![சாரு](https://vasagasalai.com/wp-content/uploads/2019/09/Z2B6401.JPG-01-1-780x405.jpeg)
திரை
திரைகளுக்குப் பின்னால்
இருக்கிறது விடை.
நாம் திரைகளுக்கு வெளியே
தேடியே பழகிவிட்டோம்.
திரைக்குப் பின்னால்
நடக்கிறது ஒப்பனை.
நாம் பார்ப்பது
வெறும் நடனம்.
திரைக்குப் பின்னால்
இருக்கிறது ஓர் உலகம்.
நாம் திரையே எல்லையென
நம்புகிறோம்.
திரைக்குப் பின்னால்
அழுகிறது நிஜம்.
நாம் காணும் சிரிப்போ
பொம்மை முகம்.
திரைக்குப் பின்னே
பலியாகிறது உயிர்.
நம் தட்டில் வந்து
விழுகிறது உணவு.
திரைக்குப் பின்னே
எவனோ குரல் கொடுக்கிறான்.
நாம் வாயசைவைப் பார்த்து
கண்ணீர் விடுகிறோம்.
திரைக்குப் பின்னால்
உடைகின்றன கைகள்.
நாம் கட்டிடத்தின்
அழகில் லயக்கின்றோம்.
திரைக்குப் பின்னால்
கசிகிறது இரத்தம்.
நாம் நுகர்வதோ
புத்தகங்களின் வாசம்.
திரைக்குப் பின்னால்
ஒளிந்திருக்கிறது சுயம்.
நாம் காணும் யாவும்
அலங்காரம்.
திரைக்குப் பின்னால்
நடக்கிறது சிலைக்கு
அபிஷேகம்.
சிறிது நேரத்தில் கடவுள்
அருள்பாளிப்பார்.
காத்திருப்போம்!
கனவு
உதிரும் ஒவ்வொரு இறகிலும்
சிறகுகள் விரிகின்றன
முழுதாய் எரிந்த மரத்தில்
கிளைகள் துளிர்க்கின்றன
கரையில் சிதறிக் கிடக்கும்
மீன்கள் நடைபயில்கின்றன
கோடாரிகள் மரங்கொத்தியாய்
மாறுகின்றன…
அமாவாசை இரவில்
ஆயிரம் நிலா
போர்க்களம் எங்கும்
இசையின் உலா!
உணர்வுகள்,
சிறை உடைக்கப்படுகின்றன
மரணங்கள்,
தொட்டிலில் ஏந்தப்படுகின்றன
அன்பு கடினமாயில்லை
தூரங்கள் பாரமாயில்லை
பிரிவு எளிது,கண்ணீர் இனிது!
உலகம் இன்னும் ஆசீர்வதிக்கப்பட்டுதான்
உள்ளது சகியே!
ஆனால் பின் அனைத்தும்
பெருங்கனவாய் இருக்கின்றது.
சாட்சி
அன்று போல்
எதுவுமில்லை இன்று.
பூவரச மரத்தின்
கிளைகள் யார் வீட்டுக்கோ
காவலாகிப் போயிருந்தன
தென்னையின் பாதி கீற்றுகள்
எங்கோ குப்பை கூட்டிக்கொண்டு
இருக்கின்றன
தவழ்ந்த கொடி
இன்று அந்த கம்பத்தின்
கழுத்தை இறுக்கிக்
கொண்டிருக்கிறது..
அந்தி வானம் வெளிறிப் போயிருக்கிறது
மேகங்களில் வேறு உருவங்கள்..
காற்றில் இல்லை
அதே நறுமணம்..
ஆனால்,
கைநிறைய அதே
பிராத்தனைகள் இன்றும்.
சாட்சிகள் அனைத்தும் மாறிக்கிடக்க
எங்கே சென்று மேன்முறையிட?
நிரந்தரம்
கடைகள் கரையிட்ட
வீதியது..
கைய நிறைய
வைத்திருக்கும் சில்லறைகளை
அடிக்கடி எண்ணி பார்த்தப்படியே
நகர்கிறாள் அவள்…
கொஞ்சம் நேரம்
தலையாட்டி
பொம்மையாய்
நின்று சிரிக்கிறாள்…
பேசும் மரப்பாச்சியாய்
கை முளைத்த பம்பரமாய்
காதை திருகாமலே ஓடும்
இரயில் வண்டியாய்
அவள் வேடிக்கை காமிக்க
அந்த பொம்மைக் கடையின்
பொம்மைகள் அவளிடம்
சற்று நேரம் விளையாடிக் கொண்டன..
கடைசியாய் மிச்சமிருக்கும்
சில்லறைகளை
எண்ணிக்கொண்டே
மூடியிட்ட உண்டியல்
ஒன்றுடன்
வீடு திரும்புகிறாள்…
இனி உண்டியலை
உடைக்கத் தேவையில்லை!
ஆழம்
கடந்து போகும் கால்களில்
நின்று கவனிப்பவை
எவையுமில்லை.
மீறி நின்றிடினும் நொடிகளில்
நகர்கின்றன கடிகாரத்துடன்
கட்டப்பட்ட கால்கள்.
பறக்க எத்தனிக்கும் மனம்
ஏனோ ஆணி வேரின்
அடிஆழத்தை அடைய
முயற்சிப்பதில்லை.
அகலம் மட்டுமே அளவாகி
அர்த்தமற்றுப் போகிறது
சமயத்தில் ஆழம்.
வானத்தின் கவர்ச்சியில்
திளைப்பவர்களுக்கு
சிறகுகளில் மட்டும் கவனம்.
நொறுங்கி கொண்டிருக்கும்
கால்களைப் பற்றியல்ல.
கடந்து செல்லட்டும்.
குழி தோண்டுவதெல்லாம்
பிணங்களைப் புதைக்கவா?
இன்னும் வளரா மரமொன்று
காத்திருக்கிறது வேர்பரப்ப.
மீனொன்று முத்தமிட்டு
உடைக்கின்றது
கண்ணாடித்தொட்டியை.