இணைய இதழ்இணைய இதழ் 82கட்டுரைகள்

அகமேந்தி (குறுங்கவிதைகள்) நூல் மதிப்புரை – Dr ஜலீலா முஸம்மில் 

கட்டுரை | வாசகசாலை

காட்டுவாசி ஒருவன் கொட்டிய பாறையில் கவிதை தோன்றியிருக்க வேண்டும்என்பார் எமர்சன். ‘கவிதை மந்திர மொழிகளிலும் சடங்குச் சொற்களிலும் வாய்மொழிப்பாடல்களாகத் தோற்றம் பெற்றிருக்க வேண்டும்என்கிறது வாழ்வியல் களஞ்சியம்.கவிதை என்பது உணர்ச்சிளைப் பிழிந்து தமிழோடு பிசைந்து செய்யப்பட்ட ஓர் இன்பக்கவளம் என்றால் யாரும் மறுப்பதற்கில்லை. உணர்ச்சி, கற்பனை, வாழ்வியல் கருத்துக்களை வெளிப்படுத்தவும் தூண்டவும் கவிதை உதவுகின்றது.தமிழ் மொழியின் செழுமையையும் அழகையும் சிறந்த இலக்கண நடை கொண்ட தமிழ் மரபுக்கவிதைகளில் நாம் காணலாம். ஆனால், அவ்வாறான வரையறையற்ற புதுக்கவிதை வடிவங்களில் கவிதையின் இனிமையையும் எளிமையையும் உணர்ச்சி ததும்பும் வெளிப்படையையும் நாம் காணக்கூடியதாக இருப்பது அதன் சிறப்பம்சமாகும். எம் தாய்மொழியாம் தமிழை வளர்க்கும் அனைத்துக் கவிஞர்களும், அனைத்து இலக்கியவான்களும் நிச்சயம் போற்றப்பட வேண்டியவர்களே.

அகமேந்தி குறுங்கவிதைகள் நூலானது சென்னை, உலகத் தமிழன் பதிப்பகம் வெளியீட்டில் பிரசவமாகியிருக்கிறது. மு.முருகேஷ் (முதுநிலை உதவி ஆசிரியர், இந்து தமிழ் திசை நாளிதழ்) அவர்களின் அருமையான முன்னுரையோடு, கவிஞர் பாண்டிச்சேரி கருப்பசாமி அவர்களின் அன்பான அணிந்துரையோடு இன்னும் பல இலக்கிய மேதைகளின் வாழ்த்துரைகளோடு அழகிய குறுங்கவிதைகள் தாங்கி மலர்ந்து நிற்கிறது அகமேந்தி. குறுங்கவிதைகளால் உங்கள் அகங்களை ஏந்திக் கொள்கிறது என்றால் அது மிகை இல்லை.

இயற்கையை, பறவைகளை, வானத்தை, சிற்றுயிர்களை மற்றும் மகிழ்ச்சி, காதல், நட்பு, வலி, துரோகம்,உறவு, பிரிவு போன்ற பல்வேறு வாழ்வியலின் கூறுகளையும் பாடுபொருளாகக் கொண்டு தன் சின்னஞ்சிறிய கவிதைகளால் அனைவரையும் கவர்ந்து விடுகிறார் கவிஞர். சிறிய கவிதைகளால் பாரிய உண்மைகளை, பாரிய கருத்துக்களை நமக்கு உணர்த்துகிறார்.மெல்லிய உணர்வுகளின் கலவையாக அகமேந்தி உங்கள் அகங்களை நனைப்பது நீங்கள் நூலை வாசிக்கும்போது உணரக்கூடியதாக இருக்கும். யாம் பெற்ற இன்பம் பருக உங்களையும் அன்புடன் அழைக்கிறேன்.

நூலாசிரியர் கவிஞர் .இராஜ்குமார் அவர்களின் கவிதைகளில் கருணையும் இரக்கமும் ஏக்கமும் குழந்தைத்தனமுமே அதிகமாக காணப்படுகின்றன. ஹைக்கூ கவிதைகள் எழுதுவதிலும் கவிஞர் திறமை வாய்ந்தவர் என்பதை இவ்விடத்தில் கூற விழைகிறேன். அகமேந்தியில் ஹைக்கூ கவிதைகள் பல துளிர்த்து வேர்விட்டிருப்பது நூலுக்கு சுவை சேர்க்கும் ஒரு அம்சமாகும்.

“பறத்தலுக்கு வானம் கைவசத்தில் இருக்கு 
திரும்பி வந்தால் 
கூடு கட்டத்தான் 
மரங்களில்லை பறவைகளுக்கு!”

