இணைய இதழ்இணைய இதழ் 86கட்டுரைகள்

புகழ் பூமியின் சாகசக்காரன் – மஞ்சுநாத் 

கட்டுரை | வாசகசாலை

மிழில் மொழிபெயர்ப்பு நூல்கள் அதிகம் வெளிவருவதுடன் பெருவாரியான வாசகர்களைச் சென்றடைந்து விமர்சனத்திற்கும் உள்ளாகிறதென்றால் இன்றைக்கு திறமையான மொழிபெயர்ப்பாளர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். அவர்களது கவனத்துடன் கூடிய உழைப்பும் இலக்கிய ரசனையும் மொழியாக்கத்தின் தரத்தைக் கூட்டியுள்ளன. 

புகழடைந்த எழுத்தாளரின் பிரபலமான நூலைக் கொண்டுவருவதின் வழியாக தங்களின் பொருளீட்டலை மட்டும் நோக்கமாகக் கொண்டு செயல்படும் சில பதிப்பகங்கள் மொழியாக்கத்தின் சீர்மைக்கும் மொழிபெயர்பாளர்களுக்கும் முக்கியத்துவம் தருவதில்லை. தமிழ் பிரதியை மூலநூல் ஆசிரியரே எழுதியது போல் மொழிபெயர்ப்பாளரின் பெயரையோ அவர்களைக் குறித்த குறிப்புகளையோ தருவதில் அலட்சியம் மற்றும் தயக்கத்துடன் செயல்படுகின்றன. சில பதிப்பகங்கள் பெரிய மனதுடன் முன்னட்டையின் கீழே மிகச்சிறிய எழுத்துருவில் மொழிபெயர்ப்பாளரின் பெயரைப் போடுகிறார்கள். நியாயத்தில் ஒவ்வொரு பக்கத்திலும் மூலநூல் ஆசிரியர் பெயருக்கு அருகில் மொழிபெயர்ப்பாளர் பெயரையும் அச்சிட வேண்டும். இன்றைக்கு தேர்ந்த தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் வழியே வாசகர்களிடம் மொழிபெயர்ப்பு நூல்களுக்கு கிடைத்துள்ள ஆர்வத்தையும் வரவேற்பையும் சில பதிப்பகங்கள் தங்களது வியாபார நோக்கிலான அவசர புத்தியால் சிதைக்கும் அபத்தம் நேர்ந்துள்ளது.

தமிழில் திறமையான மொழிபெயர்ப்பாளர்கள் கிடைப்பது அரிதானதொன்றுமில்லை, என்றாலும் மூலநூலின் சுருதியை அபசுவரமாக மாற்றக்கூடிய பொதுவான அடிப்படை மொழி அறிவு கூட இல்லாத கூகுள் மொழியாக்கத் திறன் மிகுந்த, இலக்கிய ரசனை சிறிதுமில்லாத மொழிபெயர்ப்பாளர்களின் கைகளையே ஏன் பிடித்துக் கொள்கிறார்கள்? பிரபலமான எழுத்தாளர் என்பதற்காகவும் அவரது புகழடைந்த நூல் என்பதற்காகவும் ஒரு மொழிபெயர்ப்பு நூலை ஆர்வத்துடன் வாங்கும் வாசகனுக்கு சில மொழிபெயர்ப்பாளர்கள் மிகப் பெரிய தண்டனையைத் தந்து விடுகிறார்கள். 

எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் ‘கிழவனும் கடலும்’ (The Old Man and the Sea) -[கிட்டத்தட்ட ஒவ்வொரு பதிப்பகமும் இந்நூலை வெளியீட்டு இருந்தாலும் இதிலும் நீங்கள் ஏமாறக்கூடும்] தவிர அவரது பிற நாவல்களுக்கு மிகச் சிறந்த தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் கிடைக்கவில்லை என்பதை உறுதிபடக் கூறலாம்.

1927-ல் சார்லஸ் ஸ்கிப்னர் & சன்ஸ் பதிப்பகம் வெளியிட்ட ‘ஆண்கள் இல்லாத பெண்கள்’ (Men without Women) தொகுப்பிலுள்ள ‘The Undefeated’ சிறுகதையை ‘தோற்காதவன்’ என்கிற தலைப்பில் மொழிப்பெயர்த்து 1961-ல் ‘எழுத்து’ இதழின் வழியாக எர்னெஸ்ட் ஹெமிங்வேயை தமிழில் முதன் முதலில் அறிகமுகப்படுத்தியவர் சி.சு.செல்லப்பா. இச்சிறுகதையே பிற்காலத்தில் வாடிவாசல் நாவல் எழுதுவதற்கான உந்துதலை அவருக்கு தந்துள்ளது.

தோற்காதவன் சிறுகதை அக்காலத்தில் பெரும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக அரங்குகளில் நிகழ்த்தப்பட்ட காளைச் சண்டையைக் குறித்து விவரிக்கிறது. மருத்துவமனையில் இருந்து திரும்பும் காளைச் சண்டைக்காரன் வேலைகள் கிடைக்காத நிலையில் மீண்டும் காளைச் சண்டை நிகழ்த்தும் அரங்கொன்றில் இரவு நிகழ்ச்சி பணியாளனாகச் சேர்கிறான். அறிவு மிகுந்த மனிதன், பெருவாரியான மக்கள் குழுமியிருக்கும் அரங்கில் பலம் மிகுந்த காளையைக் கோபமூட்டி களைப்படையச் செய்து இறுதியில் கூர்மையான ஆயுதத்தால் இரத்தம் தெறிக்க அதனைக் கொன்று விடுவதே காளைச்சண்டை.

ஹெமிங்வே காளைச்சண்டையில் பேரார்வம் கொண்டவராக இருந்திருக்கிறார். அவரது ‘For Whom the Bell Tolls’ நாவலில் பாப்லோ என்கிற கதாபாத்திரம் காளைச்சண்டையிட்டு காயமடைந்த வரலாற்றை நனவோடை முறையில் நீண்ட அத்தியாயமாக எழுதியுள்ளார். தோற்காதவன் சிறுகதையில் மானுவல் காளையுடன் மோதும் நீண்ட சாகச விவரிப்புக்கு பின்னால் காயமடைந்து மீண்டும் அவன் மருத்துவமனைக்கே செல்கிறான். இக்கதையின் மொழிபெயர்ப்பு நேர்த்தியானது அல்ல. சி.சு.செல்லப்பா பல இடங்களில் ஆங்கில வார்த்தைகளை அப்படியே கையாள்கிறார். ‘பார்த்துண்டே இருக்கிறது… காளையை பார்த்து அவன் கேப்பை ஆட்டினான்…’ என்றெல்லாம் மொழிப்பெயர்த்துள்ளார்.

1938-ல் வெளியான ‘The fifth column and the first forty nine stories’ தொகுப்பில் உள்ள ‘The Snows of Kilimanjaro’ கதையினை ‘மயிர்’ இதழில் ‘கிளிமாஞ்சாரோவின் பனி’ என்ற தலைப்பில் க.சுப்பிரமணியன் மொழிபெயர்த்துள்ளார். இவரது மொழிபெயர்ப்பு சற்று ஆறுதலைத் தருகிறது. ஒரு தோல்வியடைந்த எழுத்தாளனின் நிகழ்காலத்தின் வழியாக இறந்த காலத்திற்கு பாயும் உணர்வின் நீரோட்டத்தில் சாகசமும் குற்றவுணர்ச்சியும் இயலாமையும் ததும்புகின்றன. இச்சிறுகதை நனவோடை (Stream of consciousness) உத்தியிலான எழுத்துமுறைக்கு சிறந்த உதாரணமாகும். 

உலக இலக்கிய பரப்பில் செவ்விலக்கிய தகுதியுடைய படைப்புகளை தந்திருக்கும் ஹெமிங்வே தனது வாழ்நாளில் ஏழு நாவல்களையும், ஆறு சிறுகதைத் தொகுப்புகளையும், இரண்டு புனைவற்ற நூல்களையும் வெளியிட்டார். அவரது மறைவுக்குப் பிறகு மூன்று நாவல்களும், நான்கு சிறுகதைத் தொகுப்புகளும் மூன்று புனைவற்ற புத்தகங்களும் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

‘A Farewell to Arms’ (1929) நாவல் தமிழில் ஆயிரம். நடராஜன் அவர்களால் “போர்கொண்ட காதல்” தலைப்பில் (தடாகம் பதிப்பகம்) மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்நூலை அதிகாரபூர்வமான மொழிபெயர்ப்பாகக் கருதலாம். மலர் பதிப்பகம் இதே நாவலை “போரே போ ” என்கிற தலைப்புடன் மொழிபெயர்ப்பாளர் பெயரின்றி வெளியிட்டுள்ளது. 

ஸ்பானிய போர் சூழல் மற்றும் அதன் மீதான கருத்துகளை விவரிக்கும் ‘For Whom the Bell Tolls’ [1940] தமிழில் “யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது” தலைப்பில் எதிர் வெளியீடு மூலம் சி.சீனிவாசன் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது. தமிழ் இலக்கணம் கூறும் புணர்ச்சி விதிகள் குறித்த அறியாமை மொழிபெயர்ப்பின் சீர்மையைக் கேள்விக்குள்ளாக்கினாலும், ஹெமிங்வே படைப்பின் அடிப்படை ஆதார சுருதி பிழைகளை மீறி ஒலிப்பதுடன் வாசகனின் ஆர்வத்தை தக்கவைத்துக் கொள்கிறது. ‘For Whom the Bell Tolls’ நாவல் கடுமையான விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும், சில நாடுகளில் தடைகளையும் சந்தித்தது. 1940-ல் அமெரிக்க நாட்டின் அஞ்சல் துறை இந்நூல் பரிமாற்றத்திற்கு தடையை விதித்தது.

‘The Old Man and the Sea’ (1952) நாவல் 1953-ல் புலிட்சர் விருதுடன் 1954-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசையும் வாங்கியது. பொதுவாக ஒரு எழுத்தாளர் தனது விருதிற்குரிய படைப்பின் வழியாக உலக வாசகர்களிடம் அறிமுகமாகும் போது விருதுக்கான படைப்பு அவரது மிகச் சிறந்த முந்தைய படைப்புகளை மறைத்து விடுகிறது. விருது வழங்கும் முறையில் இருக்கும் சுயசார்பு, அரசியல், குறுகிய மனப்பான்மை, விதிமுறைகள், கோட்பாடுகள்… யாவும் ஒரு தீவிர வாசகன் நல்லதொரு இலக்கியத்தை கண்டடைவதற்கான வாய்ப்பை நல்குவதில்லை. மேலும் ஒரு எழுத்தாளனின் வாழ்க்கை வரலாற்றை விவாதிப்பதைக் காட்டிலும் அவனது படைப்புகளை அணுகுவது விவேகமானது மட்டுமல்ல, அவனது உண்மையான வாழ்க்கையின் பிரதிபலிப்பையும் காட்டும். ஏர்னெஸ்ட் ஹெமிங்வேயின் மூன்று முக்கிய படைப்புகள் வழியாக அவரது சாகசத்தின் அனைத்து பரிமாணங்களையும் காட்சிப்படுத்தும் இக்கட்டுரை அவரது வெளிப்படையான வரலாற்றுக்கு வெளியே நிற்கும் சூக்கும உடலை (astral body) பார்க்க வைப்பதற்கு உதவும் முயற்சியாகும்.

