கட்டுரைகள்

‘BRAVEHEART ‘ திரைப்படம் குறித்த கண்ணோட்டம் – தோழர் பாண்டியன்

BRAVEHEART – வில்லியம் வாலசின் சுதந்திர தாகம்

ப்ரேவ்ஹார்ட் மெல்கிப்சன் நடித்து இயக்கி 1995 ஆம் ஆண்டு வெளியான படம்

இங்கிலாந்து 16 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் உலகின் பல நாடுகளை காலனியாக்கியது. ஆனால் 12 ஆம் நூற்றாண்டிலிருந்தே அருகிலிருந்த அயர்லாந்தையும், ஸ்காட்லாந்தையும் அடிமைப்படுத்துவதற்கான பல போர்களை அந்நாடுகள் மீது நடத்தியிருக்கிறது

இங்கிலாந்தின் காலனிய முயற்சிகளுக்கு எதிரான நான்கு போர்களை நடத்தி, கைது செய்யப்பட்ட பிறகும் பேரரசிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கோராமல், இறுதி மூச்சுவரை தாய்நாட்டின் விடுதலைக்காக போராடி மடிந்த ஸ்காட்லாந்து சுதந்திரப்போராட்ட வீரன், வில்லியம் வாலசின் உணர்ச்சி பொங்கும் வீர வரலாறுதான் இந்த ‘BRAVE HEART’.

கி.பி 1200, இங்கிலாந்தை ஆட்சி செய்த மன்னர் எட்வர்ட் லாங்ஷன் தனது எதிரி நாடான பிரெஞ்சு நாட்டு மன்னரின் மகளைத் தனது மகனுக்குத் திருமணம் செய்து வைக்கிறார். தனது மகன் மூலம் வாரிசுகள் உருவாகி அவர்கள் இங்கிலாந்தை ஆட்சிசெய்வார்கள் என்கிற நம்பிக்கை எல்லாம் எட்வர்டுக்கு இல்லை. சொல்லப்போனால் தனது மகனை ஒரு ஆண் மகனாகவே அவர் கருதவில்லை. எதிரி நாடான பிரான்சிடம் நட்பை ஏற்படுத்திக்கொள்வதற்காகவே பிரான்சுடன் மண உறவை ஏற்படுத்திக்கொண்டார்.

ஸ்காட்லாந்து மக்கள் இங்கிலாந்தின் ஆதிக்கத்துக்கு எதிராகத் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஸ்காட்லாந்த் இங்கிலாந்தின் முழுமையான பிடியில் இல்லை. ஆனால் பிரான்ஸ் வலிமையுள்ளவர்களையே மதிக்கும். ஸ்காட்லாந்து தனது கட்டுபாட்டில் இல்லை என்றால் பிரான்சு தன்னை மதிக்காது  என்பதால் ஸ்காட்லாந்தை இங்கிலாந்தின் முழுக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மகனின் திருமணத்திற்குப் பிறகு இராணுவத் தளபதிகளை அழைத்து ஆலோசனை செய்கிறார் எட்வர்ட்.

 

ஸ்காட்லாந்தில் நமக்குள்ள பிரச்சினையே ஸ்காட்லாந்து மக்கள் ஸ்காட்லாந்தில் வாழ்வது தான். அவர்களை அடக்கி ஒடுக்கி நம்முடைய வழிக்குக் கொண்டுவர நமது பாரம்பரிய முறையை நடைமுறைப்படுத்துங்கள்என்று உத்தரவிடுகிறார். ‘முதலிரவுதான் பாரம்பரிய முறை. திருமணமாகும் ஒவ்வொரு பெண்ணும் முதலிரவை பிரபுக்களுடன் கழிக்க வேண்டும். இதை கறாராக அமுல்படுத்துவதன் மூலம், ஸ்காட்லாந்து ஆண்கள் ஆண்மையிழந்து நமது பிடிக்குள் இருப்பார்கள். எனவே முதலிரவை அமுல்படுத்துங்கள் என்று உத்தரவிடுகிறார்.

இங்கிலாந்துக்கு வரி கட்டும் ஸ்காட்லாந்தின் அரச பதவிக்காக தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்ளும் ஸ்காட்லாந்து பிரபுக்களை, சமாதானப் பேச்சுவார்த்தை என்கிற பெயரில் அழைத்து இங்கிலாந்தை எதிர்க்காமலிருக்க நிலத்தையும், பொருட்களையும் வீசி எறிகிறார் எட்வர்ட்.

