காலாதீதம் – அருணா சிற்றரசு

சரியாக மாலை ஆறு மணிக்கு கோவிலின் கிழக்கு வாசல் முன் கார் நின்றது. தென்காசிக்குச் செல்வது என்பது என் திட்டத்தில் இல்லை. ‘காசி விஸ்வநாதரைப் பார்க்கிறாயா?’ என்று அவன் கேட்டதுமே மனம் ஒப்புக்கொண்டது. அவனுக்கு என் மன அழுத்தத்தை எப்படிப் போக்குவது என்றே தெரியவில்லை. தவித்துக்கொண்டிருந்தான். எனக்கோ அவனது முயற்சிகள் அயர்ச்சியாக இருந்தன. என்னைத் தனியாக விட்டால் போதும் என்றிருந்தது. இப்போதைய மன நிலைக்கு கோவில் மட்டுமே எனக்கு உகந்ததாக இருக்க முடியும். சலனமற்ற காலத்தை கல் உருவங்களாகக் காண்பதில் ஒரு அமைதி. தெய்வங்களின் கடாட்சத்தில் அற்புதங்களை நான் வேண்டுவதே இல்லை. கற்சிலைகளின் மேல் படிந்திருக்கும் காலாதீதமே என் தேடலாகவும் இருக்கலாம். தெய்வங்களை நான் ஒளி ஊடுருவும் ஆடிகளாகக் காண்பேன். காலத்தின் நித்திய காட்சிகளின் புகைப்படங்கள் அவை. சற்று நேரம் என்னைத் தனியாக விட்டுவிட்டு எங்கோ சென்றிருந்தான். அவன் வரும் வரை கோவில் கோபுரத்தைப் பார்த்துக்கொண்டு நின்றேன்.
சாலையிலிருந்து நல்ல உயரத்தில் அமைந்திருந்தது கோவில். இரவின் பின்னணியில் வானுயர்ந்த அந்தக் கோபுரம் கறுப்புத் துணியில் ஒட்டப்பட்ட தோல்பாவை போல நுணுக்கங்களை விகசித்து நின்றது. சாலையில் நின்று கொண்டு கோபுர வாசலைப் பார்க்கும்பொழுது மாபெரும் மேடையில் உறைந்து நின்ற இறுதிக் காட்சி போல் இருந்தது. கோவிலுக்கு உள்ளே செல்பவர்களும் வெளியே வருபவர்களும் சற்று நேரம் ஆங்காங்கே குழுமிய பிறகே கலைந்து சென்றனர். பல வண்ண ஆடைகளில் பெண்களும் குழந்தைகளும் உலாவிய காட்சிக்குள் கோபுரத்துச் சிலைகள் ஒவ்வொன்றாய் குதித்துக் கலந்தன.
“வா போகலாம்” என்று சொல்லிக்கொண்டே எனைக்கடந்து நடந்தான். நான் கோபுரத்தைப் பார்த்துக்கொண்டே மெல்லப் படிகளில் ஏறினேன். அவன் வேகத்திற்கு நான் பின் தொடரவில்லை என்பதை உணர்ந்தவன் திரும்பிப் பார்த்தான். மீண்டும் என்னருகே வந்தான்.
“கூட்டம் அதிகமாயிடும் சீக்கிரம் வா. அர்ச்சனை வாங்கிருக்கேன்”
“நீ ஏன் அர்ச்சனை வாங்குன?” அவன் முகம் பாராமலே சிடுசிடுத்தேன்.
“எந்தக் கோவில் போனாலும் நீ மொதல்ல அதத்தான வாங்க சொல்லுவ?”
“இல்ல. இந்தக் கோவில்ல அந்த மாதிரி தோனல எனக்கு”
“ஏன்…? நீ சொல்லாம நான் வாங்கிட்டேன்னா?” எனக்கேட்டு இமைக்காமல் என்னைப் பார்த்தான்.
நான் சிரித்து விட்டேன். “நீ ஏன் இப்டில்லாம் யோசிக்குற?”
“பின்ன எப்டி யோசிக்க சொல்ற. நீ இப்படித்தான்னு ஒரு முடிவுக்கு என்னை வர விடவே மாட்ற. வேணும்னே மாத்தி மாத்தி பேசுற” என்று சொல்லிக்கொண்டே தன் கைகளில் இருந்த அர்ச்சனை பையைச் சரி பார்த்தான்.
“சரி. இந்த அர்ச்சனையை யார் பேருக்குப் பண்ணலாம்?” என்றேன்.
“என் பேருக்கே பண்ணலாம். நான்தான் பெரிய துன்பத்துல இருக்கேன்” என்றான்.
இரண்டு நாள்களாக என்னிடம் இருந்த பெருந்துக்கத்தை சிறு சிறு சில்லுகளாக உடைக்கத் துவங்கியிருந்தான்.
“முகமது யூனூசுங்குற பேருக்கு விஸ்வநாதர்கிட்ட அர்ச்சனையா?” என்றேன்.
“அவருக்கு இந்தப் பேரு பிடிக்காதா என்ன! இல்லன்னா என்னோட செல்லப்பெயர சொல்லி அர்ச்சன பண்ணு. அப்பத்தான் என் வேண்டுதலும் பலிக்கும்” என்றவாறு முகத்தை உயர்த்தி நடக்க ஆரம்பித்து விட்டான்.
அர்ச்சகர் “ஜிலேபி”என்ற பெயரைச் சொல்லி மந்திரங்கள் சொன்னால் எப்படி இருக்கும் என்ற நிகழ்தகவில் வாய்விட்டுச் சிரித்து விட்டேன். கட்டுக்குள் எளிதில் கொண்டுவர இயலாத ஒரு வெடிச்சிரிப்பு. மற்ற எல்லோரும் எனைத் திரும்பிப் பார்க்க அவன் மட்டும் அவன் போக்கில் சென்று கொண்டிருந்தான். இப்படித்தான், கண்களில்கூட துளி கனிவில்லாமல் அவனுக்கும் அவன் கையாளும் நகைச்சுவைக்கும் யாதொரு தொடர்பும் இல்லாதவன் போல் பாவனை செய்வான்.
