
எப்போதுமே நீங்கள்
ஒரு தேநீரை அருந்தும் கணம்
தனியாக இருப்பதில்லை
யாரோ உங்களை அறிந்த ஒருவர்
ஏதோவொரு டீக்கடையில் உங்களைப் போலவே
உங்களுடன் தேநீர் அருந்திக் கொண்டிருக்கிறார்.
***
உன் கைகளைப் பற்றிக்கொண்டு நிற்கும்போதும்
ஏன் இவ்வளவு தனிமையாக இருக்கிறது எனக்கு?
சில சமயங்களில்
இத்தனை அருகிலே இருந்தாலும்
நீ இங்கே இருப்பதேயில்லை.
***
எதிர்ப்படும் யாரோ ஒருவரிடத்து
எதேச்சையாக எப்போதேனும் ஒரு கணத்தில்
திடீரென்று வெளிப்பட்டு விடும் உந்தன் முகச்சாயல்
போதுமானதாக இருக்கிறது
இந்த வாழ்வை வாழ்வதற்கு.
***
நியாயங்கள்
வெறுமை கவிந்த பொன்மஞ்சள் நிற மாலையில்
வீட்டுத் தோட்டத்தின் பிரிந்து சென்ற
அம்மாவின் கூந்தல் வாசம்
அப்பிக் கொண்ட
கொடிமல்லியிடையிடையே
சிகரெட்டைப் பற்ற வைத்து போதை உள்ளிழுத்து,
அவள் பிரிந்த காரணம் யாதெனப் பிடிக்கக்
காலச்சக்கரம் சுழற்றி நிறுத்தி
சுழற்றி நிறுத்தியென,
இறந்தகாலம் கிழித்து கிழித்து
கேள்வியின் நினைவடுக்குள் சென்று
சிக்குண்டு மீள முடியாமல்
கேள்வியின் நியாயங்களைப் புகையாக
வெளித்தள்ளுகிறார் அப்பா
புகையோ
உலக உருண்டைகளாக
பறந்து திரிந்து
கடைசியில் காணாமலாகிறது.
*********