வில்லியம் வாலஸ் அப்போது சிறுவன். அவனுடைய அப்பா மால்கம் வாலஸ் ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு சாதாரண விவசாயி. மால்கம் வாலசுக்கு இரு மகன்கள். மூத்தவன் ஜான், இளையவன் வில்லியம். இங்கிலாந்தின் ஆதிக்கத்தை எதிர்த்தவர்களை தூக்கில் தொங்கவிடுவதைக் கண்டு கொந்தளிக்கும் வாலஸ், ஊர்மக்களைத் திரட்டிக்கொண்டு பதில் தாக்குதல் நடத்தக் கிளம்புகிறார். உடன் மூத்த மகன் ஜானும் கிளம்புகிறான். சிறுவனாக இருக்கும் வில்லியம், “நானும் வருகிறேன்…” என்று முன்நிற்கிறான். “நீ சிறுவன்… எனவே வீட்டிலேயே இரு” என்று கூறிவிட்டு அப்பாவும், அண்ணனும் மட்டும் கிளம்புகிறார்கள்.

போரின் முடிவில் வாலசின் தந்தையும், சகோதரனும் கொல்லப்பட, தந்தையையும் சகோதரனையும் அடக்கம் செய்த பிறகு வாலஸ் தனியனாகி நிற்கிறான். அடக்கம் செய்யும்போது வாலஸ் அழுவதையே உற்று நோக்கிக்கொண்டிருக்கும் ஒரு சிறுமி,

அவனுக்கு பூவைக் கொடுத்து பார்வையால் ஆறுதல் கூறுவாள். அதன்பிறகு வாலசை அவனுடைய தாய்மாமா தன்னுடைய கிராமத்திற்கு அழைத்துச் சென்றுவிடுவார்

வாலஸ் பெரியவனாகி மீண்டும் தன் கிராமத்திற்கு வருவான். தான் சிறுவயதில் சந்தித்த அதே சிறுமியை பெரியவளாக சந்திப்பான். இருவருக்குமிடையே காதல் மலரும். இங்கிலாந்து அரசரின் முதலிரவு சட்டம் அமுலில் இருப்பதால் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துகொள்வார்கள். இதை தெரிந்துகொள்ளும் இங்கிலாந்து சிப்பாய்கள், மரோனை பலாத்காரம் செய்ய முயற்சிப்பார்கள். பாய்ந்து வரும் வாலஸ் அவர்களைத் தாக்கிவிட்டு மரோனை ஒரு குதிரையில் ஏற்றிவழக்கமாக சந்திக்கும் இடத்திற்குப் போய்விடு… நான் பின்னாலேயே வந்துவிடுகிறேன்என்று கூறி அவளை அனுப்பிவைப்பான். ஆனால் சிறிது தூரத்திலேயே மரோன் தாக்கி வீழ்த்தப்படுவாள். மரோனை இழுத்துச்சென்று ஊரின் நடுவில் உள்ள ஒரு மரத்தில் கட்டிவைப்பார்கள். வழக்கமான இடத்திற்கு அவள் வராததால் வாலஸ் மீண்டும் கிராமத்திற்கு திரும்புவான். இராணுவ வீரர்களைத் தாக்கியதற்காக மரோன் வாலசின் கண்ணெதிரிலேயே கழுத்தை அறுத்துக் கொல்லப்படுவாள்

வாலசின் சிறுவயதிலேயே தாய் இல்லை, சிறுவனாக இருக்கும்போது தந்தையும், சகோதரனும் இல்லை. இப்போது மரோனும் இல்லை. வெறிகொண்டவனாக மாறுவான் வாலஸ். கிராமத்திற்குள்ளிருந்த இங்கிலாந்தின் இராணுவ வீரர்கள் ஒவ்வொருவரையும் அவனுடைய வாள் வெட்டி வீசும்

இங்கிலாந்தின் அதிகாரத்திற்குட்பட்ட அரச பதவிக்காக ஸ்காட்லாந்து பிரபுக்கள் தங்களுக்குள் நாய்ச்சண்டையில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததால், ஸ்காட்லாந்து விடுதலைப்போராட்டம் அதுவரை கொதிநிலை உக்கிரத்தை எட்டாமலிருந்தது. அவ்வப்போது நடக்கும் சிறுசிறு கலகங்களால் சலசலத்து ஓடும் நதியைப் போன்றிருந்த நாடு, வாலசின் வருகைக்குப்பின் பெரும் சத்தத்துடன் பாயும் காட்டாறாக மாறியது.

