இணைய இதழ்இணைய இதழ் 82கட்டுரைகள்

தத்ரூபமாய் விரியும் கதைகள் – (சித்ரனின் பொற்பனையான் தொகுப்பை முன்வைத்து) – கா. சிவா

கட்டுரை | வாசகசாலை

ழுத்தாளர் சித்ரன் எழுதியபொற்பனையான்’ நூலில் ஆறு சிறுகதைகளும் ஐந்து குறுங்கதைகளும் இடம் பெற்றுள்ளன. இவற்றுள் பொற்பனையான் எழுபத்தாறு பக்கம் கொண்ட மிக நீண்ட சிறுகதையாக உள்ளது. மற்ற கதைகளுமே கூட பொதுவான சிறுகதைகளுக்கான பக்க அளவைவிட நீளமானதாகவே உள்ளன. இந்த நீளம் அவரது கதை கூறல் முறைக்கு பலம் சேர்ப்பதாக உள்ளது

சிறு வயதில், நான் படித்தபோது எங்கள் கிராமத்திலிருந்து இரண்டு மைல் நடந்துதான் பள்ளிக்குச் செல்ல வேண்டும். எங்கள் பள்ளியில் என் வகுப்பில் படிப்பவர்களும் எங்களைவிட இரண்டு வகுப்புகள் மேலே படிக்கும் ஒரு அண்ணனும் பொதுவாக எதையாவது பேசிக்கொண்டு நடந்து செல்வோம். எப்போதாவது அந்த அண்ணன் ஏதாவது ஒருகதையை விரிவாகச் சொல்வார். குரலின் தொனியாலும் உடல் ழியாலும் அவர் கூறுவதை எங்கள் கண்கள் காண்பதைப்போல உணருமாறு நிகழ்த்திவிடுவார். காட்டில் பெய்த பெருமழை பொங்கிப் பிரவாகமெடுத்து ஆற்றின் இருகரைகளையும் தொட்டு அவர் நெஞ்சளவிற்குச் சென்றது என அவரது வலக்கையை அவரது நெஞ்சில் வைத்து அவர் கூறியது சில பத்தாண்டுகளுக்குப் பின் இப்போதும் நினைவில் உள்ளது

சித்ரனின் பொற்பனையான் தொகுப்பிலுள்ள கதைகளும் வாசிக்கும்போது அப்படியே காட்சியனுபவமாக மாறுகிறது. சித்ரன் கதையை கூறத் தொடங்கும்போது அதன் பின்புலத்தையும் களத்தையும் மிக விரிவாக வாசகன் மனதில் உருவாக்குகிறார். வாசிக்கச் சோர்வளிக்காமல் உற்சாகமளிக்கக் கூடிய வகையில் அச்சித்திரம் இருப்பதுதான் அதன் சிறப்பு

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பிறகதைகளைப் பற்றி முதலில் பார்த்துவிட்டு, முதன்மைக் கதையான பொற்பனையான் கதையைப் பற்றி கடைசியில் பார்க்கலாம். பொற்பனையான், பெரியப்பா தவிர மற்ற நான்கு கதைகளின் தலைப்புகள் ஏன் இப்படி நீளமாக இடப்பட்டுள்ளன என யோசிக்க வைப்பனவாக உள்ளன. முதல் கதையின் தலைப்புஒரு வழிப்போக்கனும் அவனது வழித்துணைவனும்’. திருச்சியில் நடைபெறும் புதுவகையான பண மோசடிக்குள் புதுக்கோட்டையிலிருந்து வந்து செல்பவன் எதேச்சையாக சிக்கி மீள்வதை அவனின் பார்வையில் விவரிக்கிறது இக்கதை. மின்னணு பணப்பரிவர்த்தனை ஏமாற்றுபவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்கியுள்ளது. அதில் வித்தியாசமான ஒன்றை இக்கதையில் சித்ரன் காட்டியுள்ளார். ஏமாறுபவருக்கும் ஏமாற்றுபவருக்கும் இடையில் தன் உதவும் நோக்கத்தின் காரணமாக இடரைச் சந்திப்பவனின் மன உணர்வுகளையும், ஏமாற்றுபவரின் வாழ்வின் நிகழ்வுகளையும் குழப்பமில்லாமல் காட்டுகிறார். இக்கதை, பெருங்குற்றச் செயல்களின் இடையே சிக்கிக் கொள்ளும் தனிமனிதர்களைப் பற்றிய சித்திரமாக விரித்துக் கொள்ளவும் இடமளிக்கிறது

