இணைய இதழ் 108சிறுகதைகள்

இளிவரல் – அகரன்

சிறுகதை | வாசகசாலை

காற்றோட்டமில்லா மந்தமான ஒரு மத்தியான வேளை அது.

லாவண்யாவைக் காண வந்த அஞ்சலி கையில் ஒரு நெகிழிப்பை நிறைய சாக்லெட், பிஸ்கட்களுடன் கொஞ்சம் பழங்கள் சகிதமாய்க் காலிங்பெல் அழுத்தினாள். காலிங்பெல் சத்தம் கேட்டு வெளிர் நீலவண்ண நைட்டியுடன் வாசலுக்கு வந்த லாவண்யா அஞ்சலியைக் கண்டதும் இன்முகம் பூத்தாள்.

“ஹேய் அஞ்சலி…!!! வாடீ…! கதவுதான் திறந்து இருக்கே; நேரா உள்ள வர வேண்டியதுதான…? எதுக்குடி இந்த காலிங்பெல் ஃபார்மால்ட்டி எல்லாம்?” மென்மையாக அலுத்துக் கொண்டாள்.

“அப்டி இல்லடி… உன் வீட்டுக்காரர் இருப்பாரோனு………” கண்களை வீட்டுக்குள் சுழல விட்டபடி மென்குரலில் சொன்னாள்.

“அவரு வீட்ல இருந்தா கதவு திறந்தா இருக்கும்..??!” லாவண்யா கண்களால் குறும்பாய்ச் சிரிக்க.. அர்த்தம் புரிந்தவளாய் பின் கழுத்தில் கையை வைத்து முகத்தில் அசடு வழிந்தபடி ஒரு வெள்ளந்தி சிரிப்பைப் பதிலாகத் தந்தாள்.

“உக்காருடி..!”

சோஃபாவில் அவளை இருத்தி ஜில் தண்ணீர் கொடுத்துவிட்டு கிச்சனுக்குள் சென்றவளை முன்னும் பின்னும் நோட்டமிட்டாள் அஞ்சலி.

லாவண்யா…. !

பூசிய உடல்வாகு, தேகத்தில் தேவையான செழிப்பு. முகத்தில் மங்கிடா பூரிப்பு; முன்பை விட இப்பொழுது தோலில் ஒருவித ஜொலிப்பு! ஆக, லாவண்யா மனதளவில், உடலிளவில் சௌபாக்யவதியாகத்தான் இருக்கிறாளென புரிந்து கொண்டாள். அப்படியே வீட்டையும் நோட்டமிடுகிறாள்.. நல்ல விசாலமான காற்றோட்டமான வீடு; வீட்டுக்குள் இன்றைய நவீனரக அவசிய, அவசியமற்ற அத்தனையும் குவிந்திருந்ததைக் கண்டவள், ‘பொருளாதார ரீதியாகவும் நிறைவாகவே இருக்கிறாள்’ என்பதும் தெரிந்தது.

கோயம்புத்தூரின் புறநகரில் புதிதாக உருவான கேட்டட் கம்யூனிட்டி பகுதியில் தனி வீடு ஒன்றை வாங்கி இருந்தாள் லாவண்யா. அவள் அஞ்சலிக்கு சென்னையில் படிக்கையில் அறிமுகம். கல்லூரி காலத்து தோழி; பத்து வருடப் பழக்கம். சில காலமாகவேச் சந்திக்க வாய்ப்பற்று இருந்தவளைக் கடந்த வாரம் தற்செயலாகக் கடைவீதியில் சந்தித்த போது வீட்டுக்கு வரச்சொல்லி இருந்தாள்.

 கிச்சனில் அஞ்சலிக்காக காபி கலந்து கொண்டிருந்தாள் லாவண்யா. ஆளுயரக் கண்ணாடி ஒன்று அஞ்சலி அமர்ந்திருந்த ஹாலில் ஒரு ஓரத்தை ஆக்கிரமிக்க.. அதன் முன் போய் நின்றவள் வெகுநாட்களுக்குப் பின்னர் தன்னை முழுமையாக ஒருமுறை கவனித்துப் பார்க்கிறாள். முகம் களையிழந்து ஒரு வாட்டம்.. பராமரிப்பற்ற சருமம்.. தேகமும் கழுத்தெலும்பு தெரியுமளவு மெலிந்து இருந்தாள்.

ஆனால், கல்லூரிக் காலங்களில் லாவண்யாவுக்கு இணையாக, சொல்லப் போனால் லாவண்யாவை விட அதி வசீகரமாய் இருந்தவள் அஞ்சலி. அப்பொழுதெல்லாம் லாவண்யா சராசரி அழகுள்ள பெண் மட்டுமே. ஆனால், அஞ்சலி ஒரு ஹீரோயின் மெட்டீரியல். லாவண்யாவுக்குக் காலம் செய்தது ஒரு மாயாஜாலம்; அஞ்சலியைப் பொறுத்தமட்டில் காலம் ஒரு சாத்தான்.

லாவண்யா எடுத்து வந்த காபி அஞ்சலியை நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தது. சூடாக மணக்கும் கமகம காபியை உறிஞ்சியபடி லாவண்யா பேச ஆரம்பித்தாள்.

“கேள்விப்பட்டேன் டி…! ஆனா, முழுசா விவரம் தெரியல.. ஏன் என்னாச்சு ஒனக்கும் பாலாவுக்கும்? டைவர்ஸ் போற அளவுக்கு..” அவளது குரலில் அக்கறையும் ஆதங்கமும் கலந்திருந்தது.

