
பரமபதம் படம் ரோகிணி முன் விரிந்து கிடந்தது. கண்களை உருட்டினபடி இருந்த கடவுள்கள் நிதானமாய் நாகங்களையும் ஏணிகளையும் சிறு பாம்புகளையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
உருண்டு போய் விழுந்து கொண்டிருந்த தாயக்கட்டைகளை கண்களை உருட்டிப் பார்த்தாள் சின்னம்மிணி. தாயக் கட்டைக்கேற்ப முன்னேறிச் செல்வது இடைஞ்சலாக நாகம் வந்து விழுகிற இடத்திலெல்லாம் சின்னம்மிணி அடுத்த கட்டத்திற்குத் தாவி விடுபவளாக இருந்தாள் .சின்னம்மிணி ஆரம்பப்பள்ளி போகிறவள். நேரம் கிடைக்கிற போதெல்லாம் பக்கத்து வீட்டிலிருந்து ஓடிவந்து விடுவாள். ரோகிணியுடன் பல சமயங்களில் சுலபமாகத் தோழியாகிவிடுவாள். மிகையான பேச்சில் எல்லோரையும் கவர வைப்பாள்.
“ இததானே வேண்டாங்கறது. இதெல்லா அழுகுணி ஆட்டம்”
“ அதுக்காக நான் கடிபட்டுச் சாகணுமா “
“ இதெல்லா வெசமில்லாதப் பாம்புன்னு வெச்சுக்கோயேன். ஒண்னும் பண்ணாது. நான் உன்னோட வெளியாடற மாதிரி நீயும் இதோட வெளையாடிக்கலாம் “
“பாம்பு வர்ற எடத்திலெல்லா குதிச்சுக் குதிச்சு நான் தப்பிச்சுர்ரனே “
“ பெரிய கெட்டிக்காரிதா ”
பாவாடை குடை போல் விரிந்திருக்கக் கவனமாய் உட்கார்ந்திருந்தாள் ரோகிணி . மயில் கழுத்துப் பாவாடை மினுங்கியது. சின்னம்மிணியின் அப்பா நகரத்திற்குச் செல்லும்போது சின்னம்மிணி தறிநாடா முனையை சிமெண்ட் தரையில் மெல்ல தேய்த்து கூர்மையாக்கி கொண்டிருந்தாள். தறியை ஒரு நிமிடம் நின்று பார்த்தவர் கிளம்பினார்.
வழக்கமாய் அழுக்குச்சட்டையோ, காடா பனியனோ போட்டிருப்பார் அவர், குடிகாரன் தோரணை சுபலமாய் வந்துவிடும் யாரும் பார்க்கையில்.
“ஈசவரிக்கு கல்யாணம் நிச்சயமாயிருக்க்கு . கல்யாணப் புடவை எடுக்க கூப்பிட்டிருக்காங்க . போயிட்டு வர்றேன். பாத்துக்க”
“ என்னப்பா.. அவங்க என்னைப் பாத்துக்கறதா.. நான் அவங்களப் பாத்துக்கறதா “ ரோகிணியைப் பார்த்தபடிச் சொன்னாள்.
“ அவ பண்ற ரவிசிலே நான் எங்க பாக்கறது. அவதா பெரிய மனுசியாட்டம் எல்லாம் பேசறாளே ‘
“ செரிக்கா . நான் இனி சின்ன மனுஷியாகவே பேசறன் “
அவர் வாய் விட்டுச் சிரித்தபடி வெள்ளைச் சட்டையில் இருந்த சுருக்கத்தை நீவி விட்டுக் கொண்டார். அபூர்வமாய் சட்டை அணிபவர் . துவைத்து மடித்து வைத்த சட்டை கனமானப் பெட்டிக்கடியில் அடியில் இஸ்திரி செய்யப்பட்டது போல் மடிப்புகளுக்காக வைக்கப்பட்டிருக்கும். எங்காவது வெளியூர் போக வேண்டுமென்றால் பிரயோஜனமாகும்.
“சுருக்கமில்லாமெ நல்லதா பண்ணி வெச்சிருக்கறனே “ என்று செம்பில் தீக்கங்குகளைப் போட்டு இஸ்திரி செய்த ஒருமுறை தீக்கங்குகள் தவறி சட்டை மேல் விழுந்து பொத்தலாக்கி விட்டன. அப்பொத்தல்கள் முதுகுப்புறம் என்பதால் ஆறுதல் அடைந்தவர் போல் தைத்துப் போட ஆரம்பித்திருந்தார். அதைப்பார்க்கும்போது ரோகிணிக்கு சங்கடமாக இருக்கும் . ஒரு தரம் சுண்டுவிரலை சட்டைப் பொத்தலில் விட்டு பெரிதாய் கிழித்து விட்டாள். துவைக்கும் போது கிழிந்து விட்டதாய் சொன்னாள். அதற்கப்புறம் தான் அவர் புதுச் சட்டை எடுத்து வந்திருந்தார்.
