கட்டுரைகள்
Trending

கு.ஜெயபிரகாஷ் இன் ‘சா’ நாவல் வாசிப்பு அனுபவம்- சரண்யா ஏழுமலை

‘உயிரூட்டும் மரணங்களின் நினைவலைகளுடன்… ‘ 

தமிழ்மொழியில் மரணங்கள் குறித்துப் பேசும் படைப்புகள் இன்றளவும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருக்கின்றன. “முனைவர்” குறுநாவலின் ஆசிரியர் கு.ஜெயபிராஷ் இன் ‘சா’ நாவலும் இவற்றின் வரிசையில் ஒன்று. வாழ்வதற்காக செத்துப் போ இல்லை சாவதற்காக வாழ் என்கிறது மிர்தாதின் புத்தகம். “சா”நாவலும் கிட்டத்தட்ட அதன் நிழலிலேயே நகர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இது மரணத்தின் மீதான ஈர்ப்பை உணர்வுகளோடு சேர்ந்து வாழ்வியலைப் பேசும் ஒரு படைப்பு.

 பத்தாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயலும் நபரும் அவரைத் தற்கொலைக்கு உந்தும் அவரின் மனமும் என அட்டகாசமான ஆரம்பம். குரூரமான உண்மைகளுக்கிடையில் அழகாக அலங்கரிக்கப்பட்ட பொய் சரியானதென மனம் எண்ணுகிறது. அதுவே மரணத்தின் மீதும் இத்தகைய எழுத்துக்களின் மீதுமான ஆவலையும் தூண்டுகிறது.

 எப்பொழுதும் நம்மின் மனங்கள் ஓய்வெடுப்பதில்லை அது ஏதாவது ஒன்றை எடுத்து  அசை போட்டுக் கொண்டே இருக்கும். இதற்குப் பலியாகாத ஆளே இல்லை! கிட்டத்தட்ட அனைவரும், எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் வெறும் மனதுடன் அசை போடாமல் இருப்பதில்லை. அவற்றை அழகில் உணர்வது எளிதில் சாத்தியமே. ஆனால், தன்னுடன் சேர்த்து அனைவரும் உணரும் வகையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் சாவைப் பற்றி இழுத்துக் கொண்டு போன எழுத்துக்கள், செல்லச் செல்ல சாமான்யனின் வாழ்க்கையை அவனின் உணர்வோடு நகர்த்தியது.

சாவு எனும்  வசீகரிக்கும் சொல் எத்தனை புதுப் புது பெயர்களைக் கொண்டிருந்தாலும் மக்கள் அதனை ரசிக்கவே செய்கின்றனர். ஒரு ஈர்ப்புடைய சொல் என்றே சொல்ல வேண்டும், என்னதான் மற்றவர்கள் தற்கொலை கோழைத்தனம் என எடுத்துக்கட்டினாலும் சிக்கல் என வரும்போது அதன் கைபிடிக்கவே அதீத நேரத்தில் விருப்பம் கொள்கின்றனர். இது ஏன் எனத் தெரியவில்லை அது வெளிச்சத்தை நோக்கிய பொதுவான ஈர்ப்பாகவும் இருக்கலாம்.

 இப்படைப்பின் துவக்கம் இவ்வாறாக செல்வது ஒரு பலத்தை இப்படைப்பிற்கு அளிக்கிறதென்றே சொல்ல வேண்டும் அது ஒரு வகையான மதுவை வாசகர்களுக்குக் கொடுப்பதாக உள்ளது. அங்கேயும் ஒரு மனத்தடுமாற்றம் குதிக்கலாமா வேண்டாமா என, இது தீர்வதற்குள் நினைவுக் கோட்டைகள் , எங்கேயோ மரணிக்கத் துணிந்த மனம் நினைவுகளுக்குள் மாண்டது சாமான்யனின் இயல்பைத் தெரிவிக்கிறது.

படைப்பின் நினைவலைகளின் ஓட்டம்  கண் முன்னே காட்சிகளை ஓட வைக்கிறது. பிணத்தின் ஊர்கோலமும், பேருந்தின் பயணமும், செத்துப் போன குரங்கும், சாமந்திப் பூவுமென இப்போதும் கண் முன்னே.படிக்கும் ஒவ்வொரு தருணமும் உணர்வானது, முக்கியமாக சாமந்தி பூவின் வாசனையுடன்.

படிக்க ஆரம்பித்து சில பக்கங்களிலேயே படைப்பின் தலைப்பு புரிய ஆரம்பித்து விடுகிறது (சாவு, சாந்தி, சாமந்தி, சாவித்ரி, சாதனா எனக் கதை சொல்லி கதாபாத்திரத்தின் வாழ்வின் எல்லா உயிரூட்டங்களின் முதல் எழுத்து).