ஸ்காட்லாந்தின் பிரபுக்களை சந்தித்து இங்கிலாந்தை எதிர்த்துப் போராட வேண்டும் என்கிற உணர்வை விதைப்பான் வாலஸ். தன்னுடைய மகனை எப்படியாவது ஸ்காட்லாந்தின் அரசனாக்கிவிட வேண்டும் என்கிற திட்டத்துடன் செயல்படும், நோயவாய்ப்பட்ட கிழவன் ராபர்ட் டி ப்ரூஸ் என்கிற பிரபுவின் மகனான ராபர்ட் ப்ரூசிடமும் வாலஸ் போராட்ட உணர்வை விதைக்கிறான். ஆனால் ப்ரூசுக்கு ஸ்காட்லாந்து பிரபுக்கள் மீது நம்பிக்கை இல்லை.

 “இவர்கள் சுயநலவாதிகள், பொன்னுக்கும் பொருளுக்கும் மயங்கிவிடக்கூடியவர்கள். நீ இரண்டு பக்கமும் எதிரிகளை சம்பாதித்துக்கொள்ளாதே வாலஸ்என்பான் ராபர்ட் ப்ரூஸ்.

எப்படி இருந்தாலும் நாம் சாகத்தான் போகிறோம், ஆனால் எப்படி சாகப்போகிறோம் என்பது தான் முக்கியம். நீங்கள் என்ன நிலைமையில் இருந்தாலும் சரி. ஸ்காட்லாந்து மக்களின் விடுதலையை மறுக்க முடியாது. அதைப் பெற்றுத்தருவது உங்கள் கடமை என்பதையும் மறந்துவிடக்கூடாதுஎன்பான் வாலஸ்

வாலசின் வீரமும், தேசப்பற்றும் ராபர்ட் ப்ரூசை ஈர்த்து உற்சாகமூட்டும். இங்கிலாந்துக்கு எதிரான போரில் எப்போதும் உன்னுடன் உறுதுணையாக நிற்பேன் என்று வாலசுக்கு உறுதியளித்து அவனுடன் கைகோர்க்கிறான்.

பிரபுக்களை இணைத்துக்கொண்டு, வாலஸ் தலைமையில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த ஸ்டிர்லிங் போரில் (இங்கிலாந்துக்கு எதிரான முதல்போர்) ஸ்காட்லாந்து வெற்றி பெறுகிறது. ராபர்ட் ப்ரூசின் தந்தை உள்ளிட்ட சில பிரபுக்களுக்கு விருப்பமில்லை என்றாலும், ஸ்டிர்லிங் போருக்குப் பிறகு வில்லியம் வாலஸ் ஸ்காட்டிஷ் மக்களின் தலைவனாகிறான்.

ஸ்டிர்லிங்கை அடுத்து மன்னர் எட்வர்டின் மருமகன் கட்டுப்பாட்டிலிருந்த நகரமும் வாலஸ் தலைமையில் வீழ்த்தப்படுகிறது. மருமகனின் தலையை எட்வர்டுக்கு அனுப்பிவைக்கிறான் வாலஸ்.

இப்படியே போனால் அடுத்து இங்கிலாந்தையும் தாக்குவான். அதற்கு முன்னால் அவனை நான் விலைக்கு வாங்கியாக வேண்டும் என்று, தனது பிரெஞ்சு மருமகளை வாலசிடம் சமாதானம் பேச அனுப்பிவைக்கிறான் எட்வர்ட். வாலசோ அவளிடம்என்னை விலைக்கு வாங்க முடியாது என்பதை உன் அரசரிடம் சொல். நான் உயிரோடு இருக்கின்ற வரை என்னையும், என் மக்களையும் அடக்க முடியாது என்பதையும் சொல்லிவிடுஎன்று கூறுகிறான். இளவரசிக்கு வாலஸ் மீது ஈர்ப்பும், மரியாதையும் கூடுகிறது

இதற்கிடையில் அறிவிப்பின்றி ஸ்காட்லாந்து மீது போர்தொடுக்க எட்வர்ட் படைகளைத் திரட்டிக்கொண்டிருக்கிறான். பிரெஞ்சுப்படையின் உதவியையும் கோருகிறான். இந்த தகவலை தோழியின் மூலம் வாலசுக்குத் தெரிவிக்கிறாள் இளவரசி.