ஹெமிங்கவேயின் புகழுக்கு காரணமான நாவல்களான;

The Sun Also Rises (1926)
The Torrents of Spring (1926)
To Have and Have Not (1937)
Across the River and Into the Trees (1950)

போன்ற நூல்கள் தமிழின் சிறந்த மொழிபெயர்ப்புகள் வரிசையில் தகுதியான மொழிபெயர்ப்பளார்கள் மூலம் கொண்டுவர வேண்டும். அவரது இலக்கியத்தரம் வாய்ந்த சிறுகதைகள், கட்டுரைகள், பயணக் குறிப்புகள் மீது சிற்றிதழ்கள் கவனம் செலுத்த வேண்டும்.

The old Man and the Sea (1954) – கிழவனும் கடலும்

டாம் ஹாங்க்ஸ் (Tom Hanks) நடித்த படங்களில் எனக்கு பிடித்தமானது ‘Cast away’. 2000-ம் ஆண்டில் ராபர்ட் ஜெமிகிஸ் தயாரிப்பில் வெளிவந்த ஒரு சிறப்பான படம். இப்படத்தைக் காண்பதற்கு செவித்திறன் அவசியமில்லை, கண்கள் மட்டுமே போதுமானது. இப்படத்தின் காட்சியமைப்புகள் ஒவ்வொன்றையும் சிறந்த திரைக்கதை எழுத நினைப்பவர்கள் கூர்மையாக பார்க்க வேண்டும். 1953-ல் எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய ‘கிழவனும் கடலும்’ என்ற புதினத்திற்கும் ‘Cast away’ திரைப்படத்திற்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இவற்றின் கதையும் களமும் முற்றிலும் வேறுபட்டது, ஆனாலும் இவையிரண்டும் ஒரே புள்ளியில் பிசிறின்றி இணைகின்றன.

அதிருஷ்டம் இல்லாத கியூபா மீனவன் சான்டியாகோ அவனது ஒரே நண்பனான சிறுவன் மனோலினின் துணையின்றி வளைகுடா நீரோடைக்குள் தனித்து பயணிக்கிறான். புளோரிடா நீரிணையின் வடக்கு கியூபாவில் தனது சிறு படகின் மூலம் மீன் பிடிக்கச் செல்கிறார். வயது முதிர்ந்த சாண்டியாகோவின் பிழைப்பிற்கான பயணம் சாகசத்தின் உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறது. அந்த கடல் பயணம் அவரை வாழ்வின் இறுதி எல்லைவரை அழைத்துச் செல்கிறது. கிழவரின் மனம் கடல் அலை போன்றதன்று. அது மிகுத்த சமநிலையுடன் செயல்படுகிறது. அசாதரணமான சூழ்நிலைகளை எளிதாகக் கையாளும் திறனுக்கான உந்துசக்தியையும் தருகிறது. அன்றைக்கு மிதமிஞ்சிய அதிருஷ்டம் வாய்க்கிறது. அவரது தூண்டிலில் மிகப் பெரிய மீன் சிக்கிக் கொள்கிறது. இது ஆனந்தத்தோடு அதிர்ச்சியையும் தரக்கூடியது என்பதை கிழவரும் சரி வாசகனும் சரி நிதானமாகவே அறிகிறார்கள். சுமார் 500 பவுண்ட் எடை இருக்கும் மீன் படகின் நீளத்தை விட இரண்டடி கூடுதலானது. எனவே விவேகமான செயல்முறை எதுவென்றால் அதனை வீழ்த்தவதற்கு அதன் போக்கில் விட்டு சோர்வடையச் செய்வது. கிழவரும் அதைச் சரியாகச் செய்கிறார். தூண்டில் கயிறை தளர்த்தி படகு மீனின் இழுவையில் அதன் பின்னால் செல்லும்படி செலுத்துகிறார். படகு மீனின் நீரோட்டத்தின் வழியே அதிவேகமாகச் செல்கிறது. துரதிருஷ்டவசமாக மிகுந்த ஆற்றுலுடைய மீன் மூன்று நாட்களில் வெகுதூரம் அவரை அழைத்து வந்த போலும் கரை கண்ணுக்கே தெரியவில்லை. கிழவரின் உடல் தனது மறுப்பை வலியின் மூலம் சொல்கிறது. சரியான உணவின்றி கடலில் கிடைக்கும் சிறுமீன்களை பச்சையாக மென்று தின்று உயிர்வாழும் கிழவர் தன் மனதைச் சமநிலையில் வைத்திருப்பதற்கான யுக்திகளை தொடர்ச்சியாக கையாள்கிறார். உணர்ச்சியற்றுப்போன தனது கையோடு பேசுகிறார். பழைய நினைவுகளை அசை போடுகிறார். அவரது நண்பனான மனோலின் குறித்து நினைக்கிறார். இப்போது தன்னுடன் இருப்பது கடல் மட்டுமே என்கிற நிதர்சனத்தையும் உணர்கிறார். படகை இழுத்துச் செல்லும் தூண்டில் முள்ளில் சிக்கிய பெரிய மீனை சகோதரனாய் பாவித்துக் கொள்கிறார். உயிர் பிழைத்தலுக்கான சாகசத்தில் வலுவிழந்துக் கொண்டிருக்கும் உடலையும் சோர்வடையும் மனதையும் உற்சாகப்படுத்தும் விதங்கள் வாசகனை வியப்பில் ஆழ்த்துகின்றன.

மனிதர்கள் பலவிதமான போராட்டங்களின் வழியே பயணித்தாலும் ஏதோ ஒருசிலர் மட்டுமே போராட்டத்திற்கு பின்பு மிச்சமிருக்கும் உணர்வின் சாயலில் சாகசத்தின் ருசியை உணர்கிறார்கள்.

‘கிழவனும் கடலும்’ நாவல் திடமான வார்தைகளைக் கொண்டு உயிர்ப்பூட்டும் காட்சியமைப்பை வாசகன் மனதில் கட்டமைப்பதால் அதன் ஈர்ப்பு அதீதமாகிறது. இந்நாவல் ‘The Old Man and the Sea’ என்ற பெயரில் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது.

ஒவ்வொரு நகர்வும் புனைவின் காட்சியமைப்பை பிரமாண்டமாய் செதுக்கி அதை அறுபடாமல் தொடரவும் செய்கிறது. படகில் கிழவர் தனித்திருக்கும் வேளையில் தீவிரப் போராட்டத்தினூடே தன்மனதில் நிகழும் அகநிலை விவாதத்தில் சிக்கிக் கொள்ளாமல் தனித்து நிற்கிறார். எர்னெஸ்ட் ஹெமிங்வே தனது மைய கதாபாத்திரங்களுக்கு அகநிலை விவாதத்தில் சிக்கிக் கொள்ளாது ஒதுங்கி நிற்கும் பொதுப்பண்பை அளிக்கிறார்.

“மீனைப் பற்றி நினைத்தான். அதற்கு சாப்பிட ஒன்றுமே இல்லையே என்று கவலைப்பட்டான். தான் அதை கொல்ல வேண்டியிருக்கிறதே என்பதற்கு இப்போது அதற்காகக் கவலை கொள்வதற்கும் சம்பந்தமே இல்லை என்று எண்ணிக்கொண்டான்.”

உறுதியற்ற வாழ்வின் படகை செலுத்துவதற்கு கடலாக விரிவடையும் கற்பனையின் துணையைத் தந்து சிக்கனமான உரையாடல்கள் மூலம் மனித மனதின் சிக்கல்களைக் காட்டும் குறுநாவலான ‘கிழவனும் கடலும்’ எர்னெஸ்ட் ஹெமிங்கவேயின் ஆழமான நாவல்களை வாசிப்பதற்கு ஒரு எளிமையான துவக்கத்தைத் தருகிறது.

For Whom the Bell Tolls [1940] – யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது

மனிதன் ஏன் புரட்சியிலும் போராட்டத்திலும் ஈடுபடுகிறான்?

சூழல் சாதகமின்மையால் எப்பொழுதோ யாரிடமோ அவன் இழந்திவிட்ட நிம்மதியை மீண்டும் அடைந்து விடுவதற்காகவும், கால மாற்றத்தாலும் அறிவின் எழுச்சியாலும் தன்னிலையை முன்பைவிட மேலும் உயர்த்திக் கொள்வதற்காகவும். ஆனால், எதையெல்லாம் பெறுவதற்காகப் போராடுகிறனோ அதன் மிச்ச மீதி சுவடுகளோடு ஆறுதல் தரும் பழைய நினைவுகளையும் போரட்டத்தின்போதே அவன் முற்றிலும் இழக்கவும் நேரிடுகிறது அல்லவா… இறுதியில் கிடைக்க வேண்டியதெல்லாம் அவனுக்கும் அவனது தலைமுறைக்கும் கிடைத்ததா? இதை பொருள்ளற்றக் கேள்வியாக நிராகரிக்க முடியாது. ஒருவேளை எதிர்கொள்வதற்கு தயக்கம் ஏற்படுமேயானால் அதற்கு பின்னால் இருக்கும் காரணம் இக்கேள்விக்குத் தரப்படும் நேர்மையான பதிலால் எதிர்காலத்தில் எந்தவொரு போராட்டங்களையும் முன்னெடுக்க முடியாது என்பதே. 

சுயநல கொள்கைக்கு பொதுவுடமை சாயம் பூசும் சில முட்டாள்களின் சிந்தனையால் உலகம் நிறைய வலியையும் இழப்பையும் அனுபவித்து விட்டது. மூளைச்சலவை செய்து தொண்டர் படைகளை உருவாக்கும் சித்தாந்தங்களால் பாமரர்களின் வாழ்க்கை தரத்தைவிட தலைவர்களின் வாழ்வும் வளர்ச்சியும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதுவும் நிதர்சனம். 

போர் இதுவரையில் எதற்கும் நிரந்தரமான தீர்வையோ அமைதியையோ அளித்ததுக் கிடையாது என்றாலும் மனித சமூகத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளின் இறுதி சிந்தனையும் முயற்சியும் அதுவாகவே இருக்கிறது. அதில் அவர்கள் தளராத உறுதியோடும் இருக்கிறார்கள்.

