
கண்ணாடிக்குள் பாய்வது எப்படி?
10
என் முன்பா
கண்ணாடி முன்பா
தெரியவில்லை
எதிரெதிர் நின்றுகொண்டிருக்கிறோம்.
குறுக்கே நிற்கும் காற்று
விலகிவிட்டால் போதும்
கண்ணாடி உடைவதற்குள்
நான் வீழ்வதற்குள்
பார்த்துக்கொள்வோம் முகம்.
9
அதிவேக ரயிலில் போய்க்கொண்டிருப்பவள்
பாத்ரூமுக்குள் புகுந்து
அதன்
கண்ணாடிக்குள் பாய்ந்து
தற்கொலை செய்துகொண்டாள்.
பிறகு
ரயில் சென்றுசேரவே முடியாத
அவளது ஸ்டேஷனில்
இறங்கிக்கொண்டாள் மிக நிதானமாக.
8
என் கண்ணாடி
சில்லாக உடைந்துவிட்டது…
உச்சி ஆகாயத்தில்
மிதந்துகொண்டிருக்கிற நான்.
புனித தாமஸ் மலைப் படிக்கட்டில்
ஏறிக்கொண்டிருக்கிற நான்.
குழந்தையின் கைப்பொருளைப்
பிடுங்கிக்கொண்டிருக்கிற நான்.
செவ்வந்தியில் மொய்க்கிற
சுள்ளெறும்பு நான்.
7
……………………..
……………………..
பால் வெளி மிதக்கிறது
நட்சத்திரங்கள் மினுங்குகின்றன
சூரியன் தகிக்கிறது
பூமி தனக்குத்தானே சுற்றுகிறது
நான் குறுக்க நெடுக்க நடக்கிறேன்.
வானத்தை
கண்ணாடியாகக் கவிழ்த்து
அதில்
இவற்றை எல்லாம்
பார்ப்பது யார்?
6
ஒருத்திக்குள் இருக்கும்
கண்ணாடியும்
ஒருவனுக்குள் இருக்கும்
கண்ணாடியும்
நேரெதிர் பார்த்துக்கொண்டன.
அப்போது அவற்றுக்குள்
அடுக்கடுக்காக விரிந்தவற்றில்
ஓர் அடுக்குத்தான்
அவளும் அவனும்.
5
முகம் என்ற கண்ணாடிக்கு
அகம்தான்
பாதரசப்பூச்சு.
அகம் மங்கினால்
முகம் மங்குவது
எதனால்?
அதனால்.
4
நீ
இறந்த பிறகு நடப்பதென்ன
அல்லது
இறப்பில் நடப்பதென்ன
நெடுநாள் கேட்டாய் அல்லவா?
உன்
கண்ணாடி சில்லுச் சில்லாகிவிடுகிறது.
3
உன்னை என்னை
நம்மை
ஒளியை இருளை
எதையும்
உள்நோக்கி
அனுமதிக்காமல் அனுமதித்து
வெளயேற்றாமல் வெளியேற்றுவது எப்படியென்று
கண்ணாடியிடம் கற்றுக்கொள்கிறது
பரம்.
2
தங்குவிடுதி
குளியலறைக் கண்ணாடி மீது
திடுதிடுவென ஓடும்
கரப்பு,
ஒட்டியிருக்கும் கோபுரப் பொட்டின்
கூர்முனையை
தன் உணர்கொம்புகளால்
தொட்டுத் தொட்டுப் பார்க்கிறது.
1
நீலப் படம் ஒன்று
ஓடி முடிந்த செல்திரைக் கண்ணாடி
ஓர் உடலைப் போல
மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குகிறது
நண்பர்களே.
******
(சமர்ப்பணம் : வண்ணதாசன் அவர்களுக்கு…)
*******