கண்ணீர் குளம்
எல்லோரும்
வந்துவிட்டுப் போனார்கள்
நான் கடைசியாகத்தான் பார்த்தேன்
நான் வந்ததை
என்னைத் தூக்கிச் சுமக்கப் போகும்
அந்த நால்வரின்
தோளிலும் நானொரு
குழந்தையாகத்தான் தூங்கிக் கொண்டிருப்பேன்
ஆராரோ பாடலைப் பாடியவாறு வழியனுப்பி வைக்கிறது
என் தாயின் கண்ணீர் குளம்.
***
நிலா
நட்சத்திரங்களால்
மின்னுகிறது வானம்
நான் நிலா வரையத் தொடங்குகிறேன்
எனக்குள்ளும் மிளிர்கிறது
ஒரு வானம், ஒரு நிலா.
***
அன்பு
அம்மா வந்ததும்
வாங்கித் தருகிறேன் என்று அப்பா சொன்னார்
அப்பா வந்ததும்
வாங்கி தருகிறேன் என்று அம்மா சொன்னாள்
இப்பொழுது இருவருமில்லை
அப்பாவையும்
அம்மாவையும் யார்
வாங்கித் தருவார்கள் என்று
பெரும் ஏக்கத்தோடு
கை நீட்டியே
அன்பை யாசகமாய் கேட்கிறது தெருவோரக் குழந்தை ஒன்று.
***
பாட்டி வைத்தியம்
அப்பாவைப் பிடிக்குமா
அம்மாவைப் பிடிக்குமா
என்று நீளும்
இரவு நேர
திண்ணை விவாதத்தின் முடிவில்
இருவரையும் இரு கைகளால் அணைத்துக்கொண்டு உறங்க முற்படும் குழந்தையின் கனவில்
நிலா தோன்றுகிறது
அரை வட்டமாக
வாசலெங்கும்
தெளித்து விட்டப்பட்ட
வெளிச்சமாய் மின்னுகின்றன
நிலாக் கதை கூறித் தூங்க வைத்த
பல பாட்டியின் கதைகள்.
***
உழைப்பு
எனக்குப் பின்னால்
யாரோ ஒருவர் நடந்து வருகிறார்
அவரும் என்னைப் போலவே
தனிமையில் நடை பழகுகிறார்
அவர் பின்னால் யாருமில்லை
எனக்குப் பின்னால் அவர் இருக்கிறார்
ஓட ஆரம்பிக்கிறேன்
அவரும் ஓடுகிறார்
இப்போது நான் நெருப்பாய்
எரிய ஆரம்பிக்கிறேன்
அவர் குளிர் காய்கிறார்
எனது உடல்
உழைப்புச் சூட்டின்
வெப்பச்சலனத்தில்…
**********
– sakthisamanthamurthy@gmail.com –