கவிதைகள்-கமலதேவி

நிலை
தூயது என்பது
தனித்தது
பயனற்றது
ஐயத்திற்குரியது.
சில நேரங்களில்
ஒவ்வாமையானது.
மலையின் உச்சியிலோ
மண்ணின் அடியிலோ
கடலின் ஆழத்திலோ…
அது
அந்தியின் முதல் விண்மீன் என
மிகவும் தனித்தது.
பகலிற்கானதுமல்ல..
இரவிற்கானதுமல்ல..
தூயவை என்றுமே
ஒரு குழந்தையின் உறக்கச்சிரிப்பென
இந்த வெளியின்
பொருளற்ற பொருள்.
**********
நிறமும் ஓசையும்
அவள்
தன் அத்தனை வண்ணங்களாலும்
சொற்களாலும்
தன் மாளிகையை எழுப்பினாள்.
முடிவில்
அது ஒரே வண்ணத்தில் பொழிந்து
ஓங்காரத்தில் நிறைந்து வழிந்தது.
**********
ஒன்றின் முடிவிலி
வெளியே,
மழையின் பேரோசை….
காற்றின் கும்மாளம்…
ஓலம்…
அமைதி.
இலைமறைவு மொட்டிற்கு
எட்டிப்பார்க்கத் தோன்றவில்லை.
தன் பொழுதில்
மலர்ந்து காய்த்து கனிந்து உதிர்ந்தது.
உதிரும் காலத்தில் அதைக்கண்டு
காற்றும்
விண்ணும்
நிலமும் புன்னகைத்தன
அத்தனை மொட்டுகளும் மீண்டது கண்டு.
**********
சுழற்சி
எத்தனை கவனச்சிதறலையும்
ஊடுருவி உள்நுழையும் மென்மெல்லியகூர்
காதுகளை வந்து தீண்டிவிட்டது.
மென்சிலிர்ப்பெழ
கண்களை மூடிக் கேட்கிறேன்…
இந்தக் கோடையின்
முதல் தென்னங்குயில் பாடும்
…கூ…கூ…கூ.
இது எத்தனையாவது தலைமுறையோ.
கெஞ்சுவது போலவோ,
கொஞ்சுவது போலவோ,
மன்றாட்டுப்போலவோ,
விடாப்பிடியான அழைப்பு.
மென்மையான தொந்தரவு…
சின்னசிறு மணிக்கண்ணியான
அந்தக் கருத்தக்கள்ளியின்
கல்மனதைக் கரைக்கும் நீரென
ஒழுகும் குரல்.
மீண்டும் ஒரு நீண்ட ஆண்டின் தொடக்கம்.
**********