
முத்துவும், மணியும் ஐந்தாம் வகுப்புத் தோழர்கள். அவர்களுடைய வகுப்பாசிரியர் தமிழினியன், இந்தாண்டு குழந்தைகள் தினத்தைப் புதுமையாகக் கொண்டாட முடிவெடுத்தார்.
மாணவர்களிடம் பல வண்ணங்களில், பலூன்களை வாங்கிக் கொடுத்துப் பெரிதாக ஊதி, அவற்றில் சூழல் பாதுகாப்பு வாசகங்களை, எழுதச் சொன்னார்.
அதன்படி ‘மழைத்துளி உயிர்த்துளி!’ ‘மரம் மண்ணின் வரம்!’ ‘மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம்,’ போன்ற வாசகங்களை, மாணவர்கள் பெரிய பெரிய பலூன்களில் எழுதினர்.
முடிவில் மைதானத்தில் கூடிய மாணவர்கள் ஒவ்வொருவரும், ஒரு பலூனைக் கையில் எடுத்துப் பறக்கவிடத் தயாராயினர்.
யாருடைய பலூன் மிக உயரத்தில் செல்கிறது என்று பார்க்க, முத்துவுக்கும், மணிக்கும், இரகசியப் போட்டி!
நீல பலூன் தான் வேண்டும் என முத்து விரும்பினான். ஆனால் மணி உட்பட, எல்லோரும் ஏற்கெனவே எடுத்துவிட்ட படியால், ஆரஞ்சு மட்டுமே பாக்கியிருந்ததைக் கண்டு, அவனுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது..
“எனக்கு ஆரஞ்சு வேணாம்; நீலம் தான் வேணும்; அதுதான் நல்லாப் பறக்கும், நான் போட்டிக்கு வரலே” என்றான் முத்து, மணியிடம்.
அதைக் காதில் வாங்கிய ஆசிரியர், முத்துவைக் கூப்பிட்டார்.
“முத்து! பலூன் பறக்கிறதுக்குக் காரணம், கலர் இல்ல; அதுக்குள்ள இருக்கிற காத்து தான். போதுமான காத்து இருந்தா, வானத்தை நோக்கி அது நல்லாப் பறக்கும்;
அதுவே தான் மனுஷனுக்கும்; அவன் வெள்ளையா இருக்கானா? கறுப்பா இருக்கானாங்கிறது, முக்கியமில்லே; நிறம் எப்பிடியிருந்தாலும், ஒருத்தனுக்கு மனசுல உயர்ந்த எண்ணங்கள் இருந்தா, அவனுக்கு வானம் எளிதா வசப்படும்; அவனால எதையும் சாதிக்கமுடியும்; உள்ளத்தனையது உயர்வு,” என்றார் ஆசிரியர்.
முடிவில் எல்லோரும் பலூன்களைப் பறக்க விட்டனர். முத்து விட்ட ஆரஞ்சு பலூன், நீலவானில் தங்கம் போல மின்னியது.
எல்லாவற்றுக்கும் மேலே, மிக உயரத்தில் வானத்தை நோக்கி, அது பறந்து கொண்டே சென்றதைப் பார்த்து, முத்து உற்சாகமாகக் கூவினான்.
நிறத்தைப் பற்றித் தான் கொண்டிருந்த தவறான கருத்தைப் போக்கியமைக்கு, முத்து ஆசிரியருக்கு நன்றி கூறினான்.