சிறுகதைகள்
Trending

மூன்று முகம்- ராம்பிரசாத்

 நகரின் பிரதானப் பகுதியில் ஒரு முடி திருத்தும் ஒப்பனை நிலையம். அங்கே தன் முன்னே அமர்ந்திருந்த பெண்ணின் முகத்தில் ஒரு முகப்பூச்சு திரவத்தை தடவிக் கொண்டிருந்தான் ராஜேந்திரன். அவளது கன்னங்கள் ஆப்பிளையும் ரோஜாவையும் இணைத்து இனப்பெருக்கம் செய்து உருவாக்கப்பட்ட ரோஜா இதழ்களையொத்த ஆப்பிள் பழம் போலிருந்தது. அவள் அணிந்திருந்த மேலாடையை வைத்து அவளுக்கு ஒரு பெரியக்காள் இருந்திருக்கக்கூடுமென்றும், அவளுடைய மேலாடையை இவள் அணிந்து வந்துவிட்டிருக்கக் கூடுமென்றும் கணித்தபடி அவள் கன்னங்களில் விரல்களால் குலாப் ஜாமூன் உருண்டை பிடித்துக் கொண்டிருந்தான். அவன் விரல் பட வெளியே சுமார் பதினாறு  வயதுடைய அழகான பெண்கள் மூவர் காத்திருந்தார்கள். அப்போது,

“பூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்”

ராஜேந்திரன் படுக்கையிலிருந்து வீசப்பட்டு தரையில் விழுந்தான். கனவு கலைந்திருந்தது. அருமையான கனவு கலைந்த துக்கத்தைக் காட்டிலும் வெடிச் சத்தத்தின் விளைவு மோசமாக இருந்தது. இரும்புத் தூண்களால் ஆன அந்தக் கட்டிடம் முழுமையாக மொத்தமாக அதிர்ந்தது. அத்தனை அதிர்வு அந்தக் கட்டிடத்திலிருந்து வெளிப்படுகிறதெனில் அது அபாயம். மின்சார இணைப்பும் சீர் கெட்டிருந்ததால், மின்சார விளக்குகள் மரண வாயிலைத் தொட்டுத் தொட்டு மீண்டன. சுவற்றில் பொதிக்கப்பட்ட தொலைக்காட்சிப்பெட்டி சரிந்து கீழே விழுந்து இரண்டாக பிளந்தது. 

சற்றைக்கெல்லாம் சைரன் ஒலி செவிகளைக் கிழித்தது. ராஜேந்திரன் தன் எறும்புப் புற்றுக் கதவைத் திறந்தான். ஆம். எறும்புப்புற்றுதான். கூலி வேலை பார்ப்பவர்களுக்கான கூடு. இரும்பாலான பாரிய கூடொன்றில், வரிசையாக துளையிட்டு ஒவ்வொரு துளைக்கும் ஒரு கதவிட்டால் அதுதான் தங்குமிடம். அவன் போல் ஏனைய கூடுகளுக்குள் இருந்தவர்கள் தங்களை கூடுகளை அப்படியே திறந்த மேனிக்கு விட்டுவிட்டு முக்கியமான பொருட்களை மட்டும் கையிலெடுத்துக் கொண்டு அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தார்கள். வேறு சிலர் அதுதான் சமயமென்று கைக்கு அகப்பட்டவர்களை அடித்து மயக்கமுற வைத்து விட்டு கைக்கு கிடைத்ததையெல்லாம் திருடிச் சென்றார்கள். அந்தச் சூழலே ரண களமாக இருந்தது. 

ராஜேந்திரன் ஒரு ஒப்பனைக் கலைஞன். அவன் தன் தந்தையிடமிருந்து பெற்ற ஒரே சொத்து. அழிந்து வரும் கலையின் கடைசி கலைஞன். அருகாமையிலிருந்த நான்கைந்து விண்மீன் கூட்டங்களில் கொரல்ல கிரகத்தில்தான் ஒப்பனைக் கலைஞருக்கான கடைசி வேலை வாய்ப்பு எஞ்சியிருந்தது. அந்த கிரகத்தில் கொஞ்சமேனும் மனிதர்கள் இருந்தார்கள் என்பதுதான் காரணம். எஞ்சிய கிரகங்களில் மனிதர்களுக்கும் வேற்றுகிரக வாசிகளுக்கும் பிறந்த கலப்பினங்கள் வாழ்ந்தன. அங்கெல்லாம் ஒப்பனைக் கலைஞன் என்ற வேலை வாய்ப்பே என்றோ அழிந்து போயிருந்தது. 

இந்த கிரகத்தில் கிடைக்கும் வேலையையாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் சில மணி நேரங்களுக்கு முன்புதான் ராஜனின் அறைக்கு அறைத்தோழனாக வந்து சேர்ந்திருந்தான் ராஜேந்திரன். ராஜன் ஒரு கணிணி மென்பொறியாளனாக வேலையில் இருந்தான். ராஜனும் அதற்கும் ஆறு மாதங்களுக்கு முன் தான் கொரல்லா கிரகத்திற்கு வந்திருந்தான் எனினும், இருவரையும் ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு அனுப்பியிருந்த நிறுவனம் ஒன்றே என்ற ஒழுங்கிலும், ராஜனின் அறையில் தங்கிக்கொண்டு பிற்பாடு பணியிடத்துக்கு மாறிக் கொள்ளலாம் என்ற ஏற்பாட்டிலும் ராஜேந்திரன் ராஜனின் அறைக்கு அனுப்பப்பட்டிருந்தான்.