இது கவிஞரின் முதலாவது கவிதை. முதல் கவிதையிலேயே பறவைகளுக்காக பரிதவிக்கிறார் கவிஞர். எத்தனையோ உள்ளர்த்தங்களை கவிதை மூலம் உணர்த்தி விடுவது அவரது கவிதைகளின் சொற்சேர்க்கைகளின் சிறப்பு என்றே கூறலாம். மனிதனின் செயற்பாடுகள் காரணமாக, நகரமயமாக்கல் காரணமாக மரங்கள் அருகி வருவதைக் கண்டு அழும் கவிஞர் அதேநேரம் உலக மனிதர்களிடம் மரங்களைப் போன்று வானத்தையும் உங்களால் சூறையாட முடியுமா? என்ற வினாவையும் தொடுத்துச் செல்கிறார்.

பூமியில் இருக்கும் நாம் தான் வானில் இருக்கும் நட்சத்திரத்தைப் பார்க்கிறோம். பூமியில் இருக்கும் நாம் தான் வானில் பறக்கும் பறவைகளைப் பார்க்கிறோம். ஆனால், கவிஞர் சொல்ல வருவதைப் பாருங்கள்.

“நிலவின் பார்வையில் 
ஓராயிரம் நட்சத்திரங்கள் பூமியில் மின் விளக்குகள்”

ஆஹாஎன்ன ஒரு கற்பனை. பூமியின் நட்சத்திரங்களை நிலவு பார்த்துக் கொண்டிருக்கிறதாம்! நட்சத்திரக் கண்கள் பூமியின் அழகியலைக் கண் சிமிட்டாது பார்த்துக் கொண்டிருக்குமோ?

“யாரோ ஒருவரிடம்
நம்மைத் தேடுவதில் ஆரம்பமாகிறது
நிம்மதியின்மை”

வாழ்வின் தத்துவங்களையும் எதார்த்தங்களையும் நான்கு வரிக்குள் உள்ளடக்குவதில் கவிஞர் வல்லவர் என்று நினைக்கிறேன். காலங்காலமாக மனிதவாழ்க்கை என்பது எதிர்பார்ப்பிலேயே கழிந்து விடுகிறது. எல்லா உறவுகளும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து அன்பை, காதலை,கருணையை, தேவையை ஆளுக்காள் எதிர்பார்த்த வண்ணமே வாழ்கின்றன. மனித மனம் என்பது எத்தனையோ கரங்கள் ஆதரித்தாலும் அன்பெனும் ஒரே ஒரு சுட்டு விரலுக்கே அடிபணியக்கூடியது. அவ்வாறான அன்பைத் தவறான நபரிடம் நாம் தேடும்போது அந்தப் புள்ளியில் இருந்து ஆரம்பமாகிறது நிம்மதியின்மை என்பதை இக்குறுங்கவிதை உணர்த்திச்செல்வதைக் காணலாம்.

“விடைபெற்றபின் 
குடையொன்றைத் 
தந்து செல்கிறாய்
முழுதாய் நனைந்து கொண்டிருக்கிறேன் 
கண்ணீரில்”

உறவு என்றால் பிரிவு இருக்கும்; காதல் என்றால் கண்ணீர் இருக்கும். இதயங்கள் இரண்டும் இணைந்த பின் இடைவெளிகள் இல்லை. இந்தக்கவிதையில் ஆத்மார்த்தமான காதலைக் கவிஞர் வெளிப்படுத்தும் விதம் ஆச்சரியத்தை நமக்குள் விசிறிச் செல்வதைப் பார்க்க முடிகிறது. முழுதும் கண்ணீரால் நனைந்த பிறகு பிரிவின் பொழுதில் பரிசாகத் தந்த குடை அவனுக்கு உதவவே இல்லை என்பதை நாசூக்காகச் சொல்வது மிகவும் அழகாக இருக்கிறது.

இளமையிலோ முதுமையிலோ வாழ்வின் எல்லாக் கணங்களிலும் யாருமே தமது உள்ளங்களில் தங்கிய அன்பின் அழகிய நினைவுகளை உதிர்த்து மறந்து விடுவதில்லை.அது எப்போதும் உயிர்த்திருக்கும் ஜீவிதமுடையது. வாழ்வின் எந்த ஒரு கட்டத்திலும் எந்த ஓர் இடத்திலும் இடங்களைக் கடந்து செல்லும்போதும் தனிமையிலும் கூட்டத்திலும் பயணத்திலும் அழகிய நினைவுகள் மனதில் ஊசலாடிக் கொண்டே இருக்கும். அதுவும் ஒரு அமைதியான பொழுது அமைந்துவிட்டால் ஆழ்மனதின் ஓரங்களில் படிந்த அழகிய நேச நினைவுகள் துளிர்விட்டுக் கிளை விட்டு விருட்சமாகி விடும்தானே? இந்தக்கவிதையைப் படிக்கும்போது கடைசி வரியில் கனமான ஒரு உட்பொருளை கவிஞர் சொல்வது சிறப்பாக அமைந்திருக்கிறது.

