’12 years a Slave’ திரைப்படம் குறித்த அனுபவம் – மு.அருள்செல்வன்

அடிமைகள் என்ற வார்த்தையை இன்று நாம் சர்வ சாதாரணமாக சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அந்த ஒரு வார்த்தையின் பின்னால் ஒளிந்திருக்கும் இருளும்,கொடூரமும், கண்ணீரும் நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிய வாய்ப்பில்லை. அப்படிப்பட்ட வரலாற்றின் ஒரு கொடூர அத்தியாயத்தைப் பற்றியே பேசுகிறது இப்படம்….
மனித இனத்தின் பூர்வகுடிகளென சொல்லப்படுகிற ஆப்பிரிக்க இன மக்களை ஒரு சந்தைப் பொருளாக மாற்றி அவர்களின் உழைப்பை உண்டு கொழுத்தது மேற்கத்திய உலகம்.இத்தகைய வரலாற்றுப் பின்னணியுடன் அம்மக்களுக்கான விடுதலையை அதன் மகத்துவத்தை நாயகனது பாத்திரத்தின் வழியே நமக்கு உணர்த்தியிருக்கிறார் இயக்குநர்.
படத்தின் நாயகன் ஒரு இசைக் கலைஞனாய் தன் வாழ்க்கையை அற்புதமாக கழித்துக் கொண்டிருக்கிறான். ஆனால் மதுவோடு அவன் வாழ்ந்த ஒரு இரவு அடுத்த 12 ஆண்டுகளுக்கு அவன் எங்கு எப்படி வாழப்போகிறான் என்பதை முடிவு செய்கிறது…ஆம், வீட்டில் பஞ்சு மெத்தையில் புரண்டவன் அடுத்த நாள் ஒரு கொட்டடியில் கை கால்கள் சங்கிலியால் பிண்ணப்பட்டு கிடக்கிறான். அவன் சுதாரிப்பதற்குள் அடிமையாய் சந்தையில் நிறுத்தப்பட்டு விற்கப்படுகிறான்….பருத்திக் காட்டுக்குள் விரல்களை பதம் பார்க்கும் முற்களோடும், கங்காணிகளின் கசையடிகளோடும் அரை வயிற்று சோற்றுக்கு அடிவாங்கியே சாகின்றனர் அடிமைகள்….ஒரு பெண்ணாய்ப் பிறந்ததைத் தவிர வேறெந்தத் தவறும் செய்திராத நாயகி படும்பாடு உங்கள் தூக்கத்தைக் கலைக்கும். அதிலும் முதலாளி அம்மாக்கள் பயன்படுத்தி தூக்கி போடும் ஒரு சிறு சோப்புக்கட்டிக்காக…. பக்கத்து தோட்டத்திற்கு சென்று வந்த குற்றத்திற்காக… முதலாளி(?) வெற்று உடம்பாக அவளைக் கட்டி வைத்து அவளின் தோலை உரிக்கும் காட்சியை கண்ணீர் சிந்தாமல் உங்களால் கடக்க முடியாது….இதிலிருந்து நாயகன் எப்படி மீண்டான்?அவனது குடும்பம் என்னவானது? மீதமிருக்கும் அடிமைகள் என்னவானர்கள்? என்பதே மீதிக்கதை.
உலகின் ஒவ்வொரு மூலையிலும் மதத்தின் பெயரால்,இனத்தின் பெயரால்,மொழியின் பெயரால்,சாதியின் பெயரால் ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தால் எப்படியெல்லாம் கொடுமைகளை அனுபவித்திருக்கும் என்பதற்கான ஒரு உதாரணமே இத்திரைப்படம்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே நாகரீகம் அடைந்து விட்டதாய் மார்த்தட்டிக் கொள்ளும் மனித இனம் சமீபகாலம் வரை ஏன் இன்று வரை கூட தன் சக மனிதனை சக மனிதனாய்ப் பார்க்காத,தீண்டாத ஒரு சமூகமாய் இருந்து வருகிறது…நிற பேதமாய்,சாதி பேதமாய்,வர்க்க பேதமாய் மாறி நிற்கிறது.
பழம்பெருமை பேசும் முன் இந்த வரலாற்றையும் நாம் கொஞ்சம் படிப்போமாக!!!!
மிகவும் சிம்பிளாக நன்றாக எழுதி இருக்கிறீர்கள் முருகானந்தம் வாழ்த்துக்கள்..இந்தத் திரைப்படம் எனக்கு பல வரலாற்று சம்பவங்களை ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தது அலெக்ஸ் ஹேலி எழுதிய ஏழு தலைமுறைகள் கதையை நான் என் சிறு வயதிலேயே வாசித்திருக்கிறேன் அது என் கண் முன்பு விரிந்து கொண்டு இருந்தது மேலும் அமெரிக்க கருப்பர்கள் எப்படியெல்லாம் சித்திரவதையை அனுபவித்து இருப்பார்கள் என்பதை நான் இந்த படத்தை பார்த்து தெரிந்து கொண்டேன் அலெக்ஸ் ஹேலியின் ஏழு தலைமுறைகளின் புத்தகத்தில் வருவதைப் போலவே ஆனால் அந்த புத்தகத்தில் நிறைய இருக்கிறது இங்கே அவ்வளவு பேசப்படவில்லை மேலும் Quentin torantinoவின் ஜாங்ஹோ அன்செயிண்ட் படம் அடிக்கடி நியாபகத்துக்கு வரும்… நான் இந்த படத்தையும் அந்த படத்தையும் போட்டு குழப்பிக்கொள்வேன்.