
சார்ஸும் கோவிட்டும் பின்னெ பிளேக்கும்
கொரோனா ஒரு கிரேக்கச் சொல். அந்தச் சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு. மலர் வளையம் அதிலொன்று. கிரகணத்தின் போது சூரியனைச் சுற்றித் தெரியும் நெருப்பு வட்டம் கொரோனா எனப் பெயர் பெற்றது அப்படித்தான். சில வகைப் பூக்களின் தண்டையும் கொரோனா என்று அழைத்தார்கள். யாது காரணம் பற்றியோ மெக்சிக்க நாட்டு பீர் ஒன்றுக்கும் அதுதான் பெயர். கிரீடம் என்பது இன்னொரு பொருள். விலங்குகளிலிருந்து மனிதனுக்கும், பின் மனிதனிலிருந்து மனிதனுக்கும் தொற்றக்கூடிய ஒரு வகை வைரஸிற்கு ஆய்வாளர்கள் கொரோனா என்று பெயர் சூட்டினார்கள். ஏனெனில், அந்த வைரஸில் கிரீடத்தையொத்த கொம்புகள் இருந்தன. ஆய்வுலகத்தில் மட்டும் புழக்கத்திலிருந்த அந்தச் சொல் 2020இல் உலகப் பிரசித்தியடைந்தது. இன்று கொரோனா எனும் சொல்லுக்கு வைரஸ் எனும் பொருள் மட்டுமே நிலைத்துவிட்டது. ஆனால், அந்தச் சொல்லும் அதன் பொருளும் ஹாங்காங்வாசிகளுக்கு 2003இலேயே அறிமுகமாகிவிட்டது. அற்றைத் திங்களில் கொரோனா வைரசின் பூர்வ ஜென்ம வடிவமொன்று ஹாங்காங்கைச் சூழ்ந்தது. அதனுடன் நாங்கள் மல்லுக்கட்டிய கதைதான் இது.
2003 மார்ச் முதல் வாரம். குளிர் விலகவில்லை. அப்போதுதான் நாளிதழ்களில் ‘அசாதாரண நிமோனியா’ என்பது துண்டுச் செய்தியாய் நுழைந்தது. இன்னதென்று வகைப்படுத்த முடியாத காய்ச்சலை மருத்துவர்கள் அப்படித்தான் அழைப்பார்கள். அந்த துண்டுச் செய்தி மார்ச் இரண்டாம் வாரத்தில் பத்திகளை விழுங்கி வளர்ந்தது. பொது மருத்துவமனை ஒன்றில் இந்த நிமோனியா பாதித்த நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்களும் தாதியர்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்டனர். இவர்களிடமிருந்து குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் நோய் தொற்றியது. அந்த நோய்க்குப் பிற்பாடுதான் பெயரிடப்பட்டது. சார்ஸ். Severe Acute Respiratory Sydrome, சுருக்கமாக SARS. அது கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது (SARS-CoV-1). இதே குடும்பத்தைச் சேர்ந்த பிறிதொரு வைரஸ், கோவிட்-19 (SARS-CoV-2) என்கிற பெயரில் பின்னாளில் உலகை உலுக்கும் என்பதை அந்நாளில் யாரும் அறிந்திருக்கவில்லை.

2002 நவம்பர் மாதம் தென் சீனத்திலுள்ள குவாங் டாங் எனும் நகரில் முதலில் விலங்குகளிலிருந்து மனிதருக்கும், பின் மனிதரிலிருந்து மனிதருக்கும் தொற்றியது சார்ஸ். ஒன்றும் பெரிதாக நடக்கவில்லை என்றுதான் ஆரம்பத்தில் சீனா சாதித்துக் கொண்டிருந்தது. சீனாவில் தொடங்கிய சார்ஸ் ஹாங்காங்கிற்கும் பெயர்ந்தது. சீனாவின் ஒரு மாநிலம்தான் ஹாங்காங். ஆனால், தன்னாட்சியுடன் இயங்கும் மாநிலம். ஹாங்காங்கும் ஆரம்பத்தில் அடக்கி வாசித்தது. எல்லாம் இயல்பாக இருக்கிறது என்பதான தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்தது .
