சிறுகதைகள்

கருணை மிகவும் கொடியது

இராம் சபரீஷ்

அலமேலு முனங்கியவாறே படுத்திருந்தாள். அவளால் கண்களைத் திறக்கவே முடியவில்லை. அப்படி‌யொரு அசதி‌. அலமேலுவிற்கு அடி வயிற்றில் யாரோ சாட்டையால் அடித்தது போன்ற ஒரு வலி இருந்து கொண்டே இருந்தது. தெருவில் சாட்டையை அடித்துக் கொண்டே பசிக்கு பிச்சை கேட்கும் ஒருவனை அலட்சியமாக கடந்து செல்வது எவ்வளவு கேடுகெட்ட இரக்கமற்ற ஒரு குற்றச் செயல் என்று அவளுக்குத் தோன்றியது. நனைந்த சட்டை இறுதி பிழியலில் கசியவிடும் தண்ணீரைப் போல அலமேலுவின் கண்களில் வலிமிகுதியால் நீர் கசிந்து கொண்டிருந்தது. ரொம்ப நாளாக இருந்த ஒரு சுமையை இப்போது இறக்கியிருந்தாலும் இனி அந்த சுமை எப்போது மீண்டும் வரும். அதை சுமை‌யென்று கூறுவது எவ்வளவு பெரிய குரூரம். கிடைத்து அலுத்தவர்களுக்கு வேண்டுமானால் இது சுமையாக இருக்கலாம். ஆனால் எனக்கு இது வரம் அல்லவா? ஏழு வருட தவத்திற்கு பின் கிடைத்த விலைமதிப்பற்ற வரம். என் வாழ்வின் கருப்பு பக்கங்களை அழித்து மீண்டும் வெள்ளையாக மாற்றப் போகும் அழிப்பான். இந்த ஏழு வருட தவத்தில் எவ்வளவு பேச்சுகளை, ஏச்சுகளை , வலிகளை, அவமானங்களை கடந்து வந்தாயிற்று. எவ்வளவு பெரிய கொடிய குற்றவாளிகளையும் மன்னித்து ஏற்றுக் கொள்ளும் இச்சமூகத்தால் என்னைப் போன்றோரை ஏனோ ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. மலடியாம். “மலடி” வார்த்தையில் தான் எவ்வளவு வன்மம். குற்றவாளிகளே தலைநிமிர்ந்து நடக்கும் ஒரு சமூகத்தில் குழந்தையில்லாத பெண் தரையைத் தவிர வேறு எதையும் பார்த்து நடக்க முடிவதில்லை. அலமேலு மனதில் பல நினைவுகள் ஓடிக் கொண்டிருந்தது. அவை யாவும் அவள் மறக்க நினைப்பதே. ஆனால் வலியை மறக்க வைக்க கொடுத்த மயக்க மருந்தோ பழைய‌ நினைவுகளை தோண்டி அகழ்வாராயத் தொடங்கி விட்டது. அலமேலு வாழ்வில் மிகவும் பயந்தது அந்த மூன்று நாட்களுக்காகத் தான். மாதவிடாய் சுழற்சி நெருங்க நெருங்க மனம் நீரை விட்டு வெளிவந்த மீனைப் போல் துடியாய் துடிக்கும். இந்த முறையாவது சுழற்சி தள்ளிப் போகாதா அவளும் தாயாகும் தருணம் வாய்காதா என்று ஏங்க வைத்த நாட்கள் அவை. ஒவ்வொரு மாதமும் அந்த நாட்களுக்காகவே அலமேலு காத்திருப்பாள்‌. தேதி நெருங்க நெருங்க ஆகாரம் எடுத்துக் கொள்ள மாட்டாள். கோயிலுக்கு சென்று மாவிளக்கு போடுவாள். உண்ணாமல் விரதம் இருப்பாள். கோயிலே கதி என்று இருப்பாள். ஆனால் வழக்கம் போல் அடுத்து வரும் நாட்களில் அவளால் கோயிலுக்கு செல்ல முடியாது. சுழற்சி வந்துவிடும். முகம் வீங்கி சேலை நனைந்து மேல் உள்ளாடை தெரியும் வரை அழுவாள். துரைக்கு வருத்தமாக இருந்தாலும் வெளிக்காட்டாமல் முடிந்த அளவு அன்பாக அவளை சமாதானப் படுத்துவான். ஓரிரு நாட்களில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விடுவாள். பின்னர் மீண்டும் அடுத்த சுழற்சிக்காக காத்திருப்பாள். ஏழு வருடங்களும் இது தான் அலமேலுவின் வாழ்க்கை சுழற்சியாக இருந்தது. ஒவ்வொரு முறையும் ஏமாற்றமே மிஞ்சினாலும் அவளால் எதிர்பார்ப்பதை நிறுத்த முடியவில்லை. ஏமாற்றங்களைத் தாண்டி பல அவமானங்களும் அவளது வாழ்க்கை சுழற்சியில் இயல்பான ஒன்றாகவே இருந்தது. வீட்டு விசேஷங்களில் புறக்கணிக்கப்படுவாள். இவ்வளவு ஏன் உடன் பிறந்த சகோதரியின் வளைகாப்பிலேயே அவள் மேடையேறினால் தங்கையும் மலடாகிவிடுவாள் என்று சொல்லாமல் சொல்லி புறக்கணிக்கப் பட்டாள் ‌. மீண்டும் வீட்டில் ஒரு ஓரமாக முடங்கி விடுவாள். இதனாலேயே விசேஷங்களைப் புறக்கணிக்கத் தொடங்கினாள் ‌. பல வருடங்களாக அவளின் பட்டுப் புடவைகள் அலமாரியிலேயே கேட்பாரின்றி கிடப்பதால் தூசி படிந்து நிறம் மங்கிக் கிடக்கிறது. மிகவும் நெருங்கிய சொந்தங்களின் விசேஷம் என்றால் துரை மட்டும் சென்று வருவான் ‌. அலமேலுவை வற்புறுத்த மாட்டான். துரை மிகவும் அன்பானவன். அலமேலுவை நன்கு புரிந்தவன். அவனுக்கு மட்டுமே அலமேலுவை சமாதானம் செய்யத் தெரியும். இருந்தாலும் துரையால் அவன் ஆத்தா மருதம், அலமேலுவை சகட்டு மேனிக்குப் பேசுவதை நிறுத்த முடியவில்லை. ஆத்தா என்றால் பயம் ‌. அலமேலுவோ மாமியாரைக் கண்டால் ஆபத்து வரும்போது எல்லா பாகங்களையும் ஓட்டிற்குள் இழுத்துக் கொள்ளும் ஆமையைப் போல‌ ஒடுங்கிவிடுவாள்‌. மருதம் நல்லவள் தான் என்றாலும் அலமேலுவிடம் குறிப்பாக இந்த விஷயத்தில் மிகவும் குரூரமாக நடந்து கொள்வாள். அதுவும் துரை புதுவீடு கட்டி புகுந்தபோது அலமேலுவை பால் காய்ச்ச வேண்டாம் என்று தடுத்ததும் துரை நிலத்தில் அலமேலு விதை போட்டால் நிலம் மலடாகிவிடும் என்று தடுத்ததெல்லாம் அவமதிப்பின் உச்சக்கட்டம். அப்போது அவளுக்கு மாமியாரை விடவும் துரையின் மீது தான் அதிக வருத்தம் ஏற்படும். ஆனால் அவளுக்கு கோபம் வராது. ஒருவேளை வெளிக் காட்டாமல் இருந்திருக்கலாம். ஆனால் ஒருபோதும் துரையிடம் இதை காட்டிக்கொள்ள மாட்டாள். புதையுண்ட புதையலைப் போல வெளிவராமல் அப்படியே அலமேலுவின் மனதில் மட்டுமே இருக்கும். அலமேலுவால் வேறு என்ன செய்து விட முடியும்.வழக்கம் போல மீண்டும் வீட்டில் ஒரு ஓரமாக முடங்கி விடுவாள்.

