
மனமிருந்தது தளிர் இலையாய்
இதம் தரும் வெம்மை நோக்கி.
வார்த்தைகளில்தான்
எல்லாமிருக்கிறது
எவ்விதக் கூச்சமுமற்று
அந்தரங்க மண்டலத்துள்
சிநேகிதத்தின் பெயரால்
கம்பளிப் பூச்சுகளாய்.
நம்பிக்கைகளைச் சிதைக்கும்
துரோகத்தின் கத்திகள்
எப்போதுமிருந்ததில்லை
என்னிடம்.
அன்பின் அனர்த்தக் கற்பிதங்களால்
கொதிக்கும் உலோகக்குழம்பாய் வழிகிறது.
சுரம்பாவிய சொற்களில்
மறைந்திருந்த அமிலம்
ஆவி பொங்க நெடியடிக்கிறது
தரை சிதறி.
ஒரே வாயால் உண்டு வெளியேற்றும்
வவ்வாலுக்கும் உனக்குமென்ன வித்தியாசம்?
ரகசியமாய் உள் பெட்டியில்
வந்துவிழுந்த கேடுகெட்ட ஒற்றை வரியே போதுமெனக்கு
புறமொதுக்க.
இத்தனை குரூர ஆபாசத்தின்
கூடாராத்திலா
இவ்வளவு நாளிருந்தாய் ?
வாலில் வைத்த தீ
நகர் எரித்த பின்
குற்றத்தின்
சிறு குறுகுறுப்புமில்லா வியாக்யானங்கள் எதற்கு.?
எல்லாவற்றையும்
மன்னிக்க நானென்ன கர்த்தரா?
காயமுற்ற இடத்தில்
எதை வைத்தாலும் காந்துகிறது.
சண்டாளா
ஆகச்சிறந்த எதிரியைச்
சந்தித்துவிடலாம்
நட்புறவின் துரோகியைத்தான்.
உடல் சோர்ந்து ஓடக்கரையில்
நடந்து படித்துறை வந்தடைந்தேன்
சில்லென்று கொஞ்சம் கால்கள் நனைக்க.
வாஞ்சையாய் வருடி பின்
வஞ்சகனின் முகம் கிழி கிழி
என மோதுகின்றன
அலையலையாய்
நீரலைகள்,