ஒரு மனிதனுக்குள் இயல்பாக ஏற்படக்கூடிய எதிரும் புதிருமான சிக்கலான சிந்தனைகளுக்கு பின்பு அவன் அதையெல்லாம் நிராகரித்துவிட்டு தன் காரியத்தின் பொருட்டு வரவழைத்துக் கொண்ட அல்லது பயிற்சினால் பெறப்பட்ட சமநிலையோடு மாற்றமில்லாமல் இயங்குவதை எர்னெஸ்ட் கட்டமைக்கும் முதன்மைக் காதபாத்திரத்தில் நாம் அறிந்து கொள்ள முடியும். இதை அவர் தமது நாவல்கள் அனைத்திலும் தெளிவாகவே முன்னிலைப்படுத்துகிறார். ஆனால், டால்ஸ்டாய் இதில் மாறுபடுகிறார். ஆம், டால்ஸ்டாயின் கதாபாத்திரங்கள் முகிழ்விக்கும் சிந்தனைகள் ஒருபக்க சார்புடையவை என்றாலும் அதில் பிடிப்பும், நிலைப்புத் தன்மையும், குறைவற்ற இறைநம்பிக்கையும், அமைதி மற்றும் நீதியை நாடும் வேட்கை உணர்வும் அதிகம் நிறைந்திருக்கும். சிலவேளைகளில் இதன் கட்டற்ற நீட்சியால் டால்ஸ்டாயின் கதாபாத்திரங்கள் தங்களது நீண்ட உரையாடல்கள் மூலம் சலிப்பையும் தருவார்கள். எர்னெஸ்டின் கதாபாத்திரங்கள் இவர்களில் இருந்து முற்றிலும் மாறானவர்கள். அவர்களது உரையாடல்கள் யாவும் செயல்களை முன்னிறுத்தியே நிகழ்கின்றன. இவரது கதாபாத்திரங்களுக்குள் நிகழும் சிந்தனையோட்டங்கள் இரண்டு விதமானவை; ஒன்று தங்களைச் சுற்றியிருக்கும் இயற்கையை ஆழமாக உள்வாங்குவதின் பிரதிபலிப்பால் எழுவது. இரன்டு தங்களுக்குள் எழும் அகச் சிந்தனையின் விவாதத்தின் வழியாக கதையின் முன்பின் வரலாற்றைப் பிணைத்து தொகுத்தளிப்பது. 

பொதுவாக எர்னெஸ்ட்டின் கதாபாத்திரங்கள் அகத்திற்குள் நிகழ்த்திக் கொள்ளும் உரையாடல்கள் வாசகனுக்குள் விறுவிறுப்பையும் சுவாரசியத்தையும் கவனக்குவிப்பையும் கிளர்த்தும். அவர்களது சிந்தனை எவ்விதமாக இருந்தாலும் தான் உறுதி செய்து கொண்ட செயலில் இருந்து விலகாதவர்களாய் அதனால் நன்மையோ தீமையோ எதுவானாலும் இலக்கை அடைந்து விடுகின்றனர்.

ஒருமுறை கிரா -விடம் [எழுத்தாளர் கி.இராஜநாராயணன்] உரையாடிக் கொண்டிருக்கையில் தற்போதைய நடைமுறையில் கம்யூனிஸ்ட் சித்தாந்தம் பற்றி அவரது கருத்தைக் கேட்டேன். “கம்யூனிசம் கட்சி அமைப்பிற்குள் உள்ளடக்கப்பட்டு தற்போதைய நடைமுறை அரசியல் நீரோட்டத்தில் எப்போதோ கலந்து விட்டது. அதுவொன்றும் தவறில்லை ஆயினும், அதன் சித்தாந்தங்கள் போருக்குப் பின்பான ஆயுதம் போல் இப்பொழுதும் துருத்திக் கொண்டிருக்கிறது” என்றார். ஒரு சிறு இடைவெளிக்கு பிறகு “…அதாவது போர் முடிந்து விட்ட பின்பும் போராளி தனது ஆயுதத்தை கீழே இறக்கி வைக்காமல் சுமந்துக் கொண்டு திரிவதை என்னவென்று சொல்வீர்கள்…?” என்று கேட்டார்.

ஒவ்வொருவரும் சுய சிந்தனையால் தான் வாழக்கூடிய களத்திற்கும் காலத்திற்கும் ஏற்புடைய புதிய புதிய சித்தாந்தங்களை உருவாக்கிக் கொள்வது கிடையாது. யாரோயொருவரின் சித்தாந்தத்தில் ஒட்டிக் கொள்கிறார்கள், மிச்சம் மீதியிலிருந்து அடையாளம் தேடுகிறார்கள். சிலர் அதை தனக்கேற்ப ஒட்டியும் வெட்டியும் கொள்கிறார்கள். மனித சமூகத்தின் மரபு நீட்சிக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் தரப்படும் விதவிதமான விளக்கங்கள் சித்தாந்தங்களின் பொலிவைக் காப்பதோடு கவர்ச்சியூட்டியும் அதன் மீதான பிடிப்பை நழுவ விடாமலும் தக்க வைத்துக் கொள்கிறது. உண்மையில் எல்லோருக்கும் ஒரேவிதமான சிந்தனை அமைப்பு இதுதான் என்று இதுவரையில் உருவானது கிடையாது. ஒருவருக்கு நியாமானது இன்னொருவருக்கு அநியாயமாகத் தோன்றும். இது இயல்பு என்கிற புரியாமையால்தான் ஒருவர் அமைதிக்கு இன்னொருவரின் உயிர் இசையாகும் அவலம் நேர்கிறது. போர் அதற்கான வாய்ப்பை தாரளமாகவே நல்குகிறது. விருப்பமுடைய போர் வீரர்களும் உருவாகிறார்கள். அப்படியாகத்தான் அமெரிக்க நாட்டைச் சார்ந்த ராபர்ட்டோ ஜார்டன் பொதுவுடமை சிந்தனையின் காதலால் ஸ்வீடன் குடியரசு கட்சிக்காக வெடிமருந்துகளை சுமந்துக் கொண்டு காடுகள் அடர்ந்த இரண்டு மலைகளைப் பிரிக்கும் ஆற்றின் குறுக்கே இருக்கும் பாலத்தை வெடி வைத்து தகர்ப்பதற்காக வருகிறான்.

ஜார்டனின் தீவிரமான நோக்கம் பாசிஸ்ட்டுகளை அழிப்பது. ஆனால், அவனது வழிமுறைகளில் பாசிசம் இருப்பது குறித்தெல்லாம் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. பாசிசத்திற்கு எதிரான போரில் ரயிலைக் குண்டு வைத்து தகர்க்கும் செயலில் அதில் பயணம் செய்பவர்கள் பாசிஸ்டுகளா? குடியரசுவாதிகளா? பாமர மக்களா? என்பது குறித்தெல்லாம் அவன் சிந்திப்பதில்லை. 

விலகாத குறிக்கோளுடன் கொள்கை உறுதியுடன் பாலத்திற்கு வெடி வைப்பதற்காக பாசிஸ்டுகளின் வசத்தில் இருக்கும் ஒரு மலை பிரதேசத்திற்கு வரும் ஜார்டன் அங்கு மறைந்திருந்து குடியரசின் போராட்டத்திற்கு உதவி செய்யும் கொரில்லா போராளிகள் சிலருடன் சேர்ந்துக் கொள்கிறேன். அது பாப்லோ என்பவனின் கீழ் செயல்படும் போராளிக் குழுவாகயிருந்தாலும் அதன் இயக்குமுறைகளில் முக்கியமானவளாக இருப்பவள் பிலார். அவள் ஆதரவில் ரயில் குண்டு வெடிப்பின் போது காப்பற்றப்பட்ட மேரியா என்கிற இளம் பெண்ணும் அங்கு வசிக்கிறாள். பிலாரின் முன்வரலாறு அவளுள் சில தடயங்களை அழுத்தமாகவே பதித்துள்ளதால் காயங்களில் இருந்து கட்டுப்பாடின்றி மேலேழும்பும் துர்நாற்றத்தின் நினைவுகளை நிராகரிப்பதற்கு பேச்சு மட்டுமே தனக்கு உதவி செய்வதாக நினைக்கிறாள். எப்பொழுதும் எல்லோரிடமும் ஓயாத பேச்சு மட்டுமே அவளது தற்காப்பாகவும் ஆயுதமாகவும் இருக்கிறது. அவள் அதை தீவிரமாக எல்லோரிடமும் எல்லா நேரத்திலும் அசராது பயன்படுத்துகிறாள். சிலவேளைகளில் விளையாட்டுத்தனத்துடன் பிரயோகித்தாலும் அது மற்றவர்களிடம் சிறுகாயத்தை ஏற்படுத்தவே செய்கிறது. பிலார் கேட்கிறாள், “பேச்சு ஒன்று தான் நம்மிடையே பாக்கியிருக்கும் ஒரே நாகரிகச் சின்னம். அதைவிட்டால் நம் சிந்தையை வேறு எதில் திருப்புவது?”

பிலார் தன்னை ஒரு குரூபியாகவும் தோற்றத்தில் அழகில்லாத விகாரம் கொண்டவளாகவும் நினைத்துக் கொள்கிறாள். இதன் பொருட்டு அவ்வப்போது அவள் எரிச்சலடைந்தாலும் மேரியா ஜார்டனுடன் புரியும் காதலுக்கு முழுமனதாய் உதவுகிறாள். அதேவேளை 49 வயது பிலார் 19 வயது மேரியாவின் மீது பிரயோகிக்கும் பொறாமை கலந்த அனலின் வினையூக்கிக்கு பின்னால் மறைந்திருக்கும் அவளது உணர்வுகளைப் புரிந்து கொள்வது அவசியம். இளமையில் இழந்ததை எல்லாம் மேரியா மூலம் அதாவது அவளது காதல் மூலம்தான் அடைவதாகவே நினைத்துக்கொள்ளும் பிலார், அவள் மேற்கொள்ளும் காதல் களியாட்டங்களை எல்லாம் தனதாகவே பாவிக்கிறாள். குடியரசு மீது கொண்ட நம்பிக்கையால் மட்டுமல்லாது ஜார்டனின் வெடிவைப்புத் திட்டத்தில் அவனது காதலிலும் அவள் தன் ஆதரவை வலுவாக வெளிப்படுத்துவதற்கு, அவளது அகத்திற்கு இனிப்பு பூசும் ஆசையும் ஒருவகையில் காரணம்.

ஒரு காலத்தில் புரட்சி நடவடிக்கைளில் தீவிரத்துடன் செயலாற்றிய பாப்லோ இப்பொழுது குடியில் மூழ்கி விட்டான் அவனது வேகமின்மைக்கு மாற்றான பிம்பத்தை பிலார் ஜார்டனிடம் காண்கிறாள். பாப்லோவிற்கு பாலத்தை வெடிவைத்து தகர்ப்பதில் உடன்பாடில்லை. ஜார்டனுடன் அவன் நட்பாகச் செல்வதற்கும் விழைவதில்லை.