தகவல் கிடைத்த உடன் ஸ்காட்லாந்து வீரர்களும் போருக்குத் தயாராகிறார்கள். பிரபுக்களிடம் பேசி அவர்களையும் இணைக்கிறார்கள். அயர்லாந்தின் ஒரு பிரிவு மக்களும் ஸ்காட்லாந்துக்கு ஆதரவாக இணைகிறார்கள். ஃபால்கிரிக்கில் இரு படைகளும் எதிரெதிரே குவிகின்றன. போரில் கலந்துகொள்வதாக உறுதியளித்த பிரபுக்கள் போர் துவங்கியதும் களத்திலிருந்து துரோகத்தனமாக பின்வாங்குகிறார்கள்.

போரில் இங்கிலாந்தின் கை மேலோங்குவது தெரிந்ததும் எட்வர்ட் அரண்மனைக்கு கிளம்புவார். அரசர் கிளம்புவதை பார்த்துவிடும் வாலஸ், போரில் தோற்றாலும் பரவாயில்லை எட்வர்டை எப்படியாவது கொன்றுவிட வேண்டும் என்று உடலில் ஏற்பட்ட இரத்தக்காயங்களுடன் எழுந்து ஓடுகிறான்.

வாலஸ் துரத்திக்கொண்டு வருவதை அறிந்து, அரசரை அனுப்பிவிட்டு படைவீரர்களில் சிலரும், தளபதி ஒருவனும் வாலசைத் தாக்க அவனை நோக்கி ஒடி வருகிறார்கள். குதிரையில் பாய்ந்துவரும் வாலசை முகமூடி அணிந்த தளபதி ஒருவன் தாக்கி வீழ்த்துகிறான். உடன் எழும் வாலஸ் அவனைத்தாக்கி கீழே தள்ளி அவனுடைய முகமூடியை கழட்ட….

அவன்.. “இங்கிலாந்துடனான போரில் உனக்கு உறுதுனையாக நிற்பேன்…” என்று வாலசுக்கு

வாக்குறுதியளித்த ராபர்ட் ப்ரூஸ்.

அந்த துரோகத்தை வாலசால் ஜீரனிக்க முடியாது. துரோகத்தை எதிர்கொள்ள முடியாமல் நிலைகுலைந்து தரையில் விழுகிறான். தான் இழைத்த துரோகத்தை எண்ணி வாலசின் முகத்தைப் பார்க்க முடியாமல் ராபர் ப்ரூஸ் கூனிக்குறுகி நிற்கிறான். அதற்குள் இங்கிலாந்தின் படைவீரர்கள் வாலசைப் பிடிக்க வேகமாக வந்து கொண்டிருக்கிறார்கள். “தப்பித்துவிடு வாலஸ், போ.. போ..” என்று வாலசை ஒரு குதிரையில் ஏற்றி தப்பிக்க வைக்கிறான் ராபர்ட்.

அதன் பிறகு நேரடியாக தனது தந்தையிடம் செல்லும் ராபர்ட், “நாம் செய்தது மிகப்பெரிய துரோகம். உங்கள் பேச்சைக் கேட்டுதான் நான் அப்படி நடந்துகொண்டேன். இனிமேல் என்னால் துரோகமிழைக்க முடியாது. நான் வாலசின் பக்கம்தான் நிற்பேன்என்று உறுதியாகக் கூறிவிடுகிறான்.

போருக்குப் பிறகு, இங்கிலாந்தின் பக்கம் நின்று, சொந்த நாட்டின் முதுகில் குத்திய பிரபுக்களை ஒவ்வொருவராக தேடித்தேடிக் கொல்கிறான் வாலஸ். தன்னைக் கொல்வற்கு வாலஸ் எப்போது வருவானோ என்கிற மரண பீதியில் இருக்கிறார்கள் பிரபுக்கள்.