எல்லாப் பெருந்தொற்றுக் காலங்களிலும் இந்த அடக்கி வாசிக்கும் முயற்சி நடக்கிறது. ஆல்பெர் காம்யூ எழுதிய புகழ் பெற்ற பிரெஞ்சு நாவல் The Plague. 1947இல் வெளியான இந்த நாவலை இப்போது தமிழிலும் படிக்கலாம் (“பெருந்தொற்று”, பிரெஞ்சிலிருந்து தமிழில்: சு. ஆ. வெங்கட சுப்புராய நாயகர், காலச்சுவடு பதிப்பகம், 2023). 1940களில் அல்ஜீரியாவில் ஓரான் என்னும் ஊரில் பிளேக் நோய் பரவுகிறது. “ஏப்ரல் 16ஆம் நாள், மின் தூக்கியிலிருந்து வெளியேறிய மருத்துவர் பெர்நார் ரியே, நடுவழியில் இறந்து கிடந்த எலி ஒன்றைக் கண்டார்” என்று நாவல் துவங்கும். நகரெங்கும் எலிகள் செத்து வீழும். நோய் பரவும். பாதிப்பு மிகும். மரணங்களில் முடியும். பிளேக், தொற்று நோய் போன்ற சொற்கள் தயக்கத்துடன் உச்சரிக்கப்படும். ஆனால், பிளேக் என்று அறிவிக்க ஓரான் நகராட்சி தயங்கும்.
ஓரான் நகராட்சிக்கு 1947இல் இருந்த அதே தயக்கம் 2003இல் ஹாங்காங் அரசுக்கும் இருந்தது. 2020இல் அந்தத் தயக்கம் இந்திய அரசுக்கு மட்டுமில்லை, நமது மக்கள் மத்தியிலும் இருந்தது. 2020 மார்ச் 11ஆம் நாள் உலக சுகாதார அமைப்பு, கோவிட்-19ஐ பெருந்தொற்று என்று அறிவித்தது. அதற்குச் சில நாட்கள் முன்னதாக ஒரு தொலைக்காட்சி உரையாடலில் பங்கேற்றேன். ‘ஹாங்காங் பொறியாளர்’ என்பதால் அழைக்கப்பட்டிருந்தேன். அன்று காலை நான் அங்கம் வகிக்கும் வாட்சப் குழுமங்களில் நங்கநல்லூர் மருத்துவர் ஒருவரின் ஒலிப்பதிவைப் பலரும் பகிர்ந்திருந்தார்கள். மருத்துவர், இதனை ஒரு ‘மகிமைப்படுத்தப்பட்ட குளிர்க் காய்ச்சல்’ என்றும் வீணாக அலட்டிக்கொள்ள வேண்டாம் என்றும் சொல்லியிருந்தார். தொலைக்காட்சி உரையாடலில் பங்கேற்ற ஒரு பெரியவர் அதை எதிரொலித்தார். மேலும், ‘இதென்ன பெரிய வைரஸ், மனிதர்கள் கொத்துக் கொத்தாக மடிந்து வீழ்ந்த பிளேக், காலரா, பெரியம்மை, தட்டம்மை, காசநோய், மலேரியா போன்ற கொள்ளை நோய்களுக்கு முன்னால் இது எம்மாத்திரம்?’ என்றும் கேட்டார். அப்போதுதான் இந்தியாவில் கோவிட் எட்டிப் பார்க்கத் துவங்கியிருந்தது. உலகெங்கும் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது (சுமார் 3000).

நாம் இந்த நோயைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அந்த நிகழ்வில் சொன்னேன். ‘பெருந்தொற்று வரையறுக்கப்படுவது மரணங்களின் எண்ணிக்கையினால் அல்ல. நோய் மனித குலத்திற்குப் புதியதாகவும், அதன் சுவாலை அதி விரைவாக உலகின் பல பாகங்களுக்குப் பரவுகிறபோதும் அது பெருந்தொற்றாகிறது’ என்றும் சொன்னேன். பெரியவர் அப்போது ஏற்றுக்கொள்ளவில்லை. அடுத்த சில நாட்களில் இதை ஒரு கட்டுரையாகவும் எழுதினேன் (‘கொரோனா கொள்ளை நோயா?’, இந்து தமிழ் திசை, 18.3.2020). சில நாட்களில் இந்திய அரசு கோவிட்டை தேசியப் பேரிடராக அறிவித்தது.