ஒவ்வொருவருக்கும் தன் செயலுக்கான இட்டுக்கட்டுகள் இருக்கவே செய்கின்றன. பாப்லோவின் முன்வரலாற்று புரட்சிக் கதைகளில் அவன் பாசிஸ்டுகளை கொன்று குவித்த விதமானது மனித குலத்திற்கு ஒவ்வாமை தரும் முறையே ஆகும். அதாவது சாதாரண மளிகைக்கடை வைத்திருப்பவனும், கதிரடிக்கும் குச்சிகள் விற்பவனும், பாதிரியாரும் கூட அவன் கொலை செய்த பாசிஸ்டுகளில் அடங்குவர். பாப்லோ தான் ஒரு காட்டுமிராண்டி என்பதை தயக்கமின்றி ஒப்புக்கொள்ளவே செய்கிறான். இருப்பினும் அவனது பழைய செயல் வேகம் தணிந்து போனதில் பிலாருக்கு ஏகப்பட்ட வருத்தம்… 

“மனிதரிடையே கேடு கெட்டவன் குடிகாரன்தான். திருடாத வேளையில் திருடனும் மற்றவரைப் போன்றே மனிதனாக இருக்கிறான். மற்றவர்களை சுரண்டிச் சம்பாதிப்பவன் தன் வீட்டிலேயே அந்த வித்தையைக் காட்டுவதில்லை. கொலைகாரனோ வீட்டுக்கு வந்ததும் கரையைக் கழுவி விடுகிறான். ஆனால், குடிகாரன் மட்டுமே தன் சொந்த படுக்கையிலே வாந்தி எடுத்து நாறுகிறான். தேகத்தையெல்லாம் சாராயத்தில் கரைத்து விடுகிறான்.” 

பிலார் தனது கூர்மிகுந்த சொற்களால் வாள் வீசினாலும் பாப்லோவின் உணர்விழப்புக்கு அவனது பழைய செயல்பாடுகளே காரணம். தலையைத் தட்டும் புரட்சி சிந்தனையிலிருந்தும் செயல்களில் இருந்தும் முற்றாக விலகி அமைதியை பற்றிக் கொள்வதற்காக இப்பொழுது குடியிடம் தஞ்சம் அடைந்திருக்கிறான். மாறாக செயல் மட்டுமே நோக்கமாகக் கொண்ட ஜார்டன் அசராதவன். இணக்கமில்லாத பாப்லோவுடன் வலது இடது என அவனுக்குள் நிகழும் அகவிவாதங்களின் கூச்சலையெல்லாம் சமாளித்தபடி, திட்டத்தை சிதறடிக்கும் எதிர்பாராத வானிலையையும் எதிர்கொண்டு, பயிற்சியற்ற சில முரட்டுக் கொரில்லா போராளிகளையும் நுட்பம் அறியாத ஜிப்சிகளையும் அனுசரித்து, நான்கு நாட்களுக்கும் குறைவாகவே பாலத்தை தகர்ப்பதற்காக மலைக்காட்டில் தங்கியிருப்பவனுக்கு மேரியா மீது காதல் பொங்குவது ஆச்சர்யமானது. அதைவிட நாதனுக்காக காத்திருந்த நாயகியாக ஒரே நாள் அறிமுகத்தில் காதல் கொண்டு அன்றைய இரவே உறவாடி சல்லாபிக்கும் மேரியா கதாபாத்திரம் வாசகனின் புருவத்தை உயர்த்துகிறது. அவளது முந்தைய அனுபவங்கள் ஒன்றும் அவளது தற்போதைய நிலைக்கு வலுசேர்க்கும்படியானதாகவும் இல்லை. மேலும் அது கூடுதல் கேள்விகளையே எழுப்புகிறது. இதனால் ஏர்னெஸ்ட்டின் நாவல் நகர்வு வறட்டுத்தனமான கதையாடலாக அமைந்து விடுவதில்லை. அதற்கு வாய்ப்பே கிடையாது. 760 பக்கங்கள் கொண்ட இந்த பெருநாவல் 4 நாட்களில் நிகழக்கூடியது. 300 பக்கங்களுக்கு பிறகு நீங்கள் புத்தகத்தை கீழே வைக்க முடியாது. சாகச பயணிகள் அடையும் விறுவிறுப்பை உள்ளடக்கிய எர்னெஸ்டின் எழுத்துநடையும் களவிவரிப்பும் நாவலின் நிறைவுப் பகுதி நோக்கி நம்மை விரைவாக அழைத்துச் செல்கிறது. இருப்பினும் முனைப்பான போராட்ட களத்தில் ஏர்னெஸ்ட் உருவாகிக்கியிருக்கும் காதல் படிமங்கள் எல்லை நோக்கி விரையும் போர் படையில் இருக்கும் வீரன் ஒருவன் மலைப்பாதையில் இருந்து விலகி தூரத்தில் மலர்கள் பூத்துக் குலுங்கும் பள்ளத்தாக்கை பார்த்து ரசிப்பதற்கு சமமானது. இதில் குற்றம் ஏதும் இல்லை. யுத்த உளவியல் வழியில் இது எதிர்மறையாகவும் நேர்மறையாகவும் செயல்புரியலாம்; போர் களத்தில் அழகிய மலர் கொத்துகள் முன்வந்து நின்று சோர்வளிக்கும் அல்லது பள்ளத்தாக்கின் மலர் சுகந்தம் அளித்திடும் புத்துணர்ச்சி உத்வேகம் வழங்கும். 

நிதர்சனத்தில் நிவாரணம் தேடும் புரட்சி பாதையில் மலர்கள் மட்டுமே பூத்துக் குலுங்குவதில்லை, இரத்தக் கறையும் நிண வீச்சமும் படிந்த ஆயுதங்கள் அங்கேயும் குவிந்துள்ளன. பிரிவினையை விதைத்தவர்கள் யார்? போரினால் யாருக்கு லாபம்? யாருக்கு இழப்பு? உண்மையில் யாருடைய உரிமைக்காகவும் கொள்கைக்காகவும் உயிர்கள் பலியாகின்றன?

ஜார்டனின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஆன்ஸெல்மோ என்கிற முதியவன் பாலத்தை தகர்ப்பதன் பொருட்டு கொட்டும் பனியில் மலைச்சரிவில் மறைந்தபடி எதிரிகள் நடமாட்டத்தை உளவு பார்க்கிறான். அப்பொழுது அவனுள் தோன்றும் எண்ணங்கள் கலப்பில்லாதவை மட்டுமல்ல நிதர்சனமும் கூட..

“சாலைக்கு அப்பால் இருந்த அறுவை ஆலையின் கூண்டிலிருந்து புகை வெளிவந்து கொண்டிருந்தது. பனி வழியே அது விசிறியடித்த வாடையை ஆன்ஸெல்மோவினால் முகர முடிந்தது. வெதுவெதுப்பை அனுபவித்து வசதியாக இருக்கிறார்கள் அந்த பாசிஸ்டுகள். ஆனால், இதெல்லாம் இன்னும் எத்தனை நேரத்துக்கு? நாளை ராத்திரிதான் அவர்களை தீர்த்துக் கட்டிவிடப் போகிறோமே! ஆனால், எனக்கென்னவோ இது விசித்திரமாகத்தான் படுகிறது. நினைத்துப் பார்க்கவே பிடிக்கவில்லை… நாள் பூராவும்தான் அவர்களைப் பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறேனே. நம்மைப் போலவே தானே அவர்களும் இருக்கிறார்கள்?

நான் நேராக அந்த ஆலைக்கு நடந்துபோய் கதவைக்கூட தட்டலாம். எல்லா வழிப்போக்கர்களையும் விசாரித்து அடையாளக் கடிதாசிகளை வாங்கி பார்க்கும்படி அவர்களுக்கு கட்டளை மட்டும் இல்லாதிருந்தால் என்னை வரவேற்பார்கள் என்று எண்ணுகிறேன். இந்த கட்டளைதான் எங்களுக்கு குறுக்கே வந்து தடுக்கிறது. அவர்கள் ஒன்றும் பாசிஸ்டுகள் அல்ல. அப்படி நான் அழைத்த போதிலும் அவர்கள் அம்மாதிரியானவர்களே அல்ல. நம்மைப் போலவே ஏழைகள்தான் அவர்களும். நம்மை எதிர்த்து சண்டை போட ஏற்பட்டவர்களே அல்ல அவர்கள். இப்படிப்பட்டவர்களை கொள்வது பற்றி எண்ணிப் பார்க்கவே எனக்கு கட்டோடு பிடிக்கவில்லை. இதுதான் எதார்த்தம் . கட்டளை விதிப்பவர்கள் யார்? பின்னாளில் அவர்கள் எதிரிகளுடன் கைகுலுக்கி நகைப்பதற்கு தடையேதுமில்லை. ஏனெனில் அவர்கள் போராட்டக் களத்திற்கு வெகுஅப்பால் பூரண செளகரியத்துடன் இருக்கிறார்கள்.”

ஜிப்சிகளிடம் ஒரு பழக்கம் இருக்கிறதாம் மரணத்திற்கு அருகில் இருப்பவரின் மீது கடும் வாடை வீசுமாம் அதன் மூலம் அவர்கள் யார் சாகப்போகிறார்கள் என்பதை முன்னதாகவே கண்டடைந்து விடுவார்களாம். பிலாருக்கும் இதில் திறமை இருக்கிறது. துவக்கத்தில் ஜார்டனுக்கு இதில் நம்பிக்கை இல்லை. அவளைப் போன்றவர்கள் எதையோ கண்டு விடுகிறார்கள் அல்லது உணர்ந்து கொள்கிறார்கள். வேட்டை நாயைப் போலவா? இல்லை இது புலன்களுக்கு புறம்பான உணர்வா? என்ன இழவாக இருந்தாலென்னா… போராட்டத்திலும் புரட்சியிலும் உயிரிழப்பது சாமனியனுக்கு மட்டுமே உரித்தான வரம் போலும். மரணம் குறித்து ஜார்டனின் சிந்தனையும் விவாதத்திற்கு உரியது. 

“மரணம் யாருக்கு எளிதாக இருக்கும் என நினைக்கிறாய்… மதப்பற்று மிகுந்தவர்களுக்கா? அல்லது வாழ்வை வெறும் முடிவாக எண்ணுபவர்களுக்கா? மதபக்தி மிகுந்த ஆறுதல் தருகிறது என்பது மெய்தான். ஆயினும் அது இல்லாததற்காக நாம் மரணம் குறித்து சிறிதும் அஞ்சத் தேவையில்லை. மரணம் அருகில் நெருங்கும் போது அதை நழுவ விடுவதே கெடுதலானது. நெடுங்காலம் இழுத்தடித்து கடும் வலியும் வேதனையும் தரும்போதுதான் மரணம் மோசமான ஒன்றாக மாறுகிறது. அந்தத் தாளாத வலி நமக்குத் தலைக்குனிவையும் தருவித்துத் தந்துவிடுகிறது. இதில்தான் இருக்கிறது உன் அதிஷ்டமெல்லாம்…” 

ஒவ்வொரும் மரணமடையும் நேரத்தில் வாழ்நாளில் நிரம்பிக்கொண்ட சிந்தாந்த மூட்டையை சிதறடிக்கிறார்கள். ஏர்னெஸ்ட் சித்தரிக்கும் ஜார்டன் கதாபாத்திரம் அப்படியல்ல என்றாலும் அவனது மரணம் சரியான பதிலைக் கண்டடைவதையும் ஆச்சர்யத்தை எழுப்புவதையும் தவிர்த்து அது சாதாரணமானது என்பதையும் விட, பொருளற்ற கசடாக நிற்பதைக் கண்டுக்கொள்வதற்கு ஒருவர் தனது எல்லைகளை உடைத்ததாக வேண்டும்.

