கவிதைகள்

தேங்காய் கிட்டங்கி

முத்துராசா குமார்

எச்சிலில் முக்கியுருவிய
நூலாக நிற்கும்
கடப்பாரை கூர்மைகளினால்
பிரசவம் பார்க்கின்றன
நிறைய உள்ளங்கைகள்.
நாளுக்கு 1000 பார்த்தால் 500/- கூலி.
ரேகைகள் மங்கிய கருத்தயிலைகளின் முதுமை சாயல் கைகளுக்கு.

பாறைகளை உரித்து
கொத்தான கைரேகை
நார்களோடு பிரசவிக்கப்படும்
நீர் உருண்டைப் பிள்ளைகளுக்கு
கங்குநார்;
மொட்டைக்காய்;
முப்பட்டை;
நாலுபட்டை என்ற
செல்லப் பெயர்கள்.
இறந்து பிறந்தால் கழிவு.
சத்துக்குறைவு கொப்பரை.
ஊரழைக்கும் பெயர் தேங்காய்.

வயிறுக்குள் தளும்பும் நீர்ச்சத்தம்
ஓடுக்குள் கேட்டவுடன்
கருஞ்சட்னியாக மிக்ஸியில்
அரைக்கப்படுகின்றன
உள்ளங்கைகள்.
விரல்கள் சிக்குற்றால்
வேகமேற்றலாம்.

| கங்குநார், மொட்டைக்காய், முப்பட்டை, நாலுபட்டை : தேங்காய்களை உரிக்கும் வகைப் பெயர்கள் |

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button