சுயநினைவு மெல்ல வர வர அலமேலுவிற்கு வயிற்று வலி மேலும்‌ கடுமையாகியது. வலியை விடவும் தன் குழந்தையை காண வேண்டும் என்ற ஆவல் கரைமோதும் பேரலைகளாய் மனதில் மோதிக் கொண்டிருந்தது. குழந்தை எப்படி இருக்கும்? என்னைப் போலவா இல்லை துரையைப் போல இருக்குமா. துரையின் கண்கள் மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கும். கிழவிகள் உருட்டும் சோழியைப் போல பெரிதாக இருக்கும். அதே போலவே குழந்தைக்கும் இருக்குமா ? பக்கத்து வீட்டு கோகிலாவின் குழந்தைக்குப் பிறந்த போதே தலையில் மயிர் இருந்ததாம். அது போல இருக்குமா? இன்னும் பல கேள்விகள் மனதை மரங்கொத்திப் பறவையைப் போல‌ கொத்திக் கொண்டு இருந்தன. குழந்தை அழும் சத்தம் மிக அருகில் கேட்டது. இது அவள் குழந்தையின் அழுகுரல் தான் என்று உடலின் அனைத்து பாகங்களும் கையெழுத்திட்டு ஊர்ஜிதப் படுத்தின. கண்களில் நீர் பொங்கி ஊற்றியது. மெல்ல கண்களை திறந்து குழந்தையை பார்க்க முயன்றாள்.