கோபுர வாசலைக் கடந்து உள்ளே சென்றோம். வானிலிருந்து இருள் உதிர்ந்து கொண்டு இருந்தது. நிலவும் மின் விளக்குகளும் அங்கும் இங்குமாக வெளிச்சம் கொடுத்தன. இடது புறம் தகர்க்கப்பட்ட யாகசாலை ஒன்று சிதிலங்களுடன் கிடந்தது. கோவில் கும்பாபிஷேகம் அந்த வாரம்தான் முடிந்திருக்க வேண்டும். கும்பாபிஷேகம் முடிந்ததால் அந்தப் புத்தம் புது யாகசாலையை இடித்திருக்கிறார்கள். அது அணிகலன்கள் சரியாக அடுக்கப்படாத ஒரு மகாராணியின் ஆபரணப்பெட்டி போல மெருகு குறையாமல், அங்குமிங்கும் சரியாக உடைபடாமல் இருந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட இடிபடாத உருவங்கள் ஒரு புது கலையுருவாக்கம் செய்திருந்தன.
யாகசாலைக்கு நேரான சபையில் ஒரு முதிய சிவபக்தர் சிவபுராணத்தைப் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். ஆனால், அவருக்கு முன் யாருமே இல்லை. யாகசாலையின் சிதிலங்கள் மட்டுமே இறைந்து கிடந்தன. நடைபாதையைக் கடக்கும்போது மட்டும் இடப்புறமாகத் திரும்பி சிதிலங்களுக்கு அப்பால் எதையோ சொல்லிக்கொண்டிருக்கும் அந்த முதியவரை அரை நொடிக்கும் குறைவாக கவனித்து விட்டு எல்லோரும் விரைந்தனர். நானும் அவரை அவ்வளவுதான் கவனித்தேன். கொடிமரத்தை வணங்கி விட்டு நாதரின் பிரகாரத்திற்கு செல்ல இருந்தேன்.
“என்ன எப்பவுமே அம்பாளைப் பார்த்துட்டுதான போகனும்னு சொல்லுவ. நேரா அவரையே பார்க்கப்போற?” என்றான் யூனூஸ்.
அவன் சொல்லியதும்தான் அதை உணர்ந்தேன். அவன் முகத்தை மிக அமைதியாகப் பார்த்தேன்.
“என்ன?” என்றான்.
“ஒன்னுமில்ல. எனக்கு என்னவோ அம்பாளைப் பார்க்கத் தோனல”
“அதெல்லாம் தோனும்… என்கூட வா” என்று என் கைகளைப் பிடித்து அம்பாளிடம் அழைத்துச் சென்றான்.
அவன் கைகளுக்குள் எப்போதும் இருக்கும் குளுமை என்றாலும் அப்போது எனக்கு மிக மிகத் தேவையானதாக இருந்தது. கூட்ட நெரிசல்களில் என்னை மிக லாவகமாக அழைத்துச் செல்வான். நான் கவனக்குறைவாக இருந்தாலும் எனக்குப் பிடித்தமான காட்சிகளைத் தவறவிடாமல் காண வைப்பான். விரல் சப்பும் குழந்தையாக இருக்கலாம், சத்தமாகச் சிரிக்கும் முதியவள்களாக இருக்கலாம், ஜிமிக்கி அணிந்த இளம்பெண்களாக இருக்கலாம், நீளமான கூந்தல்கள், பூக்கள் நிரம்பிய கூடைகள், தூண்களில் பதுங்கிய பெருஞ்சிற்பங்கள் என எதையும் என்னைத் தவற விட மாட்டான்.
ஒரு தூணின் மறைவில் பதற்றத்துடன் காணப்பட்ட இளைஞன் ஒருவன் நின்றான். அவன் தன் சட்டையைச் சரிசெய்வதும் தலை முடியைச் சரி செய்வதுமாக அருகருகே இருந்த இரண்டு தூண்களுக்கும் இடையே நடந்தான். மூன்று நடைகளுக்குப் பின் தன் சட்டைப் பையிலிருந்து அலைபேசியை எடுத்து அதில் தன் முகத்தைப் பார்த்து நெற்றியில் இருந்த விபூதியைச் சரிசெய்தான். அந்த இளைஞன் பக்கமே யூனூஸ் திரும்பாதது போல் இருந்தது. ஆனாலும் என் உள்ளங்கையை அழுத்தி, “இதெல்லாம் வேடிக்கைன்னு பார்த்துட்டு இருக்கியா?” நடையை நிறுத்தாமலேயே கேட்டான்.
அப்படி அவன் கேட்கும்போதும் என் திசையையோ அல்லது அந்த இளைஞனின் திசையையோ அவன் பார்க்கவே இல்லை. அம்பாளைப் பார்க்கும் திசையை மட்டுமே நிலைப்படுத்தி இருந்தான்.
“எப்டிடா உன்னால மட்டும் இப்டி பார்க்க முடியுது?” இன்னும் நெருக்கமாக அவன் பக்கம் நடந்தேன்..
“என் கைக்குள்ள நீ இருக்க. மறந்துட்டியா!” அப்போதும் அவன் பார்வை அம்பாளிடமே இருந்தது.
சுடரைச் சுற்றி இருந்த இருளுக்குள் அம்பாள் ஒளி வீசிப் படர்ந்திருந்தாள் அவளின் முன் நின்று கைகளைக் கூப்பி கண்களை மூடிக்கொண்டேன்.
“யாரு பேருக்கு அர்ச்சனை?” என்றார் அர்ச்சகர்.
“முகமது யூனூஸ்” என்றேன்.
நீண்டிருந்த தன் கைகளை சற்று உள்ளிழுத்தார் அர்ச்சகர். பின்னர்
அருகில் வேறு யாரும் இல்லை என்பதனை உறுதி செய்து கொண்டார். “ராசி நட்சத்திரம் உண்டோ!” என்றார்.
“கும்ப ராசி, சதயம்” என்றேன். அவரிடம் ஒரு குறுஞ்சிரிப்பு இருந்தது. மந்திரங்களைச் சொல்லிக்கொண்டு அம்பாளிடம் சென்றார். அர்ச்சனையை முடித்து தீபத்தால் அம்பாளை ஒரு சுற்று அளந்து விட்டு ஆராதனைத் தட்டுடன் என்னிடம் வந்தார்.
“என்கிட்ட சொன்ன மாதிரி பெருமான் சன்னிதானத்துல சொல்லிடாதீங்க. அந்த அர்ச்சகர் கொஞ்சம் பழைய ஆளு” என்று மிக தாழ்ந்த குரலில் சொன்னார்.
அர்ச்சனையை வாங்கிக்கொண்டு ‘சரி’ எனத் தலையசைத்தேன்.
வந்த திசைக்கு எதிர் திசையில் நடந்தோம். “அம்பாள் தனியாதான் இருக்காங்க பார்த்தியா?” என்றான்.
