்களை கணினியால் உருவாக்க முடிந்தது”

ஒபோமா மூக்கு , சச்சின் மயிர், விஜய் சேதுபதி முகவடிவம். கருணாநிதி நெற்றி. ராமராஜன் உதடு. இன்னும் லட்சக்கணக்கான பரிமாணங்களை உள்வாங்கிக்கிட்டு அது ஒரு புது முகத்தை கொடுத்தது. அப்பிடி இந்த உலகத்தில் ஒருத்தரும் இல்ல. ஆனால் பார்க்கிறதுக்கு அப்பிடியே அச்சு அசல் ஒரு ஆள் மாதிரியே இருக்கும்.“

“இதைத் தான் போட்டோஸாப்புல பண்ணுறாங்களே, அதுதானே”

“நீ சரியா கேட்ட, போட்டாஸாப் செய்யும் போது அதில் நீயோ நானோ உட்கார்ந்து அதை உருவாக்க வேண்டும். ஆனால் இது ஆர்ட்டிபிசியல் இண்டெலியென்ஸ். ஓர் அல்காரிதம் தான் முடிவு செய்யும். மனித சிந்தனையை செய்கையை அப்படியே காப்பி அடித்து செய்ய வைக்கும் முயற்சி. செஸ்ஸின் கிராண்ட் மாஸ்டர்களை தோற்கடிக்கும் நிரலிகளை உருவாக்கினதை கேள்விப்பட்டிருப்ப. தானியாங்கி கார்கள் வெகு விரைவில் நம் ரோடுகளில் திரியும் காலம் வெகு தொலைவில் இல்லை.

‘அவனை இடைமறித்து வாட்ஸ்ப் போட்டோக்களை முகத்துக்கு பீட் பண்ணாத. முகம் தெளிவில்லாமல் இருக்கும்’ என்று சொல்ல வேண்டும் போல் உந்துதல் வந்தது. தான் கண்டுபிடித்த ஒன்றை அவன் உதாசீனம் செய்யலாம் என்பதால் ராம் கேட்டுக் கொண்டிருந்தான்.

“நீ முதல் தடவ இதைப் பத்தி கேட்கிறதால புரியாம இருக்கும். ஆனா இது ரொம்ப சிம்பிள். பழகிடும். அது விசுவல் அத மாதிரி நான் பண்ணினது டெக்ஸ்ட்.”

“ஒரு முகத்தை அதுவாகவே கண், மூக்கு, வாய், நெற்றி, கன்னம் வைத்து உருவாக்குவதைப் போல் இது சொற்தொடர்களுக்கு உண்டான தொடர்பை கண்டுபிடித்து ஒரு மாதிரியான கதை வடிவத்தை தரும்”

“கதை காதல் கதையா? துப்பறியும் கதையா? சோகக் கதையா? அறிவியல் புனைகதையா” இப்பொழுது ராமிடமும் ஆர்வம் தொற்றியிருந்தது.

“எதை விதைக்கிறியோ அதை தான் அறுவடை பண்ணுவ. இன்புட் இஸ் அவுட்புட். என்ன மாதிரியான ஜோனர் என்பதை செண்டிமெண்ட் அனலெஸிஸ் மூலம் பண்ணலாம். அடுத்து அதை செய்யிற முயற்சிலையும் இருக்கேன்”

“அதுதான் எழுதிட்டியே. அதான் எழுதிருச்சே அப்புறம் என்ன”

நீ அத எடிட் பண்ணிக் குடு. எழுத்தாளர்களுக்கு எடிட்டர் மாதிரி. இந்தக் கதையைப் படி. இதுல ஆதவநேசன் கதைகளை பீட் பண்ணியிருக்கேன். அவருடைய ஒரு கதையில் இருந்து ஒன்று இரண்டு வரியை எடுத்திருக்கும். அதற்கு மேல் மற்றொரு கதையில் இருந்து ஒரு வரி. அதன் மூலம் ஒரு பாட்டர்னை அது உருவாக்கியிருக்கும்.  ஒரு முறை படிச்சுப்பார்.

ராம் கதையைப் படிக்கத் தொடங்கினான்.

“எ ஸ்டோரி பை ஆர்ட்டிபிஸியல் இண்டெலிஜென்ஸ் வித் அலெக்ஸா” – மகேஷ்

அப்பாதான் நான் சிகரெட் பிடிப்பதற்கு காரணம்.

வீட்டின் நாற்காலியில் அமர்ந்து ஜன்னலைப் பார்த்தபடி புகைப்பார்.

வெளியே பூந்தோட்டங்கள் இல்லை. பறவை இரைச்சலும் இல்லை.

எதிர் அடுக்குமாடி வீட்டின் சுவர் மட்டும்தான் தெரியும்.

புகைப் போக்கியாக அவன் சன்னலை உபயோகித்தான்.