ஸ்காட்லாந்துக்கு துரோகமிழைத்த பிரபுக்களின் கொலைகள் மக்களால் வரவேற்கப்படுகிறது. வில்லியம் வாலசின் புகழ் மென்மேலும் பரவுகிறது. எல்லா நகரங்களிலும் வாலஸ் தனது ஆதரவாளர்களைத் திரட்டுகிறான். மக்கள் அவனை முன்னிலும் அதிகமாக நம்புகின்றனர்.

ஸ்காட்லாந்துக்கு எதிரான இங்கிலாந்தின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் இளவரசி

தெரிவித்துக்கொண்டே இருக்கிறாள். எனவே இங்கிலாந்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் தோற்கடிக்கப்படுகிறது. இளவரசிக்கும் வாலசுக்கும் இடையிலான நெருக்கமும் அதிகரிக்கிறது. இளவரசி வில்லியம் வாலசின் கருவை சுமக்கிறாள்.

துரோகமிழைத்த ஸ்காட்லாந்து பிரபுக்கள் சில ஆண்டுகளுக்குப் பிறகு வாலசைத் தேடி வருகிறார்கள். தாங்கள் செய்தது தவறு என்றும், தங்களுடைய தவறை உணர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவும், இங்கிலாந்துக்கு எதிராக மீண்டும் போர் புரியத் தயாராக இருப்பதாகவும், எனவே வாலஸ் தங்களுடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்றும் கூறுகிறார்கள். பலம் அதிகரிக்கிறது என்றெண்ணி வாலஸ் உற்சாகமாகிறான். ஆனால் உடனிருக்கும் சக தோழர்கள், “பிரபுக்களை நம்ப வேண்டாம். அவர்கள் எப்போதும் துரோகிகள் தான். உன்னை பிடிப்பதற்காக தான் பேச்சுவார்த்தை என்கிற பெயரில் அழைக்கிறார்கள் போகதே…” என்று தடுக்கிறார்கள்.

“அப்படி இருக்காது. நான் பார்த்து வருகிறேன்…” என்று கூறிவிட்டு வாலஸ் பிரபுக்களின் இடத்திற்குச் செல்கிறான். வாலஸ் வந்திருப்பதை அறிந்து ராபர்ட் ப்ரூஸ் வாசலிலேயே வந்து வரவேற்கிறான். ஆனால் ராபர்ட் ப்ரூசுக்கே பிரபுக்கள் தீட்டியிருந்த அந்த துரோகத்தனமான சதித்திட்டம் பற்றித் தெரியாது. வாலஸ் நுழைந்ததுமே மறைந்திருந்த இங்கிலாந்து வீரர்கள் அவனை அதிரடியாகத் தாக்கி கைது செய்கிறார்கள்.

இங்கிலாந்தின் பிடியிலிருந்து ஸ்காட்லாந்தை விடுவிக்க முன்நின்ற வாலஸ் துரோகத்தால் வீழ்த்தப்பட்டு இங்கிலாந்தின் பிடிக்குள் கைதியாகி நிற்பான். கைது செய்யப்பட்ட பின்

லண்டனுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, வெஸ்ட்மினிஸ்டர் ஹாலில் நீதிபதிகளுக்கு முன்

விசாரிக்கப்படுவான்.

அரசருக்கு எதிராக குற்றமிழைத்ததை ஒப்புக்கொண்டால் உடனே உன்னைத் தூக்கிலிட்டுவிடுவோம், இல்லையெனில் கொஞ்சம் கொஞ்சமாக சித்திரவதை செய்து கொல்லப்படுவாய், என்ன சொல்கிறாய்? குற்றத்தை ஒப்புக்கொள்கிறாயா?”  என்று கேட்பார் நீதிபதி.

“என்னுடைய வாழ்நாளில் நான் யாருக்கும் கெடுதல் செய்ததில்லை, எனவே நான் எந்த குற்றத்தையும் செய்யவில்லை.” என்று கூறுவான் வாலஸ்.

அத்துடன் விசாரணை முடியும். “நாளை காலை உன்னை புனிதமாக்குகின்ற சடங்கு நடக்கும்.” என்று தீர்ப்பளிக்கப்பட்டு வாலஸ் சிறையில் அடைக்கப்படுவான். வாலசை சந்திக்க இளவரசி இரவு நேரத்தில் சிறைச்சாலைக்கு வருவாள். “ஒரு மன்னிப்பு, ஒரே ஒரு மன்னிப்பு மட்டும் கேட்டால் போதும். உன்னை உயிரோடு விட்டுவிடுவார்கள். தயவுசெய்து மன்னிப்பு கேட்டுவிடுஎன்பாள். “நான் அப்படி மன்னிப்பு கேட்டால், அது செத்ததற்கு சமம். என்னால் முடியாதுஎன்று மறுத்துவிடுவான் வாலஸ்.