நான் எதையும் முன்னுணர்ந்து குறி சொல்லும் நிமித்திகன் அல்லன். எனது சார்ஸ் அனுபவத்தின் வெளிச்சத்தில் கோவிட்டைப் பொருத்திப் பார்த்தே அவ்விதம் சொன்னேன். கெடுவாய்ப்பாக அது அவ்விதமே ஆயிற்று.
ஹாங்காங் அரசு ஆரம்பத்தில் அடக்கி வாசித்தாலும் பிரச்சினையின் தீவிரத்தை விரைவில் புரிந்துகொண்டது. இந்நோயின் சாம்பல் துகள் படிந்த அந்த நாட்களில் ஹாங்காங்கின் சகல நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன. நோயாளிகளின் எண்ணிக்கை பரபரப்பாகப் பேசப்பட்டது. நோய்க்குப் பலியானோரின் எண்ணிக்கை அச்சுத்தாள்களில் கசிந்தது. சந்தேகமும் அச்சமும் மரணமும் பீதியும் புள்ளிவிவரக் கணக்குகளாக உலக நாக்குகளில் புரண்டன.
அரசு எந்திரம் எந்தத் தயக்கமும் இன்றித் தெளிவான நடவடிக்கைகளை எடுத்தது. 2003 மார்ச் மூன்றாம் வாரத்தில், பள்ளிகளை மூட வேண்டிய அவசியமில்லை என்று சொல்லிக்கொண்டிருந்த கல்வித் துறைச் செயலர், அதற்கு அடுத்த வாரமே அனைத்துப் பள்ளிகளையும் மூட உத்தரவிட்டார். ஆரம்பத்தில் பெரிய அளவில் நோய் பரவ வாய்ப்பில்லை என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தது சுகாதாரத் துறை. மார்ச் மூன்றாம் வாரத்தில் ‘அமாய் தோட்டம் ‘ என்கிற குடியிருப்பில் தொடர்ந்து பலர் பாதிக்கப்பட்டனர். மொத்தம் 15 கட்டிடங்கள்; ஒவ்வொன்றிலும் 33 தளங்கள்; தளத்திற்கு 8 வீடுகள். இந்தக் குடியிருப்பில் மட்டும் 321 பேர் பாதிக்கப்பட்டனர். ‘அமாய் தோட்ட’ குடியிருப்பில் வசிப்பவர்களைக் கட்டாயமாகத் தனிமைப்படுத்தி, ஊருக்கு வெளியே குடியமர்த்தியது அரசு.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து வந்தது. விரைந்து விரைந்து அலுவலகம் சென்று, விரைந்து விரைந்து வீடு திரும்புகிற மக்களைக் கொண்ட ஹாங்காங்கில், நெடிதுயர்ந்த கட்டிடங்களின் நடுவே சுழன்ற காற்றில் பயம் கலந்தது. எழுபது லட்சம் மக்களின் வீட்டு முன்னறைகளில் தயக்கமும் கிலியும் வந்து உட்கார்ந்து கொண்டன. காம்யூவின் நாவலில் வரும் ஒரு காவலர் ‘இந்த நோய் இல்லாதவன்கூட அதை நெஞ்சில் சுமந்து கிடக்க வேண்டியிருக்கிறதே’ என்று புலம்புவார். ஹாங்காங் அப்படித்தான் இருந்தது. சுரங்க ரயிலில், பேருந்துகளில், நடை பாதைகளில், நாற்சந்திகளில் எதிர்ப்பட்ட எல்லோர் முகத்திலும் சந்தேகம் தூறிக்கொண்டிருந்தது.
ஊரும் தெருவும் கடை கண்ணிகளும் மைதானங்களும் சதுக்கங்களும் வெறிச்சோடிக் கிடந்தன. ஒவ்வொரு வீட்டிலும் கணவனும் மனைவியும் வேலைக்குப் போவது ஹாங்காங்கின் எழுதப்படாத விதி. வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் நுட்பமெல்லாம் அப்போது வரவில்லை. பெற்றோர்கள் வேலைக்குப் போயினர். பள்ளிகள் மூடப்பட்டதால் பிள்ளைகள் வீட்டில் முடங்கும்படியானது. இந்தியாவிலிருந்து தாத்தா- பாட்டிகள் பிள்ளைகளை ஊருக்கு அனுப்பச் சொன்னார்கள். எங்களது நட்பு வட்டத்தில் பலரும், இந்த அச்சமூட்டும் சூழலிலிருந்து பிள்ளைகளைக் காப்பாற்றவோ, அல்லது அறிவிக்கப்படாத விடுமுறையைப் பயன்கொள்ளவோ பிள்ளைகளை ஊருக்கு அனுப்பி வைத்தனர். நாங்களும் அதையே செய்தோம்.
