CBF-2026சிறப்புப் பகுதி

தருணங்கள் தொடரும் கதையுலகு..! – கவிதைக்காரன் இளங்கோ

பொதுவாக புத்தகக் காட்சியையொட்டி எனக்கான புத்தக வாசிப்பும் அதற்கான நுகர்வும் அமையும். சென்னையிலேயே பிறந்து வளர்ந்தது என்பது ஒரு காரணமாக இருக்க முடியுமா என்றால் இல்லை. அதுவொரு சிறு வயது பழக்கம்.

பாடப்புத்தகங்களைத் தாண்டி கதைப் புத்தகங்களை, காமிக்ஸ் புத்தகங்களை வாசிக்கும் விருப்பத் தொடர்ச்சியின் விளைவு. குடும்ப அமைப்பிலேயே அதற்கான அனுமதியும் ஊக்கமும் நமக்கு குறைந்தபட்ச அவசியமாகிறது. எனக்கந்த சூழலும் அனுமதியும் இருந்தது. அப்பாவும் அம்மாவும் பத்திரிகைகள் வாசிப்பவர்கள். வீட்டில் குமுதமும் தேவி வார இதழும் இருந்தது. ஆங்கில ஹிந்து நாளிதழும், தினமணி நாளிதழும் சோவியத் நாடு தமிழ் பதிப்பு மாத இதழும் இருந்தது. தேவியில் பூலான் தேவி பற்றிய தொடரும், இலங்கை பிரச்சனைகள் சம்பந்தப்பட்ட தொடரும் வாசித்த ஞாபகம் இன்றும் உள்ளது.

அம்புலி மாமா, பால மித்ரா, பூந்தளிர், சம்பத், ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ் என்று பள்ளிப்பிராயத்தில் வாசிப்பதற்கேற்ப சந்தர்ப்பமும் எனக்கு பிரத்யேகமாய் வாய்த்திருந்தது. பள்ளிக்கூடத்தின் நூலகத்தையும் பயன்படுத்தியிருக்கிறேன். அப்போது பெட்டிக் கடைகளில் பத்து பைசா, நாலணா காசுக்கு என வாடகைக்கு எனக்கான புத்தகங்கள் கிடைக்கும். அப்படி விடுமுறைகளில் வாசித்துத் தீர்த்தவை ஏராளம்.

கதையுலகம்தான் என்றென்றைக்கும் கூடவே வந்த ஒன்று. கூடுதல் ஆர்வத்தில் அப்போதே நோட்டுப் புத்தகங்களில் கதைகள் எழுதவும் தொடங்கியதால் வயது மாற்றத்திற்கேற்ப அனைத்தும் தொடர்ந்தன.

தினொன்றாம் வகுப்பு படிக்கும்போது பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்குத் திரும்புவதற்கு பேருந்துக்காக காத்திருப்போம். கடற்கரைச் சாலையில் மெட்ராஸின் பிரதான அஞ்சல்துறை அலுவலகத்தின் முன்னால் பீச் ஸ்டேஷன் பஸ் ஸ்டாப்பின் நடைபாதை ஒதுக்கில் நீளவாக்கில் நியூ செஞ்சுரி புக் ஸ்டால் ஒன்று நிரந்தரமாக அமைக்கப்பட்டிருந்தது. மிச்சம் பிடித்து வைத்திருக்கும் கைச்செலவுக்கான காசில் குறைந்த விலையில் புத்தகங்களை வாங்கத் தொடங்கியது அங்கிருந்துதான். அப்போது, புத்தகக் காட்சியின் விபரங்களை ஸ்டாலில் இருந்த அண்ணா ஒருத்தர் தெரியப்படுத்தினார்.

1991-இல் எனக்கு அன்றைய மெட்ராஸ் புத்தகக் காட்சி அப்படித்தான் நேரடி அறிமுகமாயிற்று. அதன்படி அன்றைய 14–ஆவது புத்தகக் காட்சியை மௌன்ட் ரோடு காயிதே மில்லத் பெண்கள் கலைக் கல்லூரியில் முதன்முதலாக எதிர்கொண்டேன். நிறைய ஸ்டால்கள் இருந்தன. பதிப்பக வாரியாக அமைக்கப்படிருந்தன. ஒருசேர நிறைய தமிழ் புத்தகங்களை காண முடிந்தது. அனைத்து ஸ்டால்களிலும் பொறுமையாக புத்தகங்களைப் புரட்டிப் பார்க்க முடிந்தது. எவ்வளவு நேரம் நின்று வாசித்துப் பார்த்தாலும் யாரும் எதுவும் சொல்லவில்லை. புத்தக விலைப்பட்டியல்கள் அனைத்து ஸ்டால்களின் கவுண்டரிலும் கிடைத்தது. அவற்றை எடுத்துக்கொள்ளும் வழக்கத்தை அப்போதே தொடங்கினேன்.