“ராஜேந்திரன், சீக்கிரம் வா. நாம் இங்கிருந்து உடனே போக வேண்டும்” ராஜன் கத்தினான். ராஜன் அறைத் தோழன். ஒரு நாள் சினேகிதம். நம்பலாமா என்று கூடத் தெரியவில்லை. ஆனால் புதிதாக வந்த இடத்தில் வேறு யாரையும் தெரியாது.  கண்களில் இன்னும் பயணக்களைப்பு எஞ்சியிருந்தது. ஆனாலும் வேறு வழி இருக்கவில்லை. 

ராஜன் இழுத்த இழுப்புக்கு ஓடினான் ராஜேந்திரன். வெளியே நிலைமை இன்னும் மோசமாக இருந்தது. வான்வெளி மூடப்பட்டிருந்தது. வாகனங்கள் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடைவெளியில் மட்டும் பறக்க இயலும். ஒரு பாதையிலிருந்து இன்னொரு பாதையை காற்றுதானே பிரிக்கிறது என்று எவரும் பாதை மாறலாகாது. ஆனால், அங்கே எந்த வாகனமும் தன் பாதையில் செல்லவில்லை. எங்கே பாதை இருக்கிறதோ அங்கெல்லாம் தாவித்தாவி ‘விஷ்க்விஷ்க்’ என்று சப்தமிட்டுக் கடந்தன. கடந்த வேகத்தில் முட்டிக் கொண்டு கீழே பறந்து கொண்டிருந்த வாகனங்கள் மீது விழுந்து அவைகளையும் பாதை விலகச் செய்தன. 

“இங்கே வா” என்று ராஜன் இழுத்தான். ராஜேந்திரன் தன்னை ராஜனின் கரங்களுக்கு எப்போதோ ஒப்புக் கொடுத்து விட்டிருந்தான். இருவரும் அந்தப் பாரிய தூணின் மின்தூக்கியைப் புறக்கணித்துவிட்டு படிகளை அண்டினார்கள். படி ஏன் என்று சற்றைக்கெல்லாம் புரிந்தது. ஒரு மின்தூக்கி ஈர்ப்பு விசைக்குத் தன்னை ஒப்புக் கொடுத்துவிட்டு தீ ஜுவாலைகளுக்கு மத்தியில் எரிந்தபடி விழுந்து கொண்டிருந்தது.

அந்தப் பாரிய தூணின் உச்சியில்தான் அரண்மனை இருந்தது. அதில்தான் அந்த கிரகத்தின் அரசர் இருந்தார்.  கொரல்லா கிரகமே அப்படித்தான். இரண்டு சூரியன்களுக்கு மத்தியில் சதா வேக்காட்டில் வேகும் கிரகம். எரிமலைகள் சதா வெடித்துச் சிதறி, குழம்புகள் கொதித்துக் கூடி சிறு சிறு குன்றுகளாகி கிரகம் முழுவதும் விரவிக் கிடக்கிறது. சமதள நிலமென்று ஏதுமில்லை. எல்லாமும் குன்றுகள். ஆகையால்  நகரமும் ஓர் உயர்ந்த தூணொன்றில்தான் அமைந்திருந்தது. 

உச்சியிலிருந்து துவங்கிக் கீழாகத் தரைத்தளம் வரை சீரான இடைவெளியில் குடியிருப்புகள் பிரியும். அரசருக்கு மிக நெருக்கமாக இயங்குபவர்கள் ஒன்பதாவது பிரிவு குடியிருப்பிலும், அவர்களை அண்டி வாழ்பவர்கள் எட்டாவது பிரிவு குடியிருப்பிலும், இவர்களை அண்டிப் பிழைப்பவர்கள், ஏழாவது குடியிருப்பிலும் என அந்த குடியிருப்புகளுள் ஒரு சமூகப் படிநிலை இருந்தது.  

ராஜனும், ராஜேந்திரனும் ஆறாவது பிரிவில் நுழைந்தார்கள். அங்கே இருந்த ஒரு சிறிய உணவகத்தில் நுழைந்தார்கள். அங்கிருந்த இருக்கைகளில் எதிரெதிரே அமர்ந்தார்கள். 

“என்ன ராஜன், என்ன நடக்கிறது?” என்றான் ராஜேந்திரன் கவலையாக.

“தெரியவில்லை. என்னை ஒன்றும் கேட்காதே” என்றான் ராஜன்.

“எனக்கு உன்னை மட்டும் தானே தெரியும்? வேறு யாரைக் கேட்க? இங்கே இப்படி நடக்கப்போகிறதென்று ஏன் முன்பே சொல்லவில்லை?” என்றான் ராஜேந்திரன்.

ராஜன் அதற்கு பதில் சொல்லும்  முன், 

“ராஜன்” என்று குரல் கேட்டு இருவரும் திரும்பினார்கள். ஒரு பெண் அமர்ந்திருந்தாள். அழகாக இருந்தாள்.  உடல் வாளிப்புடன் தேஜசாக இருந்தது. அவள் மடியில் ஒரு குழந்தை இருந்தது. உறங்கிக் கொண்டிருந்தது. 

ராஜன் இருக்கையிலிருந்து எழுந்து அவளிடம் சென்றான். என்ன என்பதாய் பார்த்தான்.

“குழந்தைக்கு இன்று பசி இல்லை போலும். பாலருந்தவே இல்லை. மார்பில் பால் கட்டிக் கொண்டு விடுமோ என்று பயமாக இருக்கிறது.  சற்று நேரம் நீ குழந்தையாகு… ” என்று சொல்லியபடி தன் இடது கையை ராஜனின் தோள் மீது வைப்பது தெரிந்தது. அவளின் குரல் இரைஞ்சுவதாய் இல்லாமல் ஆணை தருவதாய் இருப்பதாகப்பட்டது ராஜனுக்கு.

