கவிதை -பாலைவன லாந்தர்

போலிப்பற்கள்
நான் தப்புத்தப்பாக உறங்கிக்கொண்டிருந்தேன்
தலைகளுக்கருகில் விரல்கள் கிடந்தன
அவை அடிக்கடி
ஒட்டிக்கிடந்த பாதச்சதைகளை
சிணுக்கெடுத்துக் கொண்டிருந்தன
போலிப்பற்கள் உடைந்து
முதுகுத்தண்டை உறுத்துகின்றனவா
இல்லை கடிக்கின்றனவா எதுவோ ஒன்று
ஆம்
நெடு நேரமாகிவிட்டிருந்தது
பிரிந்து போன காதலியின்
இறுதி முத்தத்தை போல
இந்த உடல் கணமேறிக்கிடக்கிறது
யாரோ ஒருவருக்கு கொடுக்க மறந்துவிட்ட
கடன் தொகையை நினைவுறுத்துகிறது
காகத்தின் குரல்
கண்களில் இருந்து கண்களை
தோண்டி எடுக்கிறார்கள்
அதிலிருந்து
உப்புகரிக்கும் காட்சிகள்
வெளியேற மறுதலிக்கின்றன
ரத்தம் ஒழுகியபடியே
தனக்கான பாடலை கேட்கிறது
சோளக் காதுகள்
நத்தைக்கூட்டுக்குள் நுழைந்துவிட்ட
கருவேல முட்களைப்போல்
தொண்டைக்குள் தண்ணீரை
ஊற்றுகிறார்கள்
மரணிப்பதும் மீண்டும் பிறப்பதும்
என்னைச் சார்ந்ததில்லை
என்று சொல்வதற்கு முன்பே
உடல் சில்லிட்டிருந்தது