
தனிமைக்குள் தாழிட்டமர்ந்து
வெறுமையின் கரங்களில் ஒப்புவித்து
இயலாமை கசியும் இருவிழி துடைத்து
துயிலா நினைவுகளைத் துகிலுரித்து
விமோசனமற்ற சாபங்களோடு சல்லாபித்து
துக்கித்துத் துவண்டு வெளியேறியதும்
ஓடிவந்து ஒட்டிக்கொள்ளும்
உதட்டு வளைவிலிருக்கிறது
வாகாய் வாழ்வு நகர்த்தும் சூட்சுமம்.
**********
கற்பனை உலையில் வெந்த
கனவின் பருக்கைகள் புசித்தும்
காலமெல்லாம் தீராப்பசியோடலையும்
காமசண்டிகைக்கு
எந்த அட்சயப்பாத்திரம்
பிச்சையிட்டு இச்சையடக்கக்கூடும்?
**********
கூடு வீழ்ந்த குருவிக்குஞ்சென
படபடக்கும் இதயத்தின் துடிப்படக்கி
பொருத்திக்கொள்கிறது மற்றொன்று.
மென்னுடற்சூட்டின் ஆதுர அணைப்பினின்று
மெல்லக் கனல்கிறது வெதுவெதுப்பு.
பிடிவிலகாது பெருங்கருணை கொண்டு
பரவெளியெங்கும் பற்றியெரிகிறது பாரிய நெருப்பு.
**********