
வரம்
துளையாகத் தான்
வாய்ப்பதெனில் நீ
ஏந்தியிருக்கும்
மூங்கிலில் எனை
துளைத்திடு….
உன்விரல் தொடும்
துளைகளை விடவும்
இதழ் குவியும்
அத்துளையாகும்
வரம் கொடு..
பிழையான பிறப்பில்
பிழைப்பதை விட
உன் சுவாசத்தின்
ஸ்பரிசத்தில்
இசையாகி
பிழைத்திருக்கிறேன்..
**********
ஆதாரங்கள்
ஓட்டப் பந்தயமொன்றில்
இறுதியாய் முடித்தேன்…
வெற்றி பெற்றவளை
ஆரத்தழுவி குதித்தேன்..
தோற்றவளின் ஆனந்தம்
சோடனைஎன சாடுகிறார்கள்..
பந்தயத்தில் பங்குகொள்ள
உதவியாய் அவள் தந்த
காலணிகளை காட்டியபின்னர்
கால்மனதாய் கலைகிறார்கள்..
வெறும் கால்களோடு
ஓடியிருந்தாலும்
கொண்டாடிருப்பேன் என்றால்
ஏற்றுக்கொள்ள முடியாதோ?
நான் நானாக இருப்பதற்கும்
ஆதாரங்கள் வேண்டுமா என்ன?
**********
நீராலானது
மெளனங்களையும்
மிகச்சரியாக
மொழிபெயர்க்க
முடிந்த நீ ஏன்
என் வார்த்தைகளுக்கு
இப்போதெல்லாம்
பிறிதோர் அர்த்தம்
இருப்பதாய்
பழி சொல்கிறாய்..
நீரடித்து
நீர் விலகாதென்று
எத்தனை முறை
சேந்தித்திரிவேன்
நீர்த்துப் போன
பிரியங்களை..
**********