ராஜன் அது போன்ற கதைகளை அதற்கு முன்பும் கேட்டிருந்தான். முகம் தெரியாத ஆண்கள், பெண்கள் திடீரென்று உதவியை ஆணையிட்டுப் பெறும் கதைகள். அந்த ஆணைகளை புறக்கணிக்கக் கூடாதென்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தான்.

“கண்டிப்பாக கண்ணே” என்றவன், வலது காலால் மண்டியிட, அவள் மாராப்பை விலக்கி, இடது மார்பைப் பிதுக்கி வெளியே தள்ளி, தன் இடது கையால் ராஜனின் முகத்தைத் தன் மார்பை நோக்கி அண்மிக்கச் செய்து, மாராப்பால் அவன் தலை மூடினாள். 

ராஜேந்திரன் லேசான அதிர்ச்சியுடன் முகத்தைத் திருப்பிக் கொண்டான். இதயத் துடிப்பை இரட்டிப்பாக்கிக் கடந்த கணங்களுக்கு அப்பால் சரியாகப் பதினைந்து நிமிடங்கள் கழித்து ராஜன் ராஜேந்திரனுக்கு எதிராக மீண்டும் வந்தமர்ந்தான். அந்தப் பெண் தன் குழந்தையுடன் கார் ஒன்றில் ஏறிச் செல்வதை ஜன்னல் வழியே பார்த்து விட்டு, ராஜனிடம் திரும்பி,

“என்ன ராஜன் இது. உயிருக்கு பயந்து ஓடிக் கொண்டிருக்கும் போது….” என்றான் ராஜேந்திரன்.

“தெரியாது. இப்படி சில மன நிலை பிறழ்ந்தவர்கள் இந்த கிரகத்தில் இருக்கிறார்கள் என்று மட்டும் தெரியும். அவர்கள் வேண்டுவதை தந்து விட வேண்டுமென்பது இங்கே செவிவழிச் செய்தி. அதை விடு. ” என்றான் ராஜன். அவனின் அந்த பதில் அத்தனை சமாதானம் செய்வதாய் இல்லை. ஆயினும் அப்போதைக்கு வேறு ஒரு பிரச்சனையை அவர்கள் எதிர்கொண்டாக வேண்டி இருந்தது.

“சரி, என்னதான் நடக்கிறது இங்கே, ராஜன்”

“தெரியவில்லை. ஆனால் எனக்கு இதுதான் கிடைத்தது” என்று விட்டு ராஜன் ஒரு காகிதத்தை சட்டைப் பையிலிருந்து உருவி மேஜை மீது பரப்பினான். அதில் ஒரு ஓவியம் இருந்தது. ஒரு மரமொன்றின் மீது மழை பொழிவதாகக் காட்சி இருந்தது. மிகவும் இலகுவாக ஒரு காகிதத்தில் நிறங்களேதுமின்றி வெறும் கோடுகளாலேயே வரையப்பட்டிருந்தது. 

“நான் ஏன் இந்த இக்கட்டான சூழலில் ஒரு ஓவியத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் ராஜன்?”

“ஏனென்றால், இதை  நான் பணி புரியும் அரசருக்கு மிக நெருக்கமான அமைச்சர் நாராயணனின் மேஜையிலிருந்து கண்டெடுத்தேன்”

“அதனாலென்ன?”

“அதனாலென்னவா? ஒரு அமைச்சரின் மேஜையை அலங்கரிக்கும் அளவுக்கு இந்த ஓவியத்துக்குத் தகுதி இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியும் இது இருக்கிறதெனில், இது வெறும் ஓவியம் இல்லை என்றே தோன்றுகிறது. இது ஒரு ரகசியக் குறியீடு என்று நினைக்கிறேன். நடப்பதையும் இதையும் வைத்துப் பார்த்தால், இந்த மரம் இந்தப் பாரிய கட்டிடம் போன்றும், மழை இதன் மீது வீசப்படும் குண்டுகள் போன்றும் எனக்கு அர்த்தப்படுகிறது”

“அப்படியானால் இதை ஒரு விதமான கொரில்லா போர் என்கிறாயா?”

“ஆம். அப்படித்தான் பொருள்படுவதாகத் தெரிகிறது, ராஜேந்திரன்.”.

“அப்படியானால், எங்கே போலீஸ்? எங்கே ராணுவம்? இந்த கிரகத்தின் பாதுகாப்பு வளையத்திற்கு என்னானது?”

“அதுதான் கொரில்லா தாக்குதல் என்றேனே? ராணுவமோ, போலீஸோ என்ன ஏதென்று அனுமானிப்பதற்குள் தீவிரமான தாக்குதல் நடந்திருக்கிறதோ என்னவோ?

“அதெப்படி? வானில் எத்தனை செயற்கைக் கோள்கள் இருக்கின்றன? ஒன்றால் கூடவா எதிரிகள் வருவதை அவதானிக்க முடியவில்லை?”

“அதுதான் எனக்கும் புரியாத புதிராக இருக்கிறது” ராஜன் இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கும்போதே வானிலிருந்து பொத்தென்று ஒரு வாடகை வாகனம் உணவகத்திற்கு அருகே விழுந்தது. 

