கவிதைகள்

கவிதைகள் -கோபி சேகுவேரா

 

வாழ்ந்த வீடு

 

முன்வாசலில் கொட்டிக்கிடக்கும்

நெல் குவியலோடு தொடங்கும் காலை

அறை நிரம்பிக்கிடக்கும் வேர்கடலை

தாத்தாவின் விரல் பிடித்து நடந்த கிணத்துமேடு

நீண்டு மௌனித்திருக்கும் ஏரிக்காடு

திண்ணையோடு எப்போதுமிருக்கும் சிரிப்போசை

முன்னிரவு தென்னைக் கீற்றின் காற்று

பண்டம் சுடும் பாட்டியின் கைகள்

பேருந்திலிருந்து 

உலகத்தையே தூக்கி வரும் மாமாவின் தோள்கள்

போதிமரத்தின் சாயல் கொண்ட மாமரமென

ஆயிரம் பக்கங்கள் கனக்கும் நினைவு

வெறும் அஃறிணை என்பது பெரும்பொய்

எல்லாவற்றையும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்

எப்படி வாழ்வதென்று அறிந்துகொண்ட 

இந்த நிலத்தில்

முதல் சூரியன் கடலில் வீழ்ந்தபோது

நாங்கள் நிலவைப் பற்றியிருந்தோம்

ஒரு சடங்கு போல நிலவு வீழ்ந்தபோது

நாங்கள் வானத்தைப் பற்றியிருந்தோம்

ஒரு நிழலைப்போல வானம் உடைந்தபோது

எங்களுக்கென சாய்ந்தழ 

சுவர்களில்லை

மரங்களில்லை

தோள்களில்லை

 

******

 

புலரியின் முத்தம்

 

கடந்து சென்ற புலரியின் முத்தங்களில் 

சிலவற்றை நான் நினைத்துக்கொள்கிறேன் 

மிகச் சுலபமாக பற்றிக்கொள்ள முடியாத 

சிலவற்றை நான் புரிந்துகொள்கிறேன்

மாசுபட்ட வார்த்தைகள்

சிதைந்துபோன பாடல்கள்

குரலற்ற உணர்வுகள்

நிச்சியமின்மையின் விளிம்பில்

எந்தப் பேராவலுமில்லை

எந்தக் கருணையுமில்லை

வெளிப்படும் எழுதிய கண்ணீரில்

ஒரு முழுமையை விடவும் பெரிய சாயைகள்

மூலவடிவங்களின் சாயை

உன் பாதியின் பாதியாய் நம்புகிறது

தலைவிரி விகுதிகளில் 

காதுக்கெட்டிய சஞ்சாரம்

உறைந்த சாயைகளோடு

கடைசிக்கணத்தில் சின்னஞ்சிறு நீயும் நானும்

 

***

 

மய்யப் புணர்தல்

 

நீ வருவதாயிருந்த ஒரு காலையில்

சூறைக்காற்றோடு வந்த சூரியனை

என் வாசல் மாடங்களிலிருந்து 

ஆயிரம் வசீகரத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிறேன்

 

சற்றே தெளிவடையாத 

கண்ணீர் விம்மும் சில வரிகளை

நீ வரக் காத்திருக்கும் 

சுலப மௌனமென பெயரிட்டுக்கொண்டிருக்கிறேன்

 

சில நிபந்தனையற்ற தற்கொலைகளை

என் உடைந்த வானத்தினூடே

உன் நிறைந்த மழையென நினைத்துக்கொண்டிருக்கிறேன்

 

தனித்த வீடொன்றில்

உன் பெயர் கொண்ட இரவில்

சில கதவுகள் சில வாசனைகளென 

தற்செயலான பார்வைகளில் ஊர்ந்துகொண்டிருக்கிறேன்

 

எடையற்ற முத்தங்கள் போதவில்லையென 

யோசித்த கணத்திலிருந்து

நான் கனத்துப்போகிறவன் என அறிவித்துக்கொண்டிருக்கிறேன்

 

என்னிடமே

உன் உடல்தானா என்று கேட்டபடியே

கடைசியாக ஒருமுறை புணர்ந்துகொண்டிருக்கிறேன்

உன் மய்யம் எதுவென்று தெரியாமல்

 

***

 

TN 77 K 7158

TN 77 K 7158 – லிருந்துதான்
உள்ளங்கையில் கிளறிவிட்ட ஊர்களை 
பார்க்கத் தொடங்கினேன்
கடந்துசெல்லும் மரங்களையும் 
பின்னிக் கிடக்கும் நிழல்களையும்
ஆன்மாவில் திறந்து கொண்டேன்
மரமற்ற சாலைகளில்
உணரத் தெரிந்த நிழலில்
மரம் சபித்து 
பறவையாய் லயித்திருந்தேன்
புத்தகத்தில் பதுங்கியிருக்கும் 
ஊர்க்குருவிகளைத் தேடாது
ஞானம் தலைக்கேறும்
100 கி.மீ வேகத்தில் மயங்கியிருந்தேன்
தலைக்கவசத்தின் கபாலம் பிளந்து
அசுர வெயிலின் ஒழுங்கு
புணரத் தெரியாதவனின் குறியாய்
சதா விரைத்துக்கொண்டிருக்க
முன் நானும்
பின் நீயும்
TN 77 K 7158 – யின் உள்ளங்கையில்
ஞானமடைந்துகொண்டோம்
துளியும் பேசாமல்.

 

 

***

அவர்களும் அவர்களாய் இருந்தவர்களும்

 

காணாமல் போனவர்களை

வருடக் கணக்கில் சமாதானப்படுத்துகிறேன்

ஒரு விடைபெறுதலுக்காக 

வாழ்க்கையை பணயம் வைத்தவர்களென

அவர்களுக்குப் பதிலாக

இன்னொருவரும் காணாமல் போகலாம்

எதற்கும் செலுத்த முடியாத விலையை

பிரிவின் நிமித்தமாக செலுத்திவிடலாம்

காணாமல் போனவர்கள்

காலியான மதுக் கோப்பையில்

செத்துக்கிடக்கும் ஈயைப் போல

வெயில் கால புணர்வின்

நடுநிசி மின்வெட்டைப் போல

குறிவைக்கப்பட்ட குரல்வளையைப் போல

ஒரு நீண்ட நகக்குறியைப் போல

தற்கொலை செய்துகொண்டார்கள்

அவர்களையும் அவர்களாய் இருந்தவர்களையும்.

******

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button