வாலஸ் நிச்சயமாக மன்னிப்புக் கேட்க மாட்டான் என்பது அவளுக்குத் தெரியும். எனவேதான் மறுநாள் நடக்கவிருக்கும் சித்திரவதையின் வலிகளைக் குறைக்கும் பொருட்டு கையோடு ஒரு மருந்தைக் கொண்டு வந்திருப்பாள். “இதை சாப்பிட்டுவிடு, உன்னுடைய வலிகள் கொஞ்சம் குறையும்என்று மருந்தைக் கொடுப்பாள்.

 “வேண்டாம், என்னால் யோசிக்க முடியாமல் போய்விடும்.அது மட்டும்தான் என்னுடைய ஒரே சொத்து.என்னுடைய நினைவுகளை நான் இழந்தால் உங்கள் அரசர் என்னை வெற்றி கொண்டதாக அர்த்தமாகிவிடும்என்று கூறி அதையும் வாங்க மறுத்துவிடுவான். இளவரசி கண்ணீர் வடித்து மீண்டும் வலியுறுத்துவாள், அவளுக்காக அதை வாங்கி வாயில் போட்டுக்கொள்வான். சிறையிலிருந்து அவள் வெளியேறியதும் வாய்க்குள்லிருந்த அந்த மருந்தைத் துப்பிவிடுவான்.

வாலசை சந்தித்துவிட்டு நேராக அரசரை சந்திக்க வருவாள் இளவரசி. “வாலசை மன்னித்து விட்டுவிடுங்கள், அது நமது நாட்டுக்கு பெருமை சேர்க்கும் என்பாள்.” அரசரால் எந்த பதிலையும் கூற முடியாது. அருகில் நின்றுகொண்டிருக்கும் தன்னுடைய கணவனிடம், “உன்னாலும் கூட அன்பு என்பதை புரிந்துகொள்ள முடியவில்லையா?” என்பாள். அவனோ, “அவரால் பேச முடியாமல் போவதற்கு முன்னால் தன்னுடைய ஒரே ஆசை, தான் இறப்பதற்கு முன் வாலசின் மரணச்செய்தியை கேட்க வேண்டும் என்பது தான்என்று கூறினார் என்பான்.

அப்படியாஎன்று கூறிவிட்டு கேலி தொனிக்கும் ஒரு புன்னகையுடன் அரசரின் கட்டிலை நெருங்கி, அவருடைய காதருகே சென்றுமரணம் நம்மையும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. உங்களோடு வாலசும் வருவார். இனி எனக்கு பிறக்கும் குழந்தையை உங்கள் வழியில் நான் வளர விடமாட்டேன். உங்கள் மகனும் நீண்டநாள் அரச பதவில் இருக்க முடியாதுஎன்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புவாள்.

மறுநாள் வாலஸ் சித்திரவதை மேடையில் ஏற்றப்படுவான். அப்போதும் அவனிடம், “இப்போது கூட அரசரிடம் மன்னிப்பு கேட்டால் உனக்கு உயிர்ப்பிச்சை வழங்கி விடுவிக்கிறோம்என்று கூறுவார்கள்.வாலஸ் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்பான்.

சித்திரவதை துவங்கும். கழுத்தில் கயிற்றைச் சுற்றி இறுக்கி உயரத்தில் தூக்கி, மூர்ச்சையாகி மயங்கும் நிலையில் அப்படியே கீழே போடுவார்கள்.

இப்போதாவது மன்னிப்புக் கேட்கிறாயா?” எழுந்து வா.. வந்து எங்கள் நாட்டின் இலச்சினைக்கு முத்தம் கொடுஎன்பார் தண்டனையை நிறைவேற்றுபவர்.

மூர்ச்சையாகி துவண்டு விழுந்த வாலஸ், எழ முடியாமல் எழுந்து அடுத்த சித்திரவதைக்கு தயாராக நிற்பான்.

