
மாயக்கண்ணாடி
உங்கள், என் அருகில்
ஒரு மாயக்கண்ணாடி
தொடர்ந்து கொண்டே
இருக்கிறது.
அந்தக் கண்ணாடிக்குள்
உங்களை, என்னைப் போலவே
ஒரு உருவம் ஒளிந்து
கிடக்கிறது.
ஆனால், அது வெறும்
உங்கள், என் பிம்பம் தான்.
நீங்களும் நானும்
தவறென்று செய்ய
மறுப்பதைச் சரியென்று
அது தன் உலகிற்குள்
நிகழ்த்துகிறது.
நீங்களும் நானும்
சரியென்று செய்வதைத்
தவறென்று
தன் உலகில் அது
நிகழாமல் தடுக்கிறது.
நீங்களும் நானும்
புனிதமாக்கி வைத்திருப்பதை
இயல்பான ஒன்றாக
செய்விக்கிறது அது.
இப்போது எனக்கிருக்கும்
குழப்பம் எல்லாம்
இங்கிருக்கும் நாம்தான்
கண்ணாடிக்குள்
இருப்பவர்களின்
எதிர்மறை பிம்பமா?