அப்போது நான் ஒரு மெட்ரோ ரயில் கட்டுமானப் பணித்தலத்தில் வேலை பார்த்து வந்தேன். பிள்ளைகளை வழியனுப்பிவிட்டு அலுவலகத்திற்குப் போனேன். தாமதமாகிவிட்டது. எனது சகா, ஒரு சீனப் பொறியாளர். அவரிடம் தாமதத்திற்கான காரணத்தைச் சொன்னேன். முகக் கவசத்திற்கு மேல் சுழன்றன அவர் கண்கள். ‘ஓரான் நகரைப் போல ஹாங்காங்கின் எல்லைகள் அடைக்கப்பட்டுவிடும் என்று அஞ்சுகிறீர்களா?’ என்று கேட்டார். அவர் குறிப்பிட்ட ஓரான் நகரம்தான் காம்யூவின் கதைக் களம். நான் அப்போது ‘பெருந்தொற்று’ நாவலைப் படித்திருக்கவில்லை. ஐந்து இயல்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும் நாவலின் முதல் இயலின் கடைசி வாக்கியம் இது: “தொற்றுநோய்க் காலம் என்று பிரகடனம் செய்யுங்கள். நகர எல்லையை மூடுங்கள்.”
நகரத்தின் எல்லைகள் மட்டுமல்ல தேசத்தின் எல்லைகளும் அடைத்துப் பூட்டப்படும் கோவிட் காலமொன்று பின்னாளில் வருமென்பதை நாங்கள் இருவரும் அறிந்திருக்கவில்லை. அப்போது ஹாங்காங் தனது எல்லைகளை மூடவில்லை. ஆனால், உலகம் ஹாங்காங்கை தள்ளி வைத்தது. 2003 ஏப்ரல் துவக்கத்தில் உலக சுகாதார அமைப்பு, சுற்றுலாப் பயணிகள் ஹாங்காங்கைத் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்று அறிவுரை வழங்கியது. சுற்றுலாவை நம்பியிருந்த விடுதிகளும் உணவகங்களும் கண்காட்சிகளும் அங்காடிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டன.
இதற்கிடையில், மருத்துவத் துறை இயக்குநர் நாள் தோறும் செய்தியாளர்களைச் சந்தித்து, தகவல்கள் தந்தார். அரசின் வெளிப்படையான போக்கு நம்பிக்கையை வளர்த்தது. தனிநபர் இடைவெளி, கை கழுவுதல், முகக்கவசம் ஆகிய மூன்று தற்காப்பு நடவடிக்கைகளை அரசு வலியுறுத்தியது; பல வழிகளிலும் பிரச்சாரம் செய்தது. இதில் முகக்கவசம் முக்கியமானது.
கொரோனா வைரஸ் மனிதர்களுக்குள் இருக்கும் உயிரணுவுடன் இணைந்து பல்கிப் பெருகுகிறது. இந்த உயிரணுக்கள் நுரையீரலிலும் குடலிலும் அதிகமாக இருக்கின்றன. ஆனால், இது நாசித் துவாரங்களிலேயே தொடங்கிவிடுகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தும்மும்போதும் இருமும்போதும் அவர்களினின்றும் வெளியாகும் நீர்த்துளிகள் வாயிலாக வைரஸ் தொற்றும்; பாதிக்கப்பட்டவர்கள் பேசும்போதும் மூச்சு விடும்போதும் வெளியாகும் சுவாசத்துளிகளிலும் இந்த வைரஸ் இருக்கும்; இது மூன்று மணி நேரம் வரை காற்றில் தங்கியிருக்கக்கூடும்; அது சுவாசிப்பவர்களின் நாசிகளின் வழியாக உட்புகுந்துவிடக்கூடும். ஆக, மூக்கும் வாயும் ஒருவருக்கு வைரஸ் வெளியேறும் பாதையாகவும், மற்றவருக்கு அவையே வைரஸ் உள்ளே புகும் பாதையாகவும் அமைந்துவிடுகிறது. இந்த வெளிவாயிலையும் நுழைவாயிலையும் அடைக்க வேண்டும். முகக்கவசம் அந்தப் பணியைச் செய்தது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர், அதற்கு யாதொரு அறிகுறியும் இல்லாமல் அதைச் சுமந்து கொண்டிருக்கலாம். அவரை அறியாமலேயே அதை வெளியேற்றலாம். இதை முக்கக்கவசம் தடுத்தது.
