
கபிலன் முதல் பெருங்கடுங்கோ வரை
1.பன்றிகள் மூர்க்கத்தோடு மோதிக்கொண்டபோது
உருண்டு சமவெளிக்கு வந்த பாறையில்
காடு பெருகுவதற்கான முதல் செடி இருந்தது
மலையிலிருந்து நதி, காடு, விலங்குகள்
இறங்கி வந்த காட்சிகளை
புலவர்கள் எழுதினர்
கபிலன் அதில் பேர் போனவன்.
2.முனை முறிந்த வாள்களும் ஈட்டிகளும்
துருவேறிக் கிடக்கும் குகைகளில்
வெற்றிச் சித்திரங்கள் தீட்டப்பட்டன
குதிரையின் தலையைக் கொய்து
முந்தைய போர்களில் இறந்தவர்களின்
நடுகற்களின் முன் வைத்து ஆர்ப்பரித்த வீரர்கள்
கள் நிரம்பிய கலயங்களை
தலை மேல் வைத்துக் கூத்தாடினர்
ஓர் எளிமையான அரசை நடத்திய சிற்றரசர்கள்
முல்லைக்குத் தேரெல்லாம் கொடுத்தார்கள்.
3.பரந்த மார்பிலும் முதுகிலும்
தம் குலக்குறியைப் பச்சைக்குத்திய
திணை ஒழுக்கமுடையவர்களின் தொன்மங்களை
வேளாளர்கள் தம் வணிகத் தந்திரங்களால் அழித்து
புதிய கதைகளைக் கட்டினர்
உழைப்பை ஏமாற்றி பதுக்கிய தானியங்களை
வளைகளில் வைத்துக்கொண்டு
ஆண்டாண்டு காலமாய் தின்று கொழுக்கின்றன எலிகள்.
4.பாலுணர்வை அதிகரிக்கும் அமுக்குராங்கிழங்குகளை
உழவர்களிடம் பெற்றுக்கொண்டு
மத்தி மீன்களை பண்ட மாற்றாகக் கொடுத்த கடலோடிகள்
மீனையும் கிழங்கையும் ஒரே அனலில் அவித்துத் தின்றனர்
மயக்கத்தைத் தாளாத பெண்கள்
கடல் கன்னிகளாய் மாறி நீரில் பாய்ந்தனர்
கட்டுமரத்தை நடுக்கடலுக்கு செலுத்தி
சீனத்துப் பட்டுக்கு பொருள் சேர்த்தனர் காமுற்ற ஆண்கள்.
5.காய்ந்த மாட்டுக் கொம்புகள்
கொலைக் கருவிகளாவதற்கு முன்பு
ஆரலைக் கள்வர்கள் ஏர் வைத்திருந்தனர்
வழிப்பறி கொள்ளையர்களுக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று நினைப்பவர்கள்
இரண்டு வளம் மிகுந்த நிலச்சூழல்தான்
திரிந்து பாலையாயிற்று என்பதை
அறிய வேண்டுகிறேன்
கள்வர்கள், புரட்சிக்காரர்கள் என்பவர்களெல்லாம்
இயல்பில் வாழ்வின் மீது பெருவிருப்பு கொண்டவர்கள் .