A Farewell to Arms (1929) – போர்கொண்ட காதல்

‘A Farewell to Arms’ நாவலில் நேர்மாறான இரு துருவங்கள் நிகழ்வுகளாக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு துருவம் யுத்தமாகவும் இன்னொரு துருவம் காதலாகவும் இருக்கிறது. இரண்டும் ஒரே களத்தில் மட்டுமல்ல ஒரே காலத்திலும் நிகழ்கிறது என்பதில்தான் அவை எதிர்கொள்வதையும் பிரதிபலிப்பதையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது. இதற்காக வாசகன் எத்தகைய சிரத்தையும் மேற்கொள்ள வேண்டியதில்லை. ஆம், ஹெமிங்வேயின் புனைவு நுட்ப சாகசமானது பனிச்சறுக்கு வண்டியில் நிலைத்திருப்பவனுக்கான கிளர்ச்சியுடன் தன்வழியில் வேகமாக நகர்த்திச் செல்வதில் தோல்வியடைவதில்லை.

யுத்த பூமியில் தீவிரமாக நிற்கும் ஒருவனுக்கு காதல் உணர்வு எழுமானால் அவனது உத்வேகம் அமைதிக்கான வழி எதுவோ அதன் திசையைத் தேடவும், அதில் பயணிப்பதற்கான சாத்தியங்களை கண்டறியவும் மடைமாறும். இதை அவன் அறிவதில்லை என்றாலும் காதல் உணர்வு சித்தாந்தங்களின் கோட்டைக்குள் மூச்சுமுட்ட வைக்கும், வாழ்க்கையை காவுக் கொள்ளும் இலட்சியத்தின் கடிவாளங்களில் இருந்து விடுபடுவதற்கான கணத்தையே எதிர்நோக்கும். உயிர் வாழ்வதற்கான இயல்பூக்கத்துடன் பாதுகாப்பும் சுமையில்லாத இன்பத்தின் மீதான நாட்டமும் அதன் ஆதி குணமாக இருக்கிறது. காதல் முகிழ்கின்ற தருணத்தில் ஒருவர் காரண அறிவில் இருந்து விலகியிருக்கிறார். பிற்பாடு அதன் குறுக்கீடுகளால் குழப்பத்தையும் சிக்கலையும் வரவழைத்துக் கொள்ளலாம். ஆனால், கபடமில்லாத முதல் துவக்கம் நிச்சயம் எந்தவொரு கலப்படமும் அற்றது.

நாவலின் முதல் பாகத்தில் யுத்தத்தை நிழலாகவும் காதலை பேருவுருவாகவும் சித்தரிக்கும் ஹெமிங்வே அடுத்து வரக்கூடிய நான்கு பாகங்களிலும் காதலை விழுங்கும் விஸ்வரூபமாக யுத்தத்தைக் காட்சிப்படுத்துகிறார். அதிலும் அவர் யுத்தத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சுவதற்கு பதிலாக சிறுகச் சிறுக உயிரை இழக்கும் காதல் மீதான கவனத்தை மேலும் மேலும் கூர்மைப்படுத்துவதில் மட்டுமே முனைப்புடன் இருக்கிறார். உண்மையில் இழப்பின் வழியாக மட்டுமே இவ்வுலகம் நிதானமடைகிறது. யுத்தம் எவ்வகையிலும் தீர்விற்கான செயல்பாடாக இருந்தது கிடையாது. பழைய வரலாறு விதவிதமாய் பாடம் புகட்டி இருந்தாலும் அனுபவமும் அறிவு முதிர்ச்சியும் இல்லாத குழந்தையைப் போல் ஒவ்வொரு தலைமுறையும் ஆர்வத்துடன் தீச்சுடரின் மீது விரலை வைத்து வலியுடன் இழுத்துக் கொள்கிறது. இந்த சோதனை பலமுறை செய்யப்பட்டதால் என்னவோ மென்மைத் தன்மையை இழந்துவிட்ட மனிதக்குலம் உணர்தலுக்கான கால அளவை நீட்டித்துக்கொண்டது. அதனால் சேதத்தையும் அதிகமாகவே வரவழைத்துக் கொள்கிறது.

யுத்தம் தனது செயல்பாடுகள் வழியே பக்குவத்துடன் வறுத்தெடுக்கப்பட்ட புதிய உலகத்திற்கான விதைகளை பூமியில் ஊன்றிவிட்டு பசுஞ்சோலைக்கான கனவில் நம்மை காத்திருக்க வைக்கிறது. உண்மையில் உலகில் நடைபெறும் யுத்த செயல்பாடுகளுக்கு வினையூக்கிகளாக இருக்கக் கூடிய தலைவர்கள் அதற்கான கனவில் இருந்து மீளாதவாறு துயிலில் மூழ்கியிருப்பதற்கான சூழலை கருத்துடன் பராமரிக்கிறார்கள். ஆகையால் மக்கள் தொடர்ந்து உறங்குவதில் ஆர்வத்துடன் மட்டுமின்றி அதை தங்கள் உரிமையாகவும் தேசப்பற்றாகவும் கருதுகிறார்கள். 

எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் முக்கியமான படைப்புகளில் ஒன்றான ‘A Farewell to Arms’ தமிழில் ஆயிரம்.நடராஜன் அவர்களால் “போர்கொண்ட காதல்” என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது அர்த்தமுடையதாகவும் நாவல் பயணிக்கும் பாதைக்கு ஏற்புடையதாகவும் இருக்கிறது. ஆனால், இந்நூலினைப் பற்றிய பின்னட்டைக் குறிப்பு வாசிப்பிற்கான தூண்டுதலைத் தராமல் மேலோட்டமாகவும் தட்டையாகவும் உள்ளது. 

இந்தக் கட்டுரை உலக புகழ்பெற்ற நாவலின் மீது தமிழ் வாசகர்களுக்கு தூண்டுதலை ஏற்படுத்துவதோடு நாவலின் பக்கங்களை நெருக்கமாக பரிட்சியப்படுத்திக் கொள்வதற்கான விரிவான குறிப்புகளையும் அளிக்கும். நாவலின் வாசிப்பிற்கும் முன்பும் பின்பும் இக்கட்டுரையை நீங்கள் வாசிக்கும் போது நிச்சயம் இருவிதமான உணர்வுகளுக்கு ஆட்படுவீர்கள்.

ஹெமிங்வேயின் நாவல்கள் வாழ்வெனும் விளையாட்டு, நிலைப்புத் தன்மையற்ற மைதானத்தின் மீது நிகழ்வதாகவே காட்டுகிறது. எல்லா நாவல்களிலும் அவரது மையக் கதாபாத்திரம் இந்த பொதுப்படையான கருத்தியல் நீரோட்டத்தின் வழியாகவே பயணம் செய்கிறது. இந்நாவலின் மையக் கதாபாத்திரமான ஃப்ரெடரிக் ஹென்றி எப்பொழுது வேண்டுமென்றாலும் தான் விளையாடிக் கொண்டிருக்கும் பூமி தகர்ந்து விழ நேரிடும் என்பதை உணர்ந்திருந்தாலும் அவனது வாழ்வின் பெரும்பாலை பயணத்தில் சலிப்பின் நிழல் பிரதிபலிப்பதில்லை.

போரில் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் அவசர ஊர்திகளின் பொறுப்பதிகாரியான ஃப்ரெடரிக் ஹென்றி முதல் உலகப் போரில் நேச நாட்டு அணியுடன் தாமதமாக பங்கேற்ற ஒழுங்கப்படுத்தப்படாத இத்தாலி நாட்டு இராணுவத்தில் லெப்டினெட்டாக பணிபுரிந்த ஒரு அமெரிக்கன். 1917-ல் இத்தாலி Caporetto போரில் ஜெர்மனி, ஆஸ்திரியாவின் கடுமையான தாக்குதலை சமாளிக்க முடியாது நிலைகுலைந்து உடனடியாக பின்வாங்கியது. இப்போரில் மட்டும் இத்தாலி இராணுவத்தில் 13,000 வீரர்கள் உயிரிழந்தனர். 30,000 வீரர்கள் முடமாகினார்கள் மேலும் 2,75,000 வீரர்கள் எதிரி படையதிகாரிகளிடம் கைதிகளாக சரணடைந்தனர். குறிப்பாக இத்தாலி தோல்வியடையும் தருணத்தில் போர் களத்தில் இருந்து 50,000 வீரர்கள் தலைமறைவானார்கள். இவர்களில் ஹென்றியும் ஒருவன். நிலைப்புத் தன்மையற்ற பூமியில் மேற்கொள்ளும் உயிர் வாழ்தலுக்கான அவனது பயணத்தை ‘A farewell of Arms’ என்கிற நாவல் சாகசமாக விவரிக்கிறது. நாவலின் காட்சிகள் மற்றும் நிகழ்வுகளுடன் அது சித்தரிக்கும் தீவிர சூழலைப் புரிந்துக் கொள்வதற்கு முதல் உலகப் போரில் இத்தாலி பங்கெடுப்பின் வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டும்.

முதல் உலகப்போர் [1914-1918] என்பதை உலகின் முதல் போர் என்பதாக சிலர் நினைத்துக் கொள்கிறார்கள். முன்னதாகவே உலக நாடுகள் அனைத்தும் ஓயாமல் போரில் ஈடுபட்டு வந்தன. முதல் உலகப் போரின் துவக்கத்தை இப்படியாக கூறுகிறார்கள். அனைத்து போர்களையும் நிறுத்துவதற்காக ஒரு போர் தேவைப்பட்டது. அந்தப் போரை தொடங்குவதற்கு ஒரு காரணமும் தேவைப்பட்டது. ஏற்கனவே பல காரணங்கள் இருந்தாலும் ஒரு உடனடிக் காரணம் தேவைப்பட்டது. 

சூன் 28, 1914. பனி மூட்டம் கலையாத ஞாயிறு பிற்பகல் 11 மணி. யூகோஸ்லோவியாவின் தேசிய இயக்கத்தைச் சார்ந்த 20 வயது செர்பிய இளைஞன் தனது கூட்டாளியின் கையெறி குண்டின் இலக்கிலிருந்து தப்பிய ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறான். புரட்சி பாதையில் கொலைகள் வழக்கமானது என்றாலும் அப்பொழுது கொலையுண்டது ஆஸ்திரியா-ஹங்கேரியின் பட்டத்து இளவரசர் பிரான்சிஸ் பெர்டினாண்டு. உடனடியாக ஆஸ்திரியா-ஹங்கேரி செர்பியாவின் மீது தாக்குதலைத் தொடுத்தது. செர்பியாவின் தற்காப்பிற்கு ரஷ்யா வரவும், காத்திருந்த ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாடுகள் தங்கள் காலனிகளுடன் போரில் குதித்தன. ஒரு மனிதனின் கொலையுடன் தொடங்கிய முதல் உலகப் போரின் இறுதியில் ஒரு கோடி ராணுவ வீரர்களும், சுமார் 77 லட்ச குடிமக்களும் மாண்டனர். இது ஆவணங்களின் அடிப்படையிலான புள்ளி விவரம் மட்டுமே என்பதால் இன்னும் பல லட்சம் மரணங்கள் இழப்பின் கணக்கில் சேராமல் மறைந்திருக்கலாம்.