அம்பாளின் அருமணத்திலிருந்து அப்பொழுதுதான் விடுபட்டுக்கொண்டிருந்தேன். எண்ணெயில் ஊறிய திரியின் ஆன்மா அம்பாளின் சொரூபத்தில் பேரெழுச்சி பெற்றது போல் இருளை நிமிர்த்திய தீபத்தின் காட்சி என்னுள் அணையாமல் சுடர்ந்தது. திரி, எண்ணெய், அகல். இதில் எதன் ஆன்மா அந்தச் சுடர்..?
என் நடையில் ஏதோ ஓர் குறை. என் கால்களில் கொலுசுகள் இல்லை என்பதனைச் சுட்டி, விரல்கள் மௌனமாகக் கனத்தன. நேற்று வரை என்னுடனேயே மினுங்கிக்கொண்டிருந்த கொலுசுகள் இப்போது இல்லாததை உணர்ந்தேன். ஓரிரு நாள்கள் இப்படித்தான் பேரமைதியை உணர்த்தும். பிறகு அந்த அமைதி பழகி விடும். மீண்டும் புதிதாகக் கால்களில் கட்டும்போது ஓரிரு நாள்கள் உரக்கச் சிணுங்கி இருப்பை உணர்த்தும். பிறகு அந்த இரைச்சலும் அமைதி போல் உணரப் பழகி விடும்.
“இந்த அம்பாளின் பெயர் உலகம்மையார்” என்றான்.
என் அமைதியிலிருந்து அவனிடம் செல்ல போதுமான அருள் கூடவில்லை.
“எதாச்சும் பேசு” என்றான்.
“என்ன பேசனும்?”
“அம்பாள் ஏன் தனியா இருக்காங்க?”
“ஏன் இருக்கக் கூடாது?” அவன் முகம் பார்ப்பதை நான் தவிர்த்துக்கொண்டே இருந்தேன்..
“இல்ல அவரோட மனைவிதான. அவர் பக்கத்துலயே இருக்கலாம்னு கேட்டேன்” அவன் வேகத்தைக் குறைத்து என் பொறுமைக்கு நடந்தான்.
“கணவன் மனைவில்லாம் இல்ல. ஆண் பெண் வடிவம் அவ்ளோதான். மனுசங்க அப்பதான் கனெக்ட் ஆவாங்க”
“அப்போ லிங்கத்துக்கு துணை கிடையாதா?”
“ஆமா”
“ஆனால், அவரே வேற உருவத்துல இருந்தா பக்கத்துல அவரோட ஆள் இருக்கலாம். முருகனுக்கு ரெண்டு பேரு இருக்கிற மாதிரி, அப்டிதான?” என்றான்.
“நீ ஏன் இப்டி ஏதோ ஒன்னு பேசணும்னு பேசுற ?”
“நான் அப்டில்லாம் பேசல. உனக்கு ஒரு விஷயம் பிடிக்குதுன்னா அது எனக்கும் பிடிக்கும். உனக்கு இன்னும் நுணுக்கமா அந்த விஷயம் புரியனும்னு நினைப்பேன்” என்று சொல்லிக்கொண்டே அவன் சட்டையின் சற்று ஏறியிருந்த கைமடிப்புகளை மணிக்கட்டு வரை இறக்கி விட்டான்.
“இல்ல. எனக்குப் புடிச்ச அந்த விஷயத்தை விட்டு நானே ஓடனும். அந்தளவுக்கு அதைப் பத்திப் பேசி டார்ச்சர் பண்ணுவ” முகத்தைத் திருப்பிக்கொண்டேன்.
“இப்டிதான். தப்பு தப்பா நீயா ஒரு முடிவுக்கு வருவ. உனக்குப் புடிச்ச விஷயத்த பத்தி பேசினா நீ இன்னும் ஆர்வமா என்கிட்ட பேசுவன்னு ஒரு சின்ன கால்குலேஷன் அவ்ளோதான்”
“இப்டில்லாம் கணக்கு போட்டெல்லாம் வாழ முடியாதுடா. உனக்குப் புடிச்ச விஷயங்கள் வேற. எனக்கு புடிச்ச விஷயங்கள் வேற. உன்ன மாதிரி
நான் உன்ன எதுக்குமே வற்புறுத்த மாட்டேன்”
“எப்டி! நான் ட்ரக்கிங் போறேன்னு சொன்னப்போ உன் இஷ்டம்னு விட்டுட்டியே அப்டியா?”
அவனின் அந்தக் கேள்விக்கு ஏறவே முடியாத மலை உச்சி ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டேன்.
“உனக்கு நான் போக வேண்டாம்னு தோனுச்சு. அதை என்கிட்ட சொல்லாம தயங்கி தயங்கி விட்டுட்ட. எங்க இவனைத் தடுத்தா நாளைக்கு நம்மள எங்கயும் விட மாட்டானோன்னு”அவன் அப்படிச் சொல்லிக்கொண்டே அருகிலிருந்த தூண் ஒன்றில் கொட்டப்பட்டிருந்த பக்தர்கள் கை குங்குமத்தைக் கீழே சரித்துக் கொண்டிருந்தான்.
அவன் சொல்வது உண்மைதான். அவன் அந்தப் பயணத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தது முதலே என் மனம் ஏதேதோ சொல்லியது. அவனைத் தடுக்கும்படி இரண்டு மூன்று குரல்கள் எழுந்த போதிலும் ‘அது அவனுடைய விருப்பமான சாகசம், அதைத் தடுக்க நான் யார்?’ என உறுதியாக நினைத்தேன்.
“நீ என்னை போக வேண்டாம்னு சொல்லிருக்கலாம்ல?” என்று அவன் சொன்னபொழுது அவன் சரித்த குங்குமத்தின் மீது நீர் சொட்டுகள் விழுந்தன.
கடுந்தனல் கங்குகள் மென் தீயை ஏவிய பெரிய குழிக்குள் விழுந்தேன். இதே போன்ற சூழல்கள் நூறுக்கும் மேல் கடந்திருக்கிறோம். அவனை மொத்தமாக என்னிடம் சமர்ப்பிப்பது ஒன்றே அவன் காதல். பதிலுக்கு என்னை மொத்தமாக வாரி அவனுள் ஒளித்துக்கொள்வான். அந்தக் காதல் மூச்சு முட்டும். ‘இவ்வளவு அன்பு யாருக்கு கிடைக்கும்?’ என்ற திகைப்பு வந்தாலும், இவ்வளவு அன்பு யாருக்கு வேண்டும் என்ற திகட்டலும் அழுத்தும்.
