
விரல் நடுங்கும் மூன்றாம் கண்
உங்கள் சந்தேகம் சரி தான்
நீங்கள் முணுமுணுப்பதில்
அர்த்தம் இருக்கிறது
சரியோ தவறோ
உங்கள் கணக்கு முகவாயில்
கை வைத்திருக்கிறது
வாட்சப்பில் பரப்ப
விரல் நடுங்க நீங்கள்
அமர்ந்திருப்பது தெரிகிறது
அப்பட்டமாய் ஓரிரு சொல்
காதில் விழுவதை என்னால்
தடுக்க இயலவில்லை
புறம் பேசும் பொறாமையும்
அதிலிருக்கும் காழ்ப்புணர்வும்
மானுட சக்கையைத் துப்புகிறது
சொல்லிவிட பெரிதாக வார்த்தை
எதுவும் என்னிடம் இல்லை
என் சிறகுகள் என்னை அசைக்கத்
துவங்கி விட்டன
உங்கள் மூன்றாம் கண்
திறக்கக் கடவது
உற்று நோக்குங்கள்
என்னைப் பரப்புவதற்கு ஏதுவாக….!
—
காதலை பூனை நகத்தில் வளர்க்கிறேன்
நீ ஜன்னல் திறக்கும்
ஒவ்வொரு முறையும்
நான் வண்ண வண்ண காகம்
தேநீரில் முகம் கழுவி
விடிய விடிய தூங்கித்
தொலைக்கும் நாய் மனம் எனக்கு
சுவற்றுப் பல்லிக்கு
சுருக்கென்று பதில் சொல்லும்
மொழி நடை எனது
விருட்டென்று எழுந்து செல்லும்
பெரும் கோபத்தை
பூனை நகத்தில் வளர்க்கிறேன்
மறுகன்னத்திலும் பளார் என
கடிக்கும் கொசுவின் மங்கிய கண்களில்
ரத்தவங்கி நான்
முத்துப் பல் சிரிப்பை முகம் கோணி
காணும் சிறு குரங்கின்
தலைகீழ் நிர்வாணம் எனக்கும்
பைத்தியக்கார பெருச்சாளியின்
கண்களில் முயலாகி துள்ளும்
விடைத்த காதுகளில் என் காதல்…!
—
மணல் தடங்கள்
தொடர் வெளிச்சம்
மூஞ்சூறு மனதுக்குள்
கால்பட்ட புதையல்
கடும் நா வறட்சி
கடைசிக் கனவோ தூரங்கள்
மையிட்ட சுழல்
மறமறக்கும் கண் சிமிட்டல்
வருவதுமில்லா போவதுமில்லா
மணல் தடங்கள்
வானம் முட்டும் கோட்டுக்கு
வாகை சூடும் சூடும்
பாலைவனம் வரைந்து விட்டு
கழுத்து வரை நீர் அருந்திய போதும்
கனன்று கொண்டிருந்தது
என்னாகுமோ என்று வரையாமல் விட்ட
ஒற்றைக் காகத்தின் சிறகசைப்பு….!
—
அகல் விளக்கு அடுப்பில்
நீ அடுப்பூதுகிறாய்
அத்தனை வறுமையிலும்
அகல்விளக்கு அடுப்பில்
*
குளக்கரையில் நிற்கிறாய்
குளக்கரையும் அங்கு தான்
நிற்கிறது.
*
அலுத்துக் கொண்ட சாலை
நாய்களுக்கு இன்றும் சாவதற்கு
காரணம் இருக்கிறது
*
இன்றோடு விட்டு விடுவதற்காகத்தான்
அங்கே அத்தனை பேர்
குடித்துக் கொண்டிருக்கிறார்கள்
*
எப்போது நீ வெளியே வருவாய்
காத்திருக்கிறது
பகலும் நீ வாசலில்
விட்டுச் சென்ற உன் நிழலும்
*