எல்லா நாடுகளையும் போலவே காரணங்களுக்கு பின்னால் மறைந்திருக்கும் பேராசை இத்தாலிக்கும் இருந்தது. முன்னதாக ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி, இத்தாலி என்கிற முக்கூட்டணியில் (Triple Alliance) அதன் செயல்பாடு தந்திரமான சுயநல அச்சாணியில் மட்டுமே இயங்கியது. கூட்டணிக்கு வெளியே திரைமறைவில் பிரான்ஸ், ரஷ்யாவுடன் சரசமாடவும் தயங்கவில்லை. ஒரு கட்டத்திற்குமேல் அதனால் நடுநிலைமை என்கிற பூடகத்தின் வேஷத்தை தொடர முடியாமல் போனது. தனது மெளனத்தில் இருந்து வெளியேறி இத்தாலி மொழி பேசும் நிலப்பகுதி முழுவதையும் ஆஸ்திரியாவிடமிருந்து பெறுவதற்காக நேச நாடுகளோடு சேர்ந்து கொண்டது. அவசர அவசரமாக செய்து கொண்ட லண்டன் உடன்படிக்கை (ஏப்ரல் 26 1915) டால்மேஷியா, Snezin பீடபூமியை தனதாக்கிக் கொள்வதற்கான இத்தாலியின் நோக்கத்தை உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டியது. தாமதமின்றி அதே வருடம் மே 23-ல் இத்தாலி, ஆஸ்திரியா-ஹங்கேரி மீது போரை அறிவித்தது. தங்கள் கூட்டணிக்கு வரவேற்றாலும் இத்தாலியின் அணுகுமுறையை ரஷ்யா சிறிதும் விரும்பவில்லை.

ஆசையும் உத்வேகமும் நிறைந்திருந்த அளவிற்கு அதை அடைவதற்கான திறனை இத்தாலி பெற்றிருக்கவில்லை. முதல் உலகப்போர் 1914-இல் துவங்கினாலும் தாமதமாக 1915-ல் நேசநாடுகளின் அணியில் இணைந்து கொண்டு களத்தில் இறங்கிய இத்தாலியின் ராணுவத்திற்குத் தேவையான தொழில்துறை பங்களிப்பு, தாராள நிதியளிப்பும், தொடர்ச்சியான முறையான பயிற்சி முறைகளும் இராணுவத்திற்கு எட்டாக் கனியாகவே இருந்தன. பலமற்ற இத்தாலி இராணுவம் பணத்திற்கும் வெடிமருந்திற்கும் லண்டனையும் பாரீஸையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

இத்தாலியின் பழைய அணுகுமுறைகள், உடன்படிக்கைகள், நட்பின் கரங்கள் யாவற்றிலும் நம்பகமற்ற தன்மையைக் கொண்டிருந்ததுடன் நயவஞ்சகம் செய்வதும் கூட்டாளியை சந்தேகிக்கவும் சமயம் பார்த்து தனது நலனுக்காக பலி வாங்கவும் தயங்கியதில்லை. தெளிவான அரசியல் முடிவுகளை விரைந்து எடுப்பதில் குழப்பமும் தயக்கமும் கொண்டிருந்த இத்தாலியின் தலைமையிடம் (விக்டர் இம்மானுவேல் III) போதிய அனுபவமின்மையோடு மனநல பிரச்சினைகளும் இருந்தன. ஆட்சி அதிகாரத்தில் நிலவிய குழப்பமும் தயக்கமும் திறன் இன்மையும் ஒரு தொற்று நோயைப் போல் இத்தாலியின் உட்கட்டமைப்பு முழுவதையும் சிதைத்து பலமற்றதாக்கி வைத்திருந்தது.

பிரதமர் அந்தோனியா சலந்தரா தலைமையை பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருந்தார். போதாக்குறைக்கு இரண்டு வெளியுறவுத் துறை மந்திரிகளிடமும் (அந்தோனியோ டி சான் கியுலினோ & சிட்னி சோனினோ) விவேகத்திற்கு பதிலாக வெறுமை நிறைந்த தன்முனைப்பு மட்டுமே மிதமிஞ்சிய திறனாக இருந்தது. முதல் உலகப்போரின் இறுதியில் இத்தாலி பெற்றது ஒட்டமான் பேரரசிடமிருந்து ஒரு துண்டு நிலத்தை மட்டுமே. இதுவே பிற்காலத்தில் “சிதைக்கப்பட்ட வெற்றி” என்று பாசிச சர்வாதிகாரி முசோலினியின் எழுச்சி முழக்கமாக அமைந்தது.

நாவலில், “ஒரு நாட்டைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அறிவில்லாத ஆதிக்கக் குழு ஒன்று இருக்கிறது. அந்தக் குழுவுக்கு எதைப்பற்றியும் ஒரு தெளிவான புரிதல் கிடையாது. அவர்களால் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது. அதனால்தான் இந்தச் சண்டை நடக்கிறது.” என்று ஹெமிங்வே பதிவு செய்கிறார். இத்தாலி இரண்டு விதமாக பிளவுற்றிருந்தது. போரை விரும்பாத சோசிலிஸ்டுகள் அமைதியை விரும்பினாலும் தேசியவாதிகள் தேசத்தின் நிலப்பரப்பை அதிகரித்துக் கொள்வதற்கு போரை ஒரு வாய்ப்பாக பார்த்தார்கள். 

இத்தாலியின் மீதான கடுமையான விமர்சனத்திற்கு காரணம் Caporetto போரில் அது வாங்கிய பலமான அடி. இப்போர் இத்தாலியின் வரலாற்றில் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியது. இப்போரை மையப்படுத்தி புனைவு நூல்களும், அபுனைவு நூல்களும், வரலாற்று ஆய்வேடுகளும், திரைப்படங்களும் வெளி வந்துள்ளன.

  • எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் உலகப்புகழ் பெற்ற ‘A Farewell to Arms’ நாவல் தனிமனிதர்களின் வாழ்வின் அடிப்படையை தகர்த்தெறிந்த Caporetto போரின் பின்விளைவுகளைப் பேசுகிறது.
  • அலெஸாண்ட்ரோ பாரிக்கோவின் (Alessandro Baricco) குவிஸ்டா ஸ்டோரியா (Questa Storia) நாவலும் இப்போரின் துன்பத்தையே பேசுகிறது.
  • 1921-ல் வெளியான கர்சியே மலபார்டோவின் (Curzio Malaparte) முதல் நூலான, ‘Vivo Caporetto’ கடுமையான தனிக்கையால் அரசால் தடைசெய்யப்பட்டது. பின்பு 1980-ல் மீண்டும் வெளியானது.
  • Caporetto போரில் வடகிழக்கு பகுதியில் இத்தாலியின் தந்திரோபாயங்களையும் அதன் செயல்பாடுகளையும் குறித்து இராணுவ வரலாற்றாசிரியர் சிரில் ஃபால்ஸின் (Cyril falls) ‘The Battle of Caporetto’ முக்கியமான ஆய்வு நூலாகும்.
  • ஜெர்மன் ஃபீல்ட் மார்ஷல் ஏர்வின் ரோம்மல் (Erwin Rommel) காலாட்படையின் தாக்குதல் மற்றும் செயல்பாடுகள் குறித்து ‘புயல் துருப்ப’ (Stromtrooper) எனும் நூலை எழுதினார். அவர் இப்போரில் லெப்டினன்ட்டாக பணியாற்றிய போது போரின் நேரேடி செயல்பாடுகள் முழுவதையும் தனது இராணுவ கையேட்டில் எழுதி வைத்துள்ளார். இந்த நினைவு குறிப்புகள் ‘The Bloody aftermath of Caporetto’ எனும் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது.

ஹெமிங்வே போரின் நகர்வுகளை காட்சிகள் உரையாடல்கள் வழியாகவும் அமைதியின் மீது மனிதனுக்கு இருக்கும் அபரிதமான ஈர்ப்பின் மூலமாகவும் நிறுவுகிறார். 1917-ஆம் ஆண்டு வசந்தக் காலத்தின் துவக்கம் இத்தாலி இராணுவத்திற்கு சாதகமாக அமைந்தது. அது ஆஸ்திரிய- ஹங்கேரியர்களை பின்னகர்த்தி அவர்களது எல்லையோரப் பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டது. ஆரம்ப வெற்றியை ருசித்த இத்தாலி படைகளும் சரி, தோல்விக்கண்ட எதிரி படைகளும் சரி, ஒரேவிதமான பலவீனத்திற்கு சோர்விற்கும் ஆட்பட்டிருந்தன. இதில் முந்திக்கொண்ட ஆஸ்திரிய-ஹங்கேரியின் பேரரசர் சார்லஸ் கார்ல் I (செர்பியா இளைஞனால் கொலையுண்ட ஃபிரான்ஸ் பெர்டினாட் இவரது மாமா) ஜெர்மனி கடைசி பேரரசர் மற்றும் பிரஷ்யாவின் மன்னரான கெய்சர் வில்ஹெலம் II-யிடம் உடனடியாக இத்தாலி எல்லையை நோக்கி ஜெர்மன் படைகளை அனுப்பும்படி கோரினார்.

வெற்றிக்கனியின் ருசி இத்தாலிக்கு இனிப்பானதாக இல்லை. குளிர்காலத்தின் தொடக்கத்தில் கனத்த மழையுடன் இத்தாலி ராணுவத்திற்கு காலரா தொற்று பேரிடியாக அமைந்தது. இதில் 7,000 வீரர்கள் மரணமடைந்ததாக ஹெமிங்கேவே முதல் அத்தியாயத்திலேயே பதிவு செய்துள்ளார்.

இராணுவக் குறிப்பேடுகளின் படி பனிமூட்டம் மிகுந்த வடக்குப் பகுதியான அட்ரியாடிக் நதிக்கரையில் ஜெர்மன் படைவீரர்கள் வீசிய கையெறிக் குண்டுகள் மற்றும் விஷ வாயுவின் தாக்கத்தினால் சுமார் 600 வீரர்கள் வரை அன்றைய நாளில் மரணம் அடைந்தனர். ஹெமிங்வேயின் கருணையால் அவரது புனைவு கதாபாத்திரத்திரமான லெப்டினான்ட் ஹென்றிக்கு கடுமையான காயத்துடன் கால் எலும்பு மட்டும் உடைகிறது. ஹென்றி செய்வதறியாது கண்ணெதிரே நிகழும் தன் சகாவின் உயிரிழப்பைப் பார்க்கிறான்.