நானும் அவனும் மட்டுமே உலாவக்கூடும் வனம் ஒன்றில் என் மனம் நிகழ்த்தும் பொழுதுகள் மட்டுமே புலர்ந்து கசியும். இரவு, பகல் என்ற வரிசைக்கிரமம் இல்லாது பொழுதுகள் குழம்பித் தவிக்கும். அவனிடம் எந்தப் பிசகும் இருக்காது. முதல் நாள் முதல் இக்கணம் வரை எள்ளிற்கும் குன்றாத அவனின் காதல் என் குருவி மனதிற்கு பனங்காய். வனத்தில் நான் காணும் ஒரே மனித உருவாக அவன் மட்டுமே ஆகிப்போவதில் எனக்கும் எந்தப் புகாரும் இல்லை. அவன் என்னுள் திளைத்துக் கிடக்கும் வேளையில் வானை நோக்கி வேர் விட்டிருக்கும் மரங்களை நான் வியப்பதில் அவனுக்கு உவப்பில்லை. இரவின் நட்சத்திரங்களை நான் பிணைத்துக்கொள்வதில் அவனுக்கு ஈடுபாடில்லை.
“உன்னதான் கேக்குறேன் நீ ஏன் தடுக்கல?” முருகன் சன்னிதானத்திற்கு முன்பாக நின்று கேட்டான். அவனுக்குப் பின் யாகசாலையின் சிதிலங்கள் போரில் மடிந்து கிடக்கும் வீரர்களைப்போல் குலைந்து கிடந்தன. அவன் தலைக்கும் மேல் கோபுர வாசல் புதுக்கலசங்களுடன் ஒளிர்விட்டது. அவன் கண்களில் எப்போதும் போல் அவன் காதல் பரிதவித்தது.
பதில்கள் இருந்தும் அமைதியாக நடக்க ஆரம்பித்தேன்.
“பதில் சொல்லு. இப்டி அமைதியா வராத”
“நாம பேச ஆரம்பிச்சாலே எப்படியும் சண்டைலதான் முடியும் யூனூஸ்”
“நீ என் மேல ரொம்ப கோபமா இருக்க நல்லாவே தெரியுது” என முடித்து, கொடி மரத்தின் அருகில் அமர்ந்தான்.
அவனை அப்படியே விட்டு விட்டு நகர்ந்து போகத்தான் மனம் எண்ணியது. ஆனாலும் செயலில் அது கூடி வரவில்லை. அவன் அருகில் அமர்ந்தேன்.
“எனக்கு எந்தக் கோபமும் இல்ல”
“இல்ல. பொய் சொல்ற”
“நெஜமா இல்ல”
“என் மேல கோபம் இருந்தா மட்டுந்தான் என் பேரை நீ சொல்லுவ. அதுவும் இவ்ளோ அழுத்தம் திருத்தமா”
என் கைகளில் இருந்த அர்ச்சனை பைக்குள்ளிருந்து வெளிச்சம் வந்து வந்து அடங்கியது. நான் அவனையும் அந்த வெளிச்சத்தையும் மாறி மாறி பார்த்தேன். “எடுத்து பேசு” என்று சொல்லி விட்டு எழுந்து சென்றான்.
பூக்களின் தண்மையாலும், குங்கும துகள்களாலும் அந்த செல்போன் தன் தொழில் நுட்பம் துறந்து தெய்வீகமாக இருந்தது. மீண்டும் வெளிச்சம். நித்யா அழைக்கிறாள். பேசுவதற்கு எதுவுமே இல்லாதது போல் உணர்ந்தேன். ஆனாலும் அவள் அழைப்பதை நிறுத்துவதாக இல்லை. காலையிலிருந்தே அழைக்கிறாள். இவ்வளவு நேரமாகவும் அதை அணைத்துதான் வைத்திருந்தேன். எப்பொழுது திறந்தேன் என்றும் நினைவில்லை. இதற்கு மேலும் அவளைத் தவிர்க்க முடியாது.
“ஹலோ”
“எங்கடி இருக்க? எத்தனை தடவை போன் பண்றேன். எடுத்து பேசினா என்னடி?”
“சரி, சொல்லு நித்யா”
“நான் என்னடி சொல்லனும். நீ சொல்லு. இப்ப எங்க இருக்க?”
…..
“தயவு செஞ்சு சொல்லுடி எங்க இருக்க?”
“….. தென்காசி”
“தென்காசியா? அவ்ளோ தூரம் ஏன்டி போன? யார் கூட போன?”
“யாருமில்ல”
“இப்டி சொல்லாம கொள்ளாம காரை எடுத்துட்டு போய்ட்டின்னா நாங்க எங்கன்னு உன்ன தேட்றது?”
“ஏன் தேட்றீங்க? வந்துடுவேன்”
“புரியாம பேசாத. யூனூஸ் அப்பா அம்மா இங்க உன்ன பார்க்க வந்துருக்காங்க”
கொடி மரத்தைத் தாங்கிய பீடம் விரிசல் காணுவது போல் இருந்தது. அவன் எங்கே எனத் தேடினேன்.
“ஹலோ… ஹலோ…. “ நித்யா பதற்றம் அடைந்தாள்.
“ஏன் வந்திருக்காங்க?”
“இதென்ன கேள்வி தாரா? ஏன் அவங்க உன்ன பார்க்க வரக்கூடாதா?”
“….”
“சரி, நீ தனியா வந்துடுவியா? இல்ல அப்பாக்கிட்ட சொல்லி அங்க ஒரு ட்ரைவர் ஏற்பாடு பண்ணவா?”
“வேண்டாம். வந்துடுவேன்”
“நீதான் எல்லாம் கிழிப்பியே. நைட் ட்ரைவ் வேண்டாம். அம்பிகாக்கிட்ட பேசுறேன். அவ வந்து உன்ன அவ வீட்டுக்கு அழைச்சிட்டு போவா. நீ வேற எந்த குழப்பமும் பண்ணாம அவ கூட போ”
“இல்ல வேண்டாம்“
“எங்க நிலைமையைக் கொஞ்சமாச்சும் புரிஞ்சிக்கோ. அப்பா அம்மா ரொம்ப உடைஞ்சி போய்ருக்காங்க உன்ன காணோம்னு. போலிஸ்க்கு போகாம நான்தான் அவங்கள தடுத்தேன்”
“……”
“ஹலோ… தாரா, நான் பேசுறத கேக்குறியா?”