ராஜேந்திரனும் ராஜனும் பதறிப்போய் உணவகத்தை விட்டு வெளியே ஓடி அந்த வாகனத்தை அண்டினார்கள். ராஜன் அதனருகே சென்று பார்த்துவிட்டு, “மிஸ்டர். நாராயணன்!!” என்று அலறினான்.  அவன் அலறியதற்கு காரணம் இருந்தது. அரசாங்கத்தில் அவர் இருந்த பதவிக்கும், அந்த வாகனத்துக்கும் சம்பந்தமில்லாமல் இருந்தது.  மேலும், அவர்தான் ஓட்டுனர் இருக்கையில் இருந்தார் என்பதும் அசம்பாவிதமாக ஏதோ நடந்திருக்கிறது என்று தெரிவிப்பதாக இருந்தது. ராஜன் அவரை வாகனத்திலிருந்து வெளியே இழுத்துப் போட்டான். நாராயணன் முதலில் மூச்சு திணறினார். பிறகு மூக்கிலிருந்தும், வாயிலிருந்தும் ரத்தம் வந்தது. அதை புறங்கையால் துடைத்தபடி ஆழமாக ஒருமுறை மூச்சிழுத்துவிட்டார். அது அப்போதைக்கு அவரை இயல்பு நிலைக்குக் கொணர்ந்தது போலிருந்தது. கண்களில் ஓரளவு தெளிவு தெரிந்தது. 

“நாராயணன், என்ன நடக்கிறது? குழப்பமாக இருக்கிறது. ஒரு மன நிலை பிறழ்ந்த பெண் ஒருத்தி என்னை அழைத்து, தன் மார்புகள் கட்டிப் போவதிலிருந்து தடுக்குமாறு தன் காதலனிடம் கேட்பது போல் கேட்டாள். அந்த மன நிலை பிறழ்ந்தவர்களுக்கும் இந்த தாக்குதல்களுக்கும் ஏதேனும் தொடர்பிருக்கிறதா?” என்றான் ராஜன்.

“கேள். இறப்பதற்கு முன் இதை நான் யாரிடமாவது சொல்லித்தான் ஆக வேண்டும். அவள் மன நிலை பிறழ்ந்தவள் அல்ல. இன்றைக்கு இந்த கிரகத்தில் இருக்கும் பலருக்கும் இந்த கிரகத்தில் மனிதக் குடியிருப்பு எப்படி உருவானது என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. துவக்கத்தில் இந்த கிரகத்திற்கு ஒரு சூரியன் அல்ல, இரண்டு சூரியன்கள் இருந்தன. அதாவது கிரகம் நடுவிலும் சூரியன்கள் அதன் இரு மருங்கிலும் இருந்தன. அதனால் இந்த கிரகத்திற்கு இரவு என்ற ஒன்றே அப்போது இல்லை. தண்ணீரும் இல்லை. முதல் தலைமுறை மனிதர்களுக்கு இந்த கிரகத்திற்கு வந்தபோது, தூக்கமின்மையால், நாளடைவில் மன நலம் குன்றிப்போனது. முக்கியமாக, நினைவாற்றல் பாதிப்புகள் இருந்தன. அதன் காரணமாய் மக்கள் ஞாபக மறதிக்கு உள்ளானார்கள். அதனால், இந்த கிரகத்தில் உறவுகள் வெறும் ஒரு இருப்பாக மாறிப் போயின. மனிதர்களின் பெயர்கள் நிலையானதாக இருக்கும். மனிதர்கள் மாறிக் கொண்டே இருப்பார்கள்.”

நாராயணன் சற்று இருமினார். ரத்தம் துளியாக வந்தது. பொருட்படுத்தும்படியாக இல்லாததை கவனித்து அவர் மீண்டும் தொடர்ந்தார்.

“அதாவது, மனைவி அல்லது கணவன் என்ற உறவு இருக்கும். ஆனால், அது ஒரு எண்ண இருப்பாக மட்டுமே இருக்கும். இதன் மூலம் ஒரு மனைவியாகப்பட்டவள், வேறிடம் செல்ல  நேர்கையில், கணவனை கூடவே அழைத்துச் செல்ல வேண்டி இல்லை. மாறாக,  சென்று சேரும் இடத்தில் அந்த இருப்புக்கென அதே பெயரில் ஒருவர் இருப்பார். இதுவே ஆணுக்கும் பொருந்தும். கிட்டத்தட்ட பூனையற்ற புன்னகை போலத்தான் இது. இதன் அனுகூலம் என்னவெனில், பலதார உறவுகளுக்கு ஒரு புதிய திறப்பு கிடைத்தது.  இந்த ஏற்பாடு துவக்கத்தில் வசீகரிப்பதாயும், வேடிக்கையாயும் இருந்தாலும், மூளை பருத்த சிலரால் இது தவறாகப் பயன்படுத்தப்படலாயிற்று. இந்த ஏற்பாட்டை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள எண்ணி பலர் தகுடுதத்தங்களை அரங்கேற்றலானார்கள். அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க  இந்த கிரகத்திற்கு ‘இரவு வாழ்க்கை’ என்ற ஒன்றுதான் நிரந்தர தீர்வாகும் என்ற நிலை வந்தது.”

நாராயணனின் இருமல் சற்று வலுத்தது. ஆயினும் சொல்ல வந்ததைச் சொல்லி விட வேண்டுமென்கிற முனைப்பில் அவர் தொடர்ந்து பேசினார்.

