
கரையிலிருக்கிறேன் .
இடப்பெயர்வுக்குப் பின்னான தசாப்த தனிமையுடன்
நிசப்தித்திருக்கும் மலைக்கிராமத்தின் பிரதிமைகளாய் நிழலாடுகின்றன
கையசைத்து விடைபெற்றவைகள்.
வெகுதொலைவானது கடல் என்கிறாய்
இழந்தவற்றையும் கடல் என்கிறாய் ..
உறுமும் அலைகளுடன் பேய் இரைச்சலாய்
கொதித்தெழும் கடலின் கரையில்
அன்றிருந்தோம்
தீராத பசியுடன் அது கரையைத் தின்றுகொண்டிருந்தது .
முள்ளந்தண்டு சில்லிடும் அச்சத்துடன்
வெறித்து நின்ற என் கண்களை நுணுகி ஆலாபித்து சாய்ந்திருந்தாய் மணலில்
உலர்ந்த உதட்டு வெடிப்புகளை
உப்புக்காற்று நிரவ,
கசிந்துகொண்டிருந்த கடலின்
மென்னணுக்கத்திலிசைந்து புதையுண்டிருந்தேன்
மனவெளியில் படர்ந்திருக்கும் எனது கடலுக்குள்
இன்னும் நீ இழந்ததாய் சொல்வதும்
தொலைத்ததாய் அங்கலாய்ப்பதுமான கடல்
எனதில்லை
அது சாபங்களால் புரட்டப்பட்ட இறந்த கடல் போன்றது
ஈரமணலில் ஊரியொன்று கீறி நகர்ந்த
சிறு கோடாய் இழையோடுகிறது
புன்னகை
விடுவிக்கப்பட்ட நிலத்தில்
உதிரும் சருகின் நரம்பிழைகளில்
மீட்ட விரையும் காற்றின் பாதையில்
பயணிக்கும் மனதுடையவளாக
இப்போது நான் மட்டும் கரையிலிருக்கிறேன்
ஆழ்ந்த மௌனத்துடன்
தன்னில் படர்ந்த வானை
மென்னலைகளால் ஆராதித்தபடி
மல்லாந்து கிடக்கிறது கடல்..