‘Sex,Drugs & Theatre’ Web Series குறித்த கண்ணோட்டம் – வெங்கடேஷ்

இது Zee5-ல் வெளியான 10 எபிசோடுகளைக் கொண்ட வலைதளத் தொடர். ஒரு மருத்துவ மாணவனின் தற்கொலையிலிருந்து தொடங்குகிற தொடர், கல்லூரியில் நடக்கும் அரசியல் சூழ்ச்சிகள், நட்பு, தியேட்டர், நாடகம், ரிகர்ஸல் என நமக்குள் நமது கல்லூரி நினைவுகளை ஆழத் தோண்டி கிளறி விடும் செயலைச் செய்திருக்கிறது (இது கல்லூரி முடித்து வருடங்கள் கடந்த பெரியவர்களுக்கே பொருந்தும்).
இயல்பாகவே கல்லூரியில் நடப்பது போல் சித்தரிக்கப்பட்ட திரைப்படங்கள், தொடர்களை இரசித்துப் பார்க்கிற என்னைப் போன்றோருக்கு இத்தொடர் நல்ல தேர்வு.
இது மராத்தியை மூல மொழியாகக் கொண்டு உருவாகி இருந்தாலும், தமிழிலும் இத்தொடர் கிடைக்கப்பெறுகிறது.
இத்தொடரில் பேசப்பட்டிருக்கும் அரசியல் எங்கேயோ கேட்டது போல் இருக்கிறது. ரோஹித், போராட்ட குணமிக்க, துடிப்பான இளைஞன். கல்லூரி மாணவர் தேர்தலில், ஒரு மாணவனைத் தேர்தலில் நிறுத்தி, ரோஹித் முன் நின்று செயல்பட மர்மமான முறையில் ரோஹித் மரணிக்கிறார். அவர் எப்படி இறந்தார், வேறு யாருக்காவது தற்கொலையில் சம்மந்தம் உள்ளதா என கதைக்களம் நகர்ந்தாலும், புனேவில் நடக்கும் கல்லூரிகளுக்கு இடையிலான நாடகப் போட்டியில் கலந்து கொள்ள மாணவர்கள் செய்யும் பயிற்சி, மேடைக்குப் பின்னால் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் மிகவும் நேர்த்தியாக காண்பித்திருப்பது, டெக்னீசியன்களின் உழைப்பு அதன் முக்கியத்துவம் என பட்டையை கிளப்புகிறது இத்தொடர்.
தமிழில் சமீபத்தில் பார்த்த ‘சீதக்காதி’ என்ற திரைப்படத்தில் ஐயா- வாக வரும் சேதுபதி, குறைந்த காட்சிகளே வந்தாலும் படம் முழுதும் ஐயாவின் சுவடுகள் இருக்கும். அதே போன்றதொரு கதையமைப்பு இத்தொடரிலும் இருக்கிறது.
“நான் ரோஹித் குலேக்கர், நான் ஒரு தலித். ஆனா, நான் ஒரு மனுஷன்”, போன்ற வசனங்கள் ஸ்காலர்ஷிப்பில் படிக்கும் ஏழை, தலித் மாணவனுக்கு நடக்கும் அநீதி, உரிமையைக் கோரினால், தப்பைத் தட்டிக் கேட்டால் அவனை என்னவெல்லாம் இந்த அதிகார வர்க்கம் செய்யும் எனக் காண்பித்துள்ளனர்.
புலன் விசாரணை போன்ற காட்சிகள் இல்லை என்றாலும் கதையோட்டத்தில் அதைக் கூறியிருப்பது நல்ல காட்சியமைப்புக்கான சான்று.
முக்கியக் கதாப்பாத்திரங்கள், போலா(ரோஹித்தின் உயிர் தோழன்) ரோஹித் விட்டுச் சென்ற கடமைகளை கையிலெடுக்கும் நண்பன்; அபேய், அடுத்த ரோஹித்; ரேவா, ரோஹித்தின் காதலி. சூரஜ், முக்தா, கோமல், ப்ரொபஃஸர் கைக்வாட், மௌலி என இன்னும் நிறைய கதாப்பாத்திரங்கள் மனதில் நிற்கின்றன.
கதை, திரைக்கதை, கதாப்பாத்திர வடிவமைப்பு மிகவும் நுணுக்கமான வேலைப்பாடு. இயக்கத்தை பொறுத்தவரை; ஒரு சின்ன சம்பவம் நினைவுக்கு வருகிறது, “அறிஞர் அண்ணா, கலைஞரை சைதாப்பேட்டை தொகுதிக்கு முன் மொழியும் போது, பதினோரு இலட்சம் எனக் கூறி அறிமுகப்படுத்தினார்”. இயக்கத்தைப் பற்றி நினைக்கையில் இதுவே ஞாபகத்திற்கு வந்தது. குறிப்பாக இன்ட்ரோ மியூசிக், பின்னணி இசை சிம்பிளாக இசைத்துள்ளது.
நடுவில் ஒரு இடத்தில் ரவி என்ற மாணவன் சில கேள்விகளை போலாவிடம் கேட்பான்.
“காம்படீஷனா இல்ல ப்ளேவா?”
அந்த கேள்விகளுக்கான விடை இறுதியில் நமக்குப் புரியவரும்.
“காத்து எல்லாத்தையும் அடிச்சிட்டு போயிரும், புயல் ஒரு நாளும் அமைதியா வீசாது, மரங்கள் வேரோட சாஞ்சிரும், ஆனா உண்மை உண்மையாவே இருக்கும்”
‘செக்ஸ், ட்ரக்ஸ் & தியேட்டர்’, அதீத தயக்கமும், ஆனால் இதை எழுதியே ஆக வேண்டும் என்ற வேட்கையும் ஒரு சேர என்னை அழுத்தியது. இத்தொடரின் பெயர் காரணம், என்னை பொறுத்தவரை selling point. இத்தொடரின் பாணியில் சொல்லப் போனால், ஒரே ஒரு கேள்விதான், உங்களுக்கு தேவை
“டைட்டிலா? இல்லை கன்டென்டா?”