“ஆகையால், அதன் பிறகு பிறந்த குழந்தைகளின் மரபணுக்களில் பூனையற்ற புன்னகைத்தனத்திற்கான கூறுகள் வேரோடு நீக்கப்பட்டன. அதோடு இந்த பூமிக்கு இரவைக் கொணரும் பொருட்டு, ஒரு பாரிய திரைச்சீலை ஒன்று விண்ணில் நிலை நிறுத்த முடிவாயிற்று. அந்தத் திரைச்சீலை இரண்டாம் சூரியனை எப்போதும் மறைக்குமாறு பூமியை வலம் வரும். அந்தத் திரைச்சீலை இரண்டாம் சூரியனிடமிருந்தே தனக்கு தேவையான சக்தியை பெற்றுக்கொள்ளும் வகைக்கு வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்தத் தீர்வு அப்போதிருந்த அரசாங்கத்தில் பலருக்கும் பிடிக்கவில்லை. ஆகையால் அரசாங்கம் கலைக்கப்பட்டு புதிய அரசாங்கள் நிறுவப்பட்டது. பழைய அரசாங்கத்தில் இருந்து புதிய அரசாங்கத்திலும் நீடித்தது நான் மட்டுமே.”

நாராயணன் மீண்டும் இருமினார். தொடர்ச்சியான இருமல். சற்றைக்கெல்லாம் வாயிலிருந்து இரத்தம் தெரிக்க, ராஜன் செய்வதறியாது திகைக்க, நாராயணன் ஒரு ஆழமான இருமலுடன் ரத்தத்தை கக்கியவாறு மரணத்தை தழுவினார். ராஜன் நாராயணனையே துக்கமுடன் பார்த்தான். பின் அவரது பூத உடலை தரையில் கிடத்தினான்.

“ஒரு பாதிதான் சொல்லியிருக்கிறார்” என்றான் ராஜேந்திரன்.

“மறுபாதி, அரண்மனையில் கிடைக்கலாம்” என்றான் ராஜன்.

“இறங்கிய படிகள் அத்தனையையும் மீண்டும் ஏறவேண்டுமா?” என்றான் ராஜேந்திரன். 

அப்போது அங்கே ஒரு காவல் வாகனம் வந்து நின்றது. அதிலிருந்து தலை எக்கிய காவல் அதிகாரி ஒருவர்,

“இங்கே குழாய் செப்பனிடுபவர்கள், கட்டிட மேஸ்திரிகள் எங்கு கிடைப்பார்கள்?” என்றார்.

“நாங்கள் தான் அது” என்று கூசாமல் பொய் சொன்னான் ராஜன் துணிச்சலாக. 

“அப்படியானால் வண்டியில் ஏறிக்கொள்ளுங்கள்” என்றார் அந்த அதிகாரி.

ராஜனும், ராஜேந்திரனும் அந்த வண்டிக்குள் தங்களை இட்டு நிறைத்துக் கொண்டார்கள். வண்டி ஆகாயத்தில் குறுக்கும் நெடுக்குமாக நேர் கோட்டில் விரவிக்கிடக்கும் உருவமில்லா சாலைகளில் அரசரின் அரண்மனை நோக்கி மேலெழும்பியது. 

“அரண்மனை லேசாக சேதமடைந்திருக்கிறது. நீங்கள் அவற்றையெல்லாம் செப்பனிடவேண்டும்” என்றார் அவர் வாகனத்தை செலுத்திக் கொண்டே.

“அப்படியானால், அரசரை நாங்கள் பார்க்க முடியுமா?” என்றான் ராஜன்.

“அரசர் பாதுகாப்பாக விண்கலத்தில் இருக்கிறார். போர் நடக்கிறது. த்ஸார் இந்த கிரகத்தை தன் வசப்படுத்தத்  தொடுத்த போர் இது” என்றார் அவர்.

“அது யாரது த்ஸார்?” என்றான் ராஜேந்திரன் இடையில் புகுந்து.

சில நொடிகள் அமைதி துளிர்த்தது. த்ஸார் யாரென்று தெரியாமல் ஒரு பிரஜையா என்று காவலர் எண்ணியிருக்க வேண்டும் என்று ஊகித்து, 

“இவன் இந்த கிரகத்திற்கு வந்து சில மணி நேரங்களே ஆகிறது” என்றான் ராஜன்.

“த்ஸார் அண்டை பால்வெளியின் அரசர். அவருக்கு வெகு நாட்களாகவே நம் கிரகத்தின் மீது ஒரு கண்” என்றார் காவலர்.

“சரி. இப்போது போர் நடக்கிறது. நாங்களோ வெறும் கூலி ஆட்கள். அரண்மனையில் நாங்கள் கொல்லப்பட்டு விட்டால்?” என்றான் ராஜன்.

“இங்கே தற்சமயம் எவர் உயிருக்கும் உத்திரவாதமில்லை. த்ஸார் இந்த கிரகத்தைப் பிடித்தால் இந்த கிரகத்தில் தற்போதுள்ள எல்லா உயிர்களும் கொல்லப்படும்.  உயிரைக் காப்பாற்றச் சிறந்த வழி, கிரகத்தைக் காப்பாற்ற அவரவரால் என்ன முடியுமோ அதைச் செய்வதுதான். ” என்றார் அந்த காவலர்.

“அதெப்படி, கிரகத்தின் பாதுகாப்பு வளையங்களையெல்லாம் மீறி இத்தனை சீக்கிரம் கிரகத்தின் அரண்மனையைத் தகர்க்க முடிந்தது எதிரிகளால்?” என்றான் ராஜேந்திரன்.

“எதிரிகள் புத்திசாலிகள்.  நம் கிரகத்தின்  வாழ்வாதாரமே அந்தத் திரைச்சீலை தான் என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆகையால், புத்திசாலித்தனமாக அந்த திரைச்சீலையின் பின்னே மறைந்து கொண்டு நம்மை தாக்குகிறார்கள். நாம் திருப்பித் தாக்கினால்,  நம் திரைச்சீலையை நாமே தகர்க்க நேரிடும். அந்த தைரியம் தான் அவர்களுக்கு.” என்றார் அந்த காவலர்.

