
குரூரம்
பசி தீர்ந்த பூனையின்
மென் பாதங்களில் மறைந்திருக்கும்
கூர் நகங்களில் படிந்துக் கிடக்கிறது
இன்னொரு உயிரின்
அபரிமிதமான எச்சங்கள்.
*********
புராதான எதிரி
உயிர்களின் புராதான எதிரி பசி
உயிர்களின் புராதான போர்
பசியை ஜெயித்தல்
சிறியவர் பெரியவர் என்ற பாகுபாடின்றி
விரட்டி விரட்டி வம்புக்கிழுக்கும்
இந்த பசியை ஜெயிக்கும்
புராதானப் போரின்
முயற்சியில் முடிந்துபோகிறது
அற்பமான வாழ்வு.
*********
பாரம்
தனக்குதவா
நிழலொன்றையும்
தன் வாழ்க்கைக்குதவா
நினைவொன்றையும்
எல்லோரும் சுமந்து திரிகிறோம்
திட்டமிட்டு கூட
தவிர்த்துவிட முடியாதபடி.
*********
சாயல்
சூதற்று சுயநலமற்று சிரிக்கும்
குழந்தைகளின் சிரிப்பில்
ஆர்ப்பரிக்கும் பெருங்கடலை
சுமந்து நிற்கும்
நெய்தல் நிலத்தின் சாயல்.
*********
கண்டடைதல்
ஆகச்சிறந்த அன்பொன்றினால்
நீங்கள் கடவுளை
கண்டடைய முடியுமென்று நம்பினால்,
அப்பொழுது நீங்கள் இதையும் நம்புங்கள்,
அந்த ஆகச்சிறந்த அன்பினால்
நீங்கள் கைவிடப்படும்போது
நீங்கள் உங்களுக்குள் இருக்கும்
சாத்தானைக் கண்டடைய முடியும்.
எப்போதும் ஏதாவது யாராவது
ஒருவரின் அளவற்ற அந்த
அன்பில் திளைத்திருங்கள்.
கடவுளாவதும் சாத்தானாவதும்
உங்கள் பொறுப்பு.
*********