“அலமேலு.”

“அலமேலு ”

“ஊர்‌ வந்துருச்சு எந்திரி இறங்கனும்” என்று துரை ஆழ்ந்த நித்திரையிலிருந்த அலமேலுவை எழுப்பி விட்டான். அலமேலுவின் கண்கள் கண்ணீரோடு கனவை கலைத்தன. இறுதி வரை குழந்தையின் முகத்தை கனவில் கூட பார்க்க கொடுத்து வைக்கவில்லையே என்று மனதில் நொந்து கொண்டாள். துரைக்கு தெரியாமல் கண்களைத் துடைத்துக் கொண்டு இருவரும் காப்புளியாம்பட்டியில் இறங்கினார்கள். ஊர் ஆரவாரமாக இருந்தது. ஐந்து வருடத்திற்கு ஒருமுறை நிகழும் திருவிழா என்பதால் சுற்று வட்டாரமே திரண்டு வந்து கொண்டாடுகிறது. துரை திருவிழாவை நோக்கி அலமேலுவை அழைத்துச் சென்றான்.

இந்த திருவிழாவை காணக் கிடைக்காதவர்கள் ஒருவகையில் பாவம் செய்தவர்கள் தான். அப்படி ஒரு கொண்டாட்டம். ஊரில் உள்ள இளவட்ட ஆண்கள் கலெக்டர் ஆபீஸில் நிற்கும் கூட்டத்தை போல் வரிசையில் நின்று குமரிகளைக் காண காதல் மனுக்களுடன் காத்திருந்தார்கள். பெண்கள் புதிய புதிய அலங்காரங்களுடன் புதிய ஆடைகளுடனும் தன் வாழ்நாளின் முக்கால் பங்கை குயவனாக கழித்த ஒரு தேர்ந்த குயவன் வடித்த மண் பானையைப் போல மிடுக்கான தோற்றத்துடன் திருவிழாவில் தேரைப் போல உலாவிக் கொண்டிருந்தார்கள். பெண்களுக்கே உரியப் பாணியில் ஆண்களை கண்டு கொள்ளாமல் தங்களுக்குப் பின்னாலே அலைய வைத்தபடி ஓரக்கண்களால் தத்தம் மனுதாரர்களை இரசித்தபடி சுற்றிக் கொண்டிருந்தனர். குழந்தைகள் பஞ்சு மிட்டாய்களையும் பம்பாய் அப்பளங்களையும் வாங்கித் தருமாறு மண்ணில் உருண்டு பிடிவாதம் பிடித்ததுக் கொண்டிருந்தன. அந்த‌ பம்பாய் அப்பளம், பிரியாணி அண்டாவை மூடப் பயன்படுத்தப் படும் மூடியை போல் பெரிதாக இருந்தது. ஒரு குடும்பத்திற்கு ஒரு அப்பளம் என்ற வீதத்தில் விற்றுக் கொண்டிருந்தது. பஞ்சு மிட்டாயோ பத்து பாக்கெட்டு ஷாம்புகளை ஒரே நேரத்தில் தலையில் ஊற்றி நுரைக்க வைத்தைப் போல இருந்தது. “ப” வடிவத்தில் பல விதமான கடைகள் வரிசையாக இருந்தன. பளபளவென மின்னும் வளவி கடைகள், தோடு கடைகள் , பெண்கள் கூட்டத்தை அப்படியே மொத்தமாகத் தன்னை நோக்கி காந்தத்தைப் போல இழுத்துக் கொள்ளும் “கவரிங்” நகை கடைகள், எந்த பொருள் எடுத்தாலும் இருபது தான் என்று அள்ளி இரைக்கும் வீட்டுச் சாமான் கடைகள், குழந்தைகள் குதூகலிக்கும் விளையாட்டு சாமான் கடைகள் என எல்லா பிரிவினருக்கும் ஏற்ற வகையில் கடைகள் போடப்பட்டு இருந்தன.

