
நேற்று வைத்த
ரசத்தின் வாசனை
பாட்டியின் சமையலறைக்கு
அவளது சமையலறையில்
கடிகாரங்கள் கிடையாது
நுழையும் வாசல்வழி
வெளியேறவும் முடியும் என
மறந்துவிட்டவள் அவள்…
அடுக்கி வைத்த
சம்புடங்களின் வரிசை
ஆண்டு ஐம்பது
ஆன பின்னும் மாறவில்லை
கழுவிய பின்
பாத்திரங்களை
தாமே தம்
இடம் நோக்கி
உருண்டு உட்கார
பழக்கியிருந்தாள் பாட்டி…
துடைத்து துடைத்து
பள்ளம் விழுந்த
சமையல் கட்டின்
கடப்பாக் கல்
கருநிற அட்சயப்பாத்திரம்
பாட்டிக்கு கறி
இளரோஸ் நிறத்தில்
மினுங்க வேண்டும்
அவள் மட்டில்
மொச்சை பயறு
இளம்பச்சை சிப்பிக்குள்
பனி குடித்து
திரண்டு நிற்கும்
மணி முத்து
பூண்டு கூட எப்போதும்
பொதிய மலையின்
மடி சுமந்தது தான்
புளி பழையது வேண்டும்
வெங்காயம் காய்ந்துலர்ந்து
தோல் கழற வேண்டும்
அவள் சமையல் கட்டு
நுழையும் அத்தனை பொருட்களும்
தரப்பரிசோதனை தாண்டாமல்
தட்டு சேராது
காலையில் பணியாரம்
இதமான இஞ்சி டீ
சிவந்து முறுகும் தோசை
நல்லெண்ணெய் பிரிய
வாசமாய் புளிக்குழம்பு
நெய்யில் சுருண்ட
மட்டன் சுக்கா
வாளியை திறந்தவுடன்
ஆள்மயக்கி போடும்
பாசிப் பருப்புருண்டை
அரிந்து கொடுக்கும்
மாம்பழங்களில் கூட
மணந்திருக்கும்
அவளின் கைமணம்…
அவள் முதல் நாள்
வைத்திறக்கிய குழம்பின் சுவை
நானறியேன்
இருந்தும்
என் கடைநாள்
முடியும் வரை
என் நாக்கு சுமந்திருக்கும்
அருஞ்சுவை
அவள் சமையல்…
பதினாறு வயதில்
அன்னமிட தொடங்கியவள்
சமையல் தாண்டி
என்னதான் பிடிக்கும் பாட்டிக்கு ?
ஸ்டெபிகிராப் பிடிக்கும்
சச்சின் பிடிக்கும்
ஜானகியம்மாவை
ரொம்பவே பிடிக்கும்
குழம்பு சுண்ட சுண்ட
கிண்ணம் மாற்றிய
நேரங்களை குறைத்திருந்தால்
அவளுக்கென ஒரு நேரம்
ஒரு வேளை இருந்திருக்கும்…
நாங்கள் நாவால்
இட்ட சிறை
அவள் உழன்ற
சமையலறை
ருசி மெச்சும் வார்த்தைகள்
நிஜமாய் சங்கிலிகள்…
இத்தனை நாளில்
ஒருமுறை சலித்ததில்லை பாட்டி
அவள் நாளின்
ஆகச் சிறந்த தருணம்
இன்னொரு தோசைக்காக
நாங்கள் தட்டேந்தும்
நொடி மட்டும்தான்…
Thozhii arumai ??