
அல்சீமரின் ஞாபக உருக்காலை
எழுத நினைத்து மறந்த
வரிகள்
பெருந்துயருக்கும்
பெருஞ்சிரிப்புக்கும்
இடையில் செய்வதறியாமல்
கை பிசைகிறது
நினைவை அகழ்வதாய்
எண்ணி
மயிரைப் பிய்த்துக்கொள்கையில்
பேன்கள் சிக்குகின்றன
நக இடுக்கில்
குத்தாமல் முடியுமா
இப்போது நகப்பரப்பில்
நேனோ துப்பாக்கி
சுட்டது போல்
பேனின் இரத்த வீச்சு
ஐயோ என் இரத்தம்
இந்தக் கவிதையை
அந்த செம்மையைக்
கொண்டே எழுதினேன்
எனில் மிகையில்லை.
**** **** **** **** **** ****
தூக்குக் கயிற்றை அறுக்கும் ரசனையெனும் சவரக்கத்தி
ஒரு கவிதையின் பின்னோ
யானை உரு மேகத்தின் பின்னோ
அம்மனின் கழுத்தாரத்தின் பின்னோ
ஒரு ஊதா நிற சட்டையின் பின்னோ
காற்று கலைத்துப் போட்ட
ஒரு வாழ்வின் பின்னோ
நல்லெண்ணெயில் பொறித்த ஒரு மீன் துண்டின் பின்னோ
ஒளிந்து கொள்ளலாம்
சாத்தானின் கை பிடித்து.
மரத்தினை ஒத்த இந்த
வாழ்வின் பின்னால்
முடிந்தால் கண்டு பிடித்துக்
கொள்ளட்டும் கடவுள்.
**** **** **** **** **** ****
தீர்ப்பு
விளையாட்டாக இல்லாமல்
உண்மையில்
காக்காய்களுக்கே
அறுத்தெறிந்து இருக்கலாம்
இவர்களின்
அம்மத்தாக்களும்
அப்பத்தாக்களும்.