இன்னொரு கதையின் தலைப்புமுகமூடி வீரர் மாயாவி தோன்றும் இன்ப வேட்கை’. சிறு வயதில் காமிக்ஸ் நூல்களையும் க்ரைம் நாவல்களையும் பழைய புத்தகக் கடையில் எடுத்துப் படித்தவர்களுக்கு மிகவும் பரவசம் அளிக்கக் கூடிய கதை. அப்படிப் படித்தவர்களில் நானும் ஒருவன் என்பதால் கதையின் களம் எனக்கு மிகுந்த உவகையளித்தது. இக்கதையில், அந்த புத்தகக் கடையின் அமைப்பு, நூல்கள் அடுக்கப்பட்ட விதம், வயது வந்தோர்க்கான நூல்களின் இருப்பு அந்தச் சிறுவனிடம் ஏற்படுத்தும் கிளர்ச்சி போன்றவை சிறப்பாக அமைந்துள்ளன. தன்பாலின ஈர்ப்புடைய மேற்சட்டை அணியாத கடைக்காரர் சுப்பையாவின் பாத்திரமும், அவரின் மனைவியின் குணாம்சமும் இப்போதும் நாம் நேரில் காணும் மனிதர்களாக உணர வைக்கிறது. அக்காலத்தில் பதின்ம வயதுப் பையன்களின் வாழ்வில் முகமூடி வீரன், ஒற்றைக்கை மாயாவி, காம விருந்து, இன்ப வேட்கை என சாணித்தாள் காகிதத்தின் வாயிலாக கற்பனித்துக் கொண்ட ஒவ்வொருவருக்குமான தனித்தனி வண்ணமயமான உலகத்தை எண்ணும்போது இப்போதைய இளைய தலைமுறையின் மேல் சற்று பரிதாபம் ஏற்படுகிறது. இவர்கள் எல்லோருக்கும் ஏதோவொரு குழு உருவாக்கிய ஒரே வரைகலை உலகம்தானே காண கிடைக்கிறது.

நைனாரியும் பதின் கரைகளும்இன்னொரு கதையின் தலைப்பு. இக்கதையும் ஒரு சிறுவன் பார்வையிலேயே கூறப்படுகிறது. ஊருக்குள் சிறுசிறு திருட்டுகளை செய்து கொண்டு பெண்களைச் சீண்டிக்கொண்டு கெத்தாக வலம் வரும் வரதன் என்னும் இளந்தாரியை மையமாகக் கொண்ட கதை. அவனின் நடவடிக்கைகள் பல இடங்களில் மலர்ந்து புன்னகைக்க வைக்கிறது. அவனை தனது ஆதர்சமாகக் கருதும் சிறுவன் முன் வரதன் எப்படி கீழிறங்குகிறான் என முடியும் கதை பல்வேறு சுவாரசியமான சம்பவங்களைக் கொண்டிருக்கிறது