ராஜன், ராஜேந்திரன் இருவரும் வாயை மூடிக் கொண்டார்கள். ஊர்தி நேராக அரண்மனை வாயிலை அடைந்தது.  ராஜன், ராஜேந்திரனை இறக்கி விட்ட காவலர்,

“அரண்மனையின் கிடங்கில் உங்களுக்கு தேவையான உபகரணங்கள் இருக்கும். எடுத்துக் கொண்டு வேலையைத் துவங்குங்கள்” என்றார் செல்வதற்கு முன்.

ராஜனும், ராஜேந்திரனும் அரண்மனைக்குள் நாராயணனின் அலுவலக அறைக்கு ஓடினார்கள்.  நாராயணனின் அறையில் ராஜனுக்கும் ராஜேந்திரனுக்கும் அந்தத் திரைச்சீலையின் தொழில் நுட்பத் திட்ட வரைபடங்கள் அடங்கிய கோப்புக்கள் கிடைத்தன. அவற்றை ராஜனும், ராஜேந்திரனும் சரி பாதியாக தங்களுக்குள் பிரித்துக் கொண்டு வாசிக்கத் துவங்கினார்கள். வாசிக்க வாசிக்கத் தங்களுக்குள் முக்கியமான தகவல்களை விவாதிக்கத் துவங்கினார்கள்.

“கொரல்லா என்கிற நம் கிரகம் சென்டோ என்கிற சூரியனைச் சுற்றி வருகிறதாம் ராஜன். ஆனால், நியோ என்கிற இரண்டாவது சூரியன், கொரல்லா , சென்டோவுடம் எப்போதும் ஒரு நேர் கோட்டில், கொரல்லா மத்தியில் வருவது போல சுற்றி வருகிறதாம். திரைச்சீலை இருப்பதால் நியோவை நாம் எப்போதுமே பார்ப்பதில்லை.” என்றான் ராஜேந்திரன்.

அப்போது, அரண்மனையின் ஒலிப்பெருக்கிகளிலிருந்து தட்டையான கணைத்த, கரகரப்பான குரல் கேட்டது.

“என் புதிய நண்பர்களே,

நான்தான் த்ஸார் – உங்கள் புதிய அரசன் – பேசுகிறேன். உங்களின் மதிப்புக்குரிய மன்னரும் அவரின் அமைச்சர்களும் அண்டவெளியில் எங்கள் தாக்குதலில் இறந்து விட்டார்கள். இந்த அறிவிப்புடன் நான் கொரல்லாவின் புதிய மன்னராகப் பதவியேற்கிறேன். எனக்கு உங்கள் யாரையும் எப்போதுமே பிடித்ததில்லை. ஆனால், என் குழந்தைகள் விளையாட ஒரு புதிய விளையாட்டு மைதானம் தருவதாய் வாக்களித்திருக்கிறேன். ஆதலால், உங்களால் முடிந்தால் நீங்களே தற்கொலை செய்து கொள்ளுங்கள். இல்லையெனில், உங்கள் ஒவ்வொருவரையும் கொல்வதற்கென்று அருமையான விளையாட்டுக்களை எங்கள் வல்லுனர்கள் தயாரிப்பார்கள். ஹஹஹ..”

ராஜனும் ராஜேந்திரனும் ஒருவரையொருவர் பீதியுடன் பார்த்துக் கொண்டார்கள். நிலைமையின் விபரீதம் புரிந்து, கோப்புகளை மேய்வதை துரிதப்படுத்தினார்கள்.

“தவிரவும், இந்த திரைச்சீலையின் நியோவை பார்க்குமாறு அமைந்த பக்கத்தில் சூரியத்தகடுகள் அமைக்கப்பட்டிருக்கின்றனவாம் ராஜேந்திரன். அவைகள் நியோவிலிருந்து சக்தியை பெறுகின்றனவாம். அதைக் கொண்டு தான் நியோவை எப்போதும் மறைக்குமாறு அவைகள் கொரல்லாவை சுற்றி வருகின்றனவாம். இதன் மூலமாகத்தான் கொரல்லாவில் பகல் இரவு வருகிறதாம்” என்றான் ராஜன்.

ராஜன் சொன்னதைக் கேட்டுவிட்டு ஒரு கணம் சிந்தனையில் ஆழ்ந்தான் ராஜேந்திரன். ராஜேந்திரன் யோசனையில்  முங்குவதை அவதானித்துவிட்டு, 

“என்ன?” என்றான் ராஜன்.

“சற்று யோசித்துப் பார்க்கிறேன் ராஜன்.  மிக அதீத வெப்பத்தின் காரணமாக நிகழும் பக்க விளைவுகளை இவர்கள் எப்படி சமாளித்திருப்பார்கள் என்று யோசிக்கிறேன்” என்றான் ராஜேந்திரன்.

“என்ன பக்க விளைவு?”

“சூரியத்தகடுகள் ஓரளவிற்குத்தான் வெப்பத்தைத் தாங்குவதாக அமையும். அதீத வெப்பத்தில் சூரியத் தகடுகளிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தின் அளவு குறைந்து விடும். அது போக அதீத வெப்பத்தில் அவைகள் உருகவும் வெடிக்கவும் செய்யலாம். அந்த கோப்பைக் கொடு” என்ற ராஜேந்திரன், ராஜனின் கையிலிருந்த பத்தாயிரம் பக்க கோப்பை பிடுங்கிப் பார்த்தான். 