அந்த “ப” வடிவ கடை வரிசைகளுக்கு நடுவில் விண்ணை முட்டும் இராட்டினங்கள் அராஜகமாகப் போதை தலைக்கேறிய குடிகாரனைப் போல் ஆடிக்கொண்டு இருந்தன. இராட்சத சக்கரம் போன்ற இராட்டினத்தில் ஏறி உச்சியிலிருந்து பார்த்தால் ஊரின் எல்லைப் பனைமரங்கள் உச்சியில் நெளியும் பாம்புகளைக்கூடக் கண்டு பிடித்து விடலாம். அந்தளவுக்குப் பிரம்மாண்டமான உயரம். அதில் ஏறி இறங்கும் அனேகமானோர் வாந்தியெடுத்தபடி தலையையும் வயிற்றையும் பிடித்தவாறு தான்‌ சென்றனர். கோயிலுக்கு முன்னர் பல பக்தகோடிகள் குடும்பத்துடன் பால்குடம் எடுத்து வந்தனர். இரும்பை அதிவெப்பத்தில் உருக்கி ஊற்றியது போல ஆரஞ்சு நிறத்திலிருந்த குழியில் பெண்கள் மஞ்சள் நிறப் புடவைகளுடன் பூமிதித்துக் கொண்டிருந்தார்கள். சிலர் தீச்சட்டியெடுத்தும் மண் சோறு உண்டும் தங்களது நேற்றிக்கடன்களை நிறைவேற்றிக் கொண்டனர். கோயிலைச் சுற்றி ஒரு கூட்டம் சாலை போட உதவும் இயந்திரத்தைப் போல உருண்டு அங்கப்பிரதட்சணம் செய்து கொண்டிருந்தது. கோயில் முன்னர் சுடச்சுடவென சோறு போடப்பட்டு அன்னதானம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த ஒருநாள் சாப்பாட்டை வைத்து அடுத்த ஒரு மாதத்தைக் கழித்து விடலாம் என்று பிச்சைக்காரர்கள் மனக்கணக்கு போட்டுக் கொண்டார்கள். இவையனைத்தையும் அம்மன் சிலை உள்ளிருந்து எப்பவும் போல அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தது.

“இப்படியே போனா என்னத்த செய்ய. எனக்கிருக்கது ஒரு பையன் தான். மத்த அஞ்சும் பொட்டைக. என் வம்சம் விருத்தியாக வேண்டாமா.

இன்னிக்கு ஒரு முடிவு தெரிஞ்சே ஆவனும்”

“என்னாத்த பண்ண சொல்ற. எல்லாம் நம்ம துரையோட நேரம். பக்கத்து ஊருன்னு நம்பி பொண்னு எடுத்ததுக்கு இப்படி ஒரு கிரகம்” என்றான் ஒருத்தன்.

“ அதுக்குன்னு அப்படியே விடவா . நாளைக்கு என் தலைமுறை அழிஞ்சு போவாதா. உங்க குடும்பத்துல இப்படி நடந்தா‌ விடுவீங்களா”

“ மருதம் சொல்றது சரிதான். இப்ப வேற வழி என்னதான் இருக்கு. பேசாம ஆறயாது தத்து எடுத்துக்கிறது? நம்மூர்லயே ஏகப்பட்ட புள்ளைங்க இருக்கே”

“அதுசரி என்னதான் இருந்தாலும் அது என் வீட்டு புள்ளையாகுமா. கேட்க நல்லாதா இருக்கும். நாளைக்கு ஏதாவதுனா அப்பன் வூட்டுக்கு ஓடிப் போயிருமோனு நெஞ்சு பதறிக்கிட்டே கிடக்கும். அதுட்ட நம்ம பரம்பரை குணம் எப்படி இருக்கும். என்னதானாலும் ஊராம்வீட்டு புள்ள ஊராம்வீட்டுது தான். “

“ வேற என்ன பண்ண சொல்ற மருதம்மா. வெட்டியா விட முடியும்.”

