
இளசான இளநீர்
வழுக்கையை
கிழியாமல் மட்டையில்
வழித்தெடுக்கவும்
பூவுலகின் காதுமடல்கள்
அவை
—
நொட்டாங்காதும்
சோத்தாங்காதும்
ரெண்டு மரப்பொந்துகள்
அதிகாலையிலும் அந்தியிலும்
ஒரே பறந்தடையும்
சத்தங்கள்
—
தோடுகளற்ற காதின்
துளைகளில் வெளக்கமாரும்
வேப்பமரமும் செழிப்பாக
வளர்கின்றன
—
அக்காதினுள் நீங்களும்
இக்காதினுள் நாங்களும்
நுழைந்து காலமாகிறது
குடைந்தபடியே கிடப்போம்
இன்னும் நூறுவருடத்தில்
பாதைத்தெரியும்
முகம் பார்த்துவிடலாம்
—
பூத்திடாத தென்னங்குருத்துகள்
வளரும் செவிட்டு காதுகளுக்குள்
மண்கவ்வி வந்து போகின்றன செங்குழவிகள்
—
இறந்த காதுகளின்
இயர்போன் உடைமைகள்
சடலத்தின் வீட்டில் ஒப்படைக்கப்பட்டன.
அந்த உடலின் ஆசைப்படியே
தானம் செய்யப்பட்ட அக்காதுகளின் வழியாகத்தான் இவ்வுலகின் ‘குன்னாங்குன்னாங்குர்ர்ர்ர்…’ ஐ முதன்முதலாக கேட்கிறேன்
—
எத்தனை துளிகள் விட்டால்
காதுபள்ளம் நிரம்பும்.
புகுந்த எறும்பை சாவடிக்க
தண்ணீர் ஊற்றுகிறேன்
மறுகாதில் இலையையும்
நுழைக்கிறேன்
—
அப்போதும்
இப்போதும்
எப்போதும்
காதுகள்
ரெட்டைப்பிறவிதான்
–