மண(ன)ம்
கனவா?
நனவா?
கனவாயிருக்க வாய்ப்பெனில்
நனவாகவும் அதேவோய்ப்பு.
இங்கேதான்
வீட்டின் வெளிசந்தில்
அவள் கைமுட்டித்தேய
நீர்இறைத்த கிணற்றின்
முன்னிருக்கும் வாசல்முற்றத்தில்தான்…
பழைய கருப்புவெள்ளை திரைப்படத்திலிருந்து
எழுந்துவந்த அழகிய கரும்பட்டுச் சேலை நாயகியைப் போல
நிற்கிறாள்.
காதோரத்தில் வழிந்து கலைந்த நீள்கூந்தல்
மை பிசிறிய நீள்கண்கள்
வெயிலில் மல்லிகைப்பூ வதங்க வேடிக்கைப்பார்த்து நிற்கிறாள்.
ஆசைதீராத கண்களோடு தெருவைப் பார்த்துக் கொண்டு
தன்துக்கத்தை மறந்துவிட்டவளாக நிற்கிறாள்.
ராமப்பொட்டு அவளின் நேர்வாக்கிற்கு
சரிநேராக நீண்டிருக்கிறது.
அத்தைகள் அழைக்காமல் வீட்டிற்குள் வருவதில்லை தானே?
வெயில்சாய்ந்து கொல்லிமலையின்
பின்சரிவுகளில் ஔிமறைய
அப்போதும் அங்கேயே நின்றிருந்தாள்.
உள்ளும் வெளியும் மாறியபடியிருக்க
என்னென்னவோ நடந்துமுடிந்து
மீண்டும் நடந்துகொண்டிருக்க..
அவள் அங்கேயே நின்றிருந்தாள்.
நான் விண்மீன்கள் மினுமினுத்த வானத்தைப் பார்த்தபடியிருந்தவளை
“வாங்கத்தே” என்றேன்.
அவளிடம் சந்தனமல்லிகைமணம்.
அவள் என்னைத் திரும்பிக்கூட
பார்க்கவில்லை.
‘வெளிமுற்றத்தில் என்னத்தை வைத்திருக்கிறாள்
காலத்தில் உறைந்து போனவள்’ என்ற சீற்றத்துடன் திரும்பி
உள்முற்றத்தில் அமர்ந்து வானத்து நிலவைப் பார்க்கத் தொடங்கினேன்.
“பனியில உக்காந்து என்ன பண்ற உள்ள வா” என்று
எனையழைக்கும் குரலால் கலையாமல் வானம்பார்த்துக் கொண்டிருந்தேன்..
என்மீதும் சந்தனமுல்லையின் வாசம்.