நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க் : 4 – பிரெட்டும் பொருளாதாரமும் – சுமாசினி முத்துசாமி
தொடர்கள் | வாசகசாலை

ஒரு ஊருக்கு நீங்கள் மாற்றல் ஆகி முதல்முறையாகப் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். போகும் ஊரைப் பற்றி சினிமா, நாளிதழ் மூலம் தெரிந்து கொள்வதற்கும், இணையத்தில் தேடித் தெரிந்து கொள்வதற்கும், வீட்டிலோ மிக நெருங்கிய வட்டத்திலோ அங்கு வசிக்கும் ஒருவர் மூலம் பேசித் தெரிந்து கொண்டு செல்வதற்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு. சொந்த பந்தங்கள் பலரோடு சிறிய ஊரிலிருந்து வளர்ச்சி மிகுந்த மற்றுமொரு ஊரில் வாழக் கிடைக்கும் வாய்ப்பு வெகு சில குடும்பங்களுக்கு மட்டுமே இங்கு வாய்த்துள்ளது. முதல் தலைமுறையாகச் சென்னை, பெங்களூரு போன்ற பெரு நகர வாழ்வுக்குப் புலம் பெயர்ந்த தலைமுறை நம்மில் பலருடையது. இந்த நிலையில், முதல் முறை அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குப் புலம் பெயர்பவர்களுக்கு எல்லாமே கொஞ்சம் அந்நியப்பட்டுத்தான் போகிறது. பயணம் ஆரம்பித்தது முதல் பின்னர் படிப்படியாக வீடு எடுத்துக் குடியேறி, பின் சில மாதங்களில் ஒரு ஒழுங்கு வரும் வரை ஒரு புதிரை நாம் கொஞ்சம் கொஞ்சமாகப் பூர்த்தி செய்வது போலத்தான் நாட்கள் நகரும்.
கடந்த இருபது ஆண்டுகளில் பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நடந்துள்ள நம் மக்களின் புலப்பெயர்வு ஓரளவிற்குப் பரவலாக தமிழ்நாட்டின் சில முக்கு மூலைகளிலிருந்து பரவி உள்ளது. இதை நான் ஒரு வகையில் நம் மாநில வளர்ச்சியின் குறியீடாகவே பார்க்கிறேன்.
வெகு நாட்கள் இல்லாவிடினும், முதல் இரண்டு மூன்று வாரங்கள் யாரோ ஒருவர் கை பிடித்து இந்த ‘புது நாட்டு’ புதிருக்குள் நம்மை வழி தப்பாமல் அழைத்து சென்று விட்டால் நம் பாக்கியம் பெரிது. ஆனால் நடைமுறையில், இந்த உதவும் கரங்கள் அத்தனை எளிதாக அமைந்து விடுவதில்லை . பலர் தானாகவும் உதவுவது இல்லை. உதவி கேட்டாலும் கொடுக்கும் விட்டேத்தியான பதில்களுக்கு, எங்கள் ஊர் பாஷையில் சொன்னால் ‘கொமட்டலயே குத்தணும்’ போல தோன்றும். ஏதோ முதிர்ச்சியடையாத பதின் பருவத்தில் கிராமத்திலிருந்து வந்த பாவப்பட்ட ஒரு மாணவனை நடத்துவது போல் தான் இருக்கும் இவர்களின் செய்கைகள். இதன் பின் இருக்கும் மனநிலையையும், அரசியலையும் தனியாக இன்னொரு அத்தியாயத்தில் பேசுவோம்.
