
சுடுபாறையின் முதல்துளி
உனக்கெதுவுமே தெரியவில்லை
நான் படிப்பிக்கிறேன்
எல்லாம் புரியும் என
எண்ணங்களை எடுத்தியம்புகிறாய்
கவிதையாய் வாழ்வது கடினம்,
காதல் ஒரு மாயை,
சந்தோஷம் பூசப்பட்ட மிகை,
வாழ்க்கை மிகுந்த போராட்டம்…
என விளக்கிச் செல்லும் உனக்கு
நிகழ்காலத்தின் எதார்த்தமானது
சுடுபாறையில் தெறித்த முதல் மழைத்துளி
குளிர்வதற்கான அவகாசம் மறுத்துக் குடை பிடிக்கிறாய்
நனைய மறுக்கும் உன்னிடம்
மழை என்பது மழை மட்டுமல்ல
என்பதை எப்படி உணர்விப்பேன்..?
***
சின்னஞ்சிறு சிட்டுக்குருவி
சீக்கிரம் வா என்றழைத்தவள்
முகம்கொள்ளாச் சிரிப்போடு கேட்டாள்,
“நீ பார்த்தாயா
அந்தச் சின்னஞ்சிறு சிட்டுக்குருவியை?”
மரத்தின் இலைக் காம்புகளில் நிலைகொண்டு
கழுத்தை சரித்து பார்த்தது குருவி ஒன்று
ஆம், சின்னஞ்சிறு சிட்டுக்குருவிதான்
தன் தோளில் அமர்ந்ததைப் பார்க்கத் தவறிய
என்னை முறைத்தவளிடம்,
“மரமென நினைத்திருக்குமோ?” என்றேன்
“இல்லை இல்லை, அது ஒரு நற்சகுணம்” என்றவள்
உற்சாகத்தோடு அந்தத் நாளை தொடங்க
ஒரு சிட்டுக்குருவியின் தொடுகை போதுமாய் இருக்கிறது!
***
வரம் தரும் தேவதை
சின்னச் சின்ன வரங்களைக் கேட்டு
எனக்கு தேவதை பட்டம் அளிக்கிறாய்
தேவதைகள் வரம் தந்ததும் மறைந்துவிடும்
என்பதை மறந்து!
*********