‘எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது’ மொழிபெயர்ப்பு நூல் குறித்த வாசிப்பு அனுபவம் – ஜான்சி ராணி

தலைப்பு : எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது
ஆசிரியர்: வைக்கம் முகம்மது பஷீர் (மலையாளம்)
தமிழில் : கே.சி.சங்கரநாராயணன்
வகைமை: நாவல்
வெளியீடு: சாகித்திய அகாதெமி
முதல் பதிப்பு 1959 ஆம் ஆண்டில் வெளியாகியுள்ளது.எளிய சிக்கலற்ற மொழிநடையில் சொல்லப்பட்ட கதை.செல்வச்செழிப்பான ஒரு குடும்பம் நொடித்துப் போதலும்,பின்பு அவர்களின் வாழ்க்கை முறை எப்படி மாறிப்போகிறதென்பதும் விவரிக்கப்படுகிறது.
குஞ்சுப்பாத்துமா என்ற இளம்பெண்தான் கதாநாயகி. கட்டுப்பெட்டியான வழக்கங்கள் கொண்ட கேரள முஸ்லிம் குடும்பத்தின் பழக்கவழக்கங்களும் அவர்களின் வாழ்வியலும் பின்னணியாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. “பழைய பெருங்காய டப்பா” என்றொரு சொலவடைதான் நினைவில் வருகிறது. இக்கதை நெடுகிலும் குஞ்சுப்பாத்துமாவின் அம்மா “உங்கள் தாத்தாகிட்டே ஒரு யானை இருந்தது. யானை, எப்பேர்ப்பட்ட யானை தெரியுமா?பெரிய கொம்பனானை” என்று ஜம்பமடித்துக் கொண்டே இருக்கிறார்.

உறவினர்கள் தொடுத்த வழக்கில் தோற்று, செல்வமெல்லாம் கைவிட்டுப் போன பிறகும் அந்த வறுமை தகிக்கும் வாழ்க்கைக்கு அவரால் இறங்கி வர முடியவில்லை. பழம் பெருமை பேசித் திரியும் பழக்கத்தையும் விட முடியவில்லை.அக்காலத்தில் நிலவிய மூடநம்பிக்கைகளும் கட்டுப்பாடுகளும் கதையினூடாக காணக்கிடைக்கிறது.பின் குஞ்சுபாத்துமாவை அதிலிருந்து மீட்டெடுக்கும் முற்போக்கு கதாநாயகன் வருகிறார்.பிறகென்ன சுபம்தான்.
இப்போது இக்கதையைப் படிக்க நேர்கையில் இன்றைய காலத்திற்கு நவீனமெனத் தோன்றாமலிருக்கலாம். ஆனால் ஏறத்தாழ அறுபதாண்டுகளுக்கு முன்பு அதிக கட்டுப்பாடுகள் நிறைந்த(குறிப்பாக பெண்களுக்கு) ஒரு பிற்போக்கான சமூகச்சூழலில் இக்கதை பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியதாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.