“கேக்குறேன் “
“உன் நிலைமை எனக்குப் புரியுது தாரா. ஆனா, வேற வழியில்ல. நீதான் வெளில வரனும். உன் இழப்பு ரொம்ப பெருசுதான். ஆனா…”
“சரி நித்யா. நாளைக்கு வந்துடுவேன்னு சொல்லு அப்பாக்கிட்ட”
“போனை ஆப் பண்ணிடாத ப்ளீஸ். அம்பிகா காண்டாக்ட் பண்ணுவா”
“சரி. ஒரு ஒரு மணி நேரம் கழிச்சி அவகிட்ட சொல்லு. இல்லன்னா அவ உடனே இங்க வந்து என்ன ஏதுன்னு என்னை துருவி கேட்பா. என்னால இப்ப யாருக்கும் விளக்கம் தர முடியாது”
“சரி. நீ கவனமா இரு”
“ம்ம்ம்”
கொடிமரத்தின் ஊடே பெருமானைப் பார்த்தேன். அங்கேதான் அவர் வீற்றிருக்கிறார். என் கண்களுக்கு அகப்படவில்லை என்றாலும் அவர் அங்கேதான் வீற்றிருக்கிறார். இருள் அப்பிய கருவறையில் கருந்துளையிலிருந்து முளைவிட்ட கடவுள் துகள் என்றுதான் அவரைச் சொல்வான் அவன்.
எங்கிருந்தோ வந்து மீண்டும் என்னருகில் அமர்ந்தான். இம்முறை அவனை ஏறெடுத்துப் பார்க்க அச்சமாக இருந்தது. அவன் கால் கட்டைவிரலில் நகம் பெயர்ந்து இரத்தம் வழிந்தது. கோவில் பிரகாரத்தின் கருங்கல் தளத்தில் வடிந்து பள்ளங்களை நிரப்பி மேடுகளில் ஏறியது. என் கண்ணீர் கொண்டு அதன் செந்நிறத்தை நிறமிழக்கச் செய்ய இயலவில்லை. அவன் உதிரத்திலும் என் கண்ணீரிலும் கொடிமரம் தெப்பம் போல் மிதக்கத் தொடங்கியது.
“சின்ன வயசுல எனக்கு அதிகமா பென்சிலின் ஊசி போட்டாங்கல்ல. அதான் இவ்ளோ இரத்தம் போகுது” என்றான்.
நான் அமைதியாக மட்டுமே இருந்தேன்.
“என்ன இப்டி முட்டாள் தனமா பேசுறேன். சண்டைக்கு வராம அமைதியா இருக்க!” என என் கால்விரல்களை நீவினான் . அவனின் தொடுகை தாளாத் துயரை வார்க்கும் என ஒரு நாளும் நினைத்ததில்லை. நான் எழுந்து கொண்டேன்.
காசிக்குச் செல்லும் வழியிலேயே இறக்க நேரிடும் தன் தென்புலத்து பக்தர்களுக்காக வாரணாசி போலவே செண்பகபொழிலில் தனக்கென கோவில் எடுத்துக்கொண்டார் இந்த நாதர். தென்னிந்திய வெப்ப நிலைக்கு ஓர் நிலைப்பாடு. எறும்பு ஊர்ந்து சென்ற வழியில் இந்த லிங்கத்தைக் கண்டார்கள் என்றால் என் துயரம் பெருக்கெடுத்த நிலையில் இங்கே நான் நிற்கிறேன்.
“அர்ச்சனை உண்டோ!” என்றார் அர்ச்சகர்.
“இல்லை” என்றேன்.
என் சிந்தைக்குள் சிறக்கும் யாதொரு வடிவாகவும் உருவகித்துக் கொள்ளும்படியாக கருந்துளையில் முளைத்து நின்றார் நாதர். ஆராதனைத் தட்டுடன் என் முன் நின்றார் அர்ச்சகர். தீபத்தை ஒற்றிக்கொண்டு திருநீறு பூசிக்கொண்டேன்.
பிரகாரத்தைச் சுற்றி நடந்தேன். இருள் இன்னும் தடிமனாக கவிந்து விட்டது. அவன் இங்கேதான் எங்கேயோ இருப்பான். என் முன்னே ஒரு இளம்பெண்ணும் ஒரு பேரிளம் பெண்ணும் நடந்து சென்றார்கள். மிக தீர்க்கமான நடை அந்தச் சிறியவளுடையது. பேரெழில் மிகுந்த பின்னழகு. பெண்ணின் வனப்புதான் எத்துணை பூரணமானது! அண்டம், வெளி எனச் சிக்கித் தவிக்காது பெண்ணுள் சரண் கொள்ளும் ஆண் மனம் ஞானத்தின் சாயல் பெற்றது.
அவள் அன்றுதான் முதன் முதலாக ஒரு புதுப்புடவையை உடுத்தி இருக்க வேண்டும். புறாவின் வால்பகுதி போல அவளின் பின்னங்கால்களில் புடவையின் சரிகை புடைத்திருந்தது. தனக்குள்ளிருந்து தன்னையே மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டு குதிகால்களை கணீரெனப் புதைத்து நடந்தாள். பிரகாரத்தின் வளைவில் அவர்கள் இருவரும் மறைந்தனர். நான் பிரகாரத்தின் கல் சுவற்றைத் தடவியவாறே நடந்தேன்.
ஒரு சதுர வடிவக் காகிதத்தில் எதிரெதிர் பக்கத்தில் வைக்கப்பட்ட இரண்டு புள்ளிகள் நானும் அவனும். யாதோ ஒன்று அக்காகிதத்தை சமமாக மடிக்க நானும் அவனும் சந்தித்தோம். அதே யாதோ ஒன்று காகிதத்தை மடிப்பிலிருந்து இப்போது மீட்டிருக்கலாம். நான், அவன், காகிதம் மற்றும் அந்த யாதோ ஒன்று. திரி, எண்ணெய், அகல் மற்றும் அந்தச் சுடர். என் நடை மேலும் தளர்ந்து விட்டது..
திடீரென எனது இடது தோள்பட்டையை மோதிவிட்டு யாரோ ஓடுவது போல் இருந்தது. யாரென்று நான் திரும்பியதும் ‘சாரி’ என்று சொல்லிக்கொண்டே ஓடினாள் அதே சிறியவள். அவளைத் துரத்திக்கொண்டு அந்த பேரிளம்பெண்ணும் ஓடினாள்.