“ தேவைன்னா அதையும் செஞ்சுதான் ஆவேன்”

“ அதுவரை ஊரு சும்மா இருக்குமோ? இங்க வெட்டிவிடற சோலியே கிடையாதுன்னு உனக்குத் தெரியாதா?”

“‌அப்போ இரண்டாம் தாரமா ஏதாவது கட்டி வைக்கலாம் வம்சம் விருத்தியாக”

அங்கிருந்த அனைவருக்கும் அது சரியாகத் தான் பட்டது. இது ஊரில் வழக்கமான ஒன்று தான். புதிதல்ல. வெட்டி விடுவது தான் பழக்கத்தில் இல்லையே தவிர இது உண்டு. அலமேலு கூட்டத்தின் நடுவே கூனிக் கொண்டு அமர்ந்து இருந்தாள். ஊரே ஒன்று கூடி பலாத்காரம் செய்தது போல அவள் ஒடுங்கி கிடந்தாள். அழுகை முட்டிக்கொண்டு வந்தது. இருப்பினும் அவள் அழவில்லை. ஓடும் இரயிலில் தலை வைக்க வேண்டும் என்று தோன்றியது. இல்லை ஏற்கனவே தலை துண்டிக்கப்பட்டது போல தான் துடித்துக் கொண்டு இருந்தாள். ஒரே வீட்டில் இரண்டு மனைவிகள். இப்படி அவமானப்படுவதற்கு செத்தே விடலாம். ஊர் கூடி காரி உமிழ்ந்தபின் ஏன்‌ வாழ வேண்டும். துரையைப் பார்த்தாள். அவன்‌ தலை குனிந்து நின்றிருந்தான்.

“சரிப்பா எல்லாருக்கும் சம்மதந்தானா. அடுத்த ஆவரத பார்ப்போம்”.

“இருந்தாலும் துரைகிட்ட ஒரு வார்த்தை கேட்குறது. அது தானப்பா வழக்கம்”

“என்னையா துரை உன் முடிவ சொல்லிரு. ஆத்தாவுக்கும் நிம்மதியா இருக்கும்ல”

துரை பதில் கூறாமல் தலை குனிந்தே இருந்தான்.

“அட என்னப்பா பொட்டபிள்ள மாறி தலைய கீழ போட்டுட்டு. உன்‌மேல என்னையா குறை. பொஞ்சாதி இப்படி இருக்கையில என்ன செய்ய முடியும். ஆம்பளையா நிமிர்ந்து சம்மதத்தை சொல்லுப்பா”

துரை நிமிர்ந்தான். கூட்டத்தை ஒருமுறை பார்த்தான். ஆத்தாவைப் பார்த்தான். ஆத்தா ஆவலாக நம்பிக்கையுடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பார்வையை அலமேலு பக்கம் திருப்பினான்.‌ அவள் மூப்பு எய்தி உடல் குன்றி கேள்விக் குறியாய் முதுகெலும்பு வளைந்த கிளவியைப் போலச் சுருங்கித் தலைகுனிந்து கிடந்தாள்.