போரின் தாக்கம் அவனுள் ஏற்படுத்திய வெறுமையின் கசப்பில் இருந்து விலகியிருப்பதற்கு விதவிதமான மதுவின் ருசியையும் போதை தரும் காதலையும் நாடுகிறான். ஹென்றி போர்முனைக்குச் சென்று காயமடைவதற்கு முன்பாக மருத்துவமனையில் பணியாற்றும் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த செவிலியர் பாக்லி கேதரின் மீது கொண்டிருந்தக் காதல் அவன் மருத்துவ சிகிச்சையில் இருக்கும்போது பெரிய வரமாக மாறுகிறது. காதலர்கள் இருவருக்கும் இது நல்வாய்ப்பு. அவர்கள் மிகவும் நெருக்கமாகப் பழகினார்கள். போரையும் இவர்களையும் சுற்றியே நாவல் சுழல்கிறது என்பதால் எந்நேரமும் காதலர்களின் உரையாடல் பேரோசையுடன் செவிகளைத் துளைக்கிறது. சில வேளைகளில் சலிப்பும் அதிதீதமான நாடகத்தன்மையும் கவிழ்த்தும் காதல் உரையாடல்கள் வாய் திறந்திருக்கும் முதலையின் அருகில் விளையாடும் இரண்டு அணில்களை நினைவூட்டுகிறது.

ஹென்றி மருத்துவ விடுப்பில் கேதரினுடன் இன்பமாக பொழுதைக் கழித்துக் கொண்டிருந்த நாட்களில் போர்முனையில் இத்தாலி வீரர்கள் ஜெர்மனி, ஆஸ்திரிய- ஹங்கேரி படைகளின் தாக்குதலால் சீரழிந்துக் கொண்டிருந்தனர். விடுப்பிற்கு பின்பு 70% உடல் தேறியதும் ஹென்றி பணிக்கு அழைக்கப்படுகிறான். வடக்கே பதட்டம் நிறைந்த காபரெட்டே பகுதியில் பைன்சிஸா பீடபூமியில் நிற்கும் அவசர ஊர்திகளை வேறு இடத்திற்கு கொண்டுச் செல்லும் பொறுப்பை ஏற்கிறான். மூன்று ஓட்டுநர்களுடன் மருத்துவ அவசர ஊர்திகளை மீட்டெடுத்துக் கொண்டு வரும் சாலை இத்தாலியர்களுக்கு நெருங்கி வரும் அச்சத்தை எதிரொலிக்கிறது. 

காலியாக இருக்கும் கிராமங்கள், பண்ணை வீடுகள், முன்பே காலியான தங்கும் விடுதிகள், இராணுவ வீரர்களின் உடல் இச்சைக்கு அரசு ஏற்படுத்தி வைத்திருந்த விபச்சாரிகளும் தங்கள் இடத்திலிருந்து வெளியேற்றப் படுகிறார்கள். உணவு, மருத்துவம், மது வகைகள், ஆயுதங்கள் இவற்றுடன் விபச்சாரிகளையும் போர் கேந்திரங்களில் பயன்படுத்திய பழைய இராணுவ வழக்குமுறைகள் ஆச்சரியத்தையும் வெறுப்பையும் தருகின்றன. இராணுவ வீரர்கள் பலர் சிபிலிஸ் போன்ற பால்வினை நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தனர். சண்டையிடுபவனுக்கு அறமும் ஒழுக்கமும் புரியாத பாடம். விபாச்சாரத்திற்கு வரக்கூடிய பெண்களை கொழுத்த குட்டிகளாவே பார்க்கிறார்கள். ஒரு வீரனின் ஆதங்கம் இப்படியாக வெளிப்படுகிறது; “நமக்கான காலம் வரும் என்பேன் நான். காசு கொடுக்காமல் அவர்களை அடைய முயற்சி செய்வேன். எப்படியும் அந்த விடுதியில் அதிக காசு வாங்குகிறார்கள். அரசாங்கமும் நம்மை ஏமாற்றிக் கொள்ளை அடிக்கிறது.”

போரிலிருந்து பின்வாங்கிச் செல்லும் இராணுவ படைகள், இராணுவ கனகரக வாகனங்கள், குதிரை வண்டிகள், பீரங்கி வண்டிகள், தாமதமாக வெளியேறும் உழவர்கள், சில பொதுமக்கள் என மிகப்பெரிய போக்குவரத்து நெரிசலில் பெருமழையின் நடுவே மாட்டிக்கொள்ளும் ஹென்றி பக்கச் சாலைகள் வழியாக கிராமத்தின் ஊடாக வெளியேறுவதற்கு முடிவெடுத்து தனது ஓட்டுநர்களுக்கு கட்டளை இடுகிறான். சேறும் சகுதியும் நிறைந்த கிராமத்து சாலையில் வாகனங்கள் சிக்கிக் கொண்டு நகர மறுக்கின்றன. வேறுவழியின்றி தனது மூன்று ஓட்டுநர்களுடன் கால்நடையாக பயணத்தைத் தொடர்கிறான். இத்தாலி இராணுவம் குழப்பமும் சிக்கலும் நிறைந்தது. அது எல்லாவகையிலும் தனது வீரர்களை இம்சித்து அதிருப்தியை மட்டுமே பெற்றிருந்தது. எனவே சில வீரர்கள் முன்னேறி வரும் எதிரி படைகளிடம் சரணடைவதே மேலானதாகக் கருதினார்கள். எங்கிருந்தோ பாய்ந்து வந்த துப்பாக்கி குண்டிற்கு ஹென்றியின் ஒட்டுநர்களில் ஒருவன் பலியாகிறான். அச்சத்தால் பின்வாங்கும் இத்தாலி படைப் பிரிவுகளுக்கு எதைக் கண்டாலும் மிரட்சி அச்சத்தில் தமது வீரர்களையே இனம் காணாது சுட்டுக் கொல்கிறார்கள். மற்றொரு ஒட்டுநர் எதிரிகளிடம் சரணடைவதை மேலானதாக கருதி ஹென்றியிடமிருந்து பிரிந்து செல்கிறான். ஒரேயொரு ஒட்டுநருடன் உயிர் பிழைக்கும் பயணத்தைத் தொடரும் ஹென்றி இராணுவ போலீஸ் சோதனை சாவடியில் நிறுத்தப்படுகிறான். மேலிடத்தின் உத்தரவுபடி அதிகாரிகளை கைது செய்யும் ராணுவ போலீஸ் படை தங்கள் நாட்டின் தோல்விக்கு தீரமில்லாது போர் முனையில் இருந்து பயந்து பின்வாங்கும் கோழைத்தனமான அதிகாரிகளே காரணம் என்று நினைத்து அவர்களைச் சுட்டுக் கொல்கிறது. லெப்டினன்ட் ஹென்றி நதியில் குதித்து தப்பிக்கிறான்.

இத்தாலிய ராணுவ வரலாற்றில் மிகப்பெரிய தோல்வியாக கருதப்படும் கபோரெட்டோ போரின் முடிவில் ராணுவ அமைப்பு காட்டுமிராண்டித்தனமான பித்தத்தில் நிலைதடுமாறியது. ஹெமிங்கவே தனது நாவலில் கூறும் இராணுவ நிகழ்வுகள், இராணுவத்தின் மீது வைக்கும் விமர்சனங்கள், போர் திகழ்ந்த நிலப்பரப்புகள் எதிலும் கற்பனை இல்லை. 

நாவலுக்கு வெளியே நிலவிய சூழலின் பகுப்பாய்வில் இத்தாலியின் ரண்டாவது ராணுவ தளபதி காபெல்லோ நெருக்கடியில் சிக்கியிருந்த தனது போர் கேந்திரத்தின் பலவீனத்தை தாமதமாகவே புரிந்து கொண்டார். காய்ச்சலால் படுத்த படுக்கையாக இருந்தாலும் வலுவான தாக்குதலுக்கு தனது படைகள் தயாராக இல்லை என்பதையும், எதிரிகளால் இத்தாலி படைகளை விரட்டியடிப்பதையும் உணர்ந்தவுடன் படைப் பிரிவுகளை டாக்லியாமென்டோ நதிக்குத் திரும்ப மேலிடத்தின் அனுமதியைக் கோரினார். ஆனால், களத்தில் என்ன நடக்கிறது என்று அறியாத இத்தாலிய ராணுவத்தின் தலைமைத் தளபதி கடோர்னா இத்தாலியப் படைகளை மீண்டும் ஒருங்கிணைத்து போர் களத்தை நோக்கி நகர்த்தும் முடிவில் இருந்தார். எனவே காபெல்லோவின் கோரிக்கையை கண்முடித்தனமாக நிராகரித்தார்.

இறுதியாக, 30 அக்டோபர் 1917-ல் இத்தாலியப் படையின் பெரும்பகுதியை டாக்லியாமென்டோவின் மறுபக்கத்திற்கு பின்வாங்குமாறு கடோர்னா உத்தரவிட்டது காலம் கடந்த செயல். முன்னதாக இத்தாலி ராணுவம் பெரும் சேதத்திற்கும் உயிரிழப்பிற்கும் இலக்கானது. நதியைக் கடக்க இத்தாலியர்களுக்கு நான்கு முழு நாட்கள் தேவைப்பட்டது, இந்த நேரத்தில் ஜெர்மன் மற்றும் ஆஸ்ட்ரோ-ஹங்கேரிய படைகள் தங்களால் முடிந்த போதெல்லாம் பதுங்கியிருக்கும் போர் முறையினால் இத்தாலி படைகளை பெருமளவில் பலி வாங்கினார்கள். இறுதியில், பின்வாங்கிய சொற்பமான இத்தாலிய வீரர்கள் ஆஸ்ட்ரோ-ஜெர்மன் சுற்றிவளைப்பை சிரமத்துடன் உடைத்துதான் டாக்லியாமென்டோவுக்கு பின்வாங்க முடிந்தது. ஹெமிங்வேயின் நாயகன் ஹென்றியை போல் அவர்களும் பல இன்னல்களை சந்தித்திருப்பார்கள்.

கடோர்னா தனது அதிகாரிகள் மற்றும் ஜெனரல்களுடன் ஆணவப்போக்குடன் நடந்து கொண்டார். அவரது காரணமற்ற கடுமை ராணுவ துருப்புகளின் வெறுப்பை அதிகமாக்கியது. மேலும் போரின் தொடக்கத்தில் 217 ஜெனரல்கள், 255 கர்னல்கள் மற்றும் 355 பட்டாலியன் தளபதிகளை பதவி நீக்கம் செய்திருந்தார். 1919-ல் நடைபெற்ற போர் விசாரனையில் கடோர்னாவின் பதவி மட்டுமே பறிக்கப்பட்டது. விவேகமில்லாது நிகழ்ந்திட்ட ராணுவக் குற்றங்களுக்கு அப்பாவி ஆடுகள் பலியாவது வழக்கமானது. முட்டாள்கள் நிறைந்த இத்தாலியின் ராணுவ முடிவுகளுக்கு உயிரைக் கொடுப்பதற்கு ஒவ்வாத 50,000 ராணுவ வீரர்கள் போர்க்களத்திலிருந்து வெளியேறி தலைமறைவானார்கள். ஒருவேளை உயிர் பிழைத்து மீண்டவர்கள் வாழ்வில் அது மிகப்பெரிய சாகசம். ஆனால், அந்த சாகசத்திற்கு பின்னால் அவர்கள் அடைந்த இன்பத்தின் அளவு சொற்பமானதாகவே இருந்திருக்கும். இழந்ததின் அளவோடு அது முந்துவதில்லை.