பட்ஜெட் என்பது பள்ளிக்கூட மாணவனாக எனக்கு ஒரு முக்கியமான விஷயம். கையிருப்பை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். எனக்கு பயன் தரும் புத்தகமாக இருக்க வேண்டும். என்னுடைய வழக்கமான தேடலைத் தாண்டி மனம் விரியத் தொடங்கியது அங்கிருந்துதான். அது மட்டுமல்ல, வெளியே நடைபாதைக் கடைகளில் பழைய புத்தகக் கடைகள் பரந்து விரிந்திருந்ததைப் பார்த்தேன். அங்கே அதிக கூட்டம் இருந்தது.

வீட்டிற்கு வந்து பொறுமையாக புத்தகம் & விலை மற்றும் பதிப்பகத்தின் பெயர் எனக் குறித்து எனக்கான பட்ஜெட்டை வசதி செய்து கொள்வேன். அதனால் புத்தகக் காட்சிக்கு தினமும் போய் வருவதை வழக்கமாக வைத்திருப்பேன். கடைசிக்கு முந்தைய நாள் எனக்கான புத்தகங்களை மொத்தமாய் வாங்கிக் கொண்டு, மற்ற கடைகளுக்குள் புகுந்து புத்தகங்களை எடுத்துப் புரட்டி வேடிக்கை பார்த்துவிட்டு கிளம்பிவிடுவேன். எனக்கான சேமிப்பில் பழைய புத்தகங்களும் என்னுடைய பட்ஜெட்டில் அடங்கும்.

மௌன்ட் ரோடில் பழமை வாய்ந்த ஹிக்கின் பாதம்ஸ் புத்தகக் கடை 1844-லிருந்து இப்போதும் கம்பீரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. எல்.ஐ.ஸி கட்டடத்திற்கு அடுத்துள்ள பழைய சப்-வேக்கு பக்கத்தில் இப்போதிருக்கும் கீதம் ரெஸ்டாரன்ட் இடத்தில் ஒரு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் கிளை இருந்தது. பழைய சாந்தி தியேட்டர் எதிர் போஸ்ட் ஆஃபீஸ் வளாகத்தின் காம்பவுண்ட் சுவரையொட்டி இருக்கும் பழைய புத்தகக் கடை. மைலாப்பூர் லஸ் கார்னரில் ஆழ்வார் என்ற பெரியவர் நடைபாதையில் புத்தகங்களால் அமைக்கப்பட்ட ஒரு பழைய புத்தகக் கடை வைத்திருப்பார். அங்கே எனக்கான பல அரிய புத்தகங்கள் கிடைத்திருக்கின்றன. அதுபோலவே மூர் மார்க்கெட்டில் இருந்த புத்தகக் கடைகள். இப்படி, மெல்ல மெல்ல அனைத்துவித புத்தகக் கடைகளின் ரெகுலர் வாடிக்கையாளராக வலம் வரத் தொடங்கியிருந்தேன்.

புத்தகக் காட்சி, ஜனவரி மாத பொங்கல் விடுமுறைகளையொட்டியே எப்போதும் நடக்கிறது. அது நல்ல ஐடியா. புத்தகப் பிரியர்களுக்கு புதிய வருடத்தை புத்தகங்களோடு தொடங்கிட அது தூண்டுகிறது. முன்னர், சரியாக காணும் பொங்கல் அன்று அதன் கடைசி தினமாக அமையும். அது அன்றைய மெட்ராஸின் அடையாளமாகவும் இருந்தது.

டந்த சில வருடங்களில் எண்ணிக்கையில் ஆயிரம் ஸ்டால்களைத் தொட்டுவிட்டது சென்னை புத்தகக் காட்சி. மக்கள்தொகை அதிகரித்திருந்தாலும் புத்தககங்களை நுகர்வோரும் அதிகரித்துள்ளனர். இன்று வாசிக்கும் மீடியம் பன்முகமடைந்துவிட்டது. ஆனாலும் அச்சடிக்கப்பட்ட புத்தகத்தின் மீதுள்ள ஈர்ப்பு குறையவில்லை. அச்சுத் தொழிலில் தொழில்நுட்ப வடிவம் மேம்பட்டுவிட்டதால் சந்தையின் பயன்பாடும் விரிவடைந்துள்ளது.

