தனிமைக் காலம்
i)
செங்கால் நாராய் செங்கால் நாராய்
எத்திசையில்
மகிழம்பூக்களைத் தேடித் தேடி ஒருவன்
மருகி முத்தமிடுகிறானோ
எத்திசையில்
தாழை மடல்களைக் கொண்டொருவன்
தனிமைக்குக் காவல் அமைக்கிறானோ
எத்திசையிலொருவன்
ஒரு மீத சேலையைப் போர்த்திக்கொண்டு
கண்ணயர்ந்திருக்கிறானோ
தயங்காமல் அவனருகில் செல்
எழுப்புதற்கு ஒன்றுமில்லை
இங்கிருந்து செல்கிறாயல்லவா
தானே திடுக்கிட்டு விழிப்பான்
கவனமாக இரண்டடி தள்ளியமர்ந்து
இது சொல்
ஏற்கனவே இவள்
காதல் தாளாமல் ததும்புகிறாள்
காற்றில் இனி கரிக்காத முத்தம் அனுப்பச்சொல்
உடை தளர
இடை மெலிந்தாள்
இனியும்
சுமந்திருக்கும் ஞாபகங்கள்
இழந்த எடைக்கு ஈடாகா என்று சொல்
மடல் வாழைத் தொடைகளும்
மலரொத்தப் பாதங்களும்
சுல்லிகளென
சருகுகளென போவதில்
வருத்தம் கொள்வாளில்லை
மிதந்து வந்து முத்தம் பதிய தோதென்றிருக்கிறாள் என்று சொல்
அவனுக்குப் பிடித்த
இந்தச் சேலை
நைந்து இழை பிரியத் துவங்கிற்றென்று சொல்
செங்கால் நாராய்
கனத்து விடைபெறுமுன்
ஒரேயொரு இறகை அவன் கைகளிலிட்டுச் செல்
அடுத்தக் காற்றுக்கு
கலம் புறப்படும் வரையில்
அது போதும் அவனுக்கு.
**********
ii)
கணினித் திரையைப் பார்த்துப் பூத்து
ரெப்பைத் தளர்ந்த விழிகளின் வழியே
உனது வீடியோ கால் வருகிறது
இன்றும் மாறுகின்றன
மகளின் தேவைகள்
வீட்டாரின்
‘பாதுகாப்பாய் இரு’ வில்
சுரத்துக் குரைந்திருப்பதை கண்டுகொண்டதாக பற்களால் சிரிக்கிறாய்
அவர்களின் பின்னிருந்து
இடையிடையே
திரை விளிம்பில் தெரியும் நான்
உனக்கு அவ்வளவு முக்கியெமெனச் சொல்லுகின்றன
ஓரம் வந்து மீளுமுன் கண்கள்
பொறுமையிழந்து காத்திருக்கிறேன்
அவர்களிடமிருந்து வாங்கியபின்
உன்னை நெஞ்சோடு அணைத்தபடி
அறைக்குள் செல்ல வேண்டும்
வழக்கமாக
நாம் பரிமாறிக்கொள்ளுவதோடு
இன்றுனக்கு கூடுதலாய்
ஒரு டிஜிட்டல் முத்தம்.
கூடவே
அடுத்த விமானத்திலேனும்
உனக்கு இடம் கிடைக்க கண்களால்
ஒரு வாழ்த்து.
**********
செங்கால் நாராய் கனத்து விடைபெறுமுன் ஒரேயொரு இறகை அவன் கைகளிலிட்டுச் செல் அடுத்தக் காற்றுக்கு கலம் புறப்படும் வரையில் அது போதும் அவனுக்கு.
பிரமிளுக்கு ஒரு பறவையின் வாழ்வினை எழுதிச் சென்ற இறகு, இயற்கையின் கவிதையில் காதலின் காத்திருப்புக்குக் கைகளில் தங்கி ஓர் ஆண்டினைக் கூட சாதாரணமாகக் கடக்க உதவுகிறது.