கவிதைகள்- ஜீவன் பென்னி
உறவொன்றை எளிதாகக் கைவிடுதல்
1.
சொல்வதற்கென யிருந்த ஒரு பிரியத்தையும் கைவிட்டுவிட்டேன்
ஒரு பொய்யைத் திரும்பத்திரும்ப சொல்லிடும்
வலி மிகுந்த யிடத்திற்குத் திரும்பிக்கொண்டிருக்கிறேன்.
ஒரு பைத்தியத்தைக் கைத்தாங்களாகப் பிடித்திருக்கும்
யாரையேனும் கண்டால் உடனே அழுகை வந்து விடுகிறது.
சிறு குன்றின் மீதெறியும் ஒற்றை விளக்கு
அத்தனை பயம் நிறைந்ததாகிக்கொள்கிறது.
தூக்கமும் விழித்தலுமில்லாமல்
பல ஆயிரக்கணக்கான மைல்கள் பறந்து திரும்பிய அப்பறவையை
அவன் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கிறான்.
அது தன் சிறிய விழிகளை
மூடித்திறப்பது
அவனது வாழ்வைப்போலவே யிருக்கிறது.
***********
2.
வெட்டி விடப்பட்ட அவ்வுறவின் கடைசி நொடியில்
அது மிகவும் களைத்துப்போயிருக்கிறது.
அதன் காரணங்களணைத்தையும் கைவிட்ட பிறகும்
அதை சரிசெய்வதற்கு அதனால் முடியவில்லை.
தனக்குக் கிடைத்திருந்த சிறிய கைகளின் மென்மைகளைப்
பிரிய நேர்ந்த போது தான்
சின்னக் கண்ணீர் துளிகளை மிக அருகில்
பார்க்க முடிந்தது.
அவ்வளவு அன்பு அவைகளிடத்தில்.
தனக்கான அன்பற்ற நிலத்திலும் அது வாழ்வதற்குப் பழகிக்கொள்கிறது.
கடைசியில் இறந்து போவதற்கும்
பிறகு
தன்குழியிலிருந்து செம்பருத்தி பூக்கள்
பூக்கும் சிறிய செடியாக திரும்பி வருவதற்கும்.
***********
3.
மிக எளிமையாக உறவொன்றை கைவிடுவதென்றால்
சிறிய கையெழுத்தொன்றில் முடித்துக்கொள்வதல்ல.
ஒவ்வொரு பிரியாக வலியற்று அறுத்தெடுக்க வேண்டும்
இந்தத் தடித்த பிரியத்தின் நம்பிக்கையை.
அல்லது
அதன் காய்ந்தத் தடத்தைப் புதைத்து விட்டும் போகலாம்
அல்லது
இப்பிரிவின் கடைசி சொல்லை மனப்பிறழ்வு வரை
சொல்லிக்கொண்டே யிருக்கலாம்.
அல்லது
ஒரு முறை நீ சிரிக்கத்துவங்கியதைப் போலவும்
ஒரு முறை நீ விசும்பல்களை மறைத்தது போலவும்
பெரிய சுவரொன்றில் வேகமாக மோதிக்கொண்டும் வெளியேறலாம்
தொடர்பறுத்தல் ஒரு போதும் மிக எளிதாகயிருப்பதில்லை.
உலகின் சின்ன மூலையில் உனக்கென
ஒரு பாடலிருக்கிறது
அதைப் பாடுவதற்கென எண்ணற்ற மனங்களுமிருக்கின்றன.
***********
4.
சிறிது தூரம் தான் நாம் கைவிடவேண்டியவற்றை
தொடங்கிடலாம்.
நம் உறவை கைவிடுவதற்கான முதல் நிகழ்வில்
வாகனங்கள் விரைந்திடும் சாலையின் நடுவில் நின்றிருந்தோம்.
சிறிது தூரம் தான் நாம் செய்யவேண்டியவற்றை
தாமதமின்றி செய்திடலாம்.
இவ்வளவு இயல்பாக வருந்துவதற்கு இப்புதிய தினம் .
ஏதுவாகயிருக்கிறது.
சிறிது தூரம் தான் நாம் திரும்பவும் சந்தித்துக் கொள்வதை
திட்டமிட்டே தவிர்க்கலாம்
காய்ந்திடாத வடுவொன்றைத் தடவியே அதை வெளிற வைத்து
முற்றிலுமாகத் தீர்த்திடலாம் இத்துயரத்தை.
***********