அப்போது நான் வேலை பார்த்த கட்டுமான அலுவலகத்தில் சுமார் 40 பேர் பணியாற்றியிருப்போம். தலைமைப் பொறியாளர் ஓர் ஆங்கிலேயர். மேலாளர்களில் ஒருவரும் ஆங்கிலேயர். மற்றவர்களில் நான் நீங்கலாக அனைவரும் உள்ளூர் சீனர்கள். இவ்விரண்டு ஆங்கிலேயர்கள் தவிர அனைவரும் முகக்கவசம் அணிந்துதான் பணிக்கு வந்தனர். நான் தலைமைப் பொறியாளரிடம் ‘நீங்கள் ஏன் முகக்கவசம் அணிவதில்லை?’ என்று கேட்டேன். கோவிட்டின் ஆரம்ப காலத்தில் மேற்குலகம் சொல்லிவந்த காரணத்தைத்தான் அன்று அவர் சொன்னார். ‘ஆரோக்கியமானவர்கள் கவசம் அணிய வேண்டாம். நோயாளிகளும் மருத்துவப் பணியாளர்களும் கவசம் அணிந்தால் போதுமானது. தனிமனித இடைவெளியும் தூய்மையுந்தான் முக்கியம்’ என்றார் அவர்.
அடுத்து, நான் சீனப் பொறியாளர்களிடம் ‘ஏன் அணிகிறீர்கள் முகக்கவசம்?’ என்று கேட்டேன். அவர்கள் ஒரே விதமாகப் பதிலளித்தார்கள். ‘முகக்கவசம் அணிவது, தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கு மட்டுமல்ல, அது பிறருக்காகத் தாங்கள் செய்ய வேண்டிய கண்ணியமான நடவடிக்கையும் ஆகும்’ என்றார்கள்.
2020இன் முற்பகுதியில், அதாவது கோவிட்டின் தொடக்க காலத்தில் மேற்குலகத்தைப் போலவே நம்மவர்களும் முகக்கவசம் அவசியமென்று கருதவில்லை. அப்போதையக் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் முகக் கவசம் அணிந்து அவைக்குச் சென்றதால் அவைத் தலைவரால் கண்டிக்கப்பட்டார். கவசம், அவையின் கண்ணியத்தைக் குலைக்கிறது என்றார் தலைவர். அது போது ஓர் அனுபவஸ்தனாக (நிமித்திகனாக அல்ல) முகக்கவசத்தின் அவசியம் குறித்து ஒரு கட்டுரை எழுதினேன் (‘முகக்கவசம் முக்கியமா, இல்லையா?’, ஆனந்த விகடன், 11.6.2020)

பிளேக்கின் உச்சத்தில் ஓரான் நகரம் ஒரு காத்திருப்போர் கூடம் போல் மாறியது என்று தனது நாவலில் எழுதியிருப்பார் காம்யூ. ஹாங்காங்கும் அப்படித்தான் இருந்தது. அந்தக் காத்திருப்பு ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்தது. 2003 ஜூலை துவக்கத்தில் நோய் கட்டுக்குள் வந்தது. அப்போது உலகெங்கும் 800 பேரின் உயிரை சார்ஸ் பறித்துக்கொண்டு போயிருந்தது. அதில் 300 பேர் ஹாங்காங் வாசிகள். சார்ஸ் கட்டுக்குள் வந்த பிறகும் இருமல், காய்ச்சல் என்று எது வந்தாலும் ஹாங்காங் மக்கள் முகக்கவசம் அணியத் தொடங்கினார்கள்.