இங்கு கடைகளுக்குச் சென்றால் “இன்னைக்கு நல்லா இருக்கீங்களா? நான் உங்களுக்கு ஏதாவது உதவ வேண்டுமா?” (How are you today? May I help you?) என்று ஒவ்வொருதடவையும் குரல்கள் கேட்கும். நாம் சாப்பிடச் செல்லும் உணவகங்கள், அவற்றின் வேகம் மற்றும் சுத்தம், கண்டிப்பாக தண்ணீருக்குள் கையை முக்கி கொண்டுவந்த நம்மூர் உணவக அனுபவத்தை நமக்கு நியாபகப்படுத்தும். இங்கு அரசு இயந்திரத்தை இயக்கும் ஊழியர்களின் பதில்கள், வாயை மூடிப் பேசாமலேயே நம்மைப் புறக்கணித்த குறு நில மன்னராய் தன்னைத் தரித்துக்கொண்ட ஒரு அரசு அலுவலக அதிகாரியை மனத்திரையில் கொண்டு வரும். கடைகளின் பிரமாண்டம், அவற்றில் உள்ள ஒழுங்கு, அங்கு கிடைக்கும் பொருள்களின் வகைகள் & தரம், சாலைகளின் தரம், பொதுத் தொடர்பு, பொதுப் போக்குவரத்து, வங்கிச் சேவை போன்றவை இந்தப் புது ஊரைப்பற்றி ஒரு அபிப்பிராயத்தை நம் மனதில் விதைத்துவிடும். இன்னொரு ஊரில் தற்காலிகமாகவே வசிக்கச் சென்றாலும், முதல் மூன்று நாட்கள் முதல் ஒரு வாரத்திற்குள் மேற்ச்சொன்ன அனைத்தையும் நாம் அனுபவங்களாக எந்த ஊரிலும் எதிர் கொண்டுவிடுவோம்.
இவை அனைத்துமே அமெரிக்காவில் முதல் முறை காணும் பொழுது ஒரு பிரமிப்பை ஏற்படுத்தக்கூடியவை. கூரை பெயர்ந்து விழாத அளவிற்குக் கட்டப்பட்டுள்ள விமானநிலையங்களில் நாம் இறங்கிய நிமிடத்தில் ஆரம்பித்து, ஏதோ ஒரு பொருள் வாங்க செல்லும் சூப்பர்மார்க்கெட்கள், அவற்றில் வகை வகையாக அடுக்கப்பட்டுள்ள பல பொருட்கள், அரசு அலுவலகங்களில் உள்ள நடைமுறைகள் எல்லாம் தமிழ் கிராமங்களின், சிறு நகரங்களின் மண்ணிலிருந்தும் வந்துள்ள பலருக்கு ஆச்சரியத்தைத்தான் கொடுக்கும். இவை எல்லாமே தேவையை விட மிக அதிக ஒழுங்காகத் தான் தெரியும்.
சிறிது மாதங்களோ வருடங்களோ கழித்து, எல்லாம் பழகி இந்தப் புதிர் விளையாட்டின் சுவாரஸ்யம் தீர்ந்தவுடன் சிலருக்கு இது தேவைக்கதிகமான மேம்போக்கான ஒழுங்கு போல் தோன்றிவிடும். உள்ளிருக்கும் சில ஓட்டைகள் கண்ணில் தெரிந்துவிடும். மாற்றாக இந்த அமெரிக்க இருப்பை அணைத்துக் கொண்டவர்களுக்கோ, இங்கு உள்ளதாய் உணரப்படும் ஒழுங்கோ, வகைகளின் பெருக்கமோ பிரமாண்ட விஷயமாக இல்லாமல் ‘மிக மிகத் தேவை’ என்ற பட்டியலில் சேர்ந்து விடும். அவர்கள் பேசுவதில் பாதி நம்ம நடிகர் வடிவேல் அவர்களின் துபாய் ரீட்டர்ன் காமெடியை இங்கிலீஷில் ‘அமெரிக்கா பீட்டரில்’ அளப்பது போல் தான். அப்படிப் பட்டியலிடும் அனைவரும் ஹீரோக்கள் அல்ல அக்மார்க் காமெடி பீஸுகள் !