“ஏய் நில்லுடி. அந்தப் பையன் இவ்ளோ தூரம் வந்துருக்கு. நின்னு ரெண்டு வார்த்த பேசு” என்று சத்தம் போட்டுக்கொண்டே துரத்தினாள். இளம்பெண் அளவிற்கு வேகம் இல்லையென்றாலும் கனத்த உடலைக் குலுக்கி குலுக்கி வேகம் போல நாடகம் செய்தாள்.
அபிஷேகம் வெளியேறும் பிரநாளத்தின் அருகே அந்த இளைஞன் நின்றான். தன் அலைபேசியில் தன்னை அலங்கரித்துத் தவித்து நின்ற அதே இளைஞன். அவன் முகத்தில் ஒரு ஏமாற்றம் இருந்தது. ஆனாலும் அவன் அவளுக்காக காத்திருந்தான். இப்படி வெட்கம் கொள்வாள் எனத் தெரிந்திருந்தால் ஒப்பனையைக் குறைத்திருப்பானோ என்னவோ. குனிந்த தலையுடன் சிரித்துக் கொண்டே ஓடிய சிறியவளை நினைத்துக்கொண்டேன். பிடித்ததனால் பிடித்த ஓட்டம் அது. ஈர்ப்பற்ற ஆண்களை இன்னும் எளிதாக எதிர்கொள்வார்கள் பெண்கள்.
தல விருட்சத்திற்கு அருகில் விமானம் பார்க்கும் இடம் என்று எழுதப்பட்ட பகுதி ஒன்று இருந்தது. கல்லூரி மாணவர்கள் கூட்டமாக அந்த இடத்தில் நின்று கொண்டு தனக்கு விமானம் தெரிகிறது, தனக்கு தெரியவில்லை எனக் குதிப்பதும் ஓடுவதுமாக ஒருவரையொருவர் தள்ளி விளையாடினர். அந்தக் கூட்டத்திலேயே உயரம் குறைந்த ஒருவன் அங்கே கிடந்த பாறையில் ஏறி நின்றான். அவன் இறங்கியதும் நான் ஏறலாம் எனக் காத்து நின்றேன். மனமுருகி வேண்டினான். மற்றவர்கள் போனது கூட தெரியாமல் வழிபாட்டில் இருந்தான். அவன் மெல்ல கண்களைத் திறந்து அருகில் இருந்த நண்பர்களைத் தேடினான். யாருமே இல்லை. அவனுக்கு நேராக நின்ற என்னைப் பார்த்தான். என்னைக் காட்டிலும் ஆறேழு வயது இளையவனாக இருக்கலாம். நான் புன்னகைத்தேன். அவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. கூச்சத்துடன் ஒரு புன்னகையை வரவழைத்து வெட்கத்துடன் ஓடினான். ஆண் பிள்ளைகள் வெட்கப்படும்போது பெயரற்ற, உருவற்ற, நோக்கற்ற காற்று போல் மிதக்கிறார்கள். இந்தக் காற்றுதான் கோபுரவாசல் வரையிலும் அவர்களைப் பாதுகாத்து அப்புறப்படுத்துகிறதோ என்னவோ!
அவன் இறங்கிச் சென்ற சிறு பாறை மீதேறி நான் விமானத்தைப் பார்த்தேன். என் அருகில் யூனூஸ் நின்றான். நான் பாறை மீது நின்றும் அவனை விட உயரம் குறைவாக இருந்தேன்.
பாறையிலிருந்து இறங்கி தல விருட்சத்தின் அருகில் வந்து நின்றேன்.
இயற்கையிலேயே அம்மரத்தின் இலைகளுக்கு அப்படியொரு பச்சை நிறம் எப்படி வாய்த்திருக்கும் என ஆச்சர்யமாக இருந்தது. நிலவொளி உச்சிக்கு நகர்ந்து கொண்டிருக்கும் நேரத்திலும் அந்தப் பச்சையும் அதன் நரம்புகளின் துல்லியமும் காலத்தை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் நகர்த்துகின்றன. பராக்கிரமப் பாண்டியன் நட்டு வைத்த அதே பசுமை தடவிய வில்வமாகவும் இருக்கலாம். கோவிலின் கருங்கல் மதிலைப் பின்புலமாகக் கொண்டு ஒரு இருபது வயது மதிக்கத்தக்க மரமாக இருக்கும் அந்த தல விருட்சம் பேரதிசயமாகத்தான் இருந்தது. காலத்தால் பருக்காத, மழை வெயிலால் வெதும்பாத, வயோதிகத்தால் தள்ளாடாத என்றென்றைக்குமான வாலிபம் பூத்த மரம். தான்தோன்றித்தனமாகக் கிளை விடாமல் நல்லதொரு சிந்தனையில் மூன்றே மூத்த கிளைகள் விரித்த விருட்சம். மிகவும் சாந்தமான விருட்சம்.
மூன்று என்பதுதான் எத்தனை கட்டமைப்பானது.!
நீர், நிலம், காற்று.
திட, திரவ, வாயு.
நொடி, நிமிடம், மணி.
நான், அவன், காகிதம்.
விருட்சத்தைக் கடந்து நடந்து அதன் உச்சிக்கு அருகில் நிலவு தெரியும்படியான கோணத்தில் நின்று பார்த்தேன். காட்சிகளை அவை தோன்றும் கோணத்தில் அல்லாது இன்னும் கொஞ்சமான நேர்த்திக்குப் பொருத்திக் காண்பதுதான் தனித்துவத்தின் பெரும்பேறு. மாலை மயங்கி இருளுக்குள் கரைந்து கொண்டிருக்கும் அந்தப் பொழுதில் நட்சத்திரங்கள் அற்ற தூய கருவானத்தின் நிலவிலிருந்து பொங்கி அந்த விருட்சம் பூமியில் ஊன்றிக் கொண்டிருந்தது.
இன்னும் சற்று பின்னோக்கி நகர்ந்தேன். நிலவுச் சட்டகத்தில் அந்த மூன்று கிளைகள் கடிகார முள்களாக ஊர்ந்தன.
அவன் எனக்கு மிக அருகில் இருப்பதை உணர முடிந்தது.
“இனி என்னைத் தேட மாட்டியா?” என்றான்.
அவனுக்கு சொல்லக்கூடியதாகவும், எனக்கு உதவும்படியாகவும் ஒரு பதிலைத் தேடிக்கொண்டிருந்தேன்.
