கவிதைகள்
Trending

கவிதைகள்- சக்தி ஜோதி

1. மாமலர்

பின்னிரவில் ஒரு கனவு
விடியலில் வேறு கனவு

இரண்டிற்கும்
இடையில்
சிறுபொழுதே உறக்கம்

விழித்தபிறகும்
கலையாதிருக்கும் கனவின்
வெளிச்சத்தில் மலர்கிறது
ஒரு பூ
கூர்முள்ளால்
கீற முடியாத
அதன் நறுமணம்
இவ்வாழ்வின் அர்த்தம்.

**** **** **** **** **** ****

2. சுழற்சி

‘தயவுசெய்து
இன்னைக்கு வரவேணாம்’ன்னு சொல்லும்மா,
பயணிக்கவேண்டும்’ என்றாள் மகள்
‘சரி, நாளைக்கு வரச் சொல்கிறேன்’ என்றேன் சிரித்தபடி.
‘அய்யோ
நாளைக்கும் வேண்டாம்,
திட்ட அறிக்கை சமர்ப்பிக்கணும்’ என்றாள் சிணுங்கியபடி.
‘சரி, இதுவெல்லாம் காலநேரம் பார்த்து வருமா என்ன,
கடினமான வேலை தினங்களின்போது
எனக்கும் இப்படித்தான் தோன்றும்,
ஆனால் நினைப்பதுபோலவே
எதுவும் நடக்காது இல்லையா’ என்றேன்.
மேலும்
‘இயற்கையின் நிகழ்வுகளை
பொறுத்துக்கொள்வதைக் காட்டிலும்
ஏற்றுக்கொள்வது எப்போதுமே நல்லது’’
என்று சொல்லி
கன்னத்தில் முத்தமிட்டேன்.
அடுத்தநாள்
தொலைபேசியில் அழைத்தவள்,
கல்லூரிக்கு
விடுப்புக்கடிதத்தோடு
திட்ட அறிக்கையையும்
தோழியிடம் கொடுத்தனுப்பியதாகச்
சொன்னாள்.

**** **** **** **** **** ****

3. விரகம்

இது
காற்றுக்காலம் இல்லை
என்பதே இன்றைய ஆறுதல்

வெயிலும்
மழையும் வேண்டியிருக்கிறது
தாவரங்கள் பூக்க

இன்னமும்
கலையாதிருக்கிற
கரு மேகங்கள்
இன்றிரவே
அடர்ந்து பொழியலாம்

இந்தப்பகலில்
சூரியன் இவ்வளவு காய்வது
மண்ணின் ஈரத்தை
வறளச்செய்கிறபோதும்
மனதில்
துளிர்த்திருக்கிறது
நம்பிக்கை.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. முதல் கவிதை அவர்கள் சொல்லும் கனவைப் போல இதமானதாக இருந்தது. மூன்றாவது கவிதையில் மண்ணின் ஈரத்தை
    வறளச்செய்கிறபோதும் என்பதில் வறண்ட அல்லது வறட்சி என்ற சொல்லை வறள என்று கூறுவது கவிதைக்கு அழகுச்சேர்ப்பதாய் தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button