அவனுடைய கால்கள் புகைப்பிடிக்கும் போது, மேசை மேல் கால் மேல் கால் போட்டபடி அருகில் இழுத்துப் போட்ட இருக்கும். தலை நாற்காலியின் தலைப்பில் தொங்கியபடி.

இந்த தோரணை மட்டுமல்ல.

அவர் இறுதியாகச் சடங்கைப் போலச்  செய்வதைப் பார்பது தான், உடலுறவின் உச்சகட்டம்.

கடைசி புகையை இழுத்து , சிகரெட்டை அணைத்துவிட்டு, பெருவிரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் சிகரெட் மொட்டை வைத்து, குப்பைத் தொட்டியைப் நோக்கி சுண்டி விடுவார்.

கூடைப்பந்தாட்ட வீரன் கூடையை நோக்கி பந்தை வீசுவதைப் போல்.

அது சுழன்று கொண்டு அந்தரத்தில் சென்று குப்பைக் கூடையில் விழும்.

விழாது.

கூடையில் அடிபட்டு பந்து சில நேரங்கள் உள்ளே விழும். வெளியே விழும்.

அப்பாவை சிகரெட் பிடித்து சுண்டி விடும் நொடிக்காக அவரையே பார்த்தபடி இருப்பேன்.

அம்மா குழந்தைகள் முன் சிகரெட் பிடிக்காதீர்கள் என்பாள். வளர்ந்து அதை அவன் முடிவு செய்யட்டும் என்பார்.

சிகரெட் பிடிப்பதை என்னை காதலிக்கும் மீனா விட்டு விட வேண்டும் என்கிறாள்.

பஸ் நிலையத்தை அடைந்ததும் முட்டி அடித்துக் கொண்டிருந்த கூட்டத்தைப் பார்த்தான்.

திருவிழா நாளான்று ஊருக்குச் செல்லும் கூட்டம்.

ஹாரன் ஒலி காதை அடைத்துவிடும்.

மூன்று மாதங்களாக அவளைப் பார்க்க போகவில்லை.

அவள் முன்பின் எதுவும் நடக்காததைப் போல் இறுமாப்புடன் இருக்கிறாள்.

மதுப்பழக்கத்திற்கு அடிமையானான்.

பார்த்தவுடன் வந்து ஹலோ சொன்னாள்.

அவன் இறங்கிற இடத்தை தவறவிட்டுவிட்டான்.

மெத்தையில் படுப்பதைவிட பேருந்தில் செல்லும் போது அவனுக்கு உறக்கம் வந்து விடுகிறது.

நடத்துனரிடம் முன்னெச்செரிக்கையா சொல்லியும் அவர் அழைக்கவில்லை.

கொள்ள எண்ணாக் கூட்டம்.

பேருந்தில் அடைபட்டு இருந்திருக்கலாம். மலையில் கூடு கட்டியிருக்கும் தேனீக்களைப் போல் வெளித்தள்ளியும் உள் நுழையும் ஆட்கள்.

அவள் அப்பாவைப் பற்றித்தான் அடிக்கடி சொல்வாள்.

இரவு பத்து மணிக்கு பல்பை அணைத்து விட வேண்டும் என்று சொன்னால் அணைத்து விட வேண்டும்.

தந்தையை வெறுத்ததைப் போல் அவள் யாரையும் வெறுத்தது இல்லை.

ஒரு முறை அவள் அப்பாவிடம் பேசிப் பார்க்கிறேன் என்றான்.

அவன் சம்மதிக்கவில்லை.

பேருந்து நிறுத்தத்தில் இருக்கும் தேனீர்க் கடைகளில் ஏன் டீ சுவையாக இருப்பதில்லை.

அவனும் அவளும் ஒரு நாள் தேனீர் விடுதியோடு இருந்த உணவகத்திற்கு சென்றார்கள். ப்ரோட்டாவுக்கு பிசைந்த மாவைப் போல் அரை மஞ்சள் நிறத்தில் ஒருத்தி வந்து ஆர்டர் கேட்டாள்.

சுவையான ஒரு தேனீர் போடுங்க என்பான்.

எங்களிடம்  உணவகத்தில் சுவையில்லாமல் உணவுகள் இருக்காது என்றான் அந்த வெயிட்டர்.

அவள் சிரித்தாள்.

மீனா முறைத்தாள்.

அவள்தான் முதாலாளியம்மா. தூரத்தில் இருந்த படத்தைக் காட்டினாள்.

அதில் அவள் படமும் அவள் கணவன் படமும் இருந்தது.

அவர்கள் பின்னால் பெரும் நீர்வீழ்ச்சி.

அப்பாதான் முன்னின்று திருமணத்தை நடத்திவைத்தார்.