“சின்ன வயசுல எனக்கு அதிகமா பென்சிலின் ஊசி போட்டாங்க. அடிக்கடி காய்ச்சல்னு உடம்புல ஏதோ பிரச்சனை. அப்பாவுக்கும் அது என்ன ஊசின்னு கூட அப்போ புரியல. ஆனா, நான் அடிக்கடி மயக்கம் போட்றதும் தலையைப் பிடிச்சிக்கிட்டு கத்துறதும் அதிகம் ஆக அந்த ஊசிதான் காரணம்னு நம்ப ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கு தெரியும் தாரா, அது அந்த ஊசியால வந்த பிரச்சனை இல்ல. எனக்கு இந்த உலகத்து மேல ஈர்ப்பு அதிகம். நமக்குப் பிறகு இந்த உலகம் அப்டியே இருக்கனும்னு ஒரு ஆசை. இரவும் பகலும் இப்போ போல எப்பவும் மாறி மாறி வரனும்”
அவன் இதைப் பல முறை பல வகையில் சொல்லி இருக்கிறான். அவன் அதைப்பற்றி பேச ஆரம்பிக்கும்போதே நிறுத்தி விடுவேன். இன்று அவனை அப்படித் துண்டிக்க மனமே இல்லை. துயரம் கொடுக்கும் துர் கணங்களும் மிக முக்கியமானவை. காலம் சென்றால் அதே துயரம் வாய்க்காது. துயரத்தில் புலப்படும் உண்மைகள் நிரந்தரமானவை.
“பூமி, சூரியன், அண்டம், பேரண்டம் அதுக்கும் முன்ன…!? இந்த உலகம் அப்டியே இயங்கனும். மொத்தமா அழிஞ்சாலும் ஒரே ஒரு துகள் மீதமிருக்கும்னு ஒரு நம்பிக்கை கெடச்சா கூட போதும்னு ரொம்ப பதைப்பா இருக்கும். வருசத்துக்கு ஒரு முறையாச்சும் அந்த Black Hole சிந்தனை வந்துடும். அது எப்போ வருதுன்னும் தெரியாது. நான் எங்க இருக்கேன்னும் தெரியாது. அப்டியே மயங்கி விழுந்துடுவேன். கண் முழிச்சா எதாவது ஹாஸ்பிடல்ல இருப்பேன். ஆனா, ஒரு ஆறு வருசமா எனக்கு அப்படியொரு பதைப்போ மயக்கமோ வந்ததே இல்ல” என்றான்.
அந்த ஆறு வருடமும் நான் அவனிடம் வந்திருந்த காலம். இதை அவன் எனைக் கண்ட இரண்டாவது நாளிலேயே சொல்லி இருக்கிறான். “என்னை அந்த black Hole கிட்டேருந்து நீதான் காப்பாத்துற. உன்னை பார்த்ததுக்கு அப்றம் எனக்கு இந்த பிரபஞ்சம் பத்தின சிந்தனையே இல்ல” எனக் கைகளை விரித்து காற்றை ஆழ இழுத்து சுவாசிப்பான்.
அவனுடைய கருந்துளை எனக்கு ஒரு பொருட்டாகவே இருந்ததில்லை. அவனின் பதைப்பும் வேதனையும் எனக்குப் புரிந்ததே இல்லை. இந்த உலகம் பற்றி அப்படி என்ன சிந்தனை அவனுக்கு! நமக்குப் பிறகு இந்த உலகம் இருந்தால் என்ன போனால் என்ன!
இரவில் வானத்தைப் பார்ப்பதையே தவிர்ப்பான். இருளின் வானை அவனைப் பார்க்க வைத்து அவன் படும் வேதனையை ரசிப்பதில் எனக்கொரு இச்சை. அவனை இம்சிப்பதில் எனக்கொரு காதல். கட்டாயப்படுத்தி ஒரு நாள் நட்சத்திரங்கள் பூத்த வானைப் பார்க்க வைத்தேன். அவனால் அந்த இருளையும் வானையும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. உண்மையில் அவனுக்கு அந்த இருளும் வானும் பேரச்சம் ஊட்டின. அவன் கண்கள் மேல் நோக்கிச் செருகி கருவிழி மறைந்து வெண் திரை போர்த்தின. அவன் உடல் தளர்ந்து தூசி போல் ஆனது. தலையைப் பிடித்துக் குனிந்து கொண்டான். நான் செய்வதறியாது அவனிடமிருந்து சில அடிகள் பின்னகர்ந்தேன். அவன் அசைவற்று அப்படியே நின்றான். இரண்டொரு நிமிடங்களுக்குப் பிறகு தலையை நிமிர்த்தி என்னைப் பார்த்தான். அவனிடமிருந்து நான் விலகி இருப்பதைக் கண்டான். வேகமாக முன்னகர்ந்து என்னை இழுத்து அணைத்துக்கொண்டான். அவன் உடல் நடுங்கிக்கொண்டு இருந்தது. உச்ச அதிர்வில் இருந்த அவன் இதயம் மெல்ல அமைதியானது. வியர்வை பூக்க என்னையும் நனைத்திருந்தான். எங்களுக்கு முன் கிடந்த கடலோ, சூழ்ந்திருந்த இருளோ, கால்கள் புதைந்திருந்த கரையோ அவனுக்கு யாதொரு பற்றையும் அளிக்கவில்லை.
அவன் மொத்தமாக விழுந்த கருந்துளை நானாகிப்போனேன்.
இப்போது கொடி மரத்தின் திசையிலிருந்து எனை நோக்கி வந்தான். அவன் அணிந்திருந்த சட்டையின் நிறம் மாறி இருந்தது. தொழுகையிலிருந்து எழுந்தவன் போல தலையில் ஒரு கைக்குட்டையைக் கட்டி இருந்தான்.
அர்ச்சனை பைக்குள் செல்போன் ஒளிர்ந்தது. எடுத்துப் பார்த்தேன். அவனது அப்பா அழைக்கிறார். நேற்றும் அழைத்திருந்தார். மனிதர்களை நாம் தவிர்க்க நினைக்கும் வகையில் தவிர்க்க முடிவதில்லை. நம் முடிவிற்கு நாமே சில தருணங்களில் ஒத்துழைப்பதில்லை.
“ஹலோ”
“நீ எங்கம்மா இருக்க?”
“சொல்லுங்க. நான் வந்துடுவேன்”
“அவன் முகத்துக்கு ஒன்னும் ஆகலயாம். நீ பார்க்கலாம். நாளைக்கு உடம்பு வந்துடும்”
“இல்ல. நான் பார்க்க விரும்பல”
சற்று அமைதி காத்தார். பிறகு “சரிம்மா. நீ தைரியமா இரு. அவன் உன்னை சுத்திதான் இருப்பான்” என்றார்.