காகிதத்தின் தரமும் விலையும் அவை நூலாகுவதற்கான பின்னணியில் உள்ள உழைப்பும் இறுதி விலையும் வாங்குபவரின் தேர்ந்தெடுப்பைத் தீர்மானிகின்றன.

என்னுடைய படைப்புகளும் புத்தகமாக மாறும், அதுவும் புத்தகக் காட்சியில் இடம்பெறும் என்பதெல்லாம் நினைத்தும் பார்க்காத திட்டவரைவிற்குள் இருந்ததில்லை. வாசிப்பின் தொடர்ச்சியில் காலப் போக்கில் நடக்கும் நிகழ்வுகள் எவற்றை சாத்தியப்படுத்துகின்றன என்பதைப் பொறுத்து மகிழ்ச்சிக்கும் இடமுண்டு.

ல எழுத்தாளர்களை ஒரு கூரையின் கீழ் பார்க்கும் வாய்ப்பை எப்போதும் புத்தகக் காட்சி மட்டுமே வழங்கும். சில நேரடி அறிமுகங்களும் சில புத்தக பரிந்துரைகளும் தவறாமல் கிடைக்கும். புதிய நட்புகள் கிடைக்கும். தொடக்கக்கால எழுத்தாளர்கள், கவிஞர்கள், வாசகர்கள் என அனைவரையும் ஏக காலத்தில் காண முடியும்.

முகநூல் போன்ற சோஷியல் மீடியா, அனைவரையும் ஒருங்கிணைக்கிறது. விளைவாக, பல இலக்கியக் கூட்டங்கள், பல இலக்கிய கூடுகைகள் பரவலாய் நிகழ்கின்றன. விருப்பமுள்ளவர்களுக்கான ஒரு கூரையாக அவை மாறுகின்றன.

எனவே, ஒரு முழு வருடம் வாசகராய் இருப்பவர் மறு வருடம் எழுத்தாளராக, கவிஞராக பரிணமிக்கும் சந்தர்ப்பங்கள், தேர்ந்தெடுப்புகள், விருப்பங்கள் இன்று உள்ளன. அவை நிறைவேறுகின்றன. அனைத்தும் பலவிதங்களில் அனைவரோடும் பகிரப்படுகின்றன. அதனால் என்ன பயனென்றால், படைப்புகள் குறித்த ஓர் உரையாடலுக்கான தளம் விரிவடைகிறது.

2000-த்தின் தொடக்கத்தில் காயிதே மில்லத் கல்லூரியில் நடந்த ஒரு புத்தகக் காட்சியில் கூட்டமில்லாத ஒரு மதிய வேளையில் ஒரு ஸ்டாலில் நுழைந்து கவிதைத் தொகுப்பொன்றை கையிலெடுத்து பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் அட்டைப்படம் குறைந்த லைட்டிங்கில் எடுக்கப்பட்ட ஒரு கருப்பு வெள்ளை புகைப்படம். அருமையாக இருந்தது. அது கண்ணாடியணிந்த ஓர் ஆணின் முகம். டாப் ஆங்கிளில் எடுக்கப்பட்டிருந்தது. தலைப்பையும் புகைப்படத்தையும் பார்த்தபடியே உள்ளே புரட்டி கவிதையொன்றை வாசித்தேன்.

அருகே நிழலாடியது. ஒருவர் நின்றிருந்தார். ‘அது என் கவிதைத் தொகுப்புதான்’ என்றார். அதிர்ச்சியும் ஆச்சரியுமுமாக எனக்கு சரியாக ரியாக்ட் செய்யத் தெரியவில்லை. சம்பிரதாயமாய் வாழ்த்துகள் தெரிவித்து கை குலுக்கினேன். கவுண்டரில் புத்தகத்தை வாங்கினேன். கையெழுத்து போட்டுக் கொடுத்தார். புத்தகத்தில் அவருடைய மொபைல் நம்பரைக் குறித்தார். ‘வாசிச்சிட்டு பேசுங்க’ என்றார். தலையாட்டிவிட்டு நகர்ந்துவிட்டேன். வீட்டிற்கு செல்லும் வழியிலேயே வாசிக்கத் தொடங்கிவிட்டேன். அனால், அவரை அழைத்துப் பேசவேயில்லை.

