
புது வருடம்
காதலும் காமமும் வற்றிய கணவன் போல,
இயலாமையை மறைக்கும்
பொய்க்கோபம் போர்த்தி,
முதுகு காட்டி,
புரண்டு படுத்துக் கொண்டது
நேற்றைய நாள்.
தூக்கம் கெட்டு,
கண்ணெரிச்சலுடன்,
அவமான மூட்டை சுமந்து,
கூசும் ஆபாச வெளிச்சத்துடன்,
விடிந்துவிட்டது
இன்றைய நாள்.
****
மீன் சொல்
உணர்வற்று இடுப்பை அசைக்கும்
கதாநாயகியின் பின்னால்
நடனமாடும் பெண்கள் போல
வெறியுடன் வாலாட்டும்,
வாயைத் திறந்து திறந்து மூடும்,
ஒன்றன் மேல் ஒன்று
முண்டும்,
நொடிநேர வாழ்நாட்களே
மிஞ்சியிருக்கும் வலைமீன்களாக
என் சொற்கள்.
சொல்லும் போதே இறந்துவிடும்
சவலைப் பிள்ளைகள்
தொண்டையில் சிக்கி
எக்கி எக்கி இருமலுடன்
வயிறு வலிக்க வந்து
விழுகின்றன.
வாயிலிருந்து வரும் வெற்று ஓசைகளை
சொல்லென்றும் உணர்வென்றும் நம்பி
உன்னை ஏமாற்றிக்கொள்ளாதே.
****
வார்த்தைகளில்லை
நண்பனிடம்
தெருவில் செல்பவனிடம்
முன்னாள் காதலனிடம்
இந்நாள் காதலனிடம்
நிரந்தர காதலனிடம்
கணவனிடம்
நட்புதான் வேறோன்றுமில்லை
என்று நிறுவப்பட்டவனிடம்
முடிவெட்டிய கம்பீரத்துடன்
ஜொலிக்கும் தோழியிடம்
ஒரு தலையாய் விரும்பியவனிடம்
அருவருப்பைத் தூண்டுபவனிடம்
பல வருடத் தோழியிடம்
பேருந்தில் இடிப்பவனிடம்
வெறிக்க வெறிக்க வெறிப்பவனிடம்
வாடிக்கையாளனிடம்
பெற்றவர்களிடம்
பெற்ற பிள்ளைகளிடம்
உன்னதமான காமமும் தேவை
என்று சொல்ல எங்களிடம்
மொழியில்லை.
***
இருதலைப்பட்சி
மழை பெய்யும் போலவும்
வெயிலடிக்கும் போலவுமாக
உள்ள நாளொன்றில்
நீர் ஊற்றாது புறக்கணித்த
சோற்றுக்கற்றாழை
வான்நோக்கிய சின்னஞ்சிறு
கைகள் போன்று
நீண்டு பூத்த நாளொன்றில்
பாதி மூடிய அல்லது
பாதி திறந்த கதவினுள்
நுழைகிறேனா இல்லை
வெளியேறுகிறேனா என்று
மறந்த நாளொன்றில்
நெஞ்சு விம்ம விம்ம
வெடித்து வெளிவருவது
கேவலா அயர்ச்சியா
வேறெதுவோவா என்று
இனம் காணமுடியா நாளொன்றில்
எதை இட்டும் நிரப்ப முடியாத
உள்ளே கனக்கும் வெற்றிடம்
பசியா தாகமா ஏக்கமா
என்று தெரியாத நாளொன்றில்
கீறிய இடத்தில்
துளிர்க்கும் ரத்தத்தின் நிறம்
கருப்பா சிவப்பாவென்று
புரியாத நாளொன்றில்
எஞ்சிய காதலுடன்
உன்னை சேர்த்தணைக்கவா
விட்டுவிலகவா?
******
GR.Subramania