நான் அமெரிக்கா சென்ற இரண்டாவது நாள், ப்ரெட், உப்பு, சீனி போன்ற மிகச் சில அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வால்மார்ட் சூப்பர் மார்க்கெட் சென்றேன். அங்கு அடுக்கப்பட்டிருந்த வகைகளில் 40 வகையான வெவ்வேறு ப்ரெட் வகைகள் வரை எண்ணியதாக நியாபகம். அப்படியும், பாதி அடுக்குகள்தான் கடந்து இருந்தேன்! முதலில் இந்த ப்ரெட் வகைகளில் ஒன்றைத் தேர்வு செய்யவே கொஞ்சம் தலை சுற்றும். ப்ரெட் வாங்கக் கூட யாராவது ஆலோசனை சொன்னால் நல்லது என்று அப்பொழுது தோன்றியது. ஒரு டாலர் முதல் எட்டு, பத்து டாலர் வரை விலையுள்ள பல ப்ரெட் வகைகள் இங்கு காணலாம். வெள்ளை, கோதுமை, முழு கோதுமை, மல்டி கிரைன், தட்டையாக, ரொம்ப குண்டாக, க்ளுட்டன் இல்லாதது, இத்தாலியன், வெண்ணெய்யில் செய்தது, தேனில் செய்தது, உருளைக்கிழங்கில் செய்தது, புளித்த மாவில் (sour dough) செய்தது, low fat, low carb, சூரியக்காந்தி விதை போட்டது, வெள்ளை எள்ளு போட்டது, உலர் திராட்சை & பட்டைத்தூள் உள்ளது மற்றும் பல பல. இவை எல்லா வகைகளிலும் தனியாக ஆர்கானிக் வகை வேற! ஒவ்வொரு வகையிலும் மூன்று நான்கு பிராண்ட்கள் மற்றும் சில வேறுபட்ட வடிவ விதங்களும் அடங்கும். பின்னர், பெரும்பான்மையாக விற்பது என்னமோ ரெண்டு முதல் நான்கு டாலர்கள் விலையுள்ள ஐந்திலிருந்து பத்து வகைகள்தான் என்பது புரிந்துவிடும். இருப்பதிலேயே விலை குறைந்த ஒரு டாலர் ப்ரெட் என்பது பெரும்பாலும் சொந்தக் கடை தயாரிப்பாக இருக்கும்.
இந்த ப்ரெட் வகைகளையும் அதனுள் உள்ள வேறுபாட்டையும் பார்க்கும் பொழுது எனக்கு மூன்று விதங்களில் தோன்றியது.
- ஒன்று, தனி மனிதத் தேர்வுக்கு இங்கு இருக்கும் முக்கியத்துவம்.
- இரண்டு, தனி மனிதனின் விருப்பத்திற்கேற்ப அல்லது விருப்பத்தை உண்டாக்கி உருவாக்கப்படும் சந்தை.
- மூன்றாவது, இத்தனை வகைகள் இருக்கும் பொழுது, ஒரு டாலரில் ப்ரெட் வாங்குபவர் ஏதோ சமூக, பொருளாதார அடுக்கில் கீழ் இருப்பது போல் உருவாக்கப்படும் தோற்றம்.
இங்கு ஒரு டாலர் ப்ரெட் என்பது ஏதோ நம்மூர் ரேஷன் அரிசி போல்தான் பார்க்கப்படுகின்றது. இந்த ப்ரெட்டை நாம் வாங்கும் பொழுதே எதோ ஒரு சிறு குற்ற உணர்ச்சியை அரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள சந்தை நம் மனதில் விதைத்து விடுகிறது. விலை உயர்ந்தவை ஆரோக்கியமானவை என்றும், விலைக் குறைந்தவை ஆரோக்கியத்தைக் கண்டிப்பாகக் கெடுத்து விடுவது போலவும் கட்டமைக்கப்படும் சந்தை. ஒவ்வொரு முறை கடைகளுக்குச் செல்லும் போதும் பொருளாதார அடுக்கில் இன்னும் அடைய வேண்டிய மைல்கற்களை கண்முன்னே நிழலாடிக்கொண்டே இருக்க வைத்துவிடுகின்றது. இதே சந்தை முறை நம் மண்ணிலும் உள்ளது. அமெரிக்காவில் அந்த சந்தை முறை ஒரு சில அடுக்குகள் மேலே உள்ளது. வெகு அவசரமாக நாம் இந்த நிலையை அடைய அயராது நம் சந்தையும் உழைத்துக்கொண்டிருக்கிறது.