“நீ சரியான கேள்வியை எழுப்பினாய். அந்த சூரியத்தகடுகளை வெப்பத்திலிருந்து காப்பாற்ற என்ன தான் செய்திருப்பார்கள்? எதையேனும் செய்திருப்பார்கள் தானே? கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம். நாம் அந்த இடத்தில் இருந்தால் என்ன செய்திருப்போம்? நீ என்ன செய்திருப்பாய் ராஜேந்திரன்?”

“நானா? அதீத வெப்பம் ஏற்பட்டாலும், அந்த சூரியத் தகடுகள் சூடாகாதவாறு ஏதேனும் செய்திருப்பேன்” என்ற ராஜேந்திரன் சற்று யோசித்துவிட்டு, ஏதோ தோன்றியவனாய், 

“உனக்கு கணிப்பொறி இயக்கத்தெரியுமா?” என்றான் ராஜனிடம்.

ராஜன் விவரம் புரியாமல் இயந்திரத்தனமாய் தலையை ஆமென்பதாய் அசைக்க, நாராயணனின் கணிப்பொறியை அவனிடம் தந்து, 

“இதில் அந்த சூரியத்தகடுகள் குறித்த வரைபடத்தை தேடு. நாராயணன் தன்னையும் சேர்த்து எவரையுமே நம்பவில்லை போலும். அவருடைய பயனர் கடவுச்சொல்லை இங்கே குறித்து வைத்திருக்கிறார். அதைப் பயன்படுத்திக் கொள்” என்றான் ராஜேந்திரன் நாராயணனின் மேஜை இழுப்பறையிலிருந்து உருவிய காகிதத்துண்டு ஒன்றை நீட்டியபடி.

ராஜன் நாராயணனின் கடவுச்சொல்லை பயன்படுத்தி மடிக்கணிணியை திறந்து, திரைச்சீலையின் வரைபடத்தை திரைக்குக் கொணர்ந்தான். 

“இப்போது, திரைச்சீலையை இயக்கும் மென்பொருளைப் பயன்படுத்தி திரைச்சீலையின் மறுபக்கத்தில் என்ன இருக்கிறதென்று பார்” என்றான் ராஜேந்திரன்.

ராஜன் மென்பொருளைப் பயன்படுத்தி துழாவ, திரைச்சீலையின் நியோ சூரியனைப் பார்த்த பகுதி திரையில் விரிந்தது.

“கிடைத்தே விட்டது” என்று கூவினான் ராஜேந்திரன்.

“என்ன? என்ன கிடைத்துவிட்டது?”

“எங்கள் ஒப்பனைக் கலை அகராதியில் அதை அடித்தளம் என்பார்கள். அது போல் இங்கும் சூரியத்தகடுகளுக்கு அடியில் அடித்தளம் போல் ஒரு இழை வைத்திருக்கிறார்கள். எப்போதெல்லாம்  நியோவிலிருந்து அதிக்கப்படியான வெளிச்சம் படர்ந்து சூரியத்தகடுகள் சூடாகின்றனவோ அப்போதெல்லாம் சூரியத்தகடுகளை பின்னுக்குத் தள்ளி அடித்தளத்தை முன்பக்கம் கொணர்கிறார்கள். அந்த அடித்தளம் கண்ணாடிகளால் உருவாகியிருக்கின்றன. அந்த கண்ணாடிகள் வெளிச்சத்தை பிரதிபலிக்கின்றன. இதனால், சூரியத்தகடுகளில் வெளிச்சம் படுவது தவிர்க்கப்படுகிறது. இதனால் அது வெப்பமாவதும் தடுக்கப்படுகிறது”

“செம்ம ஐடியா” என்று கூவினான் ராஜன்.

“நம் எதிரிகள் இந்த திரைச்சீலையின் பின்னே மறைந்திருந்துதான் நம்மை தாக்குகிறார்கள். ஆதலால், அவர்களின் அத்தனை போர் உபகரணங்களும் அந்த திரைச்சீலையின் பின்னே தான் மறைத்து வைக்கப்பட்டிருக்கும். இப்போது  நியோவிலிருந்து வரும் வெளிச்சத்தை அந்த கண்ணாடிகளால் அவர்கள் மீது பிரதிபலித்தால்?”

“அவர்களால் அத்தனை வெளிச்சத்தை தாங்க முடியாது போகும்”

“இந்த இக்கட்டான சூழலில் அத்தனை வெளிச்சத்தை தாங்கிக் கொள்ள அவர்கள் அத்தனை பேரிடமும் சூரியக் கண்ணாடிகள் தயாராக இருக்குமென்பதற்கு எத்தனை சதவிகித வாய்ப்புகள் இருக்கும்?”

ராஜன் ஒரு வினாடி யோசித்துவிட்டு,

“ராஜேந்திரன், நீ ஒரு ஜீனியஸ்டா” என்று கூவினான்.

“அதைப் பிறகு பார்க்கலாம். முதலில் அந்த கண்ணாடிகளை வெளிக் கொணர்ந்து அவர்கள் பக்கம் திருப்பு” என்று ஆணையிட்டான் ராஜேந்திரன். ராஜன் அந்த மென்பொருளைப் பயன்படுத்தி சூரியத் தகடுகளைப் பின் இழுத்து, கண்ணாடிகளை முன்னால் கொண்டு வர, சட்டென  கண்கள் கூசும் அபரிமிதமான ஒளியால், பார்வை பாதிக்கப்பட்டு விட, தன்னிச்சையாக அவர்களின் கரங்கள் இயங்கி எதிரிகள் தங்கள் விமானங்களை, பீரங்கிகளை திருப்ப, அவைகள் ஒன்றொடொன்று மோதி வெடித்துச் சிதறின.   