உடல் இயற்கை எனும் துறவு என்ற அடுத்த கதை வளமான குடும்பத்தில் பிறந்து நன்றாகப் படித்தவன் திருமணமாகி ஓராண்டில் ஏன் துறவு மேற்கொள்கிறான் என்பதை விவரிக்கிறது. ‘என்னால மனுசப் பொண்ணோட உறவு வச்சுக்க முடியலஎனும் துறவியின் சுவாரசியமான கூற்றுடன் தொடங்குகிறது. இதற்கு, வாசகன் ஏற்கும் விதமாக பொருத்தமான காரணம் கூறப்படுகிறது போன்று நிற்கும் மூன்று பாறைகள், நிலவொளியில் தெரியும் ஆற்றுப்படுகை, நாணல் பூக்களைச் சூடிய பெண் போன்றவற்றின் துல்லியமான காட்சி சித்தரிப்புகளால் வாசிப்பவரையும் அமானுஷ்ய தன்மைக்குள் நுழையவைத்து கவர்கிறது இக்கதை. இதன் முடிவு வேறொரு தளத்தை நோக்கி நகர்கிறது

பெரியப்பாஎன்ற கதையும் சிறுவனின் கூற்றாகவே அமைந்துள்ளது. மற்ற இரு சிறுவன் பார்வைக் கதைகளின் எளிமைத் தன்மையிலிருந்து விலகி சற்று தீவிர மனநிலையை இக்கதை கூறுகிறது. சைக்கிளில் கட்டிய கேனில் பால் பெறுவதற்காக இன்னொரு ஊருக்குச் செல்லும் பெரியப்பாவிற்கும் அவ்வூரிலுள்ள நாய்க்கும் இடையே நடக்கும் குரைப்பும் வெறுப்பும் கதையின் முதன்மைக் களம். சம்பந்தமில்லாத வேறொருவருக்கு இதனால் ஏற்படும் பாதிப்பு காட்டப்படுகிறது. நாய்க்கும் பெரியப்பாவிற்கும் இடையேயான போட்டி சிறுவனின் பார்வையில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. முடிவு நாயின் உள்ளுள்ள சிறுமியின் மனநிலையை உணர்த்துவதாக உள்ளது.

இத்தொகுப்பின் முதன்மைக் கதைபொற்பனையான்’. வேடன், வேடச்சி, சித்தர் என தொன்மத்தில் தொடங்குகிறது கதை. ஐரோப்பியரின் இந்திய வருகையில் நிகழும் வரலாறில் பயணிக்கிறது. உலோகங்களை ரசவாதத்தின் மூலம் தங்கமாக மாற்ற முயலும் பித்தர்களின் பல கதைகள் உண்டு. இக்கதை சித்தர் ஒருவர் பொற்சுளை காய்க்கும் பனை மரத்தை உருவாக்குவதையும், அதனைத் தேடி அலையும் மன்னர் படையும் மக்களும் படும்பாடுகளையும் முதல் பகுதியில் காட்டுகிறது. பிற்பகுதியில் பொற்பனையான் என்ற பெயர் கொண்டவன் பெனுவா என்ற ஐரோப்பியன் உதவியுடன் ரசவாதத்திற்கான மூலப் பொருட்களை உருவாக்கி தங்கம் தயாரிக்க மேற்கொள்ளும் முயற்சிகளை கூறுகிறது. இந்நீண்ட கதையை குறுநாவல் எனக் குறிப்பிடாமல் சிறுகதை என கூறுவது அதன் ஒற்றை இலக்கைக் குறித்தே

எழுத்தாளர் ஜெயமோகன் இதே போன்றவெற்றிஎன்ற நீண்ட சிறுகதை ஒன்றை எழுதியுள்ளார். நீண்ட கதையாக இருந்தாலும் ஒரே மூச்சில் படித்துவிடக் கூடிய மிகவும் சுவாரசியமான கதையது. முடிவிற்கு பின்னும் பல நாட்கள் வாசித்தவர் உள்ளத்தில் அதன் நினைவுகள் நீடித்திருக்கும்

இந்தப் பொற்பனையான் கதையும் அதே போன்றதே. ஒப்பீடு பக்க அளவுக்காக மட்டுமே. இரு கதைகளின் களமும் பேசு பொருளும் வேறுவேறு. பொற்பனையான் கதையில், காடும் சித்தரும் பொற்பனஞ்சுளைகளும் மன்னர் படைகளும் மக்களும் நம் கண் முன்னே நடப்பதாகவே தோன்றுகிறது. சித்ரனின் எழுத்து காட்சிகளை உருவாக்கிவிடுகிறது. நீண்ட கதையை படிக்கும் அலுப்பின்றி ஈடுபாட்டுடன் வாசிக்க வைக்கிறது. ரசவாதத்தின் தயாரிப்பு முறைகளைப் பற்றி இடம்பெற்றுள்ள நுணுக்கமான விவரிப்புகள் கதையோடு ஒன்ற வைக்கிறது. ரசவாதத்திற்கான பெரிய உழைப்பும் முயற்சியும் பலன் தந்ததா நீடித்ததா என்பதை முடிவாகக் கொண்டுள்ள இக்கதை அருமையான வாசிப்பனுபவத்தைத் தருகிறது.

தொகுப்பின் கடைசி சில பக்கங்களில் இடம் பெற்றுள்ள குறுங்கதைகள் என்னுடன் உரையாடவில்லை. குறுங்கதைகள் எனக்கு உவப்பளிப்பதில்லை என்பதோ, அக்கதைகளை உணரும் நுண்ணுர்வு எனக்கு குறைவாக இருப்பதோ அதற்கு காரணமாக இருக்கலாம்

ஆசிரியரின் குறிப்பினைக் கொண்டு அவரைப் பற்றி முழுமையான சித்திரம் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால், கதைகளில் வரும் ஊர்களின் பெயர்கள் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனின் நிலப்பரப்பான காரைக்குடியைச் சுற்றியுள்ள பகுதிகளாக உள்ளது. என் நிலமும் அதுவே என்பது மகிழ்ச்சியையும் ஓரு அணுக்கத்தையும் அளிக்கிறது.

மொத்தமாக சித்ரனின் கதைகள் மிகச் சிறந்த பின்புலத்துடன், துல்லியமான களத்தின் சித்திரத்தை உருவாக்கி விடுகின்றன. இது வாசிப்பவருக்கு அருமையான வாசிப்பு அனுபவத்தைத் தருகின்றது. இவர் கதைகளை வாசித்தபின் சிறு நெருடல் ஏற்படுகிறது. நான் பள்ளி செல்லும்போது ஒரு அண்ணன் கதை சொல்வாரே.. அதனை அப்போது கேட்க பரவசமாயிருக்கும். அவர் கதை சொல்லி முடிக்கையில் இதற்குதானா இத்தனை பீடிகை எனத் தோன்றும். அந்த வெள்ளக்கதையை முடிக்கும்போது நெஞ்சில் கைவைத்து பலமுறை கூறுவார் இதுவரைக்கும் தண்ணி வந்தது என்று. பிறகுதான் எங்களுக்குப் புரியும் அவர் விரலில் புதிதாக ஒரு மோதிரம் அணிந்து வந்ததைக் காட்டுவதற்காகவே அத்தனை நீள கதையை கூறியிருக்கிறார் என

சித்ரனின் கதைகள் வாசிக்கும் போது மனம் மலர்ந்து உற்சாகமாக இருக்கிறது. ஆனால், கதை முடிந்தவுடன் இதைச் சொல்வதற்கா இத்தனை பெரிய பின்புலத்தையும் களத்தையும் உருவாக்கினார் என்ற ஏமாற்றம் தோன்றுகிறது. இவர் எடுத்துக் கொள்ளும் கருக்கள் மிக எளியனவாக உள்ளன என எனக்குத் தோன்றுகிறது. மிக வலுவான கருவுடன் சித்ரன் நாவல் எழுதினால் அது தமிழின் முக்கியமான நாவல்களில் ஒன்றாக இடம் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. அதற்கான வளமான மொழியும், காட்சி சித்தரிப்பிற்கான திறனும் சித்ரனுக்கு உண்டு. வாழ்த்துகள் சித்ரன்

நூல்- பொற்பனையான் 
ஆசிரியர்- சித்ரன் 
பதிப்பகம் – யாவரும் 
விலை – ரூ. 200/- 

*******

[email protected]

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button