அவர், கவிஞர் அய்யப்ப மாதவன். தொகுப்பின் பெயர் ‘நிசி அகவல்’.

கவிதைக்கான இலக்கியத் தடத்தில் இப்பயணத்தில் பின்னர் 2013–இன் இறுதியில் அய்யப்ப மாதவன் எனக்கு நெருக்கமானது வேறொரு சந்தர்ப்பத்தின் போது. அப்போது அவரிடம், அந்த முந்தைய அனுபவம் குறித்து நான் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை.

இப்படியிருக்க, ஒருமுறை பழைய டிஸ்கவரி புக் பேலஸ் கடையில் அவருடைய ‘குரல்வளையில் இறங்கும் ஆறு’ கவிதைத் தொகுப்பு வெளியீட்டில் அத்தொகுப்பு குறித்து நானும் பேசினேன். அப்புறம் எத்தனையோ நிகழ்வுகள், சந்திப்புகள், உரையாடல்கள் எல்லாம் நிகழ்ந்திருக்கிறது.

சென்ற வருடத்தில் ஒருநாள் ‘நிசி அகவல்’ நூலையொட்டிய என் அனுபவத்தை அவரோடு பகிர்ந்துகொண்டேன். ‘பாத்தீங்களா நண்பா.. காலம் எப்பேற்பட்டது’ என்றார் வியந்து சிரித்தபடியே.

வாழ்க்கை போகிற போக்கில் போடுகின்ற இந்த மாதிரியான ஸிக்சாக் டிசைனை பலமுறை வியந்ததுண்டு. இது போல் என் வாழ்வில் இலக்கியம், சினிமா சார்ந்து நிறைய உண்டு.

வையாவும் ஒரு நெடும்பழக்கத்தின் தொடர்ச்சியில் நிகழ்பவையாக உணர்கிறேன். சென்னை புத்தகக் காட்சி ஒரு வேடந்தாங்கல். இன்று மாவட்டந்தோறும் வெவ்வேறு புத்தகக் காட்சிகள் நடைபெற்றாலும் சென்னை ஜனவரி சீசனில் நடக்கும் புத்தகக் காட்சியை தவற விட்டுவிடக்கூடாது என்னும் பழக்கத்திற்குள் வந்துவிட்டவர்கள் ஏராளம். பிறந்த ஊர் வேறாக இருந்தாலும் இங்கு வாழ நேரும் இத்தலைநகரம் பலரையும் அவரவருக்கு ஏற்ற பழக்க வழக்கங்களுக்குள் ஒன்றென இதையும் மாற்றி அமைத்துள்ளது.

தொடர்ந்து அனைத்தையும் அனுபவங்கொள்வதோடு சேர்த்து வேடிக்கை பார்ப்பவனாகவும் நான் இருப்பது எனக்குள் இருக்கும் கதைசொல்லியை மேலும் உயிர்ப்போடு வைத்திருக்கச் செய்கிறது.

கோவிட் பெருந்தொற்று காலத்தில் (2020) அதிகமாய் வாசிக்கும் பழக்கம் தமிழகமெங்கும் ஏற்பட்டது. அதிலிருந்து எழுதத் தொடங்கியவர்களும் அதிகம். அதனையொட்டி இந்த ஐந்து வருடங்களில் அவரவருக்கான ஓர் இடத்தை அவர்கள் எட்டியிருக்கின்றனர். எழுத்தாளன்-வாசகன் என்னும் பாலம் அகலமாகியுள்ளது. அனைவரும் சங்கமிக்கும் ஓரிடமாக சென்னை புத்தகக் காட்சி உள்ளது. அது, இன்று சென்னையின் தவிர்க்க முடியாத முக்கியமான முகங்களில் ஒன்றாகவும் மேம்பட்டிருக்கிறது.

ஜனவரி 2026-இல் 49-வது சென்னை புத்தகக் காட்சி என்பது அரை நூற்றாண்டை எட்டிவிடும் நெருக்கத்தைத் தொட்டுத் துலங்குகிறது. எனக்கு தனிப்பட்ட முறையில் அது 36–வது வருடமாகும். எப்போதும் போல இப்போதும் ஒரு வாசகனாக எல்லோரையும் போல நானும் காத்திருக்கிறேன்.