வெறுமையை முகத்தில் சுமந்தபடி ஒரு பெருமூச்சை உதித்துப் பேச ஆரம்பித்தாள்

“ரொம்ப ஆசைஆசையாதான் மேரேஜ் பண்ணுனேன்; 2 வருசம் நல்லாதான் போயிட்டு இருந்துச்சு. ரொம்ப சந்தோசமாதான் இருந்தோம். சந்தோசத்துக்கு இடைஞ்சல்னு குழந்தைய கூட தள்ளிப் போட்ருந்தோம்டி. அப்பப்ப வர்ற சின்னச்சின்ன சண்டைகளோட வாழ்க்கை ஓடிட்டுதான் இருந்துச்சு; அன்னிக்கு ஒருநாள் எனக்கும் பாலாவுக்கும் ஒரு வாக்குவாதம். ஆக்சுவலா, அது எங்களோட குடும்ப வரவு செலவு பத்தி பேச ஆரம்பிச்ச அந்த சண்ட… நான் வேலைக்கு போறத தொட்டு நின்னுச்சு.

“………………….!!!!!!!”

“அப்டி ஒண்ணும் நீ வேலைக்குப் போயி கிழிக்க வேணாம்னு சொன்னான்;

‘நா வேலைக்குப் போக ஒங்கிட்ட பர்மிசன் கேக்க வேண்டியதில்லன்னு சொன்னேன்… அதுக்கு அவனோட அம்மா என்ன சொன்னாங்க தெரியுமா?” இந்த இடத்தில் அஞ்சலியின் குரல் உடையத் தொடங்கியது.

“…………………”

பதட்டத்தோடு கேட்டுக்கொண்டிருந்த லாவண்யா அஞ்சலியின் கையைப் பிடித்தாள்.

“ஏன் வேலைக்குப் போனாதான் ஒனக்கு ஊர்மேய வசதியா இருக்குமானு கேட்டாங்க; அதுக்குதான் நா அவனோட அம்மாவ அறைஞ்சிட்டேன். இவன் எனைய அடிச்சு வீட்ட விட்டு வெளில தள்ளிட்டான்; வெளில போடினு தொரத்திட்டான்”

“ஏய் அழாதடி..!” லாவண்யா சமாதானக் குரலெடுத்தாள்.

“நா முழுசா நொறுங்கிட்டேன்டி.. அவன் என்னைய அடிச்சதுக்காண்டி இல்ல. எப்டி அவங்க என்னைய அப்டி பேசலாம்? அதுக்கப்பறமா சமாதானம் பண்ண பேச்சுவார்த்தை நடந்துச்சு; ‘உங்க சமாதான மசுரெல்லாம் வேணாம்’டானு டைவர்ஸ் அப்ளை பண்ணிட்டேன்…!”

“…………….!”

“உனக்கே தெரியும்; காலேஜ் டேஸ்ல எவ்ளோ பசங்க எம்பின்னாடி சுத்துனானுங்க..! யார் கூடவாச்சும் பழகிருக்கேனா?? யார் கூடவாச்சும் பைக்லவாச்சும் போயிருப்பேனா..? ஒழுக்கமா நா இருந்ததுக்கு எம்புருசன் வீட்டுல எனக்கு கெடச்ச பேரு பாத்தல்ல. லாவண்யா முகம் சற்று கலக்கமாய் மாறியது. கல்லூரிக் காலங்களில் இரண்டு மூன்று காதலைக் கடந்தவள் லாவண்யா. அந்த நினைவுகள் வரவே சட்டென சுதாரித்து அந்த உறுத்தலை உதறி, “சரி கேஸ் முடிஞ்சிடுச்சா?” என்றாள்.

“ம்ம்.. ஒன்ற வருசமா கேஸ் நடந்துச்சு; போன மே மாசந்தா டைவர்ஸ் கெடச்சது..!” சோகம் நீர்த்த குரலில் சொன்னாள்.

‘மன முறிவுக்குப் பின்னர் நிகழும் மணமுறிவு எனப்படுவது வெறுமனே இச்சமுதாயத்திற்கென நிகழ்த்திடுமொரு சம்பிரதாயச் சடங்கு மாத்திரமே; நாற்பத்திச் சொச்சம் முறை வெட்டுப்பட்டு இறந்த ஒருவனது சடலத்தைக் கூராய்வு செய்திட கத்தி தீண்டுகையில் எப்படி வலியற்று கிடக்குமோ, அதுபோல.’

“சரிடி.. இப்ப என்ன மைண்ட்செட்ல இருக்க..? செகெண்ட் மேரேஜ் பத்தி யோசிச்சயா? வீட்ல எதாச்சும் அலையன்ஸ் பாக்குறாங்களா? “

“இல்லடி. என் வீட்ல அம்மா மட்டுந்தான… அவங்களும் வயசானவங்க.. அண்ணா பெங்களூர்ல இருக்கான். நாலு நாளைக்கு ஒருக்கா கால் பண்ணுவான். எப்பவாச்சும் ஒரு ஃபார்மால்ட்டிக்கு ‘மாப்ள பாக்கவா?’னு கேப்பான். ‘இல்ல இருக்கட்டும்!’னு சொல்லிடுவேன்.”

