
பிஞ்சுக் கண்ணீர் துளிகள்
தனிமையின் இருண்ட
அடர் வனத்தில்
நினைவுகளின் கல் இடுக்குகளில்
ஓயாமல் சலசலக்கிறது
என் கண்ணீர்த் துளிகள்
ஒளிர்வும் குளிர்மையும் கொண்ட
அத்துளிகள்
திரண்டு மேலெழுகின்றன ஒரு நிலவாய்
அதில் இன்னும் ஒளியேற்ற வேண்டும்
அது சூரியனாய் தகிக்க வேண்டும்
அதன் தகிப்பில்தான்
இந்தக் கண்ணீர் சுனைகள் வற்றி உலர வேண்டும்.
*** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** ***
ஊரடங்கின் போது
ஓடிக் கொண்டிருந்த கடிகார முட்கள்
நடந்து செல்கின்றன
தவழ்ந்து செல்கிறது சூரியன்
வெற்று இரைச்சல்கள் அடங்கிவிட்டன
பெரும் கானகத்திற்குள்ளே
வெளிச்சம் படர்கிறது
எங்கும் ஆழ்ந்த அமைதி
அதன்பின்
அச்சமூட்டும் காட்டாற்றின் சத்தம்
கேட்கத் துவங்கிவிட்டது
அந்த நதி
அன்பின் பெரும் கடலுக்குள்
சென்று சேர்வதையும் பார்க்க முடிகிறது.
*** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** ***
மழையின் புலம்பல்
தகரக் கூரையின் மீது தாளம் துவங்கிவிட்டது
ஜன்னல் காட்சிகளை மறைத்துக் கொண்டு பெய்தது மாமழை
ஒரு சிறுவனைப்போல அல்லது ராட்சதனைப் போல
ஜன்னல் வழியாக உள்ளே எட்டிக் குதிக்கப்பார்த்தது
சிரித்துக் கொண்டே ஜன்னலை சாத்திவிட்டேன்
உலகம் ஏன் இப்படி இருக்கிறது
மனிதர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்
என என்னனென்னவோ கேட்டு தகரத்தின் மீது
சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறது மழை
நான் டீ வைக்க அடுப்பைத் தயார் செய்தேன்.
நீ ஒரு வக்கிரம் பிடித்தவன் எனச் சொல்வது போல
சட்டென்று நின்றுவிட்டது மழை
ஜன்னலைத் திறந்தேன்
கேள்விகளோடும் துயரங்களோடும்
மேகங்கள் விரைவாகச் சென்று கொண்டிருந்தன.