எப்போதும் புத்தகங்களை புதிதாக எதிர்கொள்ளும்போது எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி எடுத்துப் புரட்ட புரட்ட இது நமக்கானதா இல்லையா என்பதை என் மனம் ஓரளவு அறியும். எனக்கு அனைத்துவித Genre–ம் விருப்பமானது. ஸ்பெஷலாக சொல்வதென்றால், ஒவ்வொரு முறையும் தேடிச் சென்று பார்ப்பது தமிழ் காமிக்ஸ் புத்தக ஸ்டாலை. அங்கே எனக்கான புத்தகம் ஒன்றாவது கிடைத்துவிடும். அது மட்டும்தான் என்னுடைய உள்ளார்ந்த எதிர்பார்ப்பில் default ஆக கண்டிஷன் ஆகியுள்ளது. சில புத்தகக் காட்சிகளில் காமிக்ஸூக்கான ஸ்டால் இருப்பதில்லை. அது ஒரு சோகம்.

●●●

வாசிப்பின் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கான புத்தகப் பரிந்துரையாக சிலதைச் சொல்லலாம் என விரும்புகிறேன்.

நவீன கவிதைகளைப் பொறுத்தவரை வாசிப்பில் தொடங்க வேண்டியது:

1.‘பாரதியார் கவிதைகள்’ (முழுத் தொகுப்பு) –பாரதிப் புத்தகாலயம் வெளியீடு.

பிறகு-

2.‘ஆத்மாநாம் படைப்புகள்’ (பிரம்மராஜன் தொகுத்தது) –காலச்சுவடு பதிப்பகம். அதில், பிரம்மராஜன் கவிஞர் ஆத்மாநாமை நேர்காணல் செய்ததும் சேர்க்கப்பட்டிருக்கும். அந்த நேர்காணலுக்கு இன்றும் உயிர்ப்புள்ளது.

3.‘மர்ம நபர்’ தேவதச்சன் கவிதைகள் (முழுத் தொகுப்பு) –உயிர்மை பதிப்பகம்.

4.நவீன கவிதை வாசிப்பை மேம்படுத்திக்கொள்ளவும் அடுத்தக் கட்டத்திற்கு நகர வேண்டும் எனவும் விரும்புபவர்களுக்கான ஒரு Non-Fiction புத்தகம், ‘கானலும் உண்மையும்’ (மூல நூலாசிரியர்: கிறிஸ்டோபர் காட்வெல்; தமிழில் எஸ். தோதாத்ரி)நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு.

சிறுகதைகளின் வாசிப்பு தொடக்கத்திற்கு:

இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள்’ (பதிப்பாசிரியர் வீ.அரசு) –சீர் வாசகர் வட்டம் வெளியீடு.

அதே மாதிரி, Non-Fiction புத்தகங்களிலும் வாசிப்புத் தொடக்கத்திற்கு மூன்றைச் சொல்லலாம் என நினைக்கிறேன்:

1.‘உலக வரலாற்றில் பெண்கள்’ (மூல நூலாசிரியர்: ரோஸலின்ட் மைல்ஸ்; தமிழாக்கம் வி.ராதாகிருஷ்ணன்) –நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு.

2.‘மனித சமுதாயம்’ (மூல நூலாசிரியர்: ராகுல் சாங்கிருத்யாயன்; தமிழில் ஏ.ஜி.எத்திராஜூலு) –நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு.

3.‘வால்காவிலிருந்து கங்கை வரை’ (மூல நூலாசிரியர்: ராகுல் சாங்கிருத்யாயன்; தமிழில் அ.மங்கை) –சீர் வாசகர் வட்டம் வெளியீடு.

‘வால்காவிலிருந்து கங்கை வரை’ நூலைப் பொறுத்தவரை தமிழாக்கம் பலரும் செய்துள்ளனர். அது பதிப்பகத்திற்கு பதிப்பகம் மாறுபடுகின்றது. இந்த 2026 சென்னை புத்தகக் காட்சிக்கு சீர் வாசகர் வட்டம் பதிப்பகம், அ.மங்கை மொழிபெயர்ப்பில் தற்சமயம் மக்கள் பதிப்பாகக் கொண்டு வருகிறது.

என் வாசிப்பில் இருந்த தமிழ் மொழிபெயர்ப்பைச் செய்திருப்பவர் கண.முத்தையா. அது, தமிழ்ப் புத்தகாலயம் 2005–இல் வெளியிட்ட இருபத்து ஆறாம் பதிப்பு.

-elangomib@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button