அவருக்கு தீராத அலுப்பு. அப்பா அவன் காதலிப்பதை முன்னே அனுமானித்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

***

திரையில் பார்த்துக் கொண்டிருந்த சொற்குவியல்களின் மேல் ஆச்சரியமும் எரிச்சலும் ஒரு சேர வந்தது. ராம் கண்களை தேய்த்துக் கொண்டான். மனித இயல்புகளின் அழகியல் என்கிற கற்பிதம் தன் முன்னால் பொய்யாகிக் கிடப்பதைப் பார்த்தான். பெருமூச்சோடு அவன் அலமாரியில் அடுக்கிவைத்திருந்த சாராய போத்தலைப் பார்த்தான். அதன் பெயரில் ஒரு கிரேக்க கடவுள் இருந்தான். அவன் மக்களுக்கு அமைதியான உறக்கத்தைக் கொடுப்பான். உறக்கத்தில் தங்களின் வருங்காத்தை அவர்களால் கனவு காண முடியும். இனியும் மனிதர்களால் இந்த பொய்களை இட்டுக் கட்ட முடியாது.

“டே ரைட்டர் இப்ப எனக்கு ஒரு ஐடியா தோணுது” படித்து முடிப்பதற்குள் மகேஷ் குறுக்கிட்டான்.

“காலேஜ் படிக்கும் போது ஒரு பிலாசபி சொல்லிட்டு சுத்திட்டு இருப்பியே. அது என்ன மச்சி. அது கூட மாடர்னா இருக்கும். அத சொல்லும் போது தாண்டா உன் மேல மரியாதையே வரும்.”

“எத நீ சொல்ல வர்ற?”

“அதான் எழுத்தாளன் செத்திட்டான்னு சொல்லுவியே”

‘பின் நவீனத்துவம்’

‘ஆமாண்டா அதேதான். ஒரு டெக்ஸ்ட யார் எப்படி வேணா படிக்கலாம்னு சொல்லுவியே. இதை எதுக்கு நீ எடிட் பண்ணனும். படிக்கிறவனே எடிட் பண்ணிக்கட்டுமே. அவன் படிக்கிற கதை அவனுக்கு. நாம எதுக்கு ஒரு பொதுக்கதையை சொல்லணும். இது புதுக்கதையா இருக்கும்ல. எதுக்கு எப்பையும் நாம ஒரு டெம்ப்ளேட் ஃபாலோ பண்ணனும்.”

அவனுடைய முணுமுணுப்பு ஞாபகம் வந்தது.

“சில பிழைகளை மட்டும் திருத்தேன். அதிகம் உறுத்துற வார்த்தைகள் மட்டும் வேண்டாம். ஏதாவது ஒரு வரி கொஞ்சமும் சம்பந்தம் இல்லாம வருதான்னு பாரேன்” ராமின் தோளில் கைவைத்தான். அன்று போல் இன்றும் குரலில் கெஞ்சிக் கேட்கும் தோரணை. என்னை பொம்மைப் பொருளைப் போல் பயன்படுத்துவதை இவன் நிறுத்தப்போவதில்லை. இவன் உலகத்தை வெல்லும் அரசனைப் போலவும் அங்கு வெறும் அலங்காரத்திற்காக இருக்கும் ராணியைப் போல் இவனுக்கு நான் வேண்டும்.

“நான் உனக்கு வேலைக்காரன் இல்ல” முணுமுணுத்துக் கொண்டே வெளியே போனான் ராம். அவனை மகேஷ் தடுக்கவில்லை.

திரும்பிச் செல்லும்போது, அப்பார்ட்மெண்ட் நுழைவு அடைவதற்கு தொலைவென்றாலும் மீண்டும் அந்த சாலை வழியே நடப்பது மிக விருப்பமாக இருந்தது. இதைப் போல் பிசிறற்ற தார் சாலையை அவன் பொது வழிகளில் கண்டதில்லை. அவனைத் தாண்டி செல்லும் உயர்ரக கார்களுக்கு அதைப் போன்ற சாலை மட்டும் தான் பொருத்தமாக இருக்க முடியும். அந்த அலமாரியில் இருந்த போத்தலின் பெயரை நினைவுக்கு கொண்டு வர முயற்சித்துக்கொண்டே நடந்தான். அந்த கிரேக்க கடவுளின் இறக்கைகள் தான் மனிதர்களின் எல்லையற்ற கற்பனைக்கு சாட்சி. அந்த கிரேக்க கடவுளுக்கு ஒரு துணையும் இருந்தாள். அவள் பெயர் ஐரிஸ் என்பது நினைவில் வந்தது. அவர்களின் நிர்வாண உடல்களின் ஒளிபொருந்திய ஒவியத்தை ஒருவன் கண் வெட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பான். தானும் ஒரு சாராய போத்தலுக்கு இந்தியக் கடவுளர்களின் பெயர்களை பெயரிட நேர்ந்தால் என்ன பெயரை வைப்பதென்று குழப்பம் வந்தது. சோமன். கந்தன். அய்யனார். கருப்பு.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button