
முதல் முறை முத்தம்
பண்ண ஆசைப் படுகிறவன்
முகத்தை அஷ்ட கோணலில்
வைத்துக் கொள்கிறான்
மலையேற்ற வீரனின் ஆயத்தங்களோடு
அவள் இதழ்களில் கவனமுடன்
சுவடு பதிக்க விளைபவன்
அவள் கண்களின் வசீகரத்தால்
சுவாசத் திணறிப்
பின் வாங்குகிறான்
ஒவ்வொரு முறை
அவள் இதழ் பற்றும் போதும்
வழுக்கு மரம் ஏறுபவன் போல்
சரேலென தொடங்கிய இடத்துக்கே
வந்து விழுகிறான்
பேரருவியின் கீழ் முனை
பற்றிக் கொண்டு
மேலேற நினைக்கிறான்
முதன் முதலில்
முத்தம் பண்ண ஆசைப்படும் பொடியன்!
00 00
கடல் நீ
பெருங்கடல் நீ
உனைத் தேக்கும் நிலம் நான்
உன் ஒரு பக்கம் மட்டுமே
நான் எனும்இந்தப்புவியியல்
பிழையானது
உன் நான்கு பக்கமும் நானே
உன்னுள்ளும்
உன்னைச் சுற்றியும்
நான்
நான்
நான் மட்டுமே…
என் சலனங்களால்
உன் செயல்களைத் தீர்மானிக்கச் செய்வேன்
ஆழ்கடலின் பேரமைதியைக் குலைக்க
என் கையிலிருக்கும்
இந்தச் சிறு கல் போதுமானது
உன்னை அள்ளி விட
எனதிரு உள்ளங்கைகளே
போதுமானது
ஒரு கல் கொண்டு
நான் உன்னைப் பிளப்பேன்
ஒரு மரத்துண்டு கொண்டு
உன்னில் மிதப்பேன்
என் பெருந்தாகம் தணிக்க
உன்னைக் குடித்துக் களிப்பேன்
ஒரு தீவென
உனக்குள் இளைப்பாறுவேன்
உனதிந்தக் குளிர்மையான
அந்தரங்கம்
எனக்கானது
எனக்கு மட்டுமேயானது..
00 00
வேகட்டும்
வெந்து சாகட்டும்
செத்த பிறகேனும் தீரட்டும்
நான் வெந்ததும்
நீ வெந்ததும்
இப்படியான பொழுதுகளில் தான்
வெந்து விட்டதா
ஒரு பருக்கையெடுத்துத்
தொட்டுப்பார்
ரொம்பவும் சுடுகிறதா
ஏன் ஐய்யோ
என்றலருகிறாய்?
அது அமங்கலச் சொல்
என்பாயே
கம்பன் கையாண்டிருக்கிறான்
காதலில் என்று
நீயே விளக்கமும் தருவாய்
என்ன உன் சுயத்தம்பட்டம்
முடிந்து விட்டதா
யாருடனும்
நேரறைகளில் நின்று
பேசாதே..
கூனியைப் போல்
குசலம் சொல்
ஸ்ரீராமனைப் போல்
மறைந்திருந்து தாக்கு
கேட்டால் வாலி மனிதனில்லை
என்று சமாளி
அறம் பாடி வை
இரங்கற்பா தயாராக்கு
என்ன இப்போது
ஸ்வர்க்க ரதத்திற்கு
சொல்லி விடலாம் தானே..?
00 00
இப்படியொரு பெருமழைக் காலத்தின் போது
என்னுடன் நீ இருந்தாய்..
ஒரு எறும்பின் வாய் கொள்ளா உணவென
நம்மில் நிறைந்திருந்த
காமத்தின் பேரூற்றில்
காதல் மூழ்கி மூழ்கி எழுந்து
உடை மாற்றிக் கொண்டது
உவர்நிலத்தில் புதைந்திருந்த
விரிந்த முட்டைகள் போல
நமக்குள்ளிருந்து வெடித்து வெளி வந்த
மோகப் பிரதிப் பூவொன்று
மின்னலுக்குள் நுழைந்து கொண்டது!