பின் தொடர்ந்த சாந்தி அக்காவின் நினைவலைகள், அவளின் மூக்கு, அவளின் மனம், குணம், அவளுடனான அவனின் அன்னியோன்யம் சாமந்திப்பூத் தோட்டமெனக் காட்சிப்படுத்துவதற்கு எளிய சித்தரிப்புகள். பின்னே அவளின் மரணமும் அதைத் தன்னை வருத்திக் கொள்ளும் ஆயுதமாக தன் அம்மாவின் மரணத்தையும் சேர்த்து மாற்றிக் கொண்ட மனிதனின் நிலையுமாக தற்கொலையின் வேர் முடிச்சுகள் அனைத்தும் சாமந்திப் பூவுடன் சேர்த்து முடித்துப் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

நம் வாழ்வினை கடக்கும் மனிதர்களை நினைவுகளாக எப்படியெல்லாம் ஒருவர் கட்டிப் போடுகிறார் என்பதை வெளிப்படுத்த முயன்றது அழகு. சித்தரிப்பான அரசு என பெயர் வைக்கப்பட்ட வெறி பிடித்து சொறி பிடித்த நாய், அதன் முன் பெயர் பற்றிய ஆராய்ச்சிக்கு இட்டுச்செல்லும் கேள்விகள், நாவலின் ஒவ்வொரு பகுதியும் எழுத்தாளரின் பூர்வீகமான திருவண்ணாமலையைச் சுற்றி வாழும் ஊர்மக்களின் வாழ்க்கையையும் அவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களையும் அப்பட்டமாக நொடிப்பொழுதில் பிரதிபலிப்பதாக உள்ளது.

மேல் படிப்பைத் தொடரும்  சாவித்ரி, சாதனாவின் மரணத்தைக் குறித்தான வரிகளும், சாமந்திப்பூவின் வாசனையும், ராஜபாண்டியன் மாமாவின் நம்பிக்கை கரங்களும் கதையைச் சங்கிலி போல் இணைக்கின்றவையாக அமைகின்றன.

பின் களம் மாறுகிறது. அவனின் கோப்பையை நிரப்பிய வாழ்வின் அனைத்து உயிரூட்ட உணர்வுகளையும் இழந்த மனிதனின் வாழ்க்கைத் தொடரல் வாசகர்களுக்கு வாழ்வூட்டத்தை அளிக்கிறது. இப்படிப்பட்டவனின் மௌனத்திற்கான விடையையும் தந்து விடுகிறார் ஆசிரியர். “என் பேச்சில் எச்சில் நாற்றம் வீசுவதை நான் உணர்கிறேன். இந்த நாற்றம் என் இயலாமையைச் சுமந்து கொண்டு அடுத்தவரின் காதைத் தாக்க எனக்கு விருப்பமில்லை” என்று, இம்மாதிரியான அகச்சீவல்கள் நாவல் முழுவதும் அங்கங்கு வீசப்பட்டுள்ளன. 

நாவலின் அந்தம் சாவையும் வாழ்வையும் பிரித்துணர முடியாததைப் போல எதார்த்தமோ கற்பனையோ சிறு நகையுடன்.

முழுவதும் மரணத்தின் சாயலில் வாழ்வியலைப் பேசும் நூல். வாசகியாக சில அத்தியாயத்தின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்ட மேற்கோள்கள் கதையுடன் பொருந்தியிருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது.

சாவின் வரிசையில்  மற்ற  “சா” எல்லாம் வெறும் நினைவுகளாக்கப்பட்டிருந்தன. சாகாமல் இருந்தது சாமி சார் எனும் “சா” மட்டுமே போல. இதில் குறிப்பிடப்படும் ஆணின் (பெயரிடப்படாத கதைசொல்லி) “சா”க்கள் அனைத்தும் பெண்களையே சாடுகிறது. அவனின் ஆதியும் அந்தமும் உயிருடனான உணர்வுகளும் அவர்களையே பின்னிக் கொண்டு நிற்கின்றன. அவனின் சாவையும் வாழ்வையும் போல. இங்கு சமத்துவமும் அரசியலும் மறைமுகமாக இல்லை. வெளிச்சமும் இருளும் போல, சாவும் வாழ்வும் போல ஆணும் பெண்ணும் என குறிப்பால் உணத்தப்படுகிறார்களா எனவும் யோசிக்க வைக்கிறது. மனித சமூகம் இன்னும் புரிந்து கொள்ளவேண்டிய கடலாகிய வெற்றிடம் கோடி இருக்கையில் என்னைப் போன்ற இளைய தளைமுறைகள் இம்மாதிரியான எழுத்துக்களையே அதற்காக நாடுகின்றனர்.

சிறிய நாவலாக இருக்கிறது இருப்பினும் விளக்கைத் தூண்ட யாரும் மரத்தை பெயர்த்தெடுத்து வருவதில்லையே!மரணத்தை வெளிபடுத்தும் நோக்கில் உலகில் பல பேர் போரிட்டுக் கொண்டிருக்கின்றனர் அதில் நம் தமிழ் மொழியில் சிறு துளியாக, ‘சா’ நாவல் தன் ஆசிரியர் திரு.கு.ஜெயபிரகாஷிற்கு அமைந்திருக்கிறது.

மேலும் எதிர்பார்ப்புகளுடன் நன்றியும் வாழ்த்துக்களும் வாசகியிடமிருந்து.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button