நதியில் விழுந்து ராணுவ போலீசார்களிடம் இருந்து தப்பிக்கும் ஹென்றி, அடாஜ் ஆற்றிலிருந்து இசோன்சா ஆறு வரை நீந்தி தென்மேற்கு திசையிலிருந்து வடகிழக்கு திசையில் பரவியிருக்கும் வெனிஷன் சமவெளி முழுவதையும் நடந்தே கடக்கிறான். தக்லியாமெண்டோ ஆற்றின் ஒரு பகுதியையும் நீந்தி கடக்கிறான். உயிர் பிழைப்போமா என்கிற கேள்விக்கு அச்சமேற்படுத்தும் வகையில் போர் முனையிலிருந்து ஆயுதங்களை ஏற்றிவரும் சரக்கு ரயில் ஒன்றில் அவன் தப்பி பிழைக்கிறான். ஒருவருக்கு அத்தகைய சூழலில் ஏற்படக்கூடிய தோற்றப்பிழையின் காட்சியை ஹெமிங்வே அழகாகப் பதிவு செய்கிறார். 

முதலில் அவனது உடல் குறித்து இவ்வாறு சிந்திக்கிறான்; “இந்தத் தலை என்னுடையது, வயிற்றின் உட்குதியும் என்னுடையதுதான். அது அதிகப் பசியில் இருக்கிறது. வயிறு புரட்டிக்கொள்வதை என்னால் உணர முடிகிறது. ஆனால், தலை என்னுடையதாக இருந்தாலும் அது சிந்திப்பதற்காக இல்லை, நினைவில் வைத்துக் கொள்வதற்காகவே. நான் சிந்திப்பதற்காக படைக்கப்பட்டவன் இல்லை. நான் சாப்பிடுவதற்காக படைக்கப்பட்டவன். என் இறைவா.. அதுவே இப்போது உண்மை.” பிறகு பின்வாங்கிய தன் ராணுவத்தைக் குறித்து நினைக்கிறான். “ஒரு பெரிய கடையை தீ விபத்தில் இழந்த பொறுப்பாளனைப் போல் உன்னுடைய ஊர்திகளையும் ஊழியர்களையும் நீ இழந்துவிட்டாய். ஆனால், அதற்கு காப்புறுதி எதுவுமில்லை. அதிலிருந்து நீ வெளியேறிவிட்டாய். ஆகையால் அதில் உனக்கு கடமை உணர்வோ பொறுப்போ கிடையாது. கடையில் ஏற்பட்ட தீ விபத்திற்கு பொறுப்பாளன் தனது ஊழியர்களை காரணமாக்கி இருப்பான். கடை புணரமைக்கப்பட்டு மீண்டும் வியாபாரம் துவங்கினாலும் பழையவர்களுக்கு திரும்பவும் பணிக்கு வருவதற்கான துணிவு இருக்காது. ஒருவேளை அவர்கள் காவலர்களிடம் சிக்காமல் தப்பித்துக்கொண்டால் வேறுஇடத்தில் வேலைத் தேடிக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கலாம்.”

ஒரு வழியாக மிலன் நகருக்கு பிழைத்து வரும் ஹென்றி அங்கு தனது காதலியைச் சிரமமின்றி கண்டடைகிறான். ஆபத்தும் சம்பத்தும் இணைப்பிரியாதது போல ஹென்றியின் காதலி கேதரீன் கருவுற்று இருக்கிறாள். எல்லையில் போரும் நகரத்தில் பதற்றமும் குறையவில்லை. சிறிது காலம் தனது காதலியுடன் விடுதியில் தங்கியிருக்கும் ஹென்றி பள்ளிக்கூடம் போகாமல் ஒருவருக்கும் சொல்லாமல் ஓடி வந்த பிறகு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிக்கூடத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று சிந்திக்கும் ஒரு சிறுவனின் மனநிலையில் இருக்கிறான். வெளியேறிய அதிகாரிகளைத் துரத்தி வேட்டையாடும் இத்தாலி ராணுவ போலீஸார்கள் தமது இருப்பிடத்தைக் கண்டடைந்ததை அறிந்து கொள்ளும் ஹென்றி தனது தப்பி பிழைக்கும் சாகசத்தைத் தொடர்கிறான். இம்முறை கர்பிணியான அவன் காதலியும் அதில் இணைகிறாள். பரந்திருக்கும் எல்லையோர நீர்பரப்பின் வழியாக ஒரு சிறிய துடுப்பு படகில் இரவு முழுவதும் பயணித்து 35 கீ.மீ தள்ளியிருக்கும் சுவிட்ஸ்சர்லாந்து நிலப்பரப்பை அடைகிறான். அங்கு அவன் பெரிதாக சிக்கல் எதையும் சந்திக்கவில்லை. தேவதாரு மரங்கள் நிறைந்த மலைச்சரிவில் பழுப்பு நிற மரப்பலகைகளால் கட்டப்பட்டிருந்த வீட்டில் கேதரீனும் அவனும் சில மாதங்கள் அமைதியாக வாழ்கிறார்கள். ஆனால், கேதரீனின் பேறுகால இறுதியில் அவன் எப்பொழுதும் அனுபவத்திராத பேரிடரால் விழுங்கப்படுகிறான்.

இடர்கள் சூழலால் மட்டும் ஏற்படுவதில்லை, நமது பொறுப்பும் பொறுப்பின்மையும் முந்திய பற்றுதல்களின் வழியாகவும் தீர்மானிக்கப்படுகின்றன. 

ஆழமாக காதலிப்பவனின் உணர்வு பிரசவத்தின் போது அவன் இணையிடம் மட்டுமே குவிந்திருக்கும் . ஹெமிங்வேயின் நாயகன் ஹென்றியும் இதனோடு உடன்படுகிறான். கேதரின் ஆபத்தில் இருந்து மீளாத போது பிறந்த குழந்தையின் மீது அவனுக்கு எவ்வித உணர்ச்சியும் எழாததில் வியப்பில்லை. அந்த வேளையில் பிறந்திருக்கும் குழந்தையோடு எந்தவித உறவும் கிடையாது, தந்தைக்கான புதிய அடையாளத்தை அடைந்து விட்டதற்கான உணர்வும் தனக்குள் எழவில்லை என்கிறான். மாயத் தோற்றம் கண்களை ஏமாற்றும் என்று தெரிந்தும் அதைக் கண்களில் மாட்டிக் கொண்டால் அது துயரத்தின் முடிவைத்தான் தரும். கேத்ரீனுக்கு நேரும் துயரம் அவனது குற்றவுணர்ச்சியைத் தூண்டுகிறது. தன்னோடு ஒன்று சேர்ந்திருந்த இரவுகளுக்கு அவள் கொடுக்கும் விலை அபரிதமானதாகக் கருதுகிறான். 

ஒவ்வொருவரும் தனது வாழ்விற்காக எதையாவது இழப்பது இயல்பானது என்றாலும் சாகசக்காரர்கள் மட்டும் தங்கள் வாழ்விற்கு விலையாக வாழ்வையே தருகிறார்கள். அவர்கள் சமூகத்துடனும் தன்னுடனும் சமரசம் செய்து கொள்வதில்லை, ஹெமிங்வே போலவே… என்றும் கூறலாம். காரணம், ஒரு சாகசக்காரன் தனது உடமைகள், உறவுகள், குடும்பத்துடன் தனது உயிரையும் துறக்கிறான். பற்றற்றவனால் மட்டுமே உண்மையான சாகசத்தை அடைய முடியும். ஆம், அதனால்தான் என்னவோ இழத்தல் மட்டுமே அதன் இயல்பாக இருக்கிறது. புரிந்து கொள்ளுங்கள் இழத்தல் என்பது இழப்பல்ல.

*********

manjunath.author@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

2 Comments

  1. அடேங்கப்பா…ஹேமிங்வேயின் படைப்புகள் பற்றிய ஆழமான கட்டுரை..
    இதுவரையில் அவரது படைப்புகளில் கடலும் கிழவனும் மட்டுமே வாசித்திருக்கிறேன். எனக்கு மிகப் பிடித்த – நான் மிக ரசித்த புதினம் இது. இது திரைப்படமாகவும் வந்திருக்கின்றது என்பது கூடுதலான ஆச்சரியத் தகவல்.
    மற்ற படைப்புகளில் போரே போ என்ற நாவலை எனது இளம்பருவத்தில் – எனது பதின் பருவத்தில் புதுப்பேட்டை நூலகத்தில் பார்த்திருக்கிறேன். அதன் தலைப்பு எனக்கு வினோதமாகப் படும்.
    வாரே வா என்பதற்கு எதிர்பதம் போலும் என நினைத்துக்கொண்டு புத்தகத்தை எடுத்துப் புரட்டிப் பார்த்ததோடு சரி…அப்போது முதல் இரண்டு பக்கங்களைப் படித்துப் பார்த்ததில் நடையும் , பிரயோகித்து இருந்த சொற்களும் கடினமானவையாகத் தோன்றியதனால் புரட்டியதோடு மூடி வைத்துவிட்டேன் … இப்பொழுது இந்தக் கட்டுரையை வாசித்தபிறகுதான் தெரிகிறது போரே – என்ற சொல் போர் – ஐ விளிக்கும் சொல் என்று ..போர் என்றால் war என்பது தெரியும். அப்படியானால் அப்போது எனக்குத் தோன்றிய வாரே War – ஏ கூட சரிதான் போலத் தெரிகிறது.

    மொழிபெயர்ப்பு நூல்கள் அதிகம் வாசகர்களைச் சென்று அடையாததன் காரணம் மொழிபெயர்ப்பாளர்கள் பயன்படுத்தும் நடைதான் என்று நான் அடிக்கடி நினைத்துக் கொள்வதுண்டு – அதை மஞ்சுநாத்தின் இந்தக் கட்டுரை நிரூபித்து இருக்கின்றது.

    ஹேமிங்வேயின் நூல்கள் ஒன்றிரண்டை வாசித்த என்னை மாதிரி வாசகர்களின் ஆர்வத்தினைத் தூண்டி அவரது பிற படைப்புகளையும் தேடி வாசிக்கத் தூண்டுவதுதான் இக்கட்டுரையின் வெற்றி என்பேன் நான்.

    மஞ்சுநாத் இப்படி ஒரு பக்கம் எழுதிக் குவித்துக்கொண்டு இருந்தாலும் , இப்படி அனைத்து திசைகளில் இருந்தும் வரும் உலக இலக்கியங்களை வாசிக்கும் வேகமும் என்னை பிரம்மிப்புக்கு உள்ளாக்குகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button