புதிதாக ஒரு ஊர், உப்பு சீனி முதல் காணும் அனைத்து பொருள்களிலும் அத்தனை வகைகள், எல்லாம் மிக மிகச் சரியாகவும் நேர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் தேர்ந்தெடுத்தே ஆக வேண்டிய சந்தை அழுத்தம். பெரிய பெரிய கடைகள் அவற்றின் பிரம்மாண்டம், பிரம்மாண்டத்தின் பின் இருக்கும் வறுமை, உணர்ச்சிகளையும், மனிதத்தன்மையையும் உதாசீனப்படுத்துவதே வளர்ச்சியின் குறியீடு என்று நம்பவைக்கப்படும் வகையில் சில உதாரணங்கள்… இவையும் வலிமையான அமெரிக்கா போன்ற பொருளாதாரப் பாகுபாடு உள்ள எந்த சமூகத்திற்கும் உள்ள ஒரு முகம் தான். இங்கு வாழும் பலருக்கும் மிக பரீட்சியப்பட்ட முகம்!
வாழ்க்கையை ஓட்டப்பந்தயம் என்று ஓடிக்கொண்டிருக்கும் அனைவருக்கும், உடன் வருபவர்கள் யாரைப் பார்த்தாலும் போட்டியாளராகவே தோன்றும். அவர்களுக்குக் கை கொடுத்து உதவுவது பந்தயத்தின் நோக்கத்திற்கு எதிரானதாகிவிடுகின்றது. தான் ஓடி முடித்த பிறகே இங்கு பலர் ஜெயிக்கும் உத்திகளை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கத் தயாராகின்றனர்.
சந்தையாக்கப்பட்டுவிட்ட சமூகத்தில் எங்கும் எதிலும் போட்டிகள் தான் ஊக்குவிக்க படுகின்றது. இதில் தனி மனித பொருளாதார வெற்றியால்தான் அனைத்துமே மதிப்பிடப்படுகிறது என்பது நிதர்சனம். பொருளாதாரத்தினால் தான் வாழ்வின் நிம்மதி கூட கணக்கிடப்படுகிறது. இந்த கட்டமைக்கப்பட்ட நிதர்சனத்தின் புரிதலால் தான் பலர் சொந்த மண்ணை விட்டு இடம் பெயருகின்றனர். ‘ஆன்சைட் ஆஃபர்’ என்பது தனி மனித வெற்றிக் குறியீடுகளின் ஒன்று ‘தானே’. வளர்ச்சி பெற்ற சந்தையை உடைய அமெரிக்கா போன்ற தேசங்கள் பல தனி மனித வெற்றியை உருவாக்க வழி வகுக்கும் ஓர் பேரிடம் ‘தானே’. இவை எல்லாம் அப்படி ‘தானே’, என்று நினைக்கும் போதே எப்பொழுதும் எனக்கொரு ‘டவுட்’ உண்டு.
