
மழலை வெளிச்சம்
குழப்பங்கள்
வலிகள்
தோல்விகள்
கவலைகள்
ஏமாற்றங்கள்
போராட்டங்கள்
என வாழ்வின்
அவ்வளவு இருட்டுக்கிடையிலும்
பேருந்தில் அம்மாவோடு பயணிக்கும்
மழலையொன்று ஏற்றி வைக்கிறது
சில நிமிட வெளிச்சத்தை
சில நிமிட மகிழ்ச்சியை
சில நிமிடங்களுக்கான சூரியனை…
*** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** ***
பயணச்சீட்டு
உனக்கும் சேர்த்து வாங்கியிருக்கலாம்தான்
இரண்டு நாட்களுக்கு முன் இப்படி
இன்னொருவனுக்கும் சேர்த்தே வாங்கினேன்
அடுத்த நாளும் வந்த
அவன் வாங்குவானென்றிருக்க
அவனுக்கு மட்டுமே வாங்கினான்
நீ எப்போதாவதுதான் வருகிறாய்
இப்போது உனக்கு வாங்கினால்
எப்போது நீ எனக்கு வாங்குவாய்
எனத்தயங்கியே எனக்கு மட்டும்
வாங்கினேன்
இன்றுனக்கும் சேர்த்து வாங்கியிருந்தால்
அடுத்தமுறை நீ வாங்குவாய்
நிச்சயமாய்
ஆனாலும் அடுத்து நீயெப்போது
வருவாய்
வரும்போது ஞாபகமிருக்குமா
நடத்துநர் முதலில்
என்னிடம் வந்துவிட்டால்
என்ன செய்வது
அதனால் எனக்கு மட்டும்
வாங்கினேன்
வாங்கிவிட்ட பயணச்சீட்டு மட்டுமே
தீர்மானிப்பதில்லை
குழப்பமில்லாப் பயணங்களை…
*** *** *** *** *** *** *** *** *** *** ***
தவறிய பேருந்து
எல்லாப் பேருந்தை நோக்கியும்
ஓடுகிறாள்
பேருந்துக்கருகில் சென்றதும்
ஏறாமல் சிரிக்கிறாள்
பின் வசவு வார்த்தைகளை
உதிர்த்தபடி
அடுத்த பேருந்தை நோக்கி
ஓடுகிறாள்
ஆணின் கால் சட்டையையும்
ஆணின் கைச்சட்டையையும்
அணிந்த அவள்
பேருந்து நிலையமெங்கும்
நாளெல்லாம்
ஓடிக்கொண்டேயிருக்கிறாள்
பைத்தியக்காரி எனச்
சுட்டப்படும்
அவள் தவறவிட்ட பேருந்து
வரவேயில்லை…
*** *** *** *** *** *** *** *** *** ***
சுயமரியாதை
மலைக்கோயில் ரயிலிலிருந்து
இறங்கியதும்
பேருந்து நிலையம் வரை
ஆட்டோவில் செல்லலாமென்றேன் நான்
குதிரை வண்டியைப் பார்த்து
அதில் செல்லலாம் என்றாள்
அம்மா
இளைத்திருந்த
குதிரையின் கண்களில்
வடிந்து கொண்டிருந்தது கண்ணீர்
பசியாற்றாமல்
சவாரியோட்டுவதால் அழுகிறதோ
என்னவோ..?
என்ன விரட்டியபோதும்
அடித்தபோதும் ஒரே வேகத்துடனே
நடந்தது குதிரை
சாட்டையால்
குதிரையை அடிக்கும்போதெல்லாம்
அடிக்க வேண்டாமென்றாள் அம்மா
இறங்கியபோதும்
குதிரை அழுதபடியேயிருந்தது..
முப்பது ரூபாய் என
முடிக்கப்பட்டிருந்த கட்டணத்திற்கு
ஐம்பது ரூபாய்த் தாளொன்றைக் கொடுத்தேன்
மீதியை எடுக்க முற்பட்ட
வண்டிக்காரரிடம்
‘வச்சுக்கங்க
குதிரைக்கு தீனி வாங்கிப்போடுங்க’
அழுதபடியிருந்த குதிரையைப்
பார்த்தபடியே சொன்னேன்
‘உழைச்சதுக்கு
சரியான கூலி போதுங்க,’ என
இருபது ரூபாயை நீட்டினார்
குதிரை இப்போது
புன்னகைத்துக் கொண்டிருந்தது.