‘சுவாசிப்பதுகூட மரணத்திற்குக் கதவு திறந்து விடுமோ’ என்று அஞ்சப்பட்ட அந்த அசாதாரண நிலைமையில், ஹாங்காங்கின் மருத்துவப் பணியாளர்கள் கடமையே கண்ணாக இருந்தார்கள். நோயின் வெப்ப அலைகள் விரைந்து பரவிக் கொண்டிருந்தக் காலத்திலும் தொடர்ந்து அந்த உலையின் மையத்தில் உழன்று பணியாற்றினார்கள். முகமில்லா எதிரியாக நாசிகளில் நுழைந்து நுரையீரலைத் தின்ற சார்ஸால் பாதிக்கப்பட்டோரில் நான்கில் ஒருவர் மருத்துவப் பணியாளர்களாக இருந்தார்கள். முகமூடிகள், கையுறைகள், அங்கிகள், கண்ணாடிகள் போன்ற பாதுகாப்புக் கவசங்கள் ஆரம்பத்தில் போதிய அளவில் இல்லாதிருந்தது ஒரு காரணம் என்று சொல்லப்பட்டது. தாங்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டேயிருந்த போதும் அவர்கள் பணிகளைத் தொடர்ந்தார்கள். நோயாளியின் சுவாசக் குழலில் குழாயைச் செலுத்துகிற intubation என்கிற சிகிச்சையளித்த பணியாளர்களில் சரிபாதிப் பேர் நோயால் பாதிக்கப்பட்டனர். ஆயின், அப்படியான சிகிச்சை அளிக்கப்படுவது நிறுத்தப்படவேயில்லை. மகப்பேறு விடுப்பில் இருந்த தாதியர்கூடப் பணிக்கு அழைக்கப்பட்டதும், அவர்களும் அந்தச் சூழலிலும் வேலைக்குத் திரும்பியதும் நடந்தது.
சார்ஸுக்கு அப்போது தடுப்பூசி கண்டறியப்படவில்லை. ஆனால், அந்த வைரஸின் மரபணுவைக் குறுகிய காலத்தில் ஹாங்காங் விஞ்ஞானிகளால் கட்டுடைக்க முடிந்தது. ஹாங்காங் அடுக்ககங்களால் ஆனது. அந்தக் கட்டமைப்பு எவ்விதம் நோய்ப்பரவலுக்குக் காரணமானது என்று கண்டறிந்தார்கள் பொறியாளர்கள். இவர்களின் கட்டுரைகள் பன்னாட்டு ஆய்விதழ்களில் வெளியாகின. பின்னாளில் இவை கோவிட் குறித்த ஆய்வுகளின் தொடக்கப்புள்ளியாகவும் அமைந்தன.
சட்டத்தின் மாட்சிமை பேணப்படுகிற நகரம் ஹாங்காங். அவநம்பிக்கையும் அயர்ச்சியும் நிறைந்த சூழலில்கூட ஹாங்காங் மக்கள் பொறுப்புடன் நடந்து கொண்டனர். ‘பெருந்தொற்று’ நாவலின் கடைசி இயலில் ஒரு முதியவர் சொல்லுவார்: “பிளேக் என்றால் உண்மையில் என்ன? அது வாழ்க்கை. அவ்வளவுதான்.” நாவலில் வரும் பிளேக் என்பது ஒரு குறியீடு என்கிறார்கள் திறனாய்வாளர்கள். போர், அடக்குமுறை, பாசிசம், பெருந்தொற்று எல்லாமே பேரிடர்கள்தாம். இந்தப் பேரிடர்களின் மத்தியில் நாம் கற்கும் பாடம் என்ன? நாவலில் விடை இருக்கிறது. “மனிதர்களிடம் வெறுப்பதைவிட, ஆராதிக்க நிறைய விஷயங்கள் இருக்கின்றன.” இந்தப் பண்புதான் பேரிடர்களுக்கு எதிராக நம்மைப் போராட வைக்கிறது. அதுவே நம் வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகிறது.
இந்தப் போராட்டம்தான் 1947இல் ஓரானில் நடந்தது. 2003இல் ஹாங்காங்கில் நடந்தது. 2020-22இல் உலகெங்கும் நடந்தது.
அனுபவம் தொடரும்….