ராஜனும் ராஜேந்திரனும் விண்வெளியில் எதிரிகளின் படைகள் வெடித்துச் சிதறுவதை, புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது காட்டப்படும் வான வேடிக்கையை ரசிப்பது போல் ரசித்துப் பார்த்தார்கள்.

“போர் முடிவுக்கு வந்துவிட்டது என்றே நினைக்கிறேன்” என்றான் ராஜன். 

“ஆம். ஆனால் சில கேள்விகளுக்கு இன்னும் பதில் இல்லை” என்றான் ராஜேந்திரன்.

“என்ன கேள்விகள்?”

“அதெப்படி இந்த  கண்ணாடிகளால் ஆன அடித்தளம் குறித்து அரசவையில் யாருக்குமே தெரிந்திருக்கவில்லை”

ராஜன் நாராயணனின் மின்னஞ்சல் பெட்டியைத் திறந்து பார்த்தான். அதில் மிகச் சமீபமாக அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் ‘பெரு மரத்தின் மீது மழை பொழியலாம்’ என்ற மின்னஞ்சல் கவனமீர்த்தது. அந்த மின்னஞ்சல் எழுதப்பட்ட நேரத்தை கவனித்தான். பன்னிரண்டு மணி நேரத்திற்கு முன்னால் அது வரையப்பட்டிருந்தது. 

“இதன் மூலம் நடந்த போருக்கும் நாராயணனுக்கும் தொடர்பிருந்திருக்கிறது. முந்தின அரசிலிருந்து நடப்பு அரசுக்கு தாவிய ஒரே ஒருவர் தான் மட்டும்தான் என்று  நாராயணன் சொன்னது  நினைவிருக்கிறதா? என் கணிப்பு என்னவென்றால், இந்த கிரகத்துக்கு அரசனாகும் பொருட்டு நாராயணன் இந்தத் தகவலை வேண்டுமென்றே பதுக்கியிருக்க வேண்டும். 

 “அவர் அப்படித் திட்டமிட்டிருப்பின், ஏன் ஒரு உணவகத்தின் அருகில் வாடகை வாகனத்தில் விழுந்து உயிர் இழக்க வேண்டும்?”

“எதிரிகளால் அவர் ஏமாற்றப்பட்டிருக்க வேண்டும் என்பது என் கணிப்பு.”

“பாவம்! இந்த வயதான காலத்தில், அவர் ஆசைப்பட்டிருக்க வேண்டியது ஒரு மாலை நடை பயிற்சிக்குத்தான். ஒரு கிரகத்தின் அரசாட்சிக்கு அல்ல. தன் கணிணியின் கடவுச்சொல்லைக் கூட நினைவில் வைத்திருக்காமல் துண்டுக் காகிதத்தில் குறித்து வைக்கும் அவருக்கு அரசராகும் ஆசையெல்லாம் இருந்திருக்கத்தான் வேண்டுமா?”

“கனவு என்கிற பெயரில் சிலர் தங்கள் தகுதிக்கும் மீறி ஆசைப்படுவதன் விளைவுதான் இது”

ராஜேந்திரன் உடலை முறுவலித்து ஆழ்ந்து மூச்சு விட்டான். அப்போது அந்த அரண்மனையின் ஒலிப்பெருக்கியில், ‘திரைச்சீலையின் மின்சார இருப்பு குறைகிறது. தற்போதைய இருப்பு 37%’ என்று அறிவிப்பு கேட்டது.

ராஜன் மடிக்கணிணியைப் பயன்படுத்தி, கண்ணாடியாலான அடித்தளத்தைப் பின்னுக்குத் தள்ளி, சூரியத்தகடுகளை முன்னுக்குக் கொணர்ந்தான். 

‘திரைச்சீலை மின்சார இருப்பு… 37%…………. 38%………’ என்று காட்டியது.

“பாரேன். ஒரு கிரகத்தைக் காப்பாற்றியது ஒரு ஒப்பனைக் கலைஞர் என்றால் நம்ப முடிகிறதா?” என்றான் ராஜன்.

ராஜேந்திரன் மெல்லிய புன்னகையொன்றை உதிர்த்தான்.

“அது உண்மைதான். பாரேன். நீ நேற்றுதான் வந்தாய். பிரபஞ்சத்திலேயே எஞ்சியிருக்கும் ஒரே ஒரு ஒப்பனைக் கலைஞன் நீ தான். கொரல்லாவுக்கு ஒரு பிரச்சனை என்று வரும் கால கட்டத்தில் நீ கொரல்லாவை  நோக்கி வந்திருக்கிறாய். இது எப்படி சாத்தியமாகியிருக்கும்? ஒருவேளை, இந்த கிரகத்தைக் காப்பாற்றவே இந்த பிரபஞ்சமென்னும் பாரிய இயக்கம் உன்னை ஒரு ஒப்பனைக்கலைஞனாவே இதுகாறும் நீடிக்க வைத்திருந்திருக்கிறதோ என்று யோசிக்க வைக்கிறது ராஜேந்திரன்.”

“நம்மில் எவரும் எவரையும் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என பாகுபடுத்திப் புறக்கணிக்கலாம் ராஜன். ஆனால் இந்த பிரபஞ்சம் நம் எல்லோருக்கும், எல்லாவற்றுக்கும் ஒரு தகுதியும், மதிப்பும் கொண்டிருக்கிறது.  நம்மைப் பற்றிய நம் அவதானங்களைக் காட்டிலும் பிரபஞ்சத்தின் இந்த அவதானமே அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக எப்போதைக்கும் இருந்திருக்கிறது.” என்றான் ராஜேந்திரன். 

 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button