கவிதைகள்- வீரசோழன்.க.சோ. திருமாவளவன்

கூழாங்கற்களிடம் பேசாதீர்கள்
அடுக்கி வைத்து அழகு பார்ப்போம்
ஆற்று நீர் அளவை அளக்க…
நதியோடிய நீரில் புதைந்த கற்கள்
மெல்ல வரும் வெயிலாடும் வெளிபோல..
ஆழமான இடத்தில் அழுத்தி வைப்போம்
கல்லை தூணாகவே செய்து…
வருடா வருடம் வழியும் நீர் ஆற்றை
ஒரு கை பார்க்கும்
மாடசாமி கோயிலும் மூழ்கும்…
வார நாட்களோடு கிழமையிலும்
கண் வைத்தே பள்ளி போவோம்
ஆற்றைக் கடந்தே படிப்பும் இருந்தது…
பெண்டிரோடு வாண்டுகளும்
வட்டமிடும் ஆறாகவே இருந்தது
குடத்தில் இருக்கும் நீரைப்போல
குதூகலமாகவே இருந்தது
குளிர் போர்த்தி நீராடை சூழ்ந்த
வயலோடிருந்தது
கரைகளிரண்டும் கைக்குள்
பிடித்த நீராய் வலம் சூழும்
பெண்மையாக பிடித்திருந்தது
ஆடுகளோடு மாடும் மேயும் புல்லில்
ஒளிந்திருக்கிறது பனித்துளி
நாவால் உண்கிறது ஒற்றை நாக்கு ஆடு…
வானும் அண்ணாந்து பார்க்கிறது
எப்போது நனைக்கும் நில ஒற்றை நாக்கை…
பங்குனித் திருவிழாவுக்கு சப்பரத்தோடு
சாமியும் வரும் ஆற்றுக்கு நனைக்கிறது
போர்வெல் தண்ணீர்…
கண்டும் காணாததுமாய்
அலையும் பறவை நாக்கிற்கு
கூலாங்கல் இளைப்பாற்றுகிறது
போர்வெல் தண்ணீர் தாகமாற்றுகிறது…
சப்பரம் கிளம்புகிறது
ஊர் மக்கள் தண்ணீரை
தலையில் தெளிக்கிறார்கள்…
கூழாங்கல் வெறிச்சோடிப் பார்க்கிறது
மக்கள் மனசை!!!
**********
மயிலிறகு பக்கங்கள்
மயிலொன்று மாமரத்தில் அமர்ந்து
தன் அலகால் வருடிக்கொண்டிருந்தது…
எலுமிச்சையும் சப்போட்டாவும்
வளர்ந்திருந்த கிளைக்குத் தாவி
அங்கிருந்த சப்போட்டாவை
கிளியைப்போன்றே கொத்திக் கொத்தி
சுவையை அருந்திக் கொண்டிருந்தது
முழுவதும் மரங்களாலும் செடிகளாலும் ஆக்கிரமித்திருந்த கரிசல் மண்ணெங்கும்
மயிலிறகு குட்டிகளாய் விரவியிருந்தன
ஒவ்வொன்றாய் எடுத்துக்கொண்டாள் மகள்!
மாமரத்திலிருந்து கடைசியாய்ப் பறித்த
கனியின் விதையை வேறொரு தோப்பில்
மகளுடனே பதியம் செய்ததை…
“எப்போது மரமாகும்?” கேள்வியோடே தோட்டத்தில் விடைபெற்று வீடடைந்தோம்
படிக்க புத்தகத்தையும் நோட்டையும்
நாளைய பள்ளிக்குச் செல்வதற்காக
புரட்டுகையில்……..
புத்தக இருமருங்கும் மயிலிறகுகள்
அப்பா…..
“குட்டி போட்டிருக்கு” என்று
கூவியழைத்துச் சொல்கிறாள்…..!
**********
காலத்தின் எச்சம்
வெய்யில் தாழ்ந்த
பூமிப்பொழுதின்
பறவைகள் அடையும்
கூடுகளில்
ஒளிந்திருக்கிறது
காலத்தின் எச்சம்
கிராமம் துறந்து
நகரமடைந்து
பொன்னீற்கால
புதையலில்
தொலைத்துவிட்டு
மிஷின் வாழ்வை
கணிணியில் ஏற்றுகிறது
துருப்பிடித்த காலத்தின் கைகள்
வறண்ட பூமியெங்கும்
விளம்பரப் பதாகைகள்
விளைச்சலில்லா பூமியில்
விலைபோகிறது நிலம்
நரகமெனும் நகரத்திற்காக
அலுவலக ஏசியில்
வெங்காயமும்
பழைய கஞ்சியும்
பாட்டி பத்து ரூபாய்க்கு
படியில் போடும்போது
படபடத்து துடிக்கிறது
ஒரு கை அள்ளிய உள்நெஞ்சு
ஒளிந்திருந்த காலத்தின்
மீதத்தின் எச்சத்திற்காய்!!!
**********
இரவின் உற்சவம்
வீதிகளின் விளக்கு
குடிசைகளை எரியச் செய்கிறது
ராத் தூக்கம் தொலைத்த மொபட்டுகள்
தலைவனுக்காக வாசலிலே
விழித்திருக்கின்றன
தெருக்களின் அமைதி நாய்களால் நங்கூரமிடுகின்றன
திருடர்கள் ஜாக்கிரதை ஒளிர்கிறது…
சில வீடுகளில் இருமல்கள் இருமிக் கொண்டேயிருக்கின்றன
நோய்களின் கூடாரம் ஏழை வீடுகளில் நிரந்தரமாகத் தங்கிவிடுகிறது…
இன்னும் சில வீடுகளில் குழந்தைகள் முழித்திருக்கலாம்
பசிகள் தூங்குவதில்லையே!
குடில்கள் தாலாட்டுப் பாட்டைப் பாடலாம்
குழந்தைகளுக்கேது இரவு?
அமைதியும் தெருக்களும் ஆழ்கடல் போல!
அள்ள அள்ளக் குறையா அட்சயப்பாத்திரமாய்…
இருள் முதலாளியை
தெருக்களின் தொழிலாளி
தூரவே நின்று வேடிக்கை பார்க்கிறது.
**********