”செரி.. ஒருத்தரை ஒருத்தர் பாத்துங்க.. நான் ராத்திரிதா வருவேன்”
ஈஸ்வரிக்கு ரோகிணி வயதுதான் ஆகியிருந்தது. இருவரும் ஆரம்பப் பள்ளியில் ஒன்றாக நான்காம் வகுப்பு வரை படித்தவர்கள். ரோகிணிக்கு செவ்வாய்தோஷம் என்று எல்லா ஜாதகங்களும் தட்டிக்கழிந்து கொண்டிருந்தன. கெட்ட ஜாதகம். செவ்வாய் தோஷமுள்ள யாராவது அமைந்து வந்திருப்பார்கள், தனக்கென ஜாதகக் கோளாறு ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விபரம் காதில் விழும். தறிநாடாவின் இயக்கத்தில் எல்லாவற்றையும் கரைத்து விடுபவள் போல் மறந்து விடுவாள். மறப்பது கூட எவ்வளவு கஷ்டம் என்றிருக்கிறது. சங்கடங்களாய் மனது நிறைகிற போதெல்லாம் மரப்பெட்டியைத் திறந்து நெய்த கல்யாணப்புடவையை எடுத்து உடம்பின் மீது போர்த்திக் கொள்வாள்.என்னவோ ஆறுதல் வந்து விடும். இந்தப் புடவைக்காவது எவனாவது வருவான் என்று நம்பினாள்.அவளே தன் கல்யாணத்திற்காக நெய்த புடவை அது.கண்ணாடி ஓடு ஒளிக்கீற்றில் பட்டுப் பிரதிபலிக்கிற மாதிரி பாவின் மீது வைத்துக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்பாள், ஒளிக்கீற்றினூடே ஜெயராஜின் முகம் வந்து போகும். தேவையில்லாதது என்று நினைப்பாள். .
”அழுகுனி ஆட்டம்ன்னு இல்லாமெ ஒரு தரமாச்சும் செரியா ஆடிப்பாக்கலாம் சின்னம்மிணி “
“நான் அதுக்கும் ரெடியக்கா“
“ ஆளுக்கு அய்ம்பது புளியங்கொட்டையைப் பந்தயமா வெச்சுக்கலாம். இல்லீன்னா பொட்டுக்கடலை..”
“ பொட்டுக்கடலையை வெச்சு ஆடறது. அப்பறம் லப்க்குன்னு வாயிலெ போட்டுக்கறது.. “
மிதிவண்டியின் மணிச்சப்தம் நீண்ட அலறலைப் போலக் கேட்ட்து. ஜெயராஜின் மிதிவண்டியில் சின்னம்மிணி உட்கார, சின்ன “ சீட்” ஒன்றை ஜெயராஜ் தயார் செய்திருந்தான். சக்கரங்களில் புசுபுசுவென்று ஏதாவது சுழன்றி கொண்டிருக்கும். முன்புறத்தில் கண்ணாடி ஒன்றை மாட்டியிருந்தான். தெருவின் முக்கு வரையான நீட்சியைக் கண்ணாடி எப்போதும் பிரதிபலித்துக் கொண்டிருக்கும். நெய்த சேலையை சொசைட்டிக்கு கொடுத்தபின் அவ்வப்போது வந்து போவான்.. வேதகாரப்பையன்.அப்பாவுக்கு வேதகாரர்களைக்கண்டால் பிடிக்காது.” ஜாதி , மதம்ன்னு ஏதாச்சும் மாத்திருவாங்க “ என்பார்.
” மாமா வந்துட்டார். நான் சைக்கிள் ஓட்டப்போறன்“
“ நான் தாயம் ஆடப் போறேனே “ என்றபடி மிதிவண்டியில் இருந்து இறங்கினான் ஜெயராஜ். அவனின் கையில் நூல் பை ஒன்று இருந்தது.
தாய்க்கட்டைகள் உருண்டு இருவரின் கைகளையும் பரபரப்பாக்கின. சித்தர்கள், யோகிகள் , நாகங்களைக் கடந்து விலகிக் கொண்டிருந்தனர். யார் முந்தப்போகிறார்கள் என்றப் படபடப்பில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..சின்னமிணி மிதிவண்டியில் குரங்கு பெடலுக்கு முயன்று கொண்டிருந்தாள்.
“ எங்கம்மா உன்னெ வீட்டுக்குக் கூட்டிட்டு வரச் சொன்னாங்க. எப்ப வர்ரே.. வந்து ரொம்ப நாளாச்சே “
விறுவிறுவென ரோகிணி முன்னேறிக்கொண்டிருந்தாள். தாயக்கட்டையின் விறுவிறுப்பான உருளலில் அவள் ஏணிகளில் ஏறிக் கொண்டிருந்தாள். நடுக்கத்துடன் அவள் தாய்க்கட்டையை உருட்டியபோது நரகாசூரன் தென்பட்டான். அதன் கடிபட்டு அதலபாதாளத்திற்கு வந்து சேர்ந்தாள் சட்டென்று. ஒருவகை சிரிப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். நாகக் கடிபட்டு உருண்டு எங்கோ போய் விழும்போது எல்லாவற்றையும் சுருட்டியெறிந்து விட்டு கிளம்பிவிடுவாள் எப்போதும். இப்படி வெட்டுப்பட்டுக் காணாமல் போய் விடுவதற்கோ, நரகாசுரனிடம் கடிபட்டு பாதாளத்திற்கு வந்து சேர்வதற்கோ அவள் பட்டியலில் சிலர் இருந்தார்கள். ( செத்துப்போன அம்மா அப்பட்டியலில் இல்லை )
அதில் முதலாவதாக அவள் அப்பா ரொம்ப காலமாய் இருக்கிறார் என்பது ரோகிணிக்கு ஞாபகம் வந்தது.