“ஏன்டி.. அண்ணந்தான..! எதாச்சும் அலைன்ஸ பாக்கட்டுமே… இப்டியே இருந்துட முடியுமா? “

“அந்த நல்லவன் பாத்த மாப்ளதான்டி இந்த நல்லவன் பாலா. இனி திரும்ப அவனே பாத்தா எப்டி மாப்ளய பாப்பான்? அவனுக்கு என்னைய வீட்ல இருந்து கடத்திவிட்டா போதும். நா அவன நம்ப ரெடியா இல்ல..! போதும் பா.”

“சரி, டென்சன் ஆகாத.. கொஞ்சம் பொறுமையா இரு; கண்டிப்பா நல்லதே நடக்கும்!” பேசி முடிக்கையில் ஸ்கூல் வேன் ஹார்ன் சத்தம் கேட்க.. வாசலுக்குச் சென்ற லாவண்யா தன் மகள் கனலியைக் கூட்டிக்கொண்டு வந்தாள். கனலியைப் பார்த்தாள் அஞ்சலி. ஏதோ ஒரு பட்டாம்பூச்சிக்குக் கை கால் முளைத்ததைப் போல் அத்துனை நேர்த்தியாக இருந்தாள். கனலியைப் பேசச் சொல்ல சிறு தயக்கத்திற்குப் பின் கொஞ்சம் மழலை உதிர்த்தாள். அஞ்சலி தான் கொண்டு வந்திருந்த சாக்லெட் பையை அவளிடம் நீட்ட “தாங்க் யூ” என்றாள் கனலி.

அஞ்சலியிடம் பேசியபடியே மகளைக் கொஞ்சினாள் லாவண்யா. அஞ்சலியோ லாவண்யாவை விடுத்து கனலியைப் பார்த்துக் கொண்டே பதிலளித்தாள். சற்று நேரத்தில் கிளம்பியவளை “ஒனக்கு எப்ப தோணுனாலும் ஒடனே கிளம்பி வாடி!” என லாவண்யா சொல்ல..

“கண்டிப்பா வருவேன்டி… உன்ன பாக்க இல்லனாலும் இந்தச் செல்லத்த பாக்க வர்றேன்டி..!” சொல்லிக்கொண்டே கனலியின் கன்னத்தில் அழுத்தமாய் ஒரு முத்தம் பதித்து விடைபெற்றாள்.

தன் ஸ்கூட்டியில் வீட்டை நோக்கிப் புறப்பட்டவள் பயணத்தில் சில விடயங்களை மனவாயில் அசை போட்டாள். சென்னையில் கல்லூரிக் காலத்தில் இதே லாவண்யாவும் அஞ்சலியும்தான் விடுதியின் அறையைப் பகிர்ந்திருந்தனர். வகுப்பில் பக்கத்தில் அமர்வோரை விட, விடுதியில் உடனிருப்பவர்களால்தான் ஒருவரையொருவர் ஆழமாகப் புரிந்து கொள்ளவியலும். அதிகப்படியான விடயங்களும் பகிர்ந்து கொள்ள வாய்ப்பாகவும் இருக்கும். அஞ்சலிக்குப் பெரிதாக ரகசியம், அந்தரங்கம் என எதுவும் கிடையாது. ஆனால், லாவண்யாவுக்கு அப்படியல்ல; கல்லூரியின் மூன்றாண்டுகளில் மூன்று காதலைக் கடந்திருந்தாள். அதில் முதல் காதல் மட்டும்தான் முத்தத்தோடு நின்றது. அடுத்த இரண்டும் அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. மூன்றாவது காதலில் ஒருமுறை அபார்சன் வரை சென்றாள்.

‘எனக்குத் தெரிஞ்ச லாவண்யா எந்த ஒரு ஒழுக்கத்தையும் கடைபிடிக்கலயே…! காலேஜ்லயே மூணு லவ்வு… தியேட்டர், ரூம்னு திரிஞ்சா. ஆனா, இப்ப அவளுக்கு எல்லாமே கிடைச்சிருக்கு. நல்ல வாழ்க்கை, அவளுக்கு ஏத்த மாதிரி புருசன், வீடு, காருனு எல்லா வசதியும். இது எல்லாத்துக்கும் மேல தங்க விக்கிரமாட்டம் ஒரு பொண்ணு..! ஆனா, நா முடிஞ்ச வரை ஒழுக்கமான வாழ்க்கையதான வாழ்ந்தேன். எனக்கு ஏன் எதுவுமே சரியா அமையல…?’

உண்மையில் அஞ்சலிகள் இந்தச் சமூகம் வரையறுத்த ஒழுக்கத்தின் பெயரால் வாழ்வைத் தொலைத்தவர்கள். அவர்கள் அன்றும் வாழ்ந்திருக்க மாட்டார்கள்; இன்றும் வாழ மாட்டார்கள்; ஆனால், ஒழுக்கம் குறித்த எந்த கற்பிதங்களையும் பின்பற்றா லாவண்யாக்கள்தான் வாழ்வை அன்றும் வாழ்ந்தார்கள். இன்றும் வாழ்கிறார்கள்..!

 மனதுக்குள் எழுந்த கேள்விகளுக்கு.. ‘என்னதிது..? அவ வீட்டுக்கே போயிட்டு அவள பத்தின காஸிப்ப எனக்குள்ள பேசிட்டு இருக்கேன்; ச்சே ச்சே இல்லல்ல இது காஸிப் இல்ல.. சின்ன ஒப்பீடு தான.’

தன் மனதிற்குள் ஒரு கேள்வியை எழுப்பி, அதற்குத் தானே பதிலும் அளித்து.. அதை ஒரு விமர்சனமும் செய்து அதற்கு ஒரு சுயசமாதானமும் செய்து கொள்ளல் என்பது மனித மனங்கள் குழம்பி நிற்கையில் செய்யும் அசட்டுத்தனங்களில் ஒன்று.

அதற்குப் பின் லாவண்யா வீட்டிற்குச் செல்லும் போதெல்லாம் கல்லூரி வாழ்க்கை முதல் கல்யாண வாழ்க்கை வரை பேசிக்கொள்ள ஆயிரம் விடயங்கள் தீராமலே இருந்தது. அஞ்சலி அங்கு அடிக்கடி சென்றதன் முக்கிய காரணம் கனலிதான். அவளைக் கொஞ்சவேண்டியே சாயந்திர நேரமாகவே செல்வாள். ‘இப்படி ஒரு குழந்தை இருந்திருந்தால் கூட தன் வாழ்க்கை இன்று அர்த்தமாகி இருந்திருக்குமே’ என்ற எண்ணம் கூட அவளுக்குத் தோணாமல் இல்லை.

.

.

அன்றொரு நாள்..

காந்திபுரம் பேருந்து நிலையம் காலை பரபரப்பில் அல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. அஞ்சலி தனது ஸ்கூட்டியை பைக் ஸ்டாண்டில் நிறுத்திவிட்டு மேட்டுப்பாளையம் வரை பேருந்தில் போவதாய் இருந்தாள். ஸ்கூட்டியை நிறுத்துகையில் தடுமாறி பக்கத்திலிருந்த இரண்டு பைக்குகள் சாய… அருகிலிருந்தோர் வந்து வண்டிகளை விலக்கி அஞ்சலியைத் தூக்கினர். அதிலொருவன் பாலா, அஞ்சலியின் விவாகரத்தான கணவன்.

உதவியவர்களில் ஐம்பது வயதினைக் கடந்த ஒருவர், “எதும் அடிபட்டிருச்சா கண்ணு..?” என்க

“இல்லங்ண்ணா..!”

“கைய கால நல்லா ஒதறு.. அம்மணி..!”

“…………”

“ம்… தண்ணிய குடிக்கிறியா..? ண்ணா, அந்த தண்ணி பாட்ல குடுங்….!” அவர் கேட்டதும் பாலா எதுவும் பேசாது தன்னிடமிருந்த வாட்டர் பாட்டிலைத் திறந்து நீட்டினான். இவளால் மறுக்க இயலவில்லை, வாங்கிக் குடித்தாள். சற்று கைத்தாங்கலாக அஞ்சலியை அழைத்து அங்கிருந்த பெஞ்சில் உட்கார வைத்தனர்.

சற்று நேரத்தில் அவள் எழுந்து மெதுவாக நடக்க ஆரம்பித்தாள். ஒரு பத்து மீட்டர் தூரம் நடந்ததும் கால் சற்று தடுமாற யாரோ தாங்கிப் பிடிக்க.. அது பாலா. அதுகாறும் பாலா அஞ்சலியின் பின்னால் நடந்து வந்ததை அவள் அறியவில்லை. இம்முறை முகத்தைச் சற்று இறுக்கமாக வைத்துக் கொண்டு அவன் பிடியிலிருந்து விசும்பி வீம்பாக நடக்க ஆரம்பித்தாள். அவன் மீதான கோபம் குறையவில்லை அஞ்சலிக்கு.

திருப்பூர், சத்தி, மேட்டுப்பாளையம் என அந்தந்த மார்க்கத்திற்கு செல்லும் பேருந்துகள் தனித்தனி ரேக்கில் நிற்க, அஞ்சலி மேட்டுப்பாளையம் பேருந்தில் ஏறி அமர்ந்தாள். ஈரோடு செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தான் பாலா. பேருந்து கிளம்பும் போது ஜன்னல் வழியாக பாலாவைப் பார்த்தாள்; அவன் முகம் வெறுமையாக இருந்தது. அன்று மாலை திரும்ப காந்திபுரம் வந்த போதும், பைக் ஸ்டாண்ட் சென்ற போதும் கண்கள் ஏனோ பாலாவைத் தேடியது. அன்றிரவே லாவண்யாவிடம் ஃபோனில் பேசுகையில் காலை நடந்த நிகழ்வைச் சொல்லியிருந்தாள்.

.

.

.

பின்னொரு நாள் ஈச்சனாரி விநாயகர் கோயிலுக்குச் சென்றிருந்தாள், அஞ்சலி. அங்குதான் நான்கு வருடங்களுக்கு முன்னர் அதே நாளில் அவளுக்கும் பாலாவுக்கும் திருமணம் நடந்தது. பெருங்கனவுகளோடு முழு அலங்காரத்துடன் மஞ்சள் புடவையில் தங்கச்சிலையாக அஞ்சலி நின்றிருந்தாள். அந்த நினைவுகள் அவள் மனதைக் கிளறவே திருமணத்தன்று எடுத்த ஃபோட்டோவை அன்று தன் மொபைலின் முகப்புப்படமாக வைத்திருந்தாள். பாலா மீது எத்துனை கோபம் இருந்த போதும் அவளால் வாழ்ந்த நாட்களை, அந்த நினைவுகளை அத்துனை எளிதில் கடக்க முடியவில்லை. திருமண நாள் என்பதும், திருமணம் நடந்த கோயில் என்பதும் அவன் நினைவினைக் கிளற தூபமிட்டது. ஒரு சமயங்களில் மனித மனங்களின் நினைவுகளைத் தூண்டிட இடமோ தேதியோ கூட போதுமானதாக இருக்கிறது.

அன்றைய நாள் முழுதும் திருமணத்தன்று இந்த நிமிடம் என்ன நிகழ்ந்தது; யாரெல்லாம் வந்தனர்! எத்துனை கொண்டாட்ட நிகழ்வாய் இருந்தது..! என்று மனதில் மீள்கல்யாணம் நிகழ்த்திக் கொண்டிருந்தாள். அவ்விரவு தூக்கம் பிடிக்காமல், ஏதோவொரு இனம்புரியா அழுத்தம் மனதைச் சூழ்ந்தது. மொபைலை எடுத்து திருமணத்தன்று எடுத்த புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு ஒருகட்டத்தில் கண்கள் நீர் கோர்க்க தொடுதிரையும் தெளிவற்றே தெரி்ந்தது. அவளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு புகைப்படத்தைப் பார்த்ததே காரணம். ஒருவரையொருவர் கரம் கோர்த்து இதழ் பிரியாவொரு புன்னகையுடன் அஞ்சலியும், அஞ்சலி முகத்தை ரசித்துப் பார்த்தபடி பாலாவும்.. படுநேர்த்தியாக அமைந்த புகைப்படம் அது.

பாலாவுக்கு ‘ஹாய்’ என வாட்சாப்பில் குறுஞ்செய்தி அனுப்பினாள். ‘இன்னிக்கு ஜூன் 12’ என தங்க்லீஷில் டைப்பினாள்.

பதிலுக்கு அவனும் “ம்ம்… வெட்டிங் டே! ஞாபகம் இருக்கு!” என தங்லீஷில் ஒரு சில நிமிடங்கள் டைப்பியபடி உரையாடிட அஞ்சலியின் மனஅழுத்தம் சற்று குறைந்தது. அதிலிருந்து ஒரு வார காலத்திற்கு குட்மார்னிங், குட்நைட், குசல விசாரிப்புகளோடு புதிதாய் அறிமுகமானவர்கள் போல பேச ஆரம்பித்தனர், இந்த விவாகரத்தான தம்பதி.

அடுத்தடுத்த இரவுகளில் குடும்பத்தினர் பற்றிப் பேசுகையில் பாலாவின் தங்கை கர்ப்பமாக இருப்பதாகவும், அதன் பொருட்டு அவனது அம்மா சிங்கப்பூர் சென்று அங்கேயே இருக்கப் போவதாகவும் தெரிவித்தான். பாலா தனது அம்மா பற்றி பேசும் போது அஞ்சலிக்கு முகம் மாறியது. காலங்கள் பல விஷயங்களை மாற்றிடும்; பாலா மீதான அஞ்சலியின் கோபம் போல். ஆனால், காலத்தால் கூட சில காயங்களை ஆற்றிட முடிவதில்லை; பாலாவின் அம்மாவால் அஞ்சலிக்கு ஏற்பட்ட ரணத்தினைப் போல்…!

.

.

.

  அந்த வாரக் கடைசியில் அஞ்சலி டாக்டர் யசோதாவைச் சந்திக்க செல்ல வேண்டி இருந்தது. யசோதா, மனநல மருத்துவர்; அந்தமுறை கன்சல்ட்டிங் போவதாக பாலாவுக்கும் நேரத்தைக் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தாள். ஒரு பெண், ‘தான் ஒரு இடத்திற்குப் போகிறேன்’ என்பதை வலியச் சொன்னால், ‘உடன் நீயும் வாயேன்!’ என்பது உள்ளர்த்தம். அந்த அர்த்தம் புரிந்த பாலா அந்த சனிக்கிழமை மாலை அவளோடு அங்கிருந்தான். வழக்கத்திற்கு மாறாக அஞ்சலி முகத்தில் ஒரு மலர்ச்சியுடன் யசோதாவை அணுக… வயது ஐம்பதைக் கடந்த அந்த மருத்துவர் அஞ்சலியைக் கண்டதும் மகிழ்ச்சியில்

“வாடிம்மா அஞ்சலி! வெளில உக்காந்திருக்கிற அந்த க்ரே சர்ட்டு உங்கூட வந்தவரா? “

“ஆமாங் மேம்…!

“நல்லது கண்ணு…! அப்பலவே சொன்னேன்ல.. இந்த வயசுல நீ தனியா கெடக்குற பாரு, அதான் டிப்ரசன். பையனும் வாட்டசாட்டமாதான் இருக்கான்… இனியும் நீ உன்ர புருசனயே நெனச்சிட்டு இருக்காத..!”

“அய்யோ மேம்… அவருதான் என்னோட எக்ஸ் ஹஸ்பண்ட் பாலா”

“எதேய்…! ஹஸ்பண்டா? அப்டினா இப்ப ஒண்ணாயிட்டிங்களா?”

“இல்ல மேம்… சும்மா பேசிப்போம்! அவ்ளோதான்..!”

“சரி, அவன என்னத்துக்கு இங்க கூட்டியாந்திருக்குற..?”

“கூட வரட்டுமானு கேட்டாரு.. சரி வாங்கனு சொன்னேன்.! “

“நல்லா இருக்குதுடிம்மா…! சரி, இப்ப நா என்ன பண்ணோனும்..!”

“மேம்… இந்த மாசத்துக்கான செக்கப், டேப்லட்..”

“இனி ஒனக்கு என்னத்துக்கு டேப்லட், செக்கப்பெல்லாம்??? இனி ஒண்ணும் வேணாம்.. வூட்டுக்கு போ..!”

யசோதாவின் பாதி வார்த்தைக்கும், பார்வைக்கும் அர்த்தம் புரியாதவளாய் அங்கிருந்து வெளியில் வந்தாள். பாலா விபரங்கள் கேட்கவே, “கவுன்சிலிங் மட்டுந்தா. மெடிசின் ஏதும் வேணாம்ன்ட்டாங்க!” என்றாள். க்ளினிக்கில் இருந்து சற்று தூரத்தில் இருந்த பழமுதிர்ச்சோலையில் அவளுக்குப் பிடித்த மாதுளை ஜூஸ் வாங்கிக் கொடுத்தான்.

.

.

அதற்குப் பின் சில நாட்கள் அவ்வப்போது கோவில், காஃபி மீட், தியேட்டர் என சந்தித்து வந்தார்கள். ஆனால், கணவன் மனைவியாக அல்ல; ஏதோ ஒரு பக்கத்து வீட்டுக்காரர்கள் போல, குடும்ப நண்பர்கள் போல இருந்தனர். சண்டையோ மனஸ்தாபமோ இல்லாமல் இருந்தது அவர்களது உறவு. ‘உரிமை இருக்குமிடங்களில்தான் சண்டை வரும் அல்லது இப்படிச் சொல்லலாம், போலியான உறவுகள்தான் சண்டையற்று நீளும்’. பாலா சந்திப்பு குறித்த விடயங்களை லாவண்யாவிடம் மாத்திரம் சொன்னாள்.

அப்போது ஒரு ஞாயிற்றுக்கிழமையில் அஞ்சலிக்கும் அவளது அம்மாவுக்கும் வாக்குவாதம் வந்தது. அவ்வப்போது வரும் சண்டைதான். அம்மா தலையிலடித்தபடி புலம்பவே… எங்கேயாவது வெளியில் போகலாம் போல இருந்தது அஞ்சலிக்கு. வீட்டிலிருந்தால் சண்டை அதிகமாகும் போல தோணியது. அவள் பாலாவுக்கு மெசேஜ் செய்ய

 “எங்கே போகலாம்?” என சம்பாஷணை நீண்டது.

“எங்க வேண்ணா போலாம்.. ஆனா, எங்கே போனாலும் பைக்லயே போகலாம். ஐ நீட் சம் ஃப்ரஷ் ஏர்”

“ம்… சரி. மேட்டுப்பாளையம் போகலாமா?”

“சரி… ஒன் ஹர் ல கிங்ஸ் பேக்கரில இருப்பேன்.”

சற்று நேரத்திற்கெல்லாம் பைக்கில் மேட்டுப்பாளையம் சாலையில் விரைந்தனர். அந்தச் சாலைக்கே உரித்தான சாரலோடு சில்லிட்ட காற்று நல்லதொரு வைப் கொடுத்தது. பாலா கண்ணாடியில் அஞ்சலியைப் பார்த்துக் கொண்டான்.

அஞ்சலி சீறும் பனிகாற்றுக்கு முகம் தந்திருந்தாள். பயணத்தின் போது ரம்யமான காற்றினில் குழல் கலைந்திட அனிச்சையாய் அதைக் கோதிடும் தருணமெல்லாம் இந்தப் பெண்கள் தேவதைகளாகி விடுகிறார்கள்.

சற்று நேரம் உம்மென்று வந்தவள், “எதாச்சும் பேசேன்.. உம்முனு வர்ற?’ என்றாள்.

“என்னாச்சு? என்ன மூட்அவுட்?”

“அடக்கடவுளே வீட்லதான் ஒண்ணு உசுர வாங்குதுனா இப்ப நீயும்..? வேற எதாச்சும் பேசு..!”

“ஓ.. சாரி அஞ்சலி. சரி, பாட்டு பாடவா?”

சுதி, லயம் எதுவும் பிடிபடாமல் வாய்க்கு வந்தபடி அவன் பாட, அவளும் உடன் கோரஸ் பாடினாள். வண்டி சற்று நேரத்தில் மேட்டுப்பாளையம் தொடவே ஒரு காஃபி ஷாப்பில் பைக் நின்றது. காஃபிக்குப் பின் சற்று ஆசுவாசமான அஞ்சலி கடிகாரத்தைப் பார்த்தாள்.

“இப்ப வீட்டுக்குப் போனா, அம்மா திரும்ப மூட் அவுட் பண்ணும். நேரமிருக்கு எங்கயாச்சும் போலாமா?” என்க

“பத்ரகாளியம்மன் கோயிலுக்குப் போலாமா?” என்றான் பாலா.

“பத்ரகாளிய வீட்லயே பாத்துட்டுதான இங்க வந்தேன்.” என்று உச் கொட்ட

அந்த நேரம் பார்த்து இரண்டு தம்பதிகள் இரு கருப்புநிற புல்லட்களில் அவர்களைக் கடந்து ஊட்டி நோக்கி போனார்கள்.

“ஊட்டிக்கு போலாமா?” பாலா கேட்க,

“சரி..! சீக்கிரமா போயிட்டு வந்துடலாம்ல?” என்றாள்.

அடுத்த ஐந்தாவது நிமிடம் வண்டி மேட்டுப்பாளையத்திலிருந்து மலை ஏறிக்கொண்டிருந்தது. அஞ்சலி மனதிற்குள் கடந்தகால பயணங்கள் எல்லாம் ஞாபகம் வந்தது. திருமணமான புதிதில் இப்படித்தான் பைக்கிலயே திரிந்தார்கள். மலைப்பகுதி என்பதால் பாலாவைப் பிடித்த வண்ணமே பயணிக்க வேண்டியிருந்தது. ஊட்டிக்குச் சென்று பார்க்கில் சிறிது நேரம் பேசிக் களித்தனர். ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கிளம்புகையில் மழை தூறிட, நேரமும் மாலை ஆறு மணியை நெருங்கியது.

“டைம் ஆச்சு..! சீக்கிரம் போலாம் பாலா” அவசரப்படுத்தினாள்.

“அட, மேல ஏறி வர்றப்பதான் லேட்டாகும், கீழ சல்லுனு போயிடலாம்.!”

மலையில் ஒரு இரண்டு கி.மீ இறங்கியதும் வழி நெடுக போக்குவரத்து நெரிசல். அங்கு இருந்தோரிடம் விசாரிக்கவே மழையினால் ஒரு மரம் சாலையின் குறுக்கே விழுந்து கிடப்பதாகவும், சீராக நான்கு மணி நேரத்திற்கு மேல் ஆகும் என்றும் தகவல் கிடைக்கவே அஞ்சலி மனதிற்குள் களேபரம் ஆனது.

“வேற ரூட் இல்லியாங்ண்ணா?”

“தம்பி.. பொட்டப்புள்ளய வச்சிக்கிட்டு இந்த வழியில போறதுதான் சேப்ட்டி. இங்கயே தங்கிப்போட்டு காலையில கிளம்புங்க..”

மழை சற்று பலமாக ஆரம்பிக்க வேறு வழியின்றி மீண்டும் சாப்பிட்ட அதே ஹோட்டலுக்கு வந்து விசாரித்து சற்று தொலைவிலிருந்த அட்சயா லாட்ஜில் ரூம் போட்டனர். அஞ்சலி தன் பக்கத்து வீட்டிற்கு ஃபோன் செய்து..

“மேகலா அக்கா…!”

“சொல்லு அஞ்சலி”

“அம்மா கூட சண்ட. நா இங்க ஃப்ரண்டு வீட்டுக்கு வந்தேன். காலையிலதான் வருவேன். லாவண்யா வீட்லதான் இருக்கேனு சொல்லிருங்க.”

“சரிம்மா..!” அப்பாடா என்றிருந்தது, அஞ்சலிக்கு.

“அம்மாக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டேன், பாலா. இப்பதான் டென்சன் ஓகே.”

“சண்ட போட்டுதான வந்த…! பின்ன ஏன் இன்ஃபார்ம்லா பண்ற?”

“அது, சண்ட போட்டாலும் மனசு கெடந்து அடிச்சிட்டு இருக்கும்ல.. அதான் மேகலா அக்காக்கு சொல்லிட்டேன்”

டிவி ஆன் செய்ததும், சில சேனல்கள் மாத்திரமே தெரிய சன் ம்யூசிக்கில் ராஜாவின் எண்பதுகளின் பாடல்கள் ஒலிக்கத் தொடங்கியது. வெளியில் மழை, ஊட்டி குளிர், உடன் ராஜா பாடலும் இணைந்து இருவரது ஈராண்டு பத்தியத்தை காவு கேட்டது. சற்று நேரத்தில் அவர்களோடு சேர்ந்து கட்டிலும் மூச்சு வாங்கியது. கூடலின் பின் அவனை அணைத்தபடி உறங்கிப் போனாள் அஞ்சலி.

காலையில் அவனுக்கு முன் எழுந்து குளித்துவிட்டு அதே ஆடையை அணிந்து தலைவாரித் தயாரானாள். பாலா குளிக்கச் சென்றான். கண்ணாடி முன் நின்று தன்னைத் தானே மனக்கண்ணில் ஒரு பிரதி எடுத்தாள். பழைய பிரதியான லாவண்யா வீட்டுக் கண்ணாடி பிரதியை ஒப்பிட்டுப் பார்த்தாள். இரண்டு பிரதிக்கும் ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடித்தாள். தொலைந்த பூரிப்பு மீண்டும் முகத்தில் தோன்றியது. ஈரத் துண்டு மாத்திரம் கட்டி வந்த பாலாவைக் கட்டிக்கொண்டு மாரில் சாய்ந்தாள். எதுவும் பேசாமல் முடி அடர்ந்த மாரின் மத்தியில் முத்தம் பதித்தாள். சிலநொடி அணைத்துக் கொண்டாள். இப்படி வாழவேண்டிய ஒரு வாழ்வைத் தொலைத்து விட்டதாகவும், அது சாலையில் விழுந்த ஒரு மரம் மூலம் திரும்பக் கிடைத்ததாகவும் நம்பினாள்.

பைக் ஊட்டியிலிருந்து கிளம்பியது. மலை ஏறுகையில் தயங்கித் தயங்கி அணைத்தவள், தற்போது உரிமையாய் அணைத்துக் கொண்டாள். மரம் விழுந்த இடத்தைக் கண்டதும் அந்த முறிந்த மரத்திற்குக் கலங்கிய கண்களால் நன்றி சொல்லி பாலாவைக் கூடுதல் இறுக்கமாய் அணைத்து முதுகினில் முத்தம் பதித்தாள், பாலாவிற்கு உடல் சிலிர்த்தது. பைக் நேராக லாவண்யா வீட்டிற்கு சென்றது. வாசலில் நின்ற லாவண்யா முகம் மலர்ந்து குறும்பாய்ச் சிரித்தாள். அஞ்சலி சிரித்த முகமாய் லாவண்யா வீட்டிற்குள் சென்றாள். பாலா, “ஆபீஸ் போகணும்; லேட் ஆயிடுச்சு!” என்று சொல்லி வாசலில் இருந்தபடியே கிளம்பினான்.

வீட்டில் அம்மாவோடான சண்டை, மேட்டுப்பாளையம், ஊட்டி, மரம் விழுந்த சாலை, அட்சயா லாட்ஜ், இளையராஜா பாடல் வரை அனைத்தையும் சொல்லிவிட்டாள். கூடலின் கடைசி மிடர் இன்பம், அதைச் சொல்லிச் சிலாகிக்க கிடைக்கும் செவிகள்தாம்.

பாலா ட்ரெய்னிங் சம்மந்தமாக பெங்களூர் சென்றிருந்தான். இரண்டு, மூன்று மாதம் கழிந்தது. அட்சயா லாட்ஜ் சம்பவம் அஞ்சலி அம்மாவாக அச்சாரமிட்டிருந்தது. கனலி போல் ஒரு பட்டாம்பூச்சி வரவிற்காய்க் காத்திருந்தாள். பாலாவிடம் நேரில்தான் சொல்ல வேண்டும் என்று எண்ணினாள். அதுவும் வாய்மொழியாய் அல்லாது அவன் உள்ளங்கையை தன் அடிவயிற்றில் வைத்தபடி கண்களாலே கவித்துவமாக சொல்ல ஆசை கொண்டாள்.

ஆனால், சமீபமாக பாலாவிடமிருந்து ஃபோன் கால், மெசேஜ் எதுவும் இல்லை, சந்திப்பதையும் தவிர்த்திருந்தான். எப்போதாவது பேசினால் கூட ஆர்வமின்றி பேசினான். சிலமுறை முயற்சித்து விட்டு அவனைத் தேடி அவன் அலுவலகம் செல்லவே ‘அவனுக்கு இரண்டு நாளில் நிச்சயதார்த்தம்’ என்ற தகவல் கிடைத்தது. ஆறு மாதங்களாகவே பெண் பார்த்து, இரு வீட்டாரும் பரஸ்பரம் வீட்டிற்கு சென்று வந்துள்ளனர். இத்தனையும் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கையில்தான், அவன் அஞ்சலியோடு பேசி, ஊர்சுற்றி ஊட்டி சென்றதெல்லாம் அரங்கேறியிருக்கிறது.

சில நிமிடங்கள் உலகம் இருண்டது அஞ்சலிக்கு..! வீட்டிற்குச் சென்றவள் இரண்டு நாட்கள் அழுது முடித்து நேராக லாவண்யாவிடம் சென்றாள். நடந்தவற்றையெல்லாம் அறிந்தவள் அவனிடம் நியாயம் கேட்கப் போவதாய்க் கோபப்பட்டாள். அஞ்சலி மறுதலித்தாள். அஞ்சலியை மடி கிடத்தினாள் லாவண்யா.

“ஒரே ஆம்பளகிட்ட ரெண்டு தடவை ஏமாந்திருக்கேன்டி; எனக்கு அறிவு இருந்திருக்கணும். அப்டி அவன தேடிப்போயி, அவன்கிட்ட நியாயம் கேட்டு, கட்டாயப்படுத்தி அவன் கூட வாழாட்டி கெடக்குது மசுரு.” பாதி வார்த்தைக்குச் சத்தமே வரவில்லை.

“இப்ப வயித்துல புள்ளய வச்சிக்கிட்டு என்னடி வியாக்கியானம் பேசிட்டு இருக்க? அஞ்சலி, நா சொல்றத கேளு”

“கனலி மாதிரி ஒரு பட்டாம்பூச்சி என் வயித்துக்குள்ள இருக்குனு இம்புட்டு நாளா வயித்த தடவிக்கிட்டே இருந்தேன்! இப்ப என்னை நெனச்சா எனக்கே அருவருப்பா இருக்கு!”

“உணர்ச்சிவசப்படாதடி! தெளிவா முடிவு எடு”

நா வறண்ட குரலில் ஜீவனற்றுப் பேச்சைத் தொடர்ந்தாள்.

“நா உணர்ச்சிவசப்பட்டதால தான்டி இந்த நிலைமை. அவனுக்குப் பொண்டாட்டியா இருந்த காலத்துல நா கன்சீவ் ஆகி, அப்பறமா அவன் விட்டுட்டு போனா கூட இந்த குழந்தைய நா பெத்துக்குவேன். அவன் இல்லனாலும் எம்பிள்ளையோடவே வாழ்ந்திருப்பேன். நான் அவன புருசனா நெனச்சுதான் தொடவிட்டேன். ஆனா, அவன் எனைய பொண்டாட்டினு நெனைக்கலல.”

லாவண்யா மறுமொழி இழந்து வெறித்தாள்.

ஜீவன் வற்றிய குரலில் சொன்னாள்

“லாவண்யா..! எனக்கு இந்தக் கொழந்த வேணாம்டி!”

அஞ்சலிக்கு பாலா மீது முன்னர் இருந்தது கோபம்; தற்சமயம் வந்திருப்பது வெறுப்பு! கோபம் தணியும்; வெறுப்பு ஒருபோதும் மாறாது!

லாவண்யா சூடாக இரு குவளை காஃபி எடுத்து வந்தாள். காபி குடித்தபடி அஞ்சலியின் முகத்தைக் கவனித்தாள். முகம் வாட்டத்தில் இருந்த போதும் கண்களில் ஒரு தீர்க்கம் இருந்தது.

abudhanraj04@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button