செல்போனை அணைத்து விட்டு அவனை இது நாளும் அல்லாத வகையில் பார்த்தேன். இனிப் பார்க்கவே முடியாதவன் போல கண்களில் பூரணமாக பூசிக்கொள்ளும் வகையில் பார்த்தேன். அவன் எப்போதும் என்னைக் காணும் வகையில் இப்போது நான் அவனைப் பார்த்தேன். அவன் காதலித்த தீவிரத்தில் ஒரு நாளும் நான் அவனைக் காதலிக்கவில்லை. இப்படி ஒரு நாள் இல்லாமல் போவான் என நான் நினைத்ததே இல்லை. அந்த நிலையற்ற ஒன்றை அவன் எப்போதும் உணர்ந்திருந்தான். ஒவ்வொரு நொடியையும் பயன்படுத்தி இருந்தான். உறங்கும் நேரத்தைக் கூட மிச்சப்படுத்தி இருந்தான். அவனை மட்டும் கருந்துளைக்குள் தள்ளி நான் வெளியை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறேன். ‘என் வாழ்வில் இனி நீ இல்லை’ என நான் அவனிடம் சொல்லி இருக்கக்கூடாது.
அவன் என்னைப் பிரிந்து ஏதோ ஓர் மலை உச்சியில் இருந்த பொழுது அப்படி ஒரு வாய்ச்சண்டையில் நான் ஈடுபட்டிருக்கக்கூடாது. அவனைச் சூழ்ந்திருக்கும் அந்த இரவில் நான் அவனைக் கைவிட்டிருக்கக் கூடாது. அந்தப் பெருவெடிப்பை நான் நிகழ்த்தி இருக்கக்கூடாது. நான் இல்லாது போனால் எஞ்சி இருக்கும் அந்தக் கடைசித் துகளைத் தேடி இருப்பான். மலை உச்சியிலிருந்து தவறித்தான் விழுந்திருப்பான். அவன் மனமுவந்து விழும் கருந்துளை நானாக மட்டுமே இருக்க முடியும்.
இல்லாமல் போகும் ஒன்றை அவன் சொல்லிக்கொண்டே இருப்பான். இல்லாமல் போகும் ஒன்றிற்காக நான் என்னை வருத்திக்கொண்டதே இல்லை. முழுமையாக என்னை ஆட்கொண்டிருந்த அவனின் வலுவில் நிலையாமையை நான் சந்தேகிக்கவே இல்லை. நிலையாமை உண்டே தவிர இல்லாமை என்ற ஒன்று இல்லவே இல்லை. ஒன்று வேறொன்றாக நிச்சயம் இருக்கும். என் கோபத்தில் இருக்கும் காதல் போல, அவன் காதலில் இருந்த கோபம் போல.
ஆலயத்தை விட்டு உடனே வெளியேற வேண்டும் என்ற மனநிலை.
இப்பொழுது எனக்கு வலப்புறமாக யாகசாலையின் அதே சிதிலங்கள். நான் திசை மாறி இருக்கிறேன். சிதிலங்கள் எனக்கு இடம் மாறிக் கிடக்கின்றன. சபையில் யாருமே இல்லை. சிவ புராணமும் இல்லை பக்தர்களும் இல்லை.
கோபுர வாசல் காற்றை உள்ளே இழுக்கிறதா அல்லது வெளியே அனுப்புகிறதா என்று புரியவே இல்லை. காற்று சுழன்று சுழன்று புதியவள் ஒருத்தியை அளந்து பார்க்கும் மூதாட்டியைப் போல் விபரம் தேடுகிறது.
கோபுர வாசலின் மையத்தில் பசு ஒன்று படுத்திருக்கிறது. நான் உள்ளே செல்லும்போது இல்லாத பசு. அசைபோட்டுக்கொண்டு அந்தப் பெரிய கோலத்தின் நடுவில் மிகப் பொருத்தமாகப் படுத்திருக்கிறது. அளவான கொம்புகள் அதன் கண்களை மேலும் சாதுவாக்கியிருந்தன. கோவிலை விட்டு வெளியேறுபவர்கள் அதன் பின்பக்கத்தைத் தொட்டு வணங்கிச் சென்றனர். யாருக்கும் அருள் பாலிக்கும் தோற்றத்தில் அது படுத்திருக்கவில்லை. அவ்வளவு கூட்டத்திலும் மிகத் தனிமையாக தன்னை உணர்ந்து இடையில் இருக்கும் நந்தியைக் கடந்து விஸ்வநாதரை உள்வாங்குவது போல அவர் திசை நோக்கிப் படுத்து இருந்தது. சிறுமி ஒருவள் அதன் வயிற்றை வருடிக்கொடுத்தாள். அப்போது மட்டும் பசு தன் தலையைத் திருப்பி நாவால் அவள் கையைத் தள்ளியது.
அம்பிகா என்னருகே வந்து விட்டாள். நான் அந்தப் பசுவைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். “வயித்தப் பார்த்தாலே தெரியல அது கன்னு போடப்போகுது” என்றாள்.
படிகளில் இறங்கியபோது அவன் என் கைகளுக்குள் வர முயன்றான். நான் அந்தக் குளுமையை வாங்கிக்கொள்ளத் தயாராக இல்லை.
பசுவின் பின்னந்துளையின் இருளிலிருந்து ஒரு துகள் வெளிச்சம் வடியத் துவங்கியது. அக்கருந்துளையிலிருந்து அதுவரை அங்கே இல்லாத ஒன்று இறங்கிக்கொண்டிருந்தது. இங்கு எதுவுமே இல்லாது போவதில்லை. ஒன்று வேறொன்றாக இங்கேதான் இயங்கப் போகிறது.
சித்தன் ஒருவன் தமருகத்தை ஒலித்துக் கொண்டு சாலையைக் கடந்தான். அவனுக்கு சிவனோ, நிலவோ, இருளோ ஒரு பொருட்டில்லை. என் காதில் விழும் தொலைவைக் கடந்தாலும் அவன் உடுக்கை துடித்துக்கொண்டுதான் இருக்கும்.
காரில் ஏறிக்கொண்டேன். அம்பிகா காரை இயக்கினாள். கோவிலின் உள்ளிருந்த நிலவு கோபுரத்திற்கு வெளியே வந்து வழியனுப்பியது. அதனுள் விருட்சத்தின் மூன்று முள்களும் சுழன்று கொண்டிருந்தன.