“ இந்தா பாருங்க. ஊருக்கு முன்னாடி தான் எங் கல்யாணம் நடந்துச்சு. நடந்தது நடந்தது தான். எது எப்படினாலும் அலமேலுவுக்கு நான் எனக்கு அவள் அம்புட்டு தான். ஆயிரம் குறை இருந்தாலும் அலமேலு தான் என் பொண்டாட்டி. இதை இத்தோட விட்ருங்க”

பஞ்சாயத்து சலசலத்தது. ஆத்தாவை அவன் முதல்முறையாக மீறி பேசியது அனைவருக்கும் வியப்பாக இருந்தது. துரை அலமேலு முகத்தை பார்க்காமல் கூட்டத்தை விட்டு வெளியேறினான். ஆத்தா அலமேலுவை சகட்டு மேனிக்குச் சபிக்கத் தொடங்கினாள். ஊரே துரையின் ‌பெரிய மனதைக் கண்டு வியந்து பேசியது. துரை ஊர்‌ மக்கள் மனதில் இராட்டினத்தை விட பெரிதாக நின்றான். சற்று நேரத்தில் கூட்டம் கலைந்ததும் ஆத்தாவிடம் சொல்லிக்கொள்ளாமல் துரை அலமேலுவைக் கூட்டிக் கொண்டு ஊருக்கு புறப்பட்டான். இருவரும் வீடு செல்லும் வரையில் ஒரு வார்த்தைக் கூட பேசிக் கொள்ளவில்லை. வீடு சென்ற பின்னும் கூட பேசவில்லை. ஆளுக்கொரு பக்கமாக திரும்பி படுத்துக் கொண்டார்கள். அலமேலுவை காலையில் சமாதானம் செய்ய வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டான். துரைக்கு அலுப்புத்தட்ட தூக்கம் ஆட்கொண்டது. கண்ணயர்ந்தான்.

காலை எழுந்தவுடன் படுக்கையைத் திரும்பி பார்த்தான். அலமேலு இல்லை. வீடு முழுக்க அலமேலுவைத் தேடினான். காணவில்லை. கடைக்கு ஏதும் சென்றிருப்பாள். மீண்டும் வந்து படுக்கையில் சாய்ந்து கொண்டான். நேற்று அலமேலுவிற்காக அவன்‌ பஞ்சாயத்தில் அப்படி பேசியதை எண்ணி அவனே பெருமை பட்டுக் கொண்டான். நிச்சயம் அலமேலுவும் பெருமை பட்டிருப்பாள் என்று மனதில் நினைத்துக் கொண்டான். சோம்பலாக புரண்டு படுத்தான். படுக்கையின் ஓரத்தில் ஒரு கடிதம் கிடந்தது.வேகமாக அதை எடுத்துப் பிரித்தான். அதில் அலமேலு ஏதோ கிறுக்கி இருந்தாள்.

“மலடி எனும் பட்டத்தைச் சுமந்தேன்‌

நீ ஊருக்கு முன் ஆணாகத் தலை நிமிர்ந்து நடக்க

தரித்திரம் என்ற பட்டத்தை சுமந்தேன்‌

நீ ஊருக்கு முன் ஆணாகத் தலை நிமிர்ந்து நடக்க

இராசியில்லாதவள் என்ற பட்டத்தைச் சுமந்தேன்‌

நீ ஊருக்கு முன் ஆணாகத் தலை நிமிர்ந்து நடக்க

நானே கட்டிய உனது ஆண் எனும் கோட்டையை உடைக்க எனக்கு ஒரு நொடியே போதுமானது.

இருப்பினும் உன் ஆண்மகன் பட்டத்தைக் காக்க என்‌னை தாழ்த்திக் கொண்டேன். உன் மீது கொண்ட‌ காதலால் தானே அன்றி கருணையினால் அல்ல.

நேற்றைய கூட்டத்திலாவது உண்மையை நீயே கூறுவாய் என்று நினைத்தேன் பதிலாக நீ என் மீது காட்டிய கருணை உன் ஆண்மகன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ள உதவியது.

பரவாயில்லை இத்தனை பட்டங்களுடன்‌ ஓடுகாலி என்ற பட்டத்தையும் இனிமேல் சேர்த்தே சுமந்து கொள்கிறேன். ஏனெனில் உன்னை விடவும்

உன் கருணை மிகவும் கொடியது”

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. துரை அலமேலுகூடவே ஒரு பயணம் செய்த அனுபவத்தை குடுக்குற எழுத்து நடை.
    இந்த உலகத்தில் மோசமான புறக்கணிப்பு “மலடி” என்று ஒரு பெண்ணை குற்றவாளியா நிறுத்தறதுதான். இந்த கதையின் முடிவு ரொம்ப திருப்தியா இருந்தது.அவசியம் வாசித்து விடுங்கள் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button