அடுத்து கைகளை ஒரு கயிறாலும், கால்களை ஒரு கயிறாலும் கட்டி, கைகளைக் கட்டிய கயிறை

மேல் நோக்கியும், கால்களை கட்டிய கயிறை குதிரையை கொண்டு கீழ் நோக்கியும் இழுப்பார்கள். கைகளும் கால்களும் தனியாக பிய்த்துக்கொண்டு வரும் அளவுக்கு பலம் கொண்டு இழுக்கப்பட்டு பிறகு தரையில் போடுவார்கள்.

இறுதியாக சித்திரவதை மேடையில் படுக்க வைக்கப்படுவான். நீண்டு வளைந்திருக்கும் ஒரு கத்தியை கொண்டு அவனுடைய மேலாடை விலக்கப்பட்டு அடிவயிறு கிழிக்கப்படும். “இப்போதும் ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை, மன்னிப்பு கேள் விட்டுவிடுகிறோம்என்பார்கள்.

வாலஸ் ஏதோ சொல்ல முற்படுவான். தண்டனையை நிறைவேற்றும் நீதிபதி வாலஸ் மன்னிப்பு கேட்க வருகிறான் என்று கருதி,

நீ சொல்ல வருவதை சத்தமாக சொல்,

சுற்றி நிற்கும் மக்களிடம் சொல்என்பான்

தனது இறுதி மூச்சை இழுத்து அடிவயிற்றிலிருந்து வில்லியம் வாலஸ் கத்துவான். “சுதந்திரம் வேண்டும்” 

அது தான் வில்லியம் வாலஸ் உச்சரிச்ச இறுதி வார்த்தை

இறுதியாக தண்டனை நிறைவேற்றப்படும். ஆனால் போராட்டம் நிறைவு பெறாது. வில்லியம் விட்டுச்சென்ற இடத்திலிருந்து ராபர்ட் ப்ரூஸ்  துவங்குவான். இன்றும் அந்த விடுதலைப் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியாமல் ஸ்காட்லாந்து இன்றும் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது

இங்கிலாந்துடன் கொஞ்சம் சமரசம் செய்து கொண்டிருந்தால் வில்லியம் வாலஸ் ஸ்காட்லாந்தின் அரசானாகியிருப்பான். ஆனால் அது சுதந்திர ஸ்காட்லாந்தாக இருக்காது என்பது வாலசுக்கு தெரியும், எனவேதான் அவன் அதைப்பற்றி யோசித்துக்கூட பார்க்கவில்லை. மன்னிப்பு என்கிற ஒற்றை வார்த்தையை உச்சரித்திருந்தால் உயிர் பிழைத்திருப்பான். ஆனால் அப்படி அடிமையாக வாழ அவன் விரும்பவில்லை.

வாலஸ் இறுதியாக உச்சரித்த ‘சுதந்திரம்’ என்கிற

அற்புதமான வார்த்தையைப் போலவே சுதந்திரமாக வாழ்ந்தவன். “எனது தாய்நாட்டை அடிமைப்படுத்துவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது”, என்று தனது தாய்நாட்டின் விடுதலைக்காக இறுதி மூச்சுவரை அடிபணியாமல் தீரத்துடன் போராடி மடிந்த வில்லியம் வாலஸ் தேசப்பற்றுக்கும், சுயமரியாதைக்கும், சுதந்திரத்திற்கும் முன்மாதிரியான வீரனாவான்.

அந்த மாவீரனின் வாழ்க்கையை சித்தரிக்கும் அற்புதமான படம் தான் ‘BRAVE HEART’. வாலசின் சுதந்திர தாகமும், வீரமும் வாலஸ் எதிர்த்து நின்ற அதே இங்கிலாந்தை இந்திய மண்ணில் எதிர்த்துப் போராடிய திப்புவையும், பகத்சிங்கையும் நமக்கு நினைவூட்டுகிறது

இன்றும் வில்லியம் வாலஸ் ஸ்காட்லாந்தின் தேசிய நாயகனாகப் போற்றப்படுகிறார். ஸ்காட்லாந்தின் தேசிய தாகம் தனியும் வரை ஆதிக்கத்திற்கு எதிரான ஸ்காட்லாந்து மக்களின் போர் நடந்துகொண்டே இருக்கும். வாலசின் விருப்பப்படி ஸ்காட்லாந்து ஒரு நாள் சுதந்திரக்காற்றை சுவாசிக்கும்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button