“அமைதி ஒரு முழு நீள சுகம்…
அமைதி ஓர் உன்னதமான உண்மையான உணர்வு…
அமைதி ஒரு சொர்க்கம்…
அமைதியை தூரத்தில் துளைப் போட்டு இசைத்துக் கொண்டிருக்கும் வண்டுகளின் ராகம்…
அமைதி நம் முழு மனதின் சாந்தம்…
அமைதி யார் யார் மீதோ வைத்திருக்கும் நினைவுகள்..!!!”

இப்படி மெல்லிய உணர்வுகளால் மிருதுவாகத் தாலாட்டும், மனதை லயிக்கச் செய்யும் கவிதைகள் இந்த நூலில் ஏராளம் காணப்படுகின்றன.

“கோடிக்கால்களில் 
நடக்கும்
மழைக்கும் 
நொடிப்பொழுது கூட நிலைப்பதில்லை சுவடுகள்…!”

அழகியலோடு சேர்ந்து வாழ்வின் நிலையாமையை எடுத்து இயம்பும் சில்லிடும் இயற்கையின் கவிதையை நீங்களும் ரசித்துப் பாருங்களேன். இந்த ருசியான கலவையில் ஒரு ஜென் தத்துவத்தைக் கவிஞர் உங்களுக்காக விட்டுச் செல்கிறார்.

இப்படி கவிஞரின் ஒவ்வொரு கவிதைக்குள்ளும் சுவை மிகுந்த, வலி மிக்க, தத்துவங்கள் கூறுகின்ற, நேசத்தைப் பாடுகின்ற, காதலைத் தரிசிக்கின்ற, துரோகத்தை விளாசுகின்ற அனேக கவிதைகள் அடங்கி இருக்கின்றன.அருமையான கருத்துக்கள் தாங்கிய குறும்பாக்களை ஒன்றாக்கி ஒரு கதம்பமாக உங்கள் முன் நீட்டியிருக்கிறார்.

நான் ரசித்த மேலும் சில கவிதைகள்

“கவிதை ஒன்று கரை ஒதுங்கியது 
அவள் கண்களின் ஓரம் கண்ணீர்த் துளியாய்…!”

காதலியின் கண்ணீர்த் துளியைக்கூட விட்டு வைக்கவில்லை கவிஞர்.

அதைக் கவிதையாக்கிய விதம் வியப்பாக இருக்கிறது அல்லவா?

“மற்றவர்களின் உணர்வுகளையும்
உணர்ச்சிகளையும்
புரிந்து கொள்ள முடியாத 
நான்
ஒரு மிருகம் என்று 
நீங்கள் நினைத்தால்
என்னுடைய உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் புரிந்து கொள்ள முடியாத நீங்கள் யார்?”

நிறைகளை விட்டுவிட்டு குறை கூறித்தெரியும் அனைவருக்கும் மேற்கண்ட கவிதை கனமான சாட்டையடி. நல்லதோர் கேள்விஅனைவருக்கும் புத்திமதி செல்லக்கூடிய கவிதை சிறப்பு.

“தேவதைகளைத்
தேடத்தேவையில்லை.. மகள்களைப் பெற்றாலே
போதும்…!”

ஆஹாஅற்புதமான கவிதை. பெண் பிள்ளைகள் மண்ணுலகின் தேவதைகள். அவர்களைப் பெற்றாலே போதும் நீ தேவதைகளை தேடித்திரியத் தேவையில்லை. நீ நிலவுகளை தேடியலையத் தேவையில்லை. அவளே எல்லாமாக உனக்கு இருப்பாள்.நான் வியந்த கவிதைகளில் இதுவும் ஒன்று.

அழகும் எளிமையும் ததும்பி வழியும் வகையில் கவிதை நூலை ரசித்து ரசித்துச் செதுக்கியிருக்கிறார் கவிஞர் .இராஜ்குமார்.இதயத்திற்கு இனிமையும் தமிழுக்கு அழகும் சேர்த்து வாசகர் நெஞ்செமெனும் ஆசனத்தில் வசதியாக உட்கார்ந்து விடுகிறது இக்கவிதை நூல்

அகமேந்தி இருந்தஅகமேந்தியைத் தமிழ் கூறும் நல்லுலகுக்கு அச்சில் வார்த்துப் பரிசளித்த கவிஞரை மனமுவந்து வாழ்த்துவதோடு இன்னும் அவர் பல நூல் பிரசவங்களை எதிர்காலத்தில் நமக்குத் தர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

நன்றி.

அகமேந்தி (குறுங்கவிதைகள்) 
நூலாசிரியர்- ச. இராஜ்குமார் 
நூல் வெளியீடு-உலகத் தமிழன் பதிப்பகம், சென்னை 11.
பக்கங்கள் 104
விலை 150₹
நூல் வாங்க 8867933021

********

[email protected]

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button