காலை எழுந்தவுடன் உங்கள் வீட்டு டேபிளில் குட்டிக் குட்டியாய் நிறைய ‘கருப்பு’ எறும்புகள். அது தாங்க நம்ம ‘பிள்ளையார்’ எறும்பு! என்ன செய்வீர்கள்? ஒரு துணியை நனைத்து மொத்தமாகத் துடைத்து விடுவோம் இல்லையா? பின்னர் எறும்பு வராமல் இருக்க மொத்தத்தையும் துடைத்து, தேவை என்றால் எறும்பு பொடி மருந்தோ, சாக் பீஸோ போட்டு விடுவோம். ஆனால் பாவம் எறும்பிற்கு யாராவது சமைத்தா சாப்பாடு போடுகிறார்கள்? அதன் பாணியில் அது உழைத்துச் சாப்பிடுகிறது. தனக்கு வகுக்கப்பட்ட வழியில் வாழும் எறும்பை நாம் கொன்று விடுகிறோம். எறும்பின் பக்கம் இருந்து பார்த்தால் நாம் செய்தது அராஜகம், அட்டூழியம், கொலை பாதகம்!! நம் பக்கம் இருந்து பார்த்தால், நம் உருவளவுக்கு அது இத்தூணுண்டு, நமக்குத் தொந்தரவு கொடுத்தது. நாம் துடைத்தெறிந்துவிட்டோம்!. அந்த காலையிலேயே அத்தனை கொலைகளை நாம் செய்தால் தான் நம் ‘ஒழுங்கு’ நமக்கு இருக்கும்.
சரி, உருவளவில் ஒத்துப் போனாலும், நம்மை விடப் பெரிய அதிகாரமுள்ள நம் அரசு நம்மை ஏதோ காரணத்திற்காக மொத்தமாகத் துடைத்து அப்புறப்படுத்தினால்… அதை விட அதிகாரமுள்ள மற்றுமொரு அரசு நம் அரசை அவ்வாறு துடைத்து எறிந்தால்…
அறம் என்பது இன்றைய பொதுச்சந்தையில் தேவைகளால் வடிவமைக்கப்படுகின்றது. ‘தன்னலம்’ சம்பந்தப்பட்டுத் தனி மனித ஆற்றல், அறிவு, பொருளாதார பராக்கிரமங்களால் எடை போடப்படுகிறது. ‘ஆமாம், அப்படி தான்!’ என்றால் நாம் வாழ்வது 2020 ஆ இல்லை வேட்டையாடி உணவருந்திய காலமா?
யானை செத்தால் மட்டுமே நாம் கதறுவோமா? பல எலிகளும் காட்டுப் பன்றிகளும் தினம் தினம் அதே விவசாயப் பொறியில் சிக்கி இறக்கத்தானே செய்கின்றன.
இந்தப் பெரு வணிக உலகச் சந்தையில் யாரோவொரு கண்களில் பெரும்பான்மை மக்கள் எறும்பாகித் தானே போகிறோம். அப்பொழுது நாம் நசுங்கிக்கொண்டே இருக்கும் சிறு உயிர்களுக்காகத் தானே அணி திரண்டு அவைகளின் வாழ்வாதாரத்தைக் காத்துக் கொள்ள உழைக்க வேண்டும். என்னை விட சிறிய உயிர்களின் வாழ்வாதாரத்தை நான் காத்துக்கொண்டால், நான் நாளை காத்துக்கொள்ளப்படுவேன், என்னை விட வலுக் குறைந்தவனை நான் அழிக்கும் பொழுது நான் இன்னொரு வலு மிகுந்த கைகளால் அழிக்கப்படுவேன் என்பது தானே விதி.
ஏன் நாம் தப்பாய் செய்துவிட்டுச் சரியான முடிவுகளை எதிர்பார்க்கிறோம்? நான் மட்டும் வெற்றி பெற்று விட வேண்டும் என்று நினைத்தால் நாளை நாம் எல்லோரும் தோற்றுத்தானே போகப் போகிறோம் ?
அப்படியானால் சமூகத் தோல்வியை நோக்கியா நாம் அனைவரும் ஓடிக்கொண்டிருக்கிறோம் என்பதே என் பெரிய ‘டவுட்’!
தொடரும்…
அருமையான பதிவு. உங்கள் சந்தேகம் ஓரளவுக்கு சரிதான் , நாம் வளர்ச்சி என்று நினைத்துக் கொண்டிருப்பதெல்லாம் சிலரின் அழிவில